
தற்போதைய உலக அரசியலில் மேற்குலக நாடுகளால் சர்வாதிகாரியாக இனங்காணப்படுபவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். தற்போது இதை சற்று அழுத்தமாகவே உரைக்கத் தொடங்கி விட்டார்கள். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நெமட்சோ அண்மையில் மொஸ்கோவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை திட்டமிட்ட செயலென இவரின் ஆதரவு நபர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளதுடன், புடினை சர்வாதிகாரியெனவும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
இவருடைய கொலைப்பின்னணியில் புடினை வைத்து பேசுவதற்கு காரணம் இல்லாமலுமில்லை. ரஷ்ய எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான இவர், அண்மைக்காலமாக ரஷ்ய ஜனாதிபதியை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்ததுடன், கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவின் அணுகுமுறை தொடர்பில் கடுமையான அதிருப்தியினையும் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே மொஸ்கோவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருடன் ஒரு ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருக்கும் போதே வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்கள் போரிஸ் மீது கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இருப்பினும் அவருடன் சென்ற பெண் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதுடன், போரிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், ரஷ்யாவின் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பிலும் முக்கிய போராட்டமொன்றில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலேயே அவர் மர்மமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இதனால் புடினின் அரசியல் எதிர்காலத்துக்கு பாரிய பின்னடைவு ஏற்படுமெனவும் எதிர்த்தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.கூலிப்படையை அமர்த்தி இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போரிஸ் தலைமையில் பேரணி நடக்கவிருந்த நிலையில் கொல்லப்பட்டிருப்பது ஆத்திரமூட்டும் செயலென புடின் தெரிவித்துள்ளார். ஆனால், சர்வாதிகாரியான புடின் கொலையை நடத்திவிட்டு தற்போது இவ்வாறு பேசுவதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். போரிஸ் கொல்லப்பட்டதின் பின்பு, அவ்விடத்தில் சுமார் 50 ஆயிரம் மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில், போரிஸின் முதுகு பகுதியில் நான்கு துப்பாக்கி குண்டுகள் துளைத்ததை நினைவுகூரும் முகமாக ரஷ்ய தேசிய கொடியில் நான்கு துளைகளை வரைந்து அதிலிருந்து இரத்தம் வடிவது போன்ற கொடியினை ஏந்தி இவ் அஞ்சலி நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கொடூரமான கொலை அங்கு வீதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளது. கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் படி, சம்பவம் நடைபெறுவதற்கு முன் போரிஸும், உக்ரைன் நாட்டு விளம்பர மொடல் நடிகையும் காரில் வந்துள்ளனர். போரிஸின் கார் வருவதை அவதானித்த மர்ம நபர் அவரது காரில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு புறப்படுகிறார். இதன் பின் போரிஸ் மற்றும் பெண் இருவரும் ஹோட்டலில் உணவருந்திவிட்டு பாலத்தின் மீது நடந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
போரிஸ், நிஜ்னி நவ்கோராட் என்ற பகுதியின் ஆளுநராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பின்னர் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின் காலப்பகுதியில் நாட்டின் துணைப்பிரதமராக பதவி வகித்திருந்தார். 2003ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி வந்த இவர் அண்மையில் மர்மமாக கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பு இவர் தாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே உலகின் பார்வை புடின் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு முன்பும் புடினை விமர்சித்தவர்கள் அவர்களது ஆட்சிகாலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தின் பின் ரஷ்ய ஜனாதிபதியை விமர்சித்து போராட்டத்தில் ஈடுபடுவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற கருத்து வலுக்கத் தொடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் சுதந்திரக் கட்சித்தலைவர் சேர்கி யுசேன்கோவ் கொல்லப்பட்டமை, 2003ஆம் ஆண்டு ஜூலை பிரபல ஊடகவியலாளர் யூரி தொடர்ந்து 16 நாட்கள் மர்மான நோயால் பாதிக்கப்பட்டு இறந்தமை, 2004 ஆம் ஆண்டு ஜூலை, போர்ப்ஸ் பத்திரிகையின் ஆசிரியரான போல் சுட்டுக்கொல்லப்பட்டமை, 2006ஆம் ஆண்டு அக்டோபர், ரஷ்ய ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை, 2006ஆம் ஆண்டு நவம்பர், ரஷ்யாவின் முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் லண்டனில் வைத்து கொலை செய்யப்பட்டமை, மார்ச் 2013ஆம் ஆண்டு புடினை எதிர்த்து கடுமையாக விமர்சித்தவரான போரிஸ் கொல்லப்பட்டமையை தொடர்ந்து தற்போது இவரின் கொலை இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புடினின் ஆட்சிக்காலப் பகுதியில், புடினுக்கு எதிராக தமது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்கள். ஆதலால், இக்கொலையும் இதன் பின்னணியிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை இன்னும் புடின் மறுக்கவுமில்லை. அத்தோடு பிரான்ஸின் சார்லி ஹொப்டோ பத்திரிகை தாக்குதல், உக்ரைன் விவகாரத்தில் போரிஸின் நிலைப்பாடு, விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களும் இதகொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைய காலங்களில் ரஷ்யாவின் அரசியல் நிலைவரங்கள் சர்வதேச ரீதியில் விமர்சனத்துக்குள்ளானவையாக இருக்கும் நிலையில் தற்போது இக்கொலையும் அதற்கு ஆதரவு அளித்துள்ளது போலும்.
க.பிரசன்னா
08.03.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக