கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 மார்ச், 2015

நைஜீரியாவில் "போகோ ஹரம்"

உலகளவில் ஆயுததாரிகளின் போராட்டங்கள் காணப்பட்டாலும் அண்மைக்காலமாக நைஜீரியாவில் போகோ ஹரம் என்னும் அமைப்பின் செயற்பாடுகள் உலகையே தம்வசம் ஈர்க்கும் படியான விடயங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை ஆயுதமுனையில் கடத்திச் சென்றிருந்தது.
இச்சம்பவம் இடம்பெற்று இரு மாதகாலம் நிறைவேறும் தருவாயில் இன்னும் அவை தொடர்பான தேடல்களுக்கு விடை கிடைத்தபாடில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட உலக நாடுகளின் நுட்பங்களும் இவர்களிடம் தோற்றுப் போயிருக்கிறது. அந்த வகையிலேயே கடந்த நாட்களில் மாணவிகள் தொடர்பாக பி.பி.சி. வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி கடத்திச் செல்லப்பட்ட மாணவிகள் மிகப்பெரும் இன்னல்களை எதிர்நோக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவே தோன்றுகிறது.


தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் பாலியல் பலாத்கார வன்முறைக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. பாலியல் வன்முறை தடுப்பு பிரிவுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதியே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகளில் பாதிப்பேர் கர்ப்பமாக திரும்பி வரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று காத்திருக்கும் அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் பல்வேறு வகையான உதவிகளை வழங்க வேண்டிய தேவையுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  இதனிடையே கடந்த வாரம் லண்டனில் இடம்பெற்ற பாலியல் வன்முறைக்கு எதிரான மாநாட்டில் போராட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக்கலந்துரையாடலில் நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் தீவிரவதிகள் மூலம்  சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது எனவும் குறிப்பாக அந்த மாணவிகள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு கர்ப்பமாக நேர்ந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நைஜீரியாவின் வடக்கில் அமைந்துள்ளது போர்னோ மாநிலம். அங்குள்ள கிபோக் நகரிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆயுத முனையில் போகோ ஹராம் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர். அப்போது இக்கடத்தலிலிருந்து தப்பிய சில மாணவிகள் வாகனத்தின் உள்ளே தீவிரவாதிகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தனர். தற்போது இவர்கள் கடத்தப்பட்டு இரு மாத காலங்கள் நிறைவேறும் தருவாயில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் தகவல் கொஞ்சம் யோசிக்கவே வைக்கிறது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் இந்த ஆயுதக் குழுவை போகோ ஹரம் என அழைக்கின்றனர். ஆனால் இவ்வமைப்பின் உண்மை பெயராக |புனிதப் போரையும் இறைத்தூதுவரின் போதனைகளையும் பரப்புரை செய்யும் மக்கள்| என்பதாகும். போகோ ஹரம் என்பது போலித்தடை எனப் பொருள்படும். தாம் போலி எனக் கருதுபவற்றை தடை செய்யும் அமைப்பு இது. வட நைஜீரியா, தென் கமரூன், நைகர் போன்ற நாடுகளிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அப+பக்கர் செஹோ என்பவரே இவ்வமைப்பின் தலைவராவார். இவ்வமைப்பிற்கு தேவையான நிதியினை வங்கிக் கொள்ளையின் மூலம் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோ ஹரம் அமைப்பின் வரலாறு
2002 ஆம் ஆண்டு மொஹமட் ய+சுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பானது ஆரம்பத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மதப் போதனைகளை வழங்கி வந்தது. பின்னர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்று நைஜீரிய மக்கள் மத்தியில் தமது கோரிக்கையை முன்வைத்து 2009 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு நைஜீரியப் படையினரால் இவ்வமைப்பின் படைத் தலைமையகத்தின் மேல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீண்டும் 2010 ஆம் ஆண்டு உயிர்ப் பெற்ற இவ்வமைப்பு சிறைச்சாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தி தம் உறுப்பினர்களை விடுதலை செய்திருந்தது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா போகோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என்றும் இவற்றுக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் அறிவித்தது. தொடர்ந்து 2012, 2013 ஆகிய காலப்பகுதியிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

 2013 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்  நைஜீரிய அரச படை முகாம், காவல் நிலையம், சிறைச்சாலை என்பன இலக்கு வைக்கப்பட்டதுடன் அரச படையினரின்  குடும்பங்கள், மனைவிமார், பிள்ளைகளையும் கடத்திச் சென்று நைஜீரிய அரசிடம் இருந்து 3 மில்லியன் டொலர்களை கப்பமாக பெற்றப்பின்பே விடுதலை செய்திருந்தது. அதனைத் தொடர்ந்தே 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்தியிருந்ததுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் மேற்கொண்டு உயிர் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது
மட்டுமல்லாது கடந்த சில தினங்களில் மேலும் 8 பெண்கள் கடத்தப்பட்டு இருப்பதாக போகோ ஹரம் அமைப்பு தெரிவித்துள்ளது. நைஜீரிய அரசு இஸ்லாமிய விதிகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் இவர்கள் மேற்கத்தைய கலாசாரம், சமூக முறைமை தடை செய்யப்பட வேண்டும் என தெரிவிப்பதுடன் 12 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பாடசாலைக்கு செல்லக்கூடாதென்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறே கடத்தப்பட்ட மாணவிகளில் 12 - 15 வயதிற்கு இடைப்பட்டவர்களே அடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 நைஜீரியாவின் தென்பகுதியானது அதிகளவான கிறிஸ்தவர்களை கொண்ட பகுதியாகும். ஆதலால் இவர்கள் வட நைஜீரியாவை பொருட்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் 2014 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1500 க்கும் மேற்பட்டவர்களை தாக்குதல்கள் மூலம் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மரபு வழி முஸ்லிம்கள் அல்லது தூய்மையானவர்கள் என்று தம்மை அடையாளங்காட்டிக் கொள்ளும் போகோ ஹரம் அமைப்பினர் கடந்த மாதங்களில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் அனைவரும் முஸ்லிமுக்கு மதமாற்றம்  செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் அடிமைகளாக விற்கப் போவதாகவும் காணொளி மூலம் அறிவித்திருந்தது. |நான் உங்கள் பிள்ளைகளை கடத்தியுள்ளேன். அவர்களை இறைவனின் பெயரால் சந்தையில் விற்பனை செய்யவுள்ளேன். மனிதர்களை விற்பனை செய்யும் சந்தையில் அவர்களை விற்க முடியும். விற்பனை செய்தால் அவர்களை திருமணம் செய்ய முடியும் எனவும் பெண்கள் அடிமைகள் என்பதுடன் இஸ்லாத்தில் அடிமைகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரும் 12 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படவிருப்பதாகவும் அவர்கள் கமரூன், சாட் போன்ற நாடுகளிலுள்ள மனித சந்தைகளில் விற்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் அம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகாமையினால் இவ்விடயங்களை இன்று வரையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.


எண்ணெய் வளமிக்க நாடான நைஜீரியா தம்மை பொருளாதார ரீதியில் முன்னிருத்திக் கொள்ளவே செயற்படுவதாகவும் பள்ளி மாணவிகளின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய எவ்விடயத்திலும் அக்கறை கொள்ளவில்லை என்றும் அந்நாட்டு மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறையிலுள்ள தமது ஆயுதக்குழு உறுப்பினர்களை விடுதலை செய்ய விடுத்திருந்த நிபந்தனையையும் ஏலவே அந்நாட்டு ஜனாதிபதி மறுத்திருந்தார். கடந்த மாதங்களில் நைஜீரிய அரசப்படைகள் போகோ ஹரத்தின் இருப்பிடம், பள்ளி மாணவிகள் இருக்குமிடத்தை தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் ஆனால் அத் தகவலை வெளியிடப்போவதில்லையெறும் அவ்வாறு வெளியிட்டால் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்துகள் நிகழலாம் என்ற வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தது.

கடந்த மாதங்களில் பள்ளி மாணவிகளின் கடத்தல் தொடர்பில் தமக்கு உதவுமாறு உலக வல்லரசு நாடுகளை நைஜீரிய ஜனாதிபதி கேட்டுக் கொண்ட நிலையில் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களது புலனாய்வாளர்களையும் நைஜீரிய நாட்டிற்கு அனுப்பியிருந்த நிலையில் இதுவரையும் கடத்தல் தொடர்பில் எவ்விதமான முன்னேற்றங்களும் காணப்படவில்லை. இதற்கு முன்பும் 60 பாடசாலை மாணவர் போகோ ஹரம்  குழுவினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி இச்சம்பவம் தொடர்பிலும் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. இவ்விடயத்தை சுட்டிக்காட்டி ஆபிரிக்க நாடுகள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நைஜீரிய அரச படைகளே நுழைய முடியாத வகையிலான அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே போகோ ஹரம் குழுவினர் வசித்து வருவதாகவும் இலகுவில் அதன் எல்லையை அடைவது கடினமெனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. அத்தோடு இலங்கை இராணுவம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட போர் நுட்பங்களை நைஜீரிய படைகளும் பின்பற்றுவதற்கான பயிற்சியை பெற்றுக்கொள்ளப் போவதாக நைஜீரிய தளபதி அறிவித்துள்ளார்.

 இந்நிலையிலேயே ஐ.நா. சர்ச்சையான தகவலை வெளியிட்டு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. இனியும் நைஜீரிய அரசும் சர்வதேச நாடுகளும் இவ்விடயத்தில் பொறுமையை கடைப்பிடிக்குமாயின் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் நிலை விபரீதமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகியேச் செல்லும்.

க. பிரசன்னா
18/06/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக