
சினிமாத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா திகழ்கின்றது. இங்கு சினிமா கலையாகவும் வருமானம் ஈட்டும் துறையாக மாறியது மட்டுமல்லாது அரசியலில் செல்வாக்கு செலுத்தும் துறையாகவும் மாறியுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவில் இவற்றின் பிரதிபலிப்புகளை காணலாம். அவ்வாறு சினிமாவில் காலூன்றி சாதனைகள் படைத்தோர் பலர் இருக்க, கடந்த காலங்களில் கமல், ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் ஆக்கிரமிப்பிலேயே தமிழ் சினிமா இன்றும் இருந்து வருகின்றது. ஆனால் சமீக காலங்களில் வாரிசு நடிகர்களின் அறிமுகத்தை அதிகளவில் சினிமாத்துறையில் காண முடிகிறது.
தெலுங்கு சினிமாத்துறையில் இன்று அதிகளவில் பிரபலமானவர்களாக வாரிசு நடிகர்களே காணப்படுகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அறிமுகமாகிய வாரிசு நடிகர்கள் ஓரிரு திரைப்படங்களை தவிர பெரியளவில் சோபிக்கத் தவறிவிட்டனர். இதற்கு பின்புலத்தை மட்டும் காரணமாக கூற முடியாது. அவ்வாறு சோபிக்கத் தவறியவர்களில் எஸ்.பி.பி. சரண், சிபி , மனோஜ், சாந்தனு, கார்த்திக் ராஜா ஆகியோரை குறிப்பிட்டுக் கூற முடியும். காரணம் சினிமாத்துறையில் மிகப்பெரிய பின்புலத்தைக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்களின் நடிப்பு, இசை என்பன ரசிகர்களிடம் அதிகளவில் பிரபல்யமாகாமல் போனமை வருத்தத்திற்குரியதே.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - எஸ்.பி.பி. சரண்
தமிழ் சினிமா மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் முன்னணிப் பாடகராக திகழ்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம். 40000 பாடல்களைப் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதோடு நான்கு தலைமுறையினருக்காக பாடிய பிரபலமான பாடகர். இதுவரை வெவ்வேறு மொழிகளில் பாடியதற்காக 6 முறை தேசிய விருதும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதையும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள அரசுகளின் மாநில விருதுகளையும் வென்ற பாடகர்.
இவர் பாடகராக மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல பரிணாமங்களை கொண்டவர். இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் தனது மகனையும் சினிமாத்துறையில் இறக்கி கரை காணாமல் போனது அதிசயம் தான்.
சரண் பாடிய பாடல்கள் ஒரு சில வெற்றிபெற்றாலும் தந்தையின் குரல் வளத்தைப் போலவே அமைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து சென்றன. இளையராஜா மூலம் தேவதை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பெரிதாக இன்னும் சோபிக்கவில்லை.
பின்பு நடிகராக அவதாரமெடுத்தும் பெரிதாக கால்பதிக்க முடியவில்லை. உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் சரோஜா, வா குவாட்டர் கட்டிங் திரைப்படங்களில் நடித்தாலும் அவரின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. நடிப்புத் துறையில் இருக்கும் போதே தயாரிப்பாளராகவும் அறிமுகமான இவர் மழை படத்திற்குப் பின் தயாரித்த சென்னை 28 அதிக வசூலை தந்ததாக அமைந்தது. பின்பு ஆரண்ய காண்டம் ஓரளவுக்கு வசூலை தந்தாலும் பின்பு இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விட்டார்.
பாரதிராஜா - மனோஜ்
நகரங்களை மட்டுமே மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்த வேளையில் யாரும் அதுவரையும் அறிந்திராத கிராமப்புறங்களை தனது இயக்கத்துக்குள் உள்ளடக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிக, நடிகர்களை அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட பெருமை இவருக்குண்டு. அவ்வாறே சவுத் புளோரிடா பல்கலைக்கழகத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ் கலையை பயின்ற மனோஜை தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியும் அவரால் இன்றுவரையும் கூட சிறப்பான இடத்தை பெறமுடியவில்லை. இவரால் அறிமுகமான பலர் இன்று முன்னணியில் இருக்க இவரின் மகனின் இடம் தெரியாமலேயே போய்விட்டது.
கடல் பூக்கள் படம் மூலம் முரளியோடு அறிமுகமான இவர் தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருசமெல்லாம் வசந்தம் போன்றவற்றில் நடித்து சுமாரான வெற்றிபெற்றதோடு மறுபிரவேசமான பல்லவன், சமுத்திரம், மகா நடிகன் போன்ற படங்களிலும் சோபிக்கவில்லை. பின்பு பாரதிராஜாவின் அன்னக்கொடியில் வில்லனாக தோன்றியும் படம் தோல்வியுற்றதால் இவரும் தோற்றுப் போனார். தற்போது நந்தனா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்ட இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதுடன் விரைவில் திரைப்படம் இயக்குவதாகவும் அறிவித்துள்ளார். இயக்குனராக இவர் சாதிப்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நாகேஷ் - ஆனந்த்பாபு
அன்றை அறுபது முதல் என்பதுகள் வரை நகைச்சுவையில் முத்திரை பதித்தவர் மறைந்த நடிகர் நாகேஷ். 1964 இல் சர்வர் சுந்தரம் மூலம் நாயகனாக அறிமுகமாகி எதிர்நீச்சல், நீர்க்குமிழி, பாமா விஜயம் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியவர். திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி, தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி கதாபாத்திரங்கள் பிரபலமானவை. அத்தோடு தற்போது திரையில் ஜொலிக்கும் நாயகர்களோடும் நடித்து புகழ்பெற்றதுடன் மறைந்தும் கோச்சடையான் திரைப்படத்தில் தொழில்நுட்ப பிரசவமாக தோன்றியவர்.
இவருடைய மகனான ஆனந்த்பாபு பாடும் வானம் பாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்த புரியாத புதிர், புது வசந்தம், சேரன் பாண்டியன் என்பன புகழை தந்திருந்தன. அடிப்படையில் நல்ல நடனக்காரராக இருந்தும் பின்பு மதுவுக்கு அடிமையாகி சினிமாத்துறையை இழந்தார். பின்பு கே.எஸ். ரவிக்குமாரின் நட்பால் ஆதவன் படத்தின் மூலம் மறுபிரவேசம் மேற்கொண்டு மதுரை சம்பவத்திலும் தலை காட்டினார். ஆனால் மதுவினால் நடுத்தெருவிற்கு வந்த இவர் மறு பிரவேசத்திலும் ஜொலிக்க முடியாமல் போனது கவலைக்குரியதே.
இளையராஜா - கார்த்திக்ராஜா
என்பது முதல் இன்றுவரையும் இசைத்துறையில் பல நுணுக்கங்களை உட்படுத்தி ஒவ்வொரு இயக்குனருக்கும் இசை மீதான ஆவலை ஏற்படுத்தியவர் இளையராஜா. கிராமத்தின் பட்டித்தொட்டியெங்கும் தன் இசையால் புகுந்தவர். அன்னக்கிளி படத்தின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் இசைச்சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா. சிம்பனி எனும் இசையை அறிமுகப்படுத்தியவர். தளபதியில் இவர் இசையமைத்த பாடல்களை உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக பி.பி.சி. இன்றும் அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புமிக்க இசையமைப்பாளரின் மகன் கார்த்திக்ராஜா.
இவரின் இன்னொரு மகன் யுவன்சங்கர் ராஜா இசையில் நீடித்திருந்தாலும் கார்த்திக் ராஜா ஆரம்பகாலங்களில் பேசப்பட்டவர். ராகங்களை பாடல் வடிவத்தில் கொடுப்பதில் இவரும் வல்லவர். கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவர். பாண்டியன் படத்தில் ஆரம்பித்த இவரது பயணம், உல்லாசம், காதலா காதலா, டும்டும்டும் போன்றவற்றிலும் வெற்றியோடு தொடர்ந்தது. இசை குறிப்புகளை முறையாக பிழையில்லாமல் எழுத தெரிந்த தமிழ் இசையமைப்பாளர். ஆனால் இன்று அவரின் இடம் சினிமாத்துறையில் இல்லாமலே போய்விட்டது. இவருக்கு வாய்ப்புகள் குறைவா ? இசையில் இவர் பெரிதாக சோபிக்கத் தவறினாரா என்பது இன்றுவரையும் கேள்விதான்.
பாக்யராஜ் - சாந்தனு
தமிழ் சினிமாத்துறையில் முக்கிய இயக்குனராகவும் நடிகராகவும் கதாசிரியராகவும் வெற்றிநடைப்போட்டவர் பாக்யராஜ். இன்றளவிலும் இவரது திரைப்படத்திற்கு பெறும் வரவேற்பு உள்ளது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பாரதி ராஜாவின் ஆஸ்தான சிஷ்யரும் கூட. இவரின் மகன் சாந்தனு. இவருடைய மகள் ஏற்கனவே சினிமாவில் அறிமுகமான ஒரே படத்தோடு காணாமல் போய்விட்டார்.
அதன் பின் சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் அநேகர் மனதை கொள்ளைகொண்டவர் சாந்தனு. சித்து + 2 , அம்மாவின் கைபேசி போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி இருந்தாலும் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இன்று அறிமுகநடிகர்களில் எவ்வித பின்புலமும் இல்லாதவர்களே வெற்றி நடைபோடும் திரையுலகில் இவரால் முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.
சத்யராஜ் - சிபிராஜ்
வில்லன்களிலேயே மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவுக்குள் வந்தவர் புரட்சி தமிழன் சத்யராஜ். ஆரம்ப சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் காக்கிச்சட்டை திரைப்படம் இவரை எல்லோர் முன்னும் கொண்டு செல்வதாய் அமைந்தது. நூறாவது நாள் படம் மூலம் கொடூர வில்லனாக பரிணமித்த இவர் எனக்குள் ஒருவன் , மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களிலும் சிறந்த வில்லனாக பேசப்பட்டவர்.
பின்பு நடிகராக ஆரம்பித்த இவரது சினிமா துறை இன்று சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்திருக்கிறது. இவ்வாறே இவரது நடிப்புக் காலத்திலேயே அறிமுகமானவர் இவரது மகன் சிபிராஜ். 2002 ஆம் ஆண்டு ஸ்டுடன் நம்பர் வன் மூலம் அறிமுகமான இவர் சொல்லிக்கொள்ளும்படியாக பிரகாசிக்கவில்லை. என்றாலும் இவரை நிலைநிறுத்த சத்யராஜ் அவருடன் இணைந்து ஜோர் , வெற்றிவேல் சக்திவேல் , கோவை பிரதர்ஸ் போன்ற படங்களில் நடித்தார். பின்பு நாணயம் படம் மூலம் வில்லனாக அறிமுகமான இவர் இன்றும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் அறிமுகமான வாரிசு நடிகர்கள், இசையமைப்பாளர்கள் சோபிக்காமலிருக்க மறுபுறத்தில் ஓரிரு வாரிசுகள் ஜொலிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அவற்றில் முரளி ஆதர்வா, கமல் ஸ்ருதிஹாசன், அக்ஷரா , சிவக்குமார் சூர்யா , கார்த்தி, ரஜினி ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா, பிரபு விக்ரம் பிரபு, கார்த்திக் கௌதம் கார்த்திக் போன்றோர் தமது ஆற்றல் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
அத்தோடு இன்னும் சிலவாரிசு நடிகர்கள் அறிமுகமாக காத்திருக்கின்றனர். கல்கண்டு படத்தின் மூலம் அறிமுகமான நாகேஷின் பேரன் சுஜேஸ், எம்.ஆர். ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிகரன், தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா , ராமானுஜன் படத்தின் மூலம் அறிமுகமான ஜெமினியின் பேரன் அபினய் , விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் போன்றோர் தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகமாக இருப்பவர்கள். கலை என்ற துறையிலிருந்து தற்போது விலகிச் சென்றுள்ள சினிமா பெரும்பாலானோரை வாழ வைத்திருப்பதோடு சிலரை விபசாரம் வரையும் தள்ளியிருக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களின் சினிமா ஆவேசத்தை.
க. பிரசன்னா
19/11/2014






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக