
இலங்கை ஆசியாவின் ஆச்சரியமா என்பது எமக்கு தெரியாமல் போகினும் தற்போது இலங்கையில் நடக்கு“ம் விடயங்கள் ஆச்சரியம் தான். அபிவிருத்தி என்ற பெயரில் அத்துமீறிய ஆடம்பரங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அநாகரீகமான விடயங்களும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. அதிலொன்று தான் மசாஜ் நிலையங்கள். இவை இன்று இலங்கையில் அத்தியாவசிய தேவையாகி உள்ளது போலும். சில நாளிதழ்கள் அதிகமான பக்கங்களை இதன் விளம்பரங்களுக்காகவே ஒதுக்குகின்றன.
ஆயுர்வேதம், நவீன ரீதியிலான இரு வகைகளில் இந்த நிலையங்கள் அமையப் பெற்றுள்ளன. மசாஜ் நிலையம் என்பது உருவான நோக்கம் இன்று தடமாறி போனதால் மக்கள் மத்தியில் இவை கெட்ட வார்த்தைகளாகவும் மாறியப்போயுள்ளன. மசாஜ் என்பது அழகு, ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதோடு தசைகளில் இறுக்கத்தை நீக்க, தசை வலியை குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவு ஒரு கலையாகும். இது கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மசாஜ் சிகிச்சை இன்று பல நாடுகளில் பல வடிவங்களில் நோய் தீர்க்கும் கலையாக பரிணமித்துள்ளது.
உல்லாசத் துறையில் முக்கிய ஓர் அம்சமாக கருதப்படும் இந்த மசாஜ் நிலையங்கள் அண்மைக் காலமாக இலங்கையிலும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையிலேயே விபசாரத்தை தொழிலாகக் கொண்ட சில தொழில் வல்லுநர்கள் அதை மசாஜ் கலையோடு இணைத்து சட்டவிரோதமாக மேற்கொள்கின்றனர். பொதுவாக மசாஜ் சிகிச்சை நிலையம் இலங்கை உல்லாச அபிவிருத்தி சபையில் பதியப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்படும் அனுமதியைப் பெற்ற பின்பே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் சில மசாஜ் நிலையங்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் இத்தொழிலை சூட்சுமாக மேற்கொள்கின்றன.
பொதுவாக மசாஜ் நிலையங்களில் ஒரு மணித்தியாலத்திற்கு 1000 ரூபா வீதம் அறவிடப்படுகின்ற நிலையில் மேலதிக தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் மேலதிக தொகையினை பணியாளர்களிடம் செலுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தற்போது சில மசாஜ் நிலையங்களில் சிகிச்சை மற்றும் பாலியல் என்ற இரு வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கட்டணம் பெறப்படுகிறது. இத்துறை அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு துறையாக இருப்பதனால் இத்துறையினை அதிகமானோர் தெரிவு செய்வதாக கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையங்களில் தொழில் புரிபவர்களில் எத்தனை பேர் முறையாக தொழிற்பயிற்சி பெற்று சிகிச்சை வழங்குகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சில சட்டவிரோத மசாஜ் நிலையங்களில் 22 முதல் 25 வயது வரையான பெண்கள் கவர்ச்சிக்காக எந்தவித பயிற்சியும் இல்லாமல் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் பாலியல் தேவையை பூர்த்தி செய்பவர்களாகவும் மாற்றப்படுகின்றனர். சில பெண்கள் மசாஜ் சிசிக்சை வழங்குனராக தொழிலில் அமர்த்தப்பட்டு பின்பு கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் சில பெண்கள் விரும்பியே இத்துறையில் இணைந்து கொள்கின்றமையும் முக்கியமானதாகும்.
மசாஜ் சிகிச்சையின் மூலம் பல்வேறு அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதிக பணம் உழைக்கும் நோக்கோடு இதனை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை நாம் அண்மைய சம்பவங்களின் மூலம் அறிய முடியும். கொள்ளுப்பிட்டி பகுதியில் அண்மையில் மசாஜ் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார நிலையத்தை பொலிஸார் சுற்றி வளைத்ததுடன் இங்கிருந்த 6 தாய்லாந்து பெண்கள் உட்பட 11 பெண்களை கைது செய்திருந்தனர். சில பெண்கள் தொழில் முறை ரீதியாக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் வருகை தந்து இங்கேயே தங்கி பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனுமதி கட்டணமாக 2500 ரூபா பெற்றுக் கொள்வதுடன் தாய்லாந்து பெண்கள் ஒருவருக்காக 5000 ரூபா வரையும் பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் பெரும்பாலும் இணையம் ஊடாகவே தாய்லாந்து பாலியல் தொழிலாளர்கள் நாட்டுக்குள் சுற்றுலா விசாவில் வரவழைக்கப்பட்டு இம்மாதிரியான சட்டவிரோதமான செயற்பாடுகளின் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இணையம், சமூக வலைத்தளங்கள் ஊடாக நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றுக்கு அமைய 35000 முதல் 45000 பேர் வரை பாலியல் தொழிலாளர்கள் நாட்டில் இருப்பது இனங்காணப்பட்டதாகவும் அதேவேளை 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அத்தொகை 20000 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்று வருடங்களுக்குள் பாலியல் தொழிலாளர்களில் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் அதனை விட அதிகரித்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது பாலியல் தொழிலாளர்கள் சமூக வலைதளங்கள், இணைத்தளம் ஊடாக தமக்கான வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்வதாலேயே 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை முழுவதும் 2500 சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் செயற்பட்டு வருவதாகவும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு போதிய அதிகாரங்கள் ஆயுர்வேத சட்டமூலத்தால் வழங்கப்படவில்லையென ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் 143 மசாஜ் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்சமயம் புதிய பதிவுகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிம் ஏராளமான சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் இயங்குகின்றன. திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத போலி வைத்தியர்கள் இந்நிலையங்களை இயக்குகின்றனர். மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசாரம், கருகலைப்பு போன்ற சட்டவிரோத விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் உல்லாச பயணிகளை கவருவதற்காக மேற்படி தொழில் அரச அங்கீகாரத்துடன் வருமானத்துக்காக நடைபெற்றாலும் தற்போது இலங்கையும் இந்நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளதை அறியமுடிகிறது. இலங்கையில் கடந்த ஆண்டிலும் கூட சுற்றுலா விசாவில் வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 12 பேரை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நாடு கடத்தியுள்ளது. இலங்கைச் சட்டப்படி பாலியில் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தோ உள்நாட்டிலிலோ தருவிப்பது, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பது, பாலியல் தொழிலுக்கு இடமளிப்பது போன்றன குற்றமாகும். ஆனால் இலங்கையில் இவை வெளிப்படையாக இயங்காவிட்டாலும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் மறைமுகமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பல வடிவங்களில் இந்த பாலியல் தொழில் இடம்பெறுகின்றன. நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், வீதியோரங்கள் என்பவற்றுக்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட, அரச அங்கீகாரம் பெறப்பட்ட ஆயுர்வேத மற்றும் ஏனைய மசாஜ் நிலையங்களிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அண்மைக் கால பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான காலப் பகுதியில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 321 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறிப்பிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாறும் என்ற போர்வையில் உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் மசாஜ் நிலையங்கள் என்ற விபசார நிலையங்கள் இலங்கை மக்களையும் வெகுவாக பாதித்து வருகின்றது. கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்தில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டமை, இளம் பருவத்தினரின் வாழ்க்கையில் மசாஜ் நிலையத்தின் செல்வாக்கை அறியமுடிகிறது.
அத்தோடு கொழும்பு மருதானை பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார நிலையத்தினை பொலிஸார் சுற்றி வளைத்ததுடன் அங்கிருந்து அநுராதபுரம், பொலநறுவை பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 25 வயது வரையான பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மசாஜ் நிலையங்களுக்கு அனுமதி வழங்கும் திணைக்களங்கள் பாடசாலைகளுக்கு அருகில் அனுமதி வழங்குவது மாணவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக அமைகிறது. இதனாலேயே மாணவர்களும் இந்நிலையத்தை நாடிச் செல்வதற்கான வழியேற்படுகிறது.
அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பது தனிப்பட்ட விடயமல்ல. அவை மக்கள் நலன் சார்ந்த பொது விடயமாகும். ஆகவே சமூக அக்கறையுடனான அபிவிருத்திகளே அவசியம். அதை விடுத்து சொகுசு வாழ்க்கைக்கு உதவும் மசாஜ் நிலையம் போன்ற அநாவசிய போலித் தேவைகளை அரசாங்கம் குறைத்துக் கொள்வது அவசியம்.
க.பிரசன்னா
08/10/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக