கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

விளையாட்டாகும் சவால்கள்

இணையத்தில் தினம் தினம் ஏதோவொரு புதினத்தை படைத்து தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள பலரும் ஆசைப்படுகின்றனர். இவற்றில் சிலவிடயங்கள் சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சிலது மனிதனின் அறியாமையாகவும் கேலிக் கூத்தானதாகவும் இருக்கின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் சவால்கள் சில நாட்களுக்குள் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், இதனால் ஏற்படும் தாக்கங்களை மறைக்க முடியாது. அவ்வாறே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ‘ஆணுறை சவால் ’ ( Condom Challange )  சமூகத்திற்கே கேடாக மாறியிருக்கிறது. இன்று உலகம்  எத்தனையோ தேவைகளுக்காக ஏங்கியிருக்கிறது. இதற்கு முன்பு  தோற்றம் பெற்ற ஐஸ்பக்கட் சவால் நோய்க்கு நிதி திரட்டுவதற்காகவும், அரிசி பக்கட் சவால் இந்தியாவின் ஏழைகளுக்கு உதவுவதற்கும் உருவாக்கப்பட்டது.


ஆனால், தற்போது உருவாகியிருக்கின்ற ஆணுறை சவால் வெறும் கேளிக்கைக்காக மட்டுமே இருக்கிறது. இதனால் நோய்களும் மரணங்களுமே ஏற்படுகின்றன. இந்த சவாலுக்கு ஆணுறையில் நீரை நிரப்பி பலூன் போல் செய்து அதை இன்னொரு நபரின் தலையில் பலமாக வைத்து அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும் போது ஆணுறையானது தலை முழுதும் சுற்றி கழுத்து வரை செல்லும். இதன் போது அந்த பலூன் போன்ற ஆணுறை உடையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தலை மற்றும் முகம் முழுவதும் மிகவும் இறுக்கமாக நீரால் நிரப்பிய ஆணுறை படர்வதால் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமமான நிலை ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. தற்போது இந்த சவால் வீடியோக்களாக இணையத்தில் அதிகம் பரவி வருவதால் சிறுவர்களும் இதற்கு அதிகமாக அடிமையாகும் நிலை இருக்கிறது. 6 -7 வயது பிள்ளைகளே துப்பாக்கியுடன் அலையும் நிலை இந்த சமூகத்தில் நிலவுகையில் அவர்களும் இவ்வாறு விபரீதமான சவால்களை முன்னெடுக்கும் போது விளைவுகள் மோசமானதாக இருக்கும். மேலைத்தேய நாடுகளில் இவ்விடயத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த எவருமில்லை. அதனால் பிள்ளைகளின் கட்டுப்பாடுகளற்ற செயல் சகலரையும் பாதிக்கின்றது. ஆனால்  இந்த ஆணுறை சவால் இலங்கை போன்ற நாடுகளில் பிரபலமடைவது  மிகவும் கடினம்.

 காரணம், இங்கு மேலைத்தேய நாடுகளின்  சிறுவர்களைப் போல் சரளமாக ஆணுறைகள் பாவிக்கப்படுவதில்லை என்பதுடன் விற்கவும் செய்யப்படுவதில்லை. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கமே பள்ளி மாணவர்களுக்கு ஆணுறைகளை விநியோகம் செய்கிறது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் வேறு. இவர்கள் ஆணுறையில்  இப்படியொரு வித்தையை கண்டுபிடிப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியாதே.  2006 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே ஆணுறை  சவால் என்பது உருவெடுத்து விட்டது. நமக்கு தற்போது தெரியவந்ததிலும் ஒரு சந்தோஷம் தான். அவ்வாறு  2006 ஆம் ஆண்டு ஒரு இளைஞன் சவாலின் வெற்றி பெறுவது போன்ற வீடியோ வெளியானது.

 ஆனால்,  பெரிதாக பிரபலமாகியிருக்கவில்லை. மீண்டும் மே  2012 ஆம் ஆண்டு இது நவீனமயப்பட தோன்றியது.  2013 ஏப்ரல் மாதத்தில் இரு பெண்கள் ஆணுறை, சவாலில் பங்கேற்று  இந்த வீடியோவை இணையத்தில் தரவேற்றவே , இன்று உலகம் முழுவதும் இந்த சவாலுக்கு அடிமையாகத் தொடங்கி விட்டது. இவற்றை தடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால், நாம் இந்த சவால்களுக்கு செல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாம். உலகில் மில்லியன் கணக்கான மக்கள்  எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்களின் இந்நிலைமைக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளும் ஒரு காரணம். அவ்வாறான நிலையில் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளையும் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகுபவரின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கான ஒரு சவாலாக இருந்தால் கூட இதனை வெகுவாக பாராட்டியிருக்க முடியும்.

 ஆனால், நோக்கமேயற்ற இவ்வாறான சமூகக் கேடான விடயங்கள் இளைஞர்களிடமிருந்து தவிர்க்கப்பட வேண்டியவை கட்டாயம். இதெல்லாம் ஜப்பானியர்களின் வேலை தான் நவம்பர் 2015 ஆம் ஆண்டு இவர்களால் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவானது பிரபலமானதே இதற்கு காரணமாகும். இதாவது பரவாயில்லை. இதற்கு முன் இந்த சவால் வேறுவிதமாக கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஆணுறையை மூக்கால் உறிஞ்சி வாயினால் வெளி எடுப்பதே அந்த சவால். மிகவும் ஆபத்தான அந்த சவாலுக்குப் பெயர் ‘ஆணுறை உறிஞ்சல் மூக்கிலிருந்து வாய்க்கு ’ என்பதாகும்.

இதெல்லாம் தேவைதானா  ? இதற்கு முன்னர் தோன்றிய சவால்களும் ஒரு சில நாட்களுக்குள் காணாமல் போய் விட்டன. ஐஸ் பக்கட் சவால், அரிசி பக்கட் சவால் என்பவை குறிப்பிடத்தக்கது. சென்னையில் தோன்றிய  அரிசி பக்கட் சவால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியிருந்த போது எங்கு போனதோ தெரியவில்லை. தாம் பிரபலமாவதற்கு சமூக வலைத் தளங்களையும் இணையங்களையும் பயன்படுத்தி கொள்ளும் மனநிலை இன்று பலருக்கும் அதிகம் இருக்கின்ற து. இதையறியாமல் நாமும் அந்த வழியில் சென்று அடிவாங்குவது மட்டும் தான் மிச்சம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டாலஸ் எனும் பகுதியில்  17 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆணுறை சவாலுக்காக தன்னுடைய  தந்தையின் படுக்கை அறையிலிருந்த பயன்படுத்திய ஆணுறையை தன் தோழியுடன் இணைந்து இந்த சவாலுக்காக பயன்படுத்தியிருக்கிறார்.

விபரீதம் அவர் தற்போது தனது வாய்ப் பகுதியில் எபோலா தொற்று போன்றதொரு நோய்க்கு ஆளாகி தனது உயிரையே  இழந்திருக்கிறார்.  இந்த வீடியோ இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள், இதுபோன்றதொரு முட்டாள் காரியங்களை செய்வதிலிருந்து இளைஞர்கள் விடுபடுவதற்கு பயன்படுத்த வேண்டுமென்று டால்ஸ் கற்கை நிலையத்தின் உளவியல் பேராசிரியர்  மைக்கல் டைசன் தெரிவித்திருக்கிறார். இது அனைவரும் சிந்திக்க வேண்டியதொன்று. பாலியல் உறவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுறையை பலூன் ஊதுவதற்கும் சவால் விடுவதற்கும் பயன்படுத்தி ஆணுறையை கண்டுப்பிடித்தவனுக்கே சவால் விடுவது நாம் தான். அதேபோலவே பலிகடாக்களும் நாங்கள் தான்.

இந்த ஆணுறை  சவாலில்  17 வயதான ஆஷ்லே வண்டர்கோப் என்ற பெண் தனது உயிரை மாய்த்துள்ளார்.  யூடியூப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான வீடியோக்களை பார்வையிட்டு தனது  16 வயதுடைய நண்பியான எம்பர் வெல்லஸுடன் இந்த சவாலில் பங்கேற்க முயற்சித்துள்ளார். எம்பர் இந்த சவாலை தனது தோழிக்கு நிறைவேற்றியிருக்கிறார். ‘ இதுவொரு விளையாட்டு மட்டுமே. அவள் இறப்பாளென்று எனக்கு எந்தவொரு யோசனையும் இருக்கவில்லை ’யென எம்பர் தெரிவித்துள்ளார்.
 எம்பர் தனது தோழியான வெல்லஸுக்கு நீரால் நிரப்பிய ஆணுறையை தலையில் போர்த்திய சில நிமிடங்களில் வெல்லஸ் கையசைவின் மூலம் உதவிகோரியிருக்கிறார். எம்பர் ஆணுறையை  கழற்றுவதற்கு முயற்சித்திருந்தும்  சுவாசம் தடைப்பட்டதால் அவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.  இவ்வாறு அதிகளவு இளம்பராயத்தினரே இதற்கு அடிமைப்பட்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை இன்னும் முழுதாய் அவர்கள் அனுபவிக்கவில்லை. கர்நாடகாவின் ராபூகரம், உடுப்பி மற்றும் ஹாஸன்  ஆகிய மாவட்டங்களில் சுமார்  87,000 பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும்  26 - 30 இலட்சம் ஆணுறைகளை இலவசமாக விநியோகம் செய்கிறது.

ஆனால், இவ்வருட டிசம்பர் மாத விநியோகத்திற்கு வெறும்  6.9 இலட்சம் ஆணுறைகளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆணுறை  பற்றாக்குறையால் கர்நாடக பாலியல் தொழிலாளர்களுக்கு எயிட்ஸ் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இந்த ஆணுறை சவாலை பாலியல் தொழிலாளர்களுக்கு ஆணுறை விநியோகம் செய்யும் சவாலாக மாற்றியிருக்கலாம். இதனால் எயிட்ஸ் பரவலையாவது கொஞ்சம் தடுத்திருக்க முடியும். இது கர்நாடகாவுக்கு மட்டும் தேவையானதல்ல. மொத்த உலக நாடுகளுக்குமே தேவையானது தான். இப்படி செய்தால் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ ( ஃடிடுஞு ) விழாது என்பதே இளைஞர்களின் பயம்.
 ஆணுறை சவாலானது மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக பிரச்சினையாக இருக்கிறது. இவற்றை தீர்ப்பதற்கு சமூக வலைத்தளங்களே முன்வர வேண்டும். சமூக வலைத்தளங்கள் இச் சவாலுக்கு அளிக்கும் முக்கியத்துவம் , இதனை பார்வையிடுவோர் வெளிப்படுத்தும் விமர்சனங்கள் என்பனவே இதனை மீண்டும் மீண்டும் தொடர அனுமதிக்கின்றன. இதுவொரு கேளிக்கை நிகழ்ச்சி, ஆனால், அதன்  விளைவுகள்  உயிரிழப்புகளை கூட ஏற்படுத்துகின்றன. எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர், இவ்வாறான முட்டாள்தனமான விடயங்களில் கவனமெடுக்காமலிருப்பதே சிறந்தது.

 மனித இனத்துக்கு மட்டுமே புதியதை உருவாக்கவும் உருவாக்கியதை தவறாக பயன்படுத்தவும் முடியும். அவ்வாறானதொரு சவாலே இந்த ஆணுறை சவால், ஆணுறையை அணிய வேண்டிய நேரத்தில் அணிந்தால் நோய்களையாவது தடுக்கலாம். மாறாக தலையில் அணிந்தால் என்னத்தை சாதிக்கலாம் ?

 க. பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக