கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 மார்ச், 2015

இறந்த பின்னரும் டயானா ஏற்படுத்தும் பரபரப்புகள்

1981 ஆம் ஆண்டு  74 நாடுகளில்  10 கோடி மக்கள் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளித்த திருமணம் , ஆங்கில ஆசிரியையான டயானா பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் திருமணமாகும். ஆசிரியை என்றாலும் டயானா பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு பிறந்தவர்களே வில்லியம், ஹரி இளவரசர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். எனினும் உலகத்தால் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட திருமண ஜோடியின் குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமல்ல, பிரச்சினைக்குரிய விடயங்களையும் பிரிட்டன் ஊடகங்கள் வெளிப்படுத்த தவறவில்லை.
சிறிய விடயத்தையும் கூட பூதாகரமாக பேசியது. ஒரு கட்டத்தில் மகாராணி எலிசபத்  தலையிட்டு "இருவரும் பிரிந்து விடுங்கள்' என்ற தீர்வைக் கூடச் சொன்னார். அதன்படி  1996  ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் சட்ட பூர்வமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின்னரும் "வேல்ஸ் இளவரசி' என்ற பட்டம் டயானாவுக்கு தொடர்ந்து இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் எதிர்காலத்தில் அரியணை வேண்டும் என்றும் பிரச்சினை செய்யக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


இதன் பின்பும் கூட டயானாவைப் பற்றி பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.  1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் டயானாவும் அவர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த பயேத்தும் உயிரிழந்தனர். இருப்பினும் அதன் பின்பு அவருடைய மரணம் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிவந்துக் கொண்டேயிருந்த நிலையில்  2008 ஆம் ஆண்டு விபத்து என்று கூறி தீர்ப்பு வெளியாகியும் பின்பும் சந்தேகம் எழத் தொடங்கவே  2014  ஆம் ஆண்டு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 எனினும் விபத்து தொடர்பான சந்தேகங்கள் இன்னும் இருந்த வண்ணமே உள்ள நிலையில் தற்போது அவரைப் பற்றிய தான புத்தகங்கள், சுயசரிதைகள் பல அவரின் கடந்த காலங்களை மீட்டிப் பார்க்கும் வகையில் அமைந்திருப்பது, பிரிட்டிஷ் அரச குடும்பத்தை டயானாவின்  நிழல் தொடர்ந்திருப்பதை அறிவுறுத்துகிறது. இவற்றில் முக்கியமான குறிப்பு டயானாவின் இளைய புதல்வர் இளைவரசர் ஹரியின் சுயசரிதை தான். ஹரியின் 30  ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சுயசரிதையை இங்கிலாந்து அரச குடும்ப எழுத்தாளர் Benny Junor  நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். " இளவரசர் ஹரி : சகோதரர், வீரர், மகன் ' என பெயரிடப்பட்ட இச் சுயசரிதை புத்தகத்தில் டயானா பற்றிய அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர்பான குறிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் இளவசர் சார்ள்ஸின் தற்போதைய மனைவி கமீலா பார்க்கருக்கு டயானா  கொலை மிரட்டல் விடுத்த செய்தியே பரபரப்பாக பேசப்படுகிறது. கமீலா வீட்டில் தனிமையில் இருந்த போது நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் உன்னை கொலை செய்ய ஒருவரை அனுப்பியுள்ளேன். அவன் உன் தோட்டத்திற்கு வெளியே  நிற்கிறான்  பார். நீ அவர்களைப் பார்க்கிறாயா ? என்று கேட்டு மிரட்டியுள்ளதாக அப் புத்தகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் இதுவரையும் கமீலா எவ்வித செய்தியையும் வெளியிடாமல் இருப்பது ஆச்சர்யம்.

 அத்தோடு டயானா தன் பிள்ளைகளான வில்லியம் மற்றும் ஹரி மீது மிகுந்த அன்பு கொண்டவர். தனக்கே இவர்கள் சொந்தமென்றளவில் அந்த அன்பு அமைந்திருந்தது. உங்களை அதிகமாக நேசிப்பது யார் ? என்ற கேள்வியை அடிக்கடி பிள்ளைகளை நோக்கி அவர் கேட்பார். அத்தோடு வில்லியம், ஹரி ஆகியோரை பராமரிப்பதற்கு பல பணிப் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் குழந்தையோடு நெருங்கிப் பழகி  ஒன்றித்து விடுவார்களேயானால்  அவர்களை வேலையை விட்டு நிறுத்திவிடுவார். இவ்வாறு வேலையை பறிகொடுத்தவர்கள்  ஏராளம் என்கிறது சுயசரிதை. மேலும் டயானா தன் பிள்ளைகளுக்கு ஒரு தாயாக நடந்து கொள்ளவில்லை. தன் இரு புதல்வர்களுக்கும் அவர் ஒரு மூத்த சகோதரி போல தான் நடந்து கொண்டார். காரணம் டயானாவின் தாய் டயானாவிடம் ஒருபோதும் தாயாக நடந்து கொண்டதில்லையாம். சில சமயம் வில்லியம் மற்றும் ஹரியை வளர்த்து வந்த பணிப் பெண்கள் டயானாவையும் சேர்த்து  3 பிள்ளைகளை பராமரிக்க வேண்டியுள்ளதாகவே கருதினர்.

 பள்ளி ஆசிரியரான டயானாவை காதலித்து திருமணம் செய்தவர் சார்ள்ஸ். திருமணத்திற்கு பின்பும்  கமீலாவுடன் சார்ள்ஸுக்கு தொடர்பு இருப்பது கண்டு உடைந்து போயிருந்தார் டயானா. சில சமயங்களில் தற்கொலைக்குக் கூட முயன்றார். இந்த தற்கொலை முயற்சியினால் எதையும் சாப்பிட்டவுடன் வாந்தியெடுக்கின்ற நோய்க்கும் இவர் ஆளாகியுள்ளார்.  சில வருடங்களிலேயே கமீலாவுடனான உறவை பகிரங்கமாக அறிவித்திருந்தார் சார்ள்ஸ். பின்பு விரிசல் அதிகமாகவே விவாகரத்து பெற்றுக் கொண்ட மறு ஆண்டே கார் விபத்தில் டயானா மரணமானார். இறந்து  17  வருடங்களின் பின்பே இவ் விடயங்கள் சுயசரிதையாக வெளிவந்திருக்கின்றன.
 இச் சுயசரிதையே அதிகளவுக்கான ஆச்சரியத்தை வெளியிட்டிருக்கும் நிலையில் அவருடைய இரகசிய  பாலியல் உறவு தொடர்பான குறிப்புகளை டயானாவின் நெருங்கிய தோழியான சிமோன் வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய கலை நிபுணரான ஆலிவருடன் டயானாவுக்கு பாலியல் உறவு இருந்ததாகவும் அவை உறவின் அடிப்படையில்  இல்லையென்றும் அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 அத்தோடு தன் புதல்வர்களினது குதிரையேற்ற பயிற்சியாளரான குதிரையேற்ற வீரர் ஜேம்ஸ் ஹெட்டுடன் டயானா தொடர்பு  வைத்திருந்ததுடன் ரக்பி விளையாட்டு வீரர் கார்லிங் மீதும்  டயானாவுக்கு ஈர்ப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச குடும்பத்தின் தனிப்பட்ட அந்தரங்க விடயங்கள், அரச வம்சத்தின் மூத்த உறுப்பினரின் தவறான பாலியல் தொடர்புகள் என்பவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை டயானா இக் குறிப்பு புத்தகத்தினால் கூட கொல்லப்பட்டிருக்கலாமென சிமோன் தெரிவித்துள்ளார்.

 மேற்கூறிய பரபரப்பு தகவல்கள் மட்டுமல்லாது டயானா கொல்லப்பட்ட அன்று அவருடைய சடலத்துக்கு காவல் இருந்த முன்னாள் பிரஞ்சு பொலிஸ் அதிகாரியான டேனியல் பூர்டன் எழுதியுள்ள  " டயானா: அந்த இரவு '  (Diana : That night) என்ற நூலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் என்னைப் பொருத்தவரையில் இளவரசி டயானா போன்ற  ஒரு  பிரபலத்திற்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு வழங்கபட்டிருக்கவில்லையென்றும் பாதுகாப்பு குளறுபடிகளால் தான் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாமெனவும் டேனியல் பூர்டன் தெரிவித்துள்ளார். இந்த கார் விபத்தில் டயானா, பயத் மற்றும் சாரதியும் உயிரிழந்திருந்ததுடன் தப்பிப்பிழைத்த பாதுகாவலர் தனக்கு நடந்தது ஒன்றுமே ஞாபகத்தில் இல்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், அதுவொரு விபத்து என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்னும் நம்ப முடியாத பல தகவல்கள் வெளிவருவதுடன் இறந்த டயானாவைப் பற்றியும் மாறுபட்ட கருத்துகள், அந்தரங்க விடயங்கள் என்பனவும் வெளிவந்த வண்ணமே உள்ளன. ஆனால்  இவ் விடயம் பற்றி இங்கிலாந்து அரச குடும்பம் எந்தவொரு மறுப்பையும் வெளியிடவில்லையென்பதும் புதினம். ஆனால், இவ்விடயங்களுக்கு மத்தியில் டயானா இறந்தது மட்டுமே உண்மையென்பது எமக்கு தெரியும்.

க. பிரசன்னா 
17/09/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக