கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 மார்ச், 2015

வாடகைக்கு விடப்படும் கருவறை


குடும்ப வாழ்க்கையில் பெண்களின் பங்கு அளப்பரியது என்பது போல தாய்மையிலும் பெண்ணுக்கு நிகர் ஒரு பெண்ணாகவே இருக்க முடியும்.பெண்களின் நிலை உயர்ச்சிக்கு  தாய்மை மிகப் பெரும் உந்து சக்தி. ஆனால் அவ்வாறான தாய்மை இன்று சந்தை பொருளாகவும் முதலீடு இல்லா தொழிலாகவும் மாறிப் போயிருப்பது அதிர்ச்சி மட்டுமல்ல. உன்னதமான தாய்மைக்கே கேடு. வாடகைத் தாய் எனும் பெயரில் விற்கப்படும் தாய்மை  இன்று சமூக கலாசார சீரழிவுகளில் இன்றுமொரு வகை.

வாடகைத் தாய் என்பது பொதுவாக எல்லோராலும் அறியப்பட்டிருந்தாலும் வியாபார ரீதியில் அதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்க அவ்வளவு வாய்ப்புகளில்லை. செவ்வாய்க்குச் செல்லும் விஞ்ஞானிகளின் கனவுகள் கூட இந்தத் தாய்மை விற்பவர்களிடம் தோற்றுப் போகலாம். உலகில் வாடகைத் தாய்களின் இருப்பிடமாக இருப்பது இந்தியாவே.

 இன்வட்ரோ  கருத்தரிப்பு முறை (IVE) யின் மூலம் கணவனின் விந்தணுவையும் மனைவியின் கரு முட்டையையும் இணைத்து சோதனைக் குழாயில் உருவாக்கப்படும் கருவை தனது கருப்பையில் சுமந்து குழந்தையாகப் பெற்றுத் தரும் பெண்களையே வாடகைத் தாய் என்கிறோம். பிறக்கும் குழந்தை தனது தாய், தந்தையின் மரபணுக்களையே கொண்டிருக்கும் என்பதுடன் பத்துமாதம் சுமந்து பெறும் வாடகைத் தாயின் சாயலை ஒருபோதும் கொண்டிருக்காது என்பதே இம்முறை பிரபலமடைவதற்கு முக்கிய காரணாகும். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்
வாடகைத் தாய் முறை நடைமுறையில் பெரிதாக இல்லையென்பதாலும் அத்தோடு மிக அதிகமான தொகை செலவாகும் என்பதினாலுமே இந்தியா போன்ற நாடுகளில் மிக வறுமையில் வாடும் பெண்களை  வெளிநாட்டுத் தம்பதியினர் நாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவின் வட மாநிலங்களில் பலர் வறுமையால் வாடுகின்றனர். இவர்களது ஏழ்மை நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தரகர்கள் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்மார்களுக்கு 50000 ரூபா முதல் 1 இலட்சம் வரை கொடுப்பதாக உறுதியளிக்கின்றனர். அதிக ஏழ்மையால் வாடும் மக்களாக இருப்பதால் இதற்காக அவர்கள் ஒப்புதலும் தெரிவிக்கின்றனர்.

இந்த வாடகைத் தாய்  முறை பல நாடுகளில் நடைபெறுகிறது. ஆனால் வெளிநாடுகளில் இந்த முறையில் ஒரு குழந்தை பெற வேண்டும் என்றால் குறைந்தது 30000  50000 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 15000  அமெரிக்க டொலர்கள் வரையே செலவாகின்றது. அதனாலேயே அனைத்துலகினரும் இந்தியாவை குழந்தைகள் தொழிற்சாலையாக நோக்குகின்றனர். குஜராத்தின் அனந்த் நகரமே வாடகைத் தாய் முறைமையின் மையமென அழைக்கப்படுகின்றது. இங்கு இம்முறை மூலம் ஆண்டுக்கு 30000 குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் அந்நியச் செலாவணியாக  இம்மாநிலம் ஆயிரம் கோடி ரூபாக்களை பெற்றுக் கொள்கிறது.

வாடகைத் தாய் முறைமையின்  தலைநகரம் என்று சொல்லுமளவுக்கு இங்கு கருத்தரிப்பு மையங்கள் பெருகிக் காணப்படுகின்றன. அத்தோடு குஜராத்தின் அஹமதாபாத், ஜாம் நகர், சூரத் போன்ற நகரங்களிலும் இம்முறை பிரபலமடைந்து வருகின்றது. மருத்துவமனைகளைப் பொறுத்தவரை தாய்மாருக்கு 50000  1 இலட்சம் என்றும் தரகர்களுக்கும் மகப் பேறு செலவுகளுக்காகவும் 2  2.5 இலட்சம் ரூபாய்களை அறவிடுகின்றன. இதனால் அதிக இலாபமடையும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்களது முதலீடுகளை பெற்றுக் கொள்கின்றனர்.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள் வீடுகளில் தொழில், கல்வி என்று குடும்ப உறவுகளை ஏமாற்றி விட்டு இத்தொழிலுக்கு அடிமையாகின்றனர்.  குறிப்பிட்ட  பாலினத்தில் குழந்தை வேண்டுமென்று விரும்பும் தம்பதிகளுக்கு வாடகைத் தாய்மார்கள் இத்தகைய குழந்தை உருவாகும் வரை மீண்டும் மீண்டும் கருத்தரிப்புச் சிகிச்சைக்கு உட்பட வேண்டும். குழந்தைப் பேறு காலம் முழுவதும் இந்த வாடகைத் தாய்மார்கள் குடும்பத்தைப் பிரிந்து மருத்துவமனை ஏற்பாடு  செய்து தரும் இடங்களிலேயே வாழ வேண்டும்.

இந்தியாவின் புதுடில்லியில் வாடகைத் தாய்மார்களுக்காகவே சரோகஸி 
(Surrogacy)  சென்டர் இந்தியா கிளினிக் இயங்கி வருகின்றது. தற்போது சுமார் நூறு பேர் வரை வாடகைத் தாயாக பணியாற்றிவரும் இந்நிலையத்தில் வருடாந்த வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிலையம் இதுவரையும் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை வாடகைத் தாய்மார் மூலம் பிரசவித்துக் கொடுத்திருப்பதுடன் கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, பிரேசில் உள்ளடங்களாக 15 வெவ்வேறு நாடுகளில் இக்குழந்தைகள் வாழ்வதாக தெரிவித்துள்ளது. 16 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட பெண்கள் இத்தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க 6000  28000 அமெரிக்க டொலர்கள் வரையான தொகையையும் பெற்றுக் கொள்வதாக இந்நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன்   இந்நிலையம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளப் போகும் வாடகைத் தாய்மார்களின் சத்தான உணவு பழக்க வழக்கங்கள் பற்றியும் ஆலோசனையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது.

வாடகைத் தாய்மார்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு ஆரம்பத்தில் 2 முதல் 3 இலட்சம் ரூபா வரை தருவதாகக் கூறினாலும் குழந்தை பேறு காலத்தில் அந்தப் பெண்ணை பராமரிக்கும் செலவுகள் அனைத்தையும் அவர்களது பங்கிலிருந்தே கழித்து இறுதியில் 12000 முதல் 15000 வரையே கொடுக்கின்றனர். இவை வாங்கப்படும் மொத்த தொகையில் 2% மட்டுமே ஆகும். குஜராத் இளம் பெண்கள் வாடகைத் தாயாக 2 முதல் 5 முறை வரை குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சையே சுலபமானது என்பதாலும் குழந்தைக்கு பாதுகாப்பு என்பதாலும் இயற்கை பிரசவத்திற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதுடன் இதன் காரணமாக ஆரோக்கியமான பெண்கள் கூட இரண்டு குழந்தைகளின் பின் நோயாளிகளாகி வருகின்றனர்.

குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் கடன்களை அடைப்பதற்காகவும் கணவனின் மருத்துவச் செலவுகளுக்காகவும் என தங்களது குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தங்களது கருப்பையை வாடகைக்கு விட வேண்டிய நிலை ஏற்படுவதாக குஜராத் பெண்கள் தெரிவிக்கின்றனர். அதனாலேயே இவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்தியா புதிய சட்டமூலத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
 குழந்தை வேண்டி வரும் தம்பதிகள் திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தும் குழந்தை இல்லையென்றாலே இந்தியத் தாயை வாடகைக்கு அமர்த்த முடியும். இதனால் அதிகமாக இந்தியாவை நாடும் அவுஸ்திரேலிய தம்பதிகளின் வருகை குறையலாமெனக் கூறப்படுகிறது.

இவை இப்படியிருக்க சீனாவில் கடந்த காலங்களில் ஒரு குழந்தை சட்டம் தளர்த்தப்பட்டதாலும், தன் மனைவியை தவிர வேறொரு பெண் மூலம் வாடகை தாய் முறையில் குழந்தை பெற அனுமதி கிடையாது என்பதாலும் சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதிகள் வெளிநாடுகளைச் சேர்ந்த வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வாடகைத் தாய்மார்கள் மூலம் குழந்தை பெறவே விரும்புகின்றனர். ஏனெனில் தங்கள் குழந்தைக்கு 21 வயதாகும் போது அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதாலேயே இவற்றை சீனர்கள் விரும்புகின்றனர் என்பதுடன் இதற்காக அவர்கள் 75 இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரையில் பணம் செலுத்தி வருகின்றனர்.

வறுமையில் வாடும் ஆபிரிக்க நாடுகளான  சூடான், கென்யா, எதியோப்பியா போன்ற நாடுகளில் இவ்வாடகைத் தாய் முறை நடைமுறையில்  காணப்படுவதுடன் பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளும் இவை தொடர்பில் சட்ட ஏற்பாடுகளை கொண்டு வர பரிசீலித்து வருகின்றன. இவ்வாறான நடைமுறைகளும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகமாகவே கருத வேண்டியுள்ளது எனினும் அவை பெண்களால் விரும்பியே மேற்கொள்ளப்படுகின்றன என்பதுடன் சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாலும் தடுக்க முடியாதுள்ளது.
குழந்தைப் பேறு பெண்ணிண் பெண்மையின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றுவது என்பதுடன் அவை இயற்கையின் நியதியுமாகும். ஆனால் வாடகை தாய்முறை பெண்மையையே வாடகைக்கு விடும் நிலைக்கு ஒப்பாகும். காலப் போக்கில் இவற்றைத் தடுப்பது அவசியமாகும்.

க. பிரசன்னா
07/05/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக