
உலகளவில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் மிகக் கொடியது ,இறக்கும் வரையில் பாதிப்பை ஏற்படுத்துவது அசிட் தாக்குதலாகும். இவை பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இவ்வாறு அசிட் தாக்குதலுக்கு இலக்காகும் ஒரு சிலரே தங்களது வாழ்வை மீண்டும் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். ஏனையோர் அப்படியே தமது வெளியுலகிலிருந்து மறைந்து விடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தற்போது அசிட் வீச்சுத் தாக்குதலினால் உலகளவில் பிரபலமான பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ள சிற்றுண்டிச்சாலையை முன்னுதாரணமாக குறிப்பிடலாம்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு எதிரே உள்ள பதேஹாபாத் சாலையில் இந்தச் சிற்றுண்டியகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சான்வ் என்கிற தொண்டு நிறுவனம் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களோடு இணைந்து இச் சிற்றுண்டிச் சாலையை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவிக்கையில் ; அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமான கனவுகள் இருந்திருக்கும் . ஆனால், அமில வீச்சால் அது தகர்ந்து விட்டது. தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அமில வீச்சால் பாதிக்கப்பட்ட நீத்து என்பவருக்காக தொடங்கப்பட்ட இணையத் தளத்தின் மூலம் திரட்டப்பட்ட 3 இலட்சம் நிதியைக் கொண்டே தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அசீட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களாகவே தம்மை எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுக்கு சமூகமும் எவ்விதமான தொழிலை கொடுப்பதற்கும் முன்வருவதில்லை. அதை நாம் சுற்றத்தாரும் ஏற்றுக் கொள்வதில்லை. தற்போது எந்தவொரு தொழில் மையங்களை நோக்கும் போதும் அழகான பெண்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகள் மறுக்கப்படுவதை நாமே காணக் கூடியதாக இருக்கும்.
இலங்கையில் அசிட் வீச்சு தொடர்பாக அதிகமான விடயங்களை அறியாதிருப்பதால் இவைப் பற்றி நாம் அதிக அக்கறை கொள்வதில்லை.
ஆனால், அக் கொடிய சந்தர்ப்பம் எவருக்கும் ஏற்படக் கூடாது என்பதே அனைவரின் அவா. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுப்பதே ஸ்டொப் அசிட் அட்டக் ( குtணிணீ அஞிடிஞீ அttச்ஞிடு ) அமைப்பு. அசிட் வீச்சுக்கு முன் அமைதியாக , வண்ணமயமாக இருந்த வாழ்க்கை திடீரென ஒரு நொடியில் இருண்டு விடுகிறது. அதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம். அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதிலிருந்து மீண்டும் வந்தாலும் அவர்களது முகம் பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருக்கும் மற்றவர்களின் பார்வையை இவர்களும் எதிர்கொள்வது என்பது மிகவும் துயரமாகும். நீந்து என்பவருக்காக தொடங்கப்பட்ட இணையத்தளத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தின் மூலம் இச் சிற்றுண்டிச்சாலை தொடங்கப்பட்டது. தற்போது கஞ்சல், நீத்து, ரூபா மற்றும் கீதா ஆகிய அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து இதனை இயக்கி வருகின்றனர்.
நீத்து அசிட் வீச்சினால் பாதிப்படைந்த போது அவரின் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. குடும்பத்தின் பொறுப்புக்களை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் நீத்து தள்ளப்பட்ட போது இத் தொழிலே இவர்களுக்கு கை கொடுத்தது. இவையே தற்போது அசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படுகிறது. இந்த சிற்றுண்டிச் சாலையில் படிப்பதற்கு தனி அறைகள் காணப்படுவதுடன் இங்கு பெண்களின் சாதனைகள் பற்றிய புத்தகங்களும் காணப்படும். அத்தோடு அசிட் வீச்சால் பாதிப்படைந்த ரூபா என்ற பெண் வடிவமைத்த ஆடைகளை கொண்டு புகைப்பட படப்பிடிப்பும் இடம்பெறுகின்றது. அத்தோடு அசிட் வீச்சினால் பாதிப்படைந்த பெண்களைப் பற்றி ஒரு ஆவணப் படமும் உருவாக்கப்படவுள்ளது. விரைவில் டில்லி, கான்பூர், லூதியானா போன்ற பகுதிகளில் இவ்வாறான சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். " நான் அவர்களை இயல்பாக இருக்குமாறு கூறி புகைப்படம் எடுத்தேன். ஒப்பனைகள் ஏதும் செய்யவில்லை. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். எனவே எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் என அவர்களிடம் கூறினேன். அவர்கள் மன உறுதிமிக்கவர்கள் ' என அவர்களை புகைப்படமெடுத்த கலைஞர் தெரிவித்துள்ளார்.
இவ் ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 5 பேர் மீதும் அசிட் வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இருப்பினும் இந்தியா போன்ற நாடுகளில் இவற்றின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு ஒரு பெண், ஊருக்கு ஒரு பெண் என அசிட் வீச்சுக்கு இலக்காகுவது பயங்கரம். அமில வீச்சுக்கு இலக்கான பெண்களை பார்த்தால், பதறிப் போவோம் , உடலும் உறுப்பும் உருகுக்லைந்து இருக்கும் . இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் 518 பெண்கள் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர். ஆண்டு தோறும் உலகம் முழுவதும் 1500 பேர் அசிட் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளாகின்றார்களென புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் 60 வீதமான அசிட் தாக்குதல்கள் பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகிறன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகில் அதிகமாக பங்களாதேஷ், இந்தியா, கம்போடியா போன்ற நாடுகளில் அதிகளவில் இச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பங்களாதேஷிலேயே அதிகளவனான அசிட் வீச்சு வன்முறைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு 3000 சம்பவங்கள் இது தொடர்பாக பதிவாகியுள்ளன. 2002 ஆம் ஆண்டு 262 சம்பவங்களும் 2011 ஆம் ஆண்டு 91 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அத்தோடு 82 % தாக்குதல்கள் பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவற்றில் 60 வீதமானவை இளவயது பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
பாகிஸ்தானில் 2004 ஆம் ஆண்டு 46 அசிட் தாக்குதல் சம்பவங்களும் 2007 ஆம் ஆண்டு 33 சம்பவங்களும் , 2011 ஆம் ஆண்டு 150 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கம்போடியாவில் ஆண் மற்றும் பெண்களுக்கு எதிராக சரிசமமான அசிட் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் ஆண்களுக்கு எதிராக 48.4 % மும், பெண்களுக்கு எதிராக 51.6 % சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அத்தோடு மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் கணிசமானளவு மேற்படி அசிட் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
தற்கால இளைஞர்களுக்கு எங்கும் எதிலும் கேட்பது கிடைக்க வேண்டும். இதன் மோசமான மறுப் பக்கம், தனக்கு கிடைக்காத அழகு அழிக்கப்பட வேண்டும் என்கின்ற ஆபத்தான மனோ நிலை . மற்றும் தவறான சகவாசம், போதைப் பழக்கம், வக்கிர மனோபாவம் என்பன இவர்களை மேற்படி செயலை செய்யத் தூண்டுகின்றன. ஒரு திடீர் கணத்தில் யாரோ ஒரு பெண்ணின் உயிரையே அழிக்கத் துணிகின்ற அளவுக்கு ஆபத்தானவர்களாகி தங்களது வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்கின்றனர். இதில் இருந்து இளைஞர்களை விடுவிக்க அவர்களின் மனங்களில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பணியிடம், சமூகம் என எங்கும் எப்போதும் தன்னை சூழ்ந்திருக்கும் இத்தகைய ஆபத்துக்கள் குறித்து பெண்கள் விழிப்புடன் இருப்பது மிக மிக அவசியம்.
க. பிரசன்னா
05/11/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக