கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

பிரசவகால விடுமுறை ஆண்களுக்கும் வேண்டுமா?

உலகளவில் ஆண், பெண் சமத்துவம் என்பது பெருமளவில் பேசும் பொருளாக இருந்தாலும் உலகளவில் அதன் நடைமுறைகள் இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை. இன்னும் சில நாடுகளில் பெண்களின் உரிமைகள் மட்டுப்பட்டே இருக்கின்றன. அதேபோல ஆண்களுக்கும் நிகரான பெண்களின் எழுச்சி மந்தமாகவே இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது வழங்கப்படுகின்ற பிரசவ விடுமுறையினை போன்று தந்தையருக்கும் அக்காலப் பகுதிகளில் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. இதனை சர்வதேச நாடுகள் சிலவும் அங்கீகரித்து வருகின்றன.
சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் சனத்தொகையை பெருக்கிக் கொள்ள கணவன் மனைவியருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இவற்றில் குழந்தை பராமரிப்புக்காக ஆண்களுக்கும் அதாவது கணவன்மார்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்பதே முக்கிய கோரிக்கையாகவிருக்கிறது. இது இலங்கை போன்ற நாடுகளுக்கும் சாத்தியமாகுமா என்பதே முக்கிய கேள்வி. இலங்கையில் தந்தைகளுக்கான மகப்பேற்று கால விடுமுறை தொடர்பில் தொழில் சட்டங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் ஆண் தொழிலாளர்களுக்கு இவ்விடுமுறையானது சம்பளத்துடனோ அல்லது சம்பளமில்லாமலோ வழங்கப்படுகிறது. இந்த ஆண்களுக்கும் பெண்களுக்கான பிரசவ நேரத்தில்
விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னோடியாக ஐஸ்லாந்து, டென்மார்க், சுவீடன், நோர்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் செயற்பட்டன. ஆண்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான விடுமுறைகளை இந்நாடுகள் வேறு விதமாக பெற்றோருக்கான விடுமுறை என்ற வகையில் வழங்குகிறது. கனடா, டென்மார்க், அவுஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் 3 வருடங்கள் வரை இவ்விடுமுறையை வழங்குகின்றன.

இவை செல்வந்த நாடுகள் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழலாம். ஆனால் குழந்தை வளர்ப்பு, சுகாதாரம் என்பன ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும் செல்வாக்கு செலுத்தும் என்பதால் இதனை சகல நாடுகளும் பின்பற்றுவதில் தவறேதும் இருக்க முடியாது. ஆனால் தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கான பிரசவ கால விடுமுறை மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. 2005 - 2010 காலப்பகுதியில்  இலங்கையில் மகளிர் விவகார அமைச்சராகவிருந்த சுமேதா ஜெயசேனவினால் ஆண்களுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கும் யோசனை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அவை பெரிதாக எடுபடவில்லை. இதற்கு ஆண்கள் கருவை உருவாக்கும் அல்லது உறவு கொள்ளும் இயந்திரம் மட்டுமே என்ற எண்ணம் தோன்றியதே முக்கிய காரணமாகும். குழந்தையை பராமரிப்பது பெண்ணுக்கு மட்டும் பொறுப்பானதா அல்லது ஆணுக்குரியதா, இல்லை இருவருக்குமுரியதா என்பதே முக்கிய விடயம். இலங்கையை பொறுத்தவரையில் குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்குரியதாகவே இருக்கின்றது. குடும்பத்தை விட்டு அதிகமான ஆண்கள் தனித்திருந்தே தொழில் புரிந்து வருகின்றனர்.  சிலர் தலைநகரங்களிலும் சிலர் வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர். அவ்வாறான சமயங்களில் தமது மனைவிக்கான பிரசவ காலத்தின் போது கூட அவர்களால் செல்ல முடியாதளவுக்கு அவர்களின் தொழில் முறைகள் காணப்படுகின்றன.

ஞாயிறு விடுமுறை என்ற தொழில் சட்டமே சில நிறுவனங்களில் நடைமுறையில் இல்லை. அரச துறையில் தொழில் புரிவோருக்கு இது பாரிய பிரச்சினையாக இராது என்றாலும் தனியார் துறையில் குறிப்பாக நகர்ப்புறங்களில் வர்த்தக நிலையங்களில் காட்சியறைகளில் தொழில் புரிபவர்கள் இவ்விடயங்களில் பெரும் அநீதியை எதிர்கொள்கின்றனர். வெளிநாடுகளில் தொழில்புரியும் ஒருவர் குழந்தை பிறந்து நான்கு அல்லது ஐந்து வருடங்கள் கழித்தே தன் குழந்தையிடம் தன்னை தந்தையாக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை என்பதால் அவர்கள் இவை தொடர்பில் அக்கறையற்றவர்களாகவே இருப்பர்.
இந்த தந்தையருக்கான அல்லது பெற்றோருக்கான விடுமுறை விடயமானது மனித உரிமை, பால்நிலை சமத்துவம், தொழிலாளர் சட்டம் என சகல வழிகளிலும் ஒருவருக்கு உரித்துடையதாகவிருக்கிறது. அத்தோடு குழந்தை பராமரிப்பில் இருவருக்கும் சமபங்கு வழங்கப்படுவதால் பெண்கள் கல்வி நிலையிலும் தொழில் நிலையிலும் அதிகம் முன்னேறக்கூடிய நிலை தோன்றும். பெரும்பாலான பெண்கள் குழந்தை பராமரிப்புக்காக வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போகும் நிலையினை இதன் மூலம் தவிர்க்கலாம்.

பிரித்தானியாவில் இதுவரையும் குழந்தை பெறும் பெண்களுக்கு 50 வாரம் விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை தற்போது ஆணும் பெண்ணும் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் இருவரும் குழந்தை பராமரிப்பில் ஈடுபட முடியும். குழந்தையை தத்தெடுப்பவர்களுக்குக் கூட இந்த 50 வாரம் விடுமுறை வழங்கப்படுகிறது. இலங்கை அரசு இவ்வாறு உயர்ந்தபட்ச  சலுகையை வழங்காவிட்டாலும் ஓரளவுக்கு நியாயமான தீர்வுக்கு பரிசீலிக்கலாம். இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் இந்த ஒருதலைப் பட்சமான பாகுபாடுகள் பாதகமான விளைவையே ஏற்படுத்துமென்பது மென்கேயர் நிறுவனத்தின் ஆய்வு. நவீனத்துவம், உலகமயமாதல், முதலாளித்துவம் என்பவற்றால் பெரும்பாலான பெண்கள் தொழில் புரிய தொடங்கிவிட்டனர்.

 இவ்வாறு பெண்கள் உலகில் 40 வீத தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஆனாலும் வேதனம் இல்லாத வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பு ஒரு வீதம்கூட இல்லையென்கிறது இந்நிறுவனத்தின் ஆய்வு. எனவே பெண்கள் இரு பாத்திரங்களை சுமக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். வேதனத்துடன் கூடிய அலுவலகப் பணி மற்றும் வேதனமில்லாத வீட்டுப் பணி என்பனவையே அவையாகும். வேதனமில்லாதப் பணியில் வீட்டு வேலைகளுடன் குழந்தை பராமரிப்பு மற்றும் வயோதிபர்களை பராமரிப்பது என்பன உள்ளடங்குகின்றன. இதனால் பல பெண்கள் தமது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேர வீட்டுத் தொழிலாளர்களாகவே மாற வேண்டிய சூழல் காணப்படுகிறது.
இலங்கையில் தொழில்புரியும் பெண்களுக்கு தொழில் சட்டத்தின்படி முதல் குழந்தை பிரசவத்திற்கு 84 நாட்களும் இரண்டாம், மூன்றாம் குழந்தைகளுக்கு 42 நாட்களும் வேதனத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகின்றன. ஆனால் இவை தொழில்புரியும் சகல பெண்களுக்கும் உரித்துடையதாக இருக்கின்றதா? ஒரு வர்த்தக நிலையத்தில் தொழில் புரியும் பெண்ணுக்கு இவ்விடுமுறை வழங்கப்படுவதில்லை. அவர் குறைந்த நாட்களுக்கு வேதனமில்லா விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது தொழிலிலிருந்து நிறுத்தப்படுவார். பின்பு முழுநேர வீட்டுப் பணியாளராக இவர் மாறிவிடுவார்.

அதேபோலவே ஆண்களும் தமக்கு வாரத்தில் வழங்கப்படுகின்ற ஒருநாள் விடுமுறையிலேயே வீட்டுக்கும் சென்று குழந்தையை கவனிக்க வேண்டிய நிலை இருக்கும். இது வெளிநாட்டிலுள்ள  ஆண்களுக்கு சாத்தியப்படாது எனவே இங்கு தொழிலாளர் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் எவ்வாறு ஒரு குடும்பத்தை பாதிக்கின்றன என்பதை அறிய முடியும். அமெரிக்காவின் ஹார்வோட்  அறிக்கையின் படி அமெரிக்காவில் சிசு இறப்பு வீத குறைவுக்கு பெண்களுக்கு அல்லது பெற்றோருக்கு வழங்கப்படும் விடுமுறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்கா சிசு மரண வீதத்தில் உலகளவில் 56 ஆவது இடத்தில் இருக்கிறது.

இங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 6.17 என்றளவில் சிசு இறப்பு வீதம் காணப்படுகிறது. இதற்கு பெற்றோருக்கு வழங்கப்படும் விடுமுறையும் ஒரு காரணமாகும். இலங்கையில் 1,000 குழந்தைகளில் 9.02 என்றளவில் சிசு இறப்பு வீதம் காணப்படுகின்றது. இதற்கு முறையான பராமரிப்பின்மையும் காரணமாகும். ஒரு சில பணக்கார பெற்றோர் பிறந்த குழந்தைக்கே பணியாட்களை அமர்த்தி பணிவிடை செய்யும் நிலையிருக்கிறது. இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு, ஆண்களின் பங்குபற்றல் என்பன நீடித்து நிலைக்க பெற்றோருக்கான பிரசவ கால  விடுமுறை அவசியமாகின்றது.  தெற்காசிய நாடுகள் உட்பட சீனா, மலேசியா போன்ற நாடுகளில் கூட பெண்களுக்கு மட்டுமே பிரசவ கால விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே குடும்பங்கள் பெண்களின் பாரிய சுமையாக மாறிவிடுகிறது. (இந்நாடுகளிலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அதிகமாக காணப்படுகின்றது) இது பெண்களின் எதிர்கால வாழ்க்கை படிநிலைகளில் தடையையும் ஏற்படுத்துகிறது.

க.பிரசன்னா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக