மனிதனால் உலகளவில் விலங்குகள் மோசமான பாதிப்பினை எதிர்கொள்கின்றன. இவ்வாறு மனிதனால் பாதிக்கப்படுகின்ற விலங்குகளால் சூழல் சமநிலை பாதிப்படைவதுடன் மனிதனும் மிகப்பெரிய ஆபத்தினை எதிர்நோக்க வேண்டியவனாக இருக்கின்றான். அவ்வாறானதொரு சூழ்நிலை இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இன்று தினந்தோறும் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மனித மரணங்களும் அதிகரித்தவண்ணமுள்ளன. மனிதன் விலங்குகளின் வாழ்விடங்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதால் விலங்குகள் மனித வாழ்விடங்களை நோக்கி நகருகின்றன. இவற்றை தடுப்பதற்கான எந்தவொரு பொறிமுறையும் கைவசம் எம்மிடமில்லை அதற்காக இவ்விடயத்தை இப்படியே விட்டுவிடவும் முடியாது.
இயற்கை அனர்த்தங்களுக்கு அஞ்சி வீடுகளில் வாழும் மக்களைப் போல் இன்று விலங்குகளுக்கு அஞ்சி வாழும் சூழ்நிலை மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிறது. மனிதன்- யானை முரண்பாடு மிகவும் பயங்கரமானதும் கொடூரமானதாகவும் இருக்கின்ற நிலையில் அழிவுகளை மறுக்கமுடியாது. யானைகள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மனித வாழ்விடங்களை நோக்கி நகர்கின்றன. இதற்கு மனித வாழ்விடங்களை அண்மித்து யானைகளின் இருப்பிடம் அமைந்திருக்கின்றமையும் ஒரு காரணம். அதே போலவே மனிதன் தனது பாதுகாப்பிற்கும் சட்டவிரோத வேட்டையாடலுக்கும் யானைகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளுகின்றான்.
இவ்வாறு மனிதனுக்கும் யானைகளுக்குமிடையிலான முரண்பாடு அதிகரிக்கவே இழப்புகளும் அதிகரிக்கின்றன. இலங்கையில் வருடமொன்றுக்கு 60 மனிதர்களும் 200 யானைகளும் மனித-யானை முரண்பாட்டால் கொல்லப்படுகின்றன. இவற்றைத் தடுப்பதற்காக எத்தனையோ திட்டங்கள் அரசாங்கத்தாலும் தனியார் அமைப்புகளினாலும் முன்வைக்கப்பட்டுவந்தாலும் நடைமுறையில் இல்லை. இலங்கையில் 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்படுவது இயல்பானதாக மாறியிருக்கின்றது. வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல்களின்படி, 2011 ஆம் ஆண்டு 60 மனிதர்களும் 250 யானைகளும் 2012 ஆம் ஆண்டு 63 மனிதர்களும் 250 யானைகளும், 2013 ஆம் ஆண்டு 70 மனிதர்களும் 206 யானைகளும், 2014 ஆம் ஆண்டு 67 மனிதர்களும் 231 யானைகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மனிதன் அதிகமான தடவைகள் யானைகளுடன் முரண்பாட்டில் ஈடுபடுவதே அவை ஏற்படுத்தும் சேதங்களுக்குக் காரணமாகும். கூட்டமாக செல்லும் யானைகளை தாக்கும்போது உயிரிழக்கும் யானையைத் தவிர ஏனையவை மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் மனிதர்களைத் தாக்க முற்படுகின்றன. இலங்கையில் அதிகமாக இரவு நேரங்களிலேயே யானைத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இதனாலேயே மனிதன் இவற்றிலிருந்து தப்புவது இயலாமலிருக்கின்றது.இலங்கையில் நிலவும் யானை-மனித முரண்பாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் யானைகளா? மனிதர்களா? என்பதுதான் இப்போதைய கேள்வி. ஆனால் பொதுவான இழப்புகளை வைத்துநோக்கும்போது அதிகம் பாதிக்கப்படுவது யானைகளே. காரணம் மனிதனால் தனக்கான வாழ்விடங்களை நினைத்த இடத்தில் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் யானைகள் அவ்வாறல்ல. அவை தாம் நினைத்த இடத்தில் தரித்து நிற்கும்போதே மனிதன் அவற்றை விரட்டவோ, கொலைசெய்யவோ முயற்சிக்கின்றான். யானைகள் அதிகமாக தமது உணவுத் தேவைகளுக்கும் நீர்த்தேவைகளுக்குமே மனித வாழ்விடங்களை நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யானையானது ஒருநாளைக்கு 450 கிலோகிராம் நிறையுடைய உணவுகளை உட்கொள்ளும் திறனுடையது. எனவே அவை உணவுத் தேவைகளுக்காக அதிக வளங்களை நுகரவேண்டியுள்ளது. ஆனால் மனித ஆக்கிரமிப்புகள் அவற்றின் உணவுத் தேவைகளுக்கு இடையூறாக அமைவதால் மனித -யானை முரண்பாடுகள் தோன்ற வழிகோலுகிறது. இலங்கையில் 2011 ஆம் ஆண்டு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் யானைகளின் கணக்கெடுப்பின்படி , 3285 (55.9%) இருபாலின வயதுவந்த யானைகளும் 1487 (25.3%) இணை வயதுவந்த யானைகளும் 731 (12.4%) யானைக் குட்டிகளும் 376 (6.4%) கர்ப்பிணி யானைகளும் இலங்கையில் காணப்படுகின்றன.
ஆனால் இன்று மனித- யானை முரண்பாடுகளில் எத்தனை யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 10 யானைகளும் 7 விவசாயிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 450 இற்கும் மேற்பட்ட யானைகள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளன. 5000 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காடுகள் சூறையாடப்பட்டு கிராமங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. இவற்றில் அந்தரகஸ்வெவ, திமுதுகம, எல்லால, கீழ்மத்தள. மேல்மத்தள, பண்டகிரிய போன்ற கிராமங்கள் குறிப்பிடத்தக்கவை.
யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதே யானை -மனித முரண்பாடுகளுக்குக் காரணமென பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது. சனத்தொகை வளர்ச்சி வேகம், இடப்பற்றாக்குறை என்பனவற்றால் மனிதன் காடுகளை நோக்கி நகரவேண்டியுள்ளது. ஆனால் யானைகளுக்கு தகுந்த ரீதியிலான வாழ்விடங்கள் இன்னும் இலங்கையில் அபிவிருத்தி காணவில்லை. ஆசிய யானைகளின் ஒரு உப இனமே இலங்கை யானைகள். அதேவேளை ஆசிய யானைகளின் குடித்தொகையில் ஒரு சதவீதமான யானைகள் மட்டுமே அடர்ந்த காடுகளில் வசிப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. ஏனைய 99 வீதமானவை அடர்த்திகுறைந்த வனப்பகுதிகளிலும் தமக்குத் தேவையான உணவுகளும் நிலையான நீர்நிலைகளும் காணப்படும் பகுதிகளிலேயே வசிக்கின்றன.
எனவே இவ்வாறான இடங்களிலேயே யானை-மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகள் தென்படுகின்றன. இலங்கையில் வடமத்திய, மேல், தென்கிழக்கு, தென் மாகாணங்களிலேயே அதிகளவு மனித -யானை முரண்பாடுகள் உணரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அழிக்கப்படும் வனப்பகுதிகளை அண்மித்து வாழும் யானைகள், நீர்நிலைகள் காணப்படும் மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் மேலும் மனிதர்களுடைய உணவின் மணமும் சுவையும் யானைகளுக்கு அதிகம் பிடித்துப்போகவே, மனிதப் பகுதிகளை அதிகம் நாடுவதாகவும் இந்திய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இவ்விடயத்தை வழமையானது என ஒதுக்கிவிடமுடியாது. இவற்றைத் தடுத்து மனித மற்றும் யானைகளின் அழிவுகளைத் தடுக்க முனையவேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கு மூன்று வகையாக யானைகளால் இழப்புகள் ஏற்படுகின்றன. நேரடி இழப்பு, மறைமுக இழப்பு, சந்தர்ப்ப இழப்பு என அவை வகைப்படுத்தப்படுகின்றன. நேரடி இழப்புகளில் விளை நிலங்கள் பாதிப்படைதல், மனித உயிர்பலி மற்றும் காயமடைதல் என்பனவும் மறைமுக இழப்புகளில் மனித உழைப்பு, பணவிரயம், ஏழ்மை, மனரீதியான பாதிப்புகள் என்பனவும் சந்தர்ப்ப இழப்பில் விவசாயக் குடும்பத்தின் வருடாந்த வருமானமிழப்பு என்பனவும் உள்ளடங்குகின்றன. அதேபோலவே மனிதனாலும் யானைகள் பல்வேறு இழப்புகளைச் சந்திக்கின்றன.
வாழ்விடங்கள் அழிக்கப்படுதல், சுட்டுக்கொல்லுதல், நீரில் விஷம் கலத்தல் என யானைகளும் மனிதர்களால் அதிக பாதிப்பைச் சந்திக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் 12,000-14,000 வரையான யானைகள் காணப்பட்டதாகவும் இவை சுடப்பட்டும் கண்ணிவெடிகளில் சிக்கியும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றில் பிரித்தானியரின் ஆட்சிக்காலப் பகுதியில் மாத்திரம் நான்கு வருடங்களில் 1500 இற்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அதிகமான இழப்புகள் இருதரப்பினருக்கும் காணப்படுகின்றன. இவற்றைத் தடுக்க இலங்கையில் இதுவரை எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?
இலங்கை அரசாங்கமானது யானை நடமாட்டங்கள் காணப்படும் பகுதிகளில் மின்சார வேலிகளை அமைப்பதற்கென திட்டங்களைப் பரிந்துரைத்தது. இவ்வேலிகளை அமைக்க ஒரு கிலோமீற்றருக்கு 3500-5000 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகுமெனவும் கணக்கிடப்பட்டது. அரசசார்பற்ற நிறுவனங்களினால் இலத்திரனியல் சாதனங்கள் மூலமான அறிவிப்பு, யானைகளுக்குப் பிடித்தமான பயிர்கள் மற்றும் மரங்களை வளர்த்தல் எனப் பலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் எவையும் நடைமுறையில் இல்லை. நீண்டகால திட்டமான பனைமரங்களை வளர்த்தலானது இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது. இவ்வாறு திட்டங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் தீர்வு காண்பதென்பது எவ்வாறு சாத்தியப்படும்? அல்லது இலங்கையில் யானைகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள உடவளவை பின்னவலை திறந்தவெளி யானை சரணாலயங்களை விஸ்தரிப்பதுடன், புதியனவற்றை உருவாக்குவதன் மூலமும் இவ்வாறான அனர்த்தங்களை ஓரளவு குறைப்பதற்கான வழியேற்படும். இலங்கை அரசால் சமீபத்தில் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தவிர வேறு ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் இல்லை.
யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புகளை தொலைபேசி மூலமாக அறிவித்து நிவாரணங்களை மட்டும் பெற்றுக்கொள்வதால் யானைகளினால் ஏற்படும் அச்சங்களை குறைத்துவிட முடியுமா? யானைத் தாக்குதல்களால் தங்களவு உறவுகளை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் மட்டும் தீர்வாகுமா?
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக