கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

இலங்கைக்கு கரும்புள்ளியான சிறுநீரக விற்பனை

இன்று உலகம் பணம் என்ற ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பயணிக்கிறது. இதற்கு குறுக்காக செல்பவர்கள் எவரும் அவ்வளவு எளிதாக மீண்டது கிடையாது. அவ்வாறானதொரு வியாபாரம் தான் சட்டவிரோத சிறுநீரக விற்பனை. இன்று இலங்கை, இந்திய மருத்துவத் துறைக்கு மிகவும் சவாலானதொரு விடயமாக இருப்பது இந்த சட்டவிரோத சிறுநீரக மாற்று   அறுவை சிகிச்சையாகும். இலங்கையைச் சேர்ந்த 6 வைத்தியர்களும் சில தனியார் வைத்தியசாலைகளும் இணைந்து மேற்கொள்ளும் இந்த சட்டவிரோத தொழிலானது ஏழைகளுக்கும் தரமான சிறுநீரகங்களை கொண்டுள்ளவர்களுக்கும் பெரும் தலையிடியாய் அமைந்திருக்கிறது.
இலங்கை மருத்துவத் துறைக்கே சவால் விடும் வகையில் அமைந்த இவ்விடயம் சுகாதார அமைச்சு மீது விழுந்த மிகப்பெரும் கரும்புள்ளியாகும்.
இந்திய பொலிஸாரின் பார்வைகளுக்கு சிக்கியுள்ள பல இலட்சம் ரூபா புரளும் இந்த  சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள 6 வைத்தியர்களின் செயற்பாடுகளானது இதுவரையும் எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவியிருக்கிறது. இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்தியுள்ள
இலங்கையைச் சேர்ந்த 6 வைத்தியர்கள் மற்றும் 4 தனியார் வைத்தியசாலைகள் இதுவரையும் 60 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு துணைபோயுள்ளன. தற்போது சுகாதார அமைச்சு இலங்கையில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு  இடைக்கால தடை விதித்திருக்கின்றது.

அத்தோடு இலங்கையருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு வைத்தியசாலைகள் அமைச்சின் முன்பதிவை மேற்கொள்ளவும் பணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், வைத்தியசாலைகள் தொடர்பான விபரங்களை  இலங்கை அரசு வெளியிடவில்லை. இது அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் பாலிந்த மஹிபால,  இந்திய பொலிஸார் இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலைகளை பட்டியல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தெலுங்கானா பொலிஸார் இலங்கை வைத்தியசாலைகளில் பணிபுரியும் இந்த 6 மருத்துவர்கள்  மீதும் சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனையுடன் தொடர்புடைய  பிரதான சந்தேக நபர் நல்கோண்டா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. 36 வயதான சுரேஷ் பிரஜாபதி என்பவரே இந்த 60 சட்டவிரோத சிறுநீரக விற்பனைக்கு காரணகர்த்தாவாக செயற்பட்டிருக்கின்றார். கடந்த சில வருடங்களாகவே இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இத்தொழிலுக்கு வருபவர்களுக்கு பல மில்லியன் இலங்கை ரூபாவையும் அதற்கு சமமான இலவச அனுசரணைகள், வெளிநாட்டு புலமைப்பரிசில்கள், கல்வி சுற்றுலாக்கள் என சொகுசு வாழ்க்கையையும் சம்பந்தப்பட்ட  குடும்பங்களுக்கு இவர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.

மருத்துவத்துறையில் கடவுளாக பார்க்கப்படும் மருத்துவர்கள் இவ்வாறான சட்டவிரோத  தொழிலில் ஈடுபட்டிருப்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல இலங்கை மருத்துவத் துறைக்கே கிடைத்த சாபமாகவே இருக்கிறது. இலங்கை அரசாங்கமும் இலங்கை மருத்துவச் சங்கமும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான கட்டாய விடுமுறையை சம்பந்தப்பட்ட வைத்தியர்களுக்கு பரிந்துரைத்து கடுமையான விசாரணைக்குட்படுத்த முன்வர வேண்டும். இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த போது பல்தேசிய போதை வர்த்தக நிறுவனங்கள் தேசிய மருத்துவ போதை மருந்து கொள்கையின் தாக்கத்தை குறைக்கவும் அல்லது அதை வேறு திசையில் மாற்றியமைக்கவும் 1000 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவும் இணைந்து தேசிய மருத்துவ அதிகார சபையின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இலங்கை போதை மருந்துகளுக்கு அடிமையாவதை தடுத்திருந்த இந்த அரசாங்கம் புதிதாக முளைத்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனையை எவ்வாறு தடுத்து நிறுத்தப் போகின்றதென்பதை இலங்கை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் சிறுநீரகங்களை விற்பனை செய்தவர்களும் பெற்றுக் கொண்டவர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க, அறுவை சிகிச்சை அல்லது இடமாற்று இடம்பெற்ற இடமாகவே இலங்கை இருக்கின்றது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுரேஷ் பிரஜாபதி இச்சிகிச்சைக்காக  பெற்றுக் கொண்ட 23 - 30 இலட்சம் வரையான தொகையில் 5 இலட்சங்களை மட்டும் தாம் வைத்துக் கொண்டு ஏனைய தொகையினை சிறுநீரகத்தை விற்றவர், வைத்தியர்கள் மற்றும் ஏனையோருக்கு வழங்கியிருக்கிறார். இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சிறுநீரகத்தின் மூலம் பிரஜாபதி இலாபமாக பெற்றுக் கொண்ட தொகை 3 கோடி இலங்கை ரூபாவாகும்.

இதில் 1.4 கோடி ரூபாவினை தனது புதிய வீடு கொள்வனவிற்கும் 30 இலட்சம் ரூபாவை தனது அலுவலக செலவுகளுக்கும் 27 இலட்சம் ரூபாவை தளபாடங்களின் கொள்வனவிற்காகவும் பயன்படுத்தியிருக்கின்றார். இவர் முதன்முறையாக இத்தொழிலுக்கு தனது சிறுநீரகத்தை விற்பவராகவே வந்திருந்தார். பின்பு சிறுநீரகங்களை விற்பனை செய்பவர்களுக்கான தரகராக செயற்பட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே தரகர்களுக்கு 45 இலட்சம் ரூபா வழங்கியிருக்கிறார். இங்கு மட்டும் தான் தரகர்களை வைத்து மிக இரகசியமாக இவ்வாறான சட்டவிரோத தொழிலை மேற்கொள்கின்றார்கள்.
ஆனால் தென்னாபிரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இவ்விற்பனைக்கு பிரத்தியேக ஒன்லைன் வசதிகளும் காணப்படுகின்றன. இது அவ்வளவு செல்வம் கொழிக்கும் தொழிலா என அனைவரும் நினைக்கலாம். நாமும் அதற்கு செல்வோமா என்று நினைக்கலாம். அங்கு தான் எமது அறியாமை வெளிப்படுகிறது. அவ்வாறு உங்களுடைய உறுப்பு பிறருக்கு பயன்பட வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இறந்த பின்பு உங்களுடைய தரமான உறுப்புகளை தானம் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதற்கான சட்ட நடைமுறைகளை நீங்கள் பரிசீலனை செய்து பார்க்கலாம். அதற்காக உங்கள் உறுப்புகளை பணத்திற்காக விற்று வாழ்வதால் நீங்கள் பணக்காரர் ஆகிவிடலாம் என்பது முட்டாள்தனம்.

உலக வர்த்தக அமையத்தின் தகவல்களின் படி உலகளவில் 5-10 சதவீதமான மனித உறுப்புகள் சட்டவிரோதமாக விற்பனை அல்லது இடமாற்று செய்யப்படுகின்றன. ஐ.நா. வின் அறிக்கைப் படி பின்வருவோர் சட்டவிரோத மனித உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபடுபவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கவீனமானோர், ஆபத்தை உணராத நபர், மனித உறுப்பு ஏற்றுமதியாளர், வைத்தியசாலை மற்றும் மருந்தக ஊழியர்கள், தரகர்கள், ஒப்பந்தக் காரர்கள், விலைக்கு வாங்குபவர்கள், மனித உறுப்பு வங்கிகள் என்பனவே அவையாகும். எனவே பணத்தைக் கொண்டு உங்களை விலை பேசுபவர்களிடம் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும்.
இந்த சட்டவிரோத மனித உறுப்பு விற்பனையானது மூன்று வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது. முதலாவது சம்பந்தப்பட்டவர்களை  கட்டாயப்படுத்தி அல்லது சூழ்ச்சி செய்து உறுப்புகளை பெறுதல், இரண்டாவது உறுப்புகளை விற்பவர்களிடமிருந்து முறையாகவும் முறையற்ற விதத்திலும் ஏமாற்றி பெறுதல் (பணம் தர மறுத்தல் அல்லது பேசிய தொகையை விட குறைவாக கொடுத்தல்) மூன்றாவது வலது குறைந்தோர், அகதிகள், வீடற்றோர், இவர்களை அடிமையாக்கி  ஆசை வார்த்தை கூறி பெறுதல் இந்த மூன்று வகையிலும் சிக்கிய எவரும் அவ்வளவு எளிதாக மீண்டதில்லை. பெரும்பாலும் பணக்காரர்கள் வறுமை, கடன்தொல்லை, அவசர தேவை போன்றவற்றில் சிக்கியுள்ள மக்களை இனங்கண்டு அவர்களிடம் பேரம் பேசும் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையில் மலையகப் பகுதிகளில் பெரும்பாலானோர் தமது சிறுநீரகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தடுக்கப்படுவதில்லை. அவ்வாறெனின் இலங்கையிலும் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மேற்கொள்ளப்படுகின்றதா? சட்ட விரோதமாக பெறப்படும் சிறுநீரகமானது ஒவ்வொரு கைகளுக்கும் மாறும் போது அதன் பெறுமதி அதிகரித்துச் செல்கிறது. மனித உறுப்புகளில் சிறுநீரகம் மற்றும் ஈரல் என்பன அதிக பெறுமதி வாந்ததாக இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு இத்தாலியப் பொலிஸார் மேற்கொண்ட  விசாரணையில் சட்டவிரோதமாக வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல குடியேற்றவாசிகளிடம் பணத்திற்குப் பதிலாக சிறுநீரகம் பெற்றுக் கொள்ளப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உலகளவில் ஒரு சிறுநீரகத்திற்கான பெறுமதி 5000 டொலராக காணப்படுகிறது. இதனால் மக்கள் தமது சிறுநீரகத்தை விற்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தரகர்கள் சட்டவிரோத சிறுநீரக விற்பனையை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் பணத்திற்காக சிறுநீரகத்தை விற்பது இந்தியாவிலேயே அதிகம் நடக்கிறது. அங்கு ஒரு சிறுநீரகத்திற்கு 1000 டொலர்  மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்காக சிறுநீரகத்தை விற்பவர்கள் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளாது விற்றுவிடுகிறார்கள்.

ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் அவர்களுக்கு 7 வருடங்களுக்குப் பின்பே தெரியவருகிறது. தென்னாபிரிக்காவில் 2001 - 2003 ஆண்டு வரை 109 சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இடம்பெற்றிருக்கிறது. சட்டவிரோத அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரக பாதிப்புக்குள்ளான இஸ்ரேலியர் ஒருவர் அவசரமாக தென்னாபிரிக்காவில் ஒரு சிறுநீரகத்தை  பெற்றுக் கொள்ள 120,000 டொலர்களை (1.4 மில்லியன் ரூபா) செலுத்திய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.  தென்னாபிரிக்காவிலேயே சிறுநீரகத்துக்கு அதிக கிராக்கி இருக்கிறது. 2013 ஆம் ஆண்டு 4300 பேர்  சிறுநீரக விற்பனைக்காக காத்திருந்தனர். ஆனால்  தேவையானதோ 1000 சிறுநீரகங்கள் மட்டுமே.
அதில் 299 சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே இடம்பெற்றது. இவ்வாறான சம்பவங்களை வைத்து பார்க்கும் போது உலகில் மனித வாழ்வுக்குத் தேவையான உணவுகளை விடவும் சிறுநீரகத்துக்கான கிராக்கி, தேவை அதிகமிருப்பதை உணர முடிகிறது. ஆனால் சட்டவிரோதமாக சிறுநீரகத்தை விற்பனை செய்யும் ஒருவருக்கு மீண்டும் சிறுநீரகம் முளைப்பதில்லை என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாது போலும். இவ்விடயத்தில் உலகளவில் வயது வந்தோர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அதிகமாக சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே எதிர்கால தலைமுறையினர் நிறைவான உடற்கட்டமைப்புடன் வாழ்வது இவ்வாறான விடயங்களை வைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் சந்தேகம் தான்.

க.பிரசன்னா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக