இதுவே இன்றைய மேற்கத்தேய நாடுகளின் நிலைமையாக இருக்கின்றது. அதே திசையில் இன்று நாமும் சென்று கொண்டிருக்கிறோம். அங்கு நடப்பது நாளை இங்கும் நடக்கலாம். இதனால் சில மேற்கத்தேய பெற்றோர் பெண்ணுக்கு 10 வயது ஆகும் போதே தமது தொழிலை இடைநிறுத்திவிட்டு பெண்ணுக்கு காவலாக இருக்க முடிவு செய்கின்றார்கள். அவ்வாறானதொரு நிலை இன்று எம்மிடம் இல்லையென்றாலும் கலாசாரப் பிறழ்வு அதை சாத்தியமாக்கிவிடும்.
மேற்கத்தேய நாடுகளிலுள்ள கட்டுக்கடங்காத தனிநபர் சுதந்திரத்தினால் குடும்பங்களும் கலாசாரமும் அழிந்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. மேற்கத்தேய நவீனம் , ஒரு ஆணையோ, பெண்ணையோ, தனது " தனிமனித சுதந்திரம் என்பது தன் குடும்பத்தை விட உயர்ந்தது ' என உணர வைக்கிறது. தன் பெற்றோருடனோ, சகோதார சகோதரிகளுடனோ , கணவன் தன் மனைவியுடனோ மற்றவர்களுடனோ உறவுகளை தனக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். தனக்கு வேண்டியதில்லை என்றால் விலக்கி விடலாம். பாரம்பரிய உறவுகள் தன்னுடைய சுதந்திரத்திற்கு அடுத்து தான்.
உலகிலேயே தனிநபர் உரிமைக்கு பெயர்போன அமெரிக்காவில் கடமை உணர்வற்ற தனிநபர் உரிமை காரணமாக குடும்பங்கள் அழிந்து வருகின்றன. 51 % குடும்பங்களில் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து இல்லை. அல்லது அப்பாவே இல்லாத குடும்பங்கள். அவை எல்லாம் ஒரு பெற்றோர் குடும்பம் (single parent family). 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமையால் கன்னித் தாய்மார்கள் பெருகி தந்தையர் இல்லாத தலைமுறைகள் உருவாகி வருகின்றன. 1960 1970 களில் நிகழ்ந்த வரம்பற்ற பாலியல் புரட்சியும் திருமணமற்ற குடும்ப உறவுகளும் போலியான பெண்ணுரிமையும் இந்நிலைமைகளை தோற்றுவித்துள்ளது. 1970 இல் 11 % குழந்தைகள் கன்னித்தாய்மார்கள் மூலம் பிறந்தன. இவை 1990 இல் 28 % மாகவும் தற்போது 41 % மாகவும் காணப்படுகிறது. இப்போது அமெரிக்காவில் 30 வயதிற்குட்பட்ட கன்னித் தாய்மார்களின் எண்ணிக்கை 53 வீதமாகும். தனிமையில் வாடும் ஒரு தாய் குடும்பமும் தந்தையர் முகம் தெரியாத இளம் சமூகத்தின் பிடியில் அமெரிக்கா காணப்படுகிறது.
அமெரிக்காவில் திருமணமான 10 ஆண்டுகளில் 55 % முதல் திருமணங்களும் 67 % இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிவடைகின்றன.
மூன்றாவது திருணம் செய்து கொண்டாலும் 74 % விவாகரத்திலேயே முறிவடைகின்றன. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளில் 41 % குழந்தைகள் திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கிறது. இவற்றில் பாதி பாடசாலை செல்லும் சிறுமிகளாவர். பாடசாலைகளில் இவர்களின் குழந்தைகளுக்காக பாதுகாக்குமிடம் (Creche) அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது அமெரிக்கா ஸ்பான்டேனியஸ் அபார்ஷன்
( Spontaneous abortion) அதாவது கர்ப்பம் தானாகவே கலைந்து விடுவது கருச்சிதைவு என்றும் வேண்டாத கர்ப்பத்தை கலைப்பது கருக்கலைப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இவையிரண்டும் இணைந்த முறையே அது. அமெரிக்காவில் பாடசாலை பருவங்களில் இவை அதிகமாக இடம்பெறுகின்றன. " டீன்ஏஜ்மதர் ' என்ற நிலையினை களைவதற்காகவே அமெரிக்கா இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க பாடசாலைகளில் உள்ள ஆலோசனை நிலையங்களில் டீன்ஏஜ் கர்ப்பம் சார்ந்த பிரச்சினைகளே அதிகமாகும்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் சுமார் 80 வீதமான மக்கள் " வீட்டில் அப்பா இல்லாத ' குறையே மிகப் பெரியது என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 2.7 கோடிக்கும் மேலான பிள்ளைகள் அப்பா இல்லாமல் வாழ்கின்றனர். 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த வெள்ளையின பிள்ளைகளில் 50 வீதமும் கறுப்பின பிள்ளைகளில் 80 வீதமான பிள்ளைகளும் தங்களுடைய பிள்ளைப் பருவத்தை தாயோடு மாத்திரம் கழிக்கின்றனர். இவற்றை அமெரிக்காவில் மட்டுமல்லாது ஜப்பான், பிரிட்டன் ( 47%) போன்வற்றிலும் காண முடிகிறது.
தந்தையர்களின் தலைமறைவு ஏன் ?
அப்பாக்கள் இல்லாத குடும்பங்கள் உருவாக தொழிற் புரட்சியே காரணமாக கூறப்படுகிறது. தொழிற்சாலை வேலைகள் ஆண்களை கவர்ந்திழுக்க , அவர்கள் குடும்பத்தை பிரிந்து நீண்ட தூரம் செல்ல வேண்டி ஏற்பட்டது. அத்தோடு 1960 களில் திடீரென அதிகரித்த விவாகரத்தும் ஒரு காரணமாகும். விவாகரத்தின் காரணமாக தங்கள் முதல் மனைவியோடு எவ்வித தொடர்பையும் ஏற்படுத்த விரும்பாதவர்கள் பிள்ளைகளை பார்ப்பதிலிருந்தும் விலகுகின்றனர். இதேபோலவே அநேக பெண்களும் தங்களது முதல் கணவரை வெறுக்கின்றனர். இதனால் பிள்ளை அப்பா இல்லாத பிள்ளையாகி விடுகிறது.
திருமணமாகாத பெற்றோர்
தவறான வழியில் அதிகமான பிள்ளைகள் பிறப்பதால் அப்பாக்கள் இல்லாத பிள்ளைகளின் தொகை அதிகரிக்கிறது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் மூன்றில் ஒருபங்கினர் திருமணமாகாத பெற்றோருக்கு பிறப்பவர்கள் . 15 19 வயதிற்குட்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 78 % மானோர் திருமணமாகாதவர்கள். பாதுகாப்பற்ற உடலுறவும் இதற்கு காரணமாகும். அமெரிக்காவில் நகர் புறங்களிலுள்ள ஆண்களுக்கு பாலியல் உறவு என்பது சமூக அந்தஸ்த்தாக காணப்படுகிறது. பலரிடம் உறவு வைத்துக் கொள்வது அவரின் சாதனையாக இருக்கிறது. அத்தோடு இளம் ஆண்களை கவர்வதற்காக பல பெண்கள் செக்ஸை ஒரு பரிசு பொருளாக கருதுகின்றனர். நகர் புறங்களில் இன்னும் அப்பாவாகாத ஆண்களை " பேடி ' என்று அழைத்து அவமானப்படுத்துகிறார்கள். கலிபோர்னியாவில் பாடசாலை அம்மாக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்றில் இரண்டுப்ப ங்கினர் 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களால் வல்லுறவுக்கும் பலவந்த கற்பழிப்புக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவையும் முக்கிய காரணங்களாகும்.
இளம் அப்பாக்கள் கைவிடுவது ஏன் ?
பருவ வயதிலேயே அப்பாவாகி விடுபவர்கள் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது இல்லை. தன் காதலி கர்ப்பமானால் பிரிந்து சென்று விடுகின்றனர். சில இளைஞர்களுக்கு உணர்வு பூர்வமான முதிர்ச்சி இல்லை. ஒரு பெற்றோராக செயற்படுவதற்கு அனுபவம் இல்லை. சிலருக்கு தொழில் செய்வதற்கான கல்வியோ , திறமைகளோ இல்லை. இதனால் பிள்ளைகளை வளர்த்து அவமானப்படுவதை விட விட்டுச் செல்வதே மேல் என சில இளம் அப்பாக்கள் கருதுகின்றனர்.
- அப்பா இல்லாமல் வாழ்வதால் ஏற்படும் ஆபத்துகள்
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் ஆபத்து அதிகம்
அமெரிக்காவில் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 52,000 பிள்ளைகளில் 72 சதவீதமான பிள்ளைகள், அப்பா, அம்மா இல்லாதவர்களாகவும் அல்லது ஒரேயொரு பெற்றோரோடு வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அத்தோடு மாற்றான் தந்தையரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆண் துணை இல்லாதவர்களின் வீடுகளுக்கு முன்பின் தெரியாதவர்கள், நண்பர்கள் என ஆண்கள் அடிக்கடி வந்துபோவதாலும் பிள்ளைகள் அதிகளவில் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள்.
சிறு வயதில் ஆபத்து அதிகம்
ஒற்றை பெற்றோர் கொண்ட குடும்பத்தில் பிள்ளைகள் மீது அதிக மேற்பார்வை இல்லாததால் பிள்ளைகள் வழிதவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு வழிதவறி கர்ப்பமான பெண்களில் அரைவாசிக்கும் மேலானோர் அப்பா இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர் என அமெரிக்க சுகாதார மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வறுமை
தென்னாபிரிக்காவில் கறுப்பின பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருமணமாகாதோருக்கு பிறந்த குழந்தைகள் , வறுமையில் அவதிப்படுவது தெரியவந்துள்ளது. சிலர் பாடசாலை காலத்தில் கர்ப்பமுற்றதால் கல்வியை இடைநிறுத்தியதுடன் வறுமையால் விபசாரத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். சிலர் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். அமெரிக்காவில் அம்மாவும் அப்பாவும் இருக்கும் குடும்பங்களில் 10 % பேர் வறுமையிலும் அம்மா மட்டும் இருக்கும் குடும்பத்தில் 50 % பேர் வறுமையிலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலை தொடருமாயின் அப்பாக்கள் இல்லாத குடும்பங்களின் தொகை அதிகமாகுமென அமெரிக்க சுகாதார மற்றும் மனித உரிமைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு பிள்ளைகளுக்கு கல்வியில் மந்தம் , போதைப் பொருள் பாவனை என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. இதற்கு தீர்வு காண்பதற்காக விவாகரத்தான பெண்கள் தன் பிள்ளைக்கு அப்பா வேண்டுமென்ற நோக்கில் இரண்டாவது திருமணம் செய்வதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறு தாய் மறுமணம் செய்து கொண்ட குடும்பங்களில் 19 வயதிற்கு குறைவான மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், மறுமணம் செய்து கொள்ளாதவர்களிலிருந்து 50 % பெண்களே வெளியேறினர்.
எனவே எதிர்கால அமெரிக்கா, என்பது வல்லரசு என்ற நிலையிலிருந்து அப்பா இல்லாத அமெரிக்காவாக மாறுவதற்கான சூழ்நிலை தற்போது தோன்றியுள்ளது. இவற்றை தடுக்கவில்லையாயின் அவை சாத்தியப்படும். எனவே அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ நினைக்கும் அனைவரும் ஒரு தடவை சிந்திப்பது அவசியமாகும். இல்லையேல் அந்நிலைமை எமக்கும் தோன்ற நீண்ட நாள் ஆகாது.
க. பிரசன்னா
17/12/2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக