
தம் வாழ்வில் ஓரிரு நாட்களையாவது வெளிநாடுகளில் கழித்து விட வேண்டும் என எண்ணுபவர்களுக்கு இப்பத்தி மன உளைச்சலைத் தந்திடாது. ஆனால் நிரந்தரமாகவே வெளிநாடுகளில் குடிகொள்ள விரும்புபவர்களுக்கு கொஞ்சம் சகித்து கொள்ள முடியாமலேயே இருக்கும். இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு கல்வி, தொழில், குடியேற்றம் போன்ற காரணங்களுக்காக செல்பவர்கள் அதிகமிருக்கின்றனர். சிலர் மாணவர் விசாக்களில் சென்று நிரந்தரமாக அங்கேயே குடியிருக்கவும் முயற்சிக்கின்றனர்.
அப்படியென்ன வெளிநாடுகளில் இவர்களை கவர்வதற்கான அடிப்படை விடயங்கள் அமைந்திருக்கின்றன? கல்வி, சுதந்திரம், சொகுசு, பணப் பெறுமதி என்பன அவற்றில் அடங்குகின்றன. சொந்த நாட்டில் இருப்பதை விட வெளிநாட்டில் பிச்சைக்காரர்களாக இருந்து விடலாம் என்பதே இன்றைய தலைமுறையினரின் எண்ணம். ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பெற்றோர் மீண்டும் சொந்த இடங்களுக்கே திரும்பி தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலக நாடுகளில் இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்ற தமிழர்கள், அகதிகள் எனக் கூறி சென்ற தமிழர்கள், தொழில் முறையின் நிமித்தம் சென்ற தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என பல தமிழ் குடும்பங்கள் தற்போது மேற்குலக நாடுகளில் வாழ்கின்றன. இவர்களில் சிலர் குடும்பமாக சென்றதுடன் தனியாக சென்று சிலர் குடும்பமாகி வாழ்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் தற்போது பதின்மவயது அடைந்ததும் அப்பிள்ளைகள் அச்சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதனால் பெற்றோருக்கு ஏற்படும் சவால்கள் என்பவற்றை கருத்தில் கொண்டே வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையினால் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்கின்ற நிலை தோன்றியுள்ளது.
வெளிநாடு சென்று வாழும் தமிழ்ப் பெற்றோர்கள் இரட்டைக் கலாசாரம், பண்பாட்டு சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அத்தோடு பிள்ளைகளும் மேலைத்தேய கலாசார முறைகளுக்குள் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். இவை பொதுவாக நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைதானே என சாதாரணமாக நோக்குவது தவறு. தமிழ்க் கலாசாரமானது சகல வழிகளிலும் ஆங்கிலக் கலாசாரத்தோடு ஒருங்கிணைய முடியாமல் காணப்படுகிறது.
நிம்மதியான வாழ்வு, வசதியான வாழ்வு இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி தமிழ் கலாசாரம் விரும்பும் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர். இவ்வாறு தமிழ் கலாசாரத்தை விரும்பும் பெற்றோர் தமது பிள்ளைகளை தமது சொந்த நாடுகளுக்கு அழைத்து வந்து கல்வி பயில வைப்பதற்கு முயற்சித்து வருவதுடன் சிலர் படிப்பித்தும் வருகின்றனர். பொதுவாக ஐரோப்பாவிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பதின்ம வயது பெண் பிள்ளைகளாக இருந்தால் கட்டாயம் ஆண் தோழர்கள் இருந்தாக வேண்டும். அப்படி இல்லாவிடில் குறிப்பிட்ட பெற்றோருக்கே பிள்ளைகள் தொடர்பாக கவலை ஏற்பட்டு விடுகிறது.
பெற்றோரின் கவலையாக இருப்பது தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தால் பெண் கவர்ச்சியும் பெண்ணாக இருந்தால் ஆண் கவர்ச்சியும் இருக்க வேண்டும். இல்லாவிடில் பிள்ளைகளுக்கு ஒரு பால் கவர்ச்சி வந்துவிடும் என்பது தான் அந்தக் கவலை. இவை இந்நாடுகளில் வாழும் ஆங்கிலேய பெற்றோருக்கும் காணப்படுகிற மனக் கவலையும் கூட. அதாவது அந்தப் பிள்ளை “லெஸ்பியனாகவோ' (பெண் பெண்) அல்லது “கோ' யாகவோ (ஆண் ஆண்) மாறிவிடும் என்ற அச்சம் பெற்றோரிடத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ் கலாசாரத்தை நேசிக்கும் பெற்றோர்களால் இவற்றை முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளமையே இவர்கள் அந்நாடுகளை விட்டு வெளியேற காரணமாகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் அதிகமாக வரத் தொடங்கி இப்பொழுது 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இலங்கைத் தமிழர்களில் 10 இலட்சம் பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தமது உறவுகளையும் வாழ்வையும் தமிழையும் கலாசாரத்தையும் அவர்களால் மறக்க முடியாதுள்ளது. தமிழ் பண்பாடு மிகவும் உணர்வு பூர்வமானது. ஆனால் தமது பதின்மவயதுப் பிள்ளைகள் அதனை உதறி எறிந்து விடுவார்களோ என்பது பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.
இங்குள்ள பாடசாலைகளிலும் பதின்மவயது பிள்ளைகளுக்கு பெண் நண்பர்கள் அல்லது ஆண் நண்பர்கள் இல்லாவிட்டால் கேவலமாக பார்க்கும் நிலை காணப்படுகிறது. காரணம் இங்கு காணப்படும் ஓர் பால் இனக் கவர்ச்சியாகும். மேற்படி நாடுகளில் ஒர்பாலினக் கவர்ச்சி விடயங்கள் அரசியலை முன்னெடுக்கும் ஓர் உத்தியாகக் காணப்படுவதால் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஒரு பாலின திருமணத்தையும் சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அரசியலில் முக்கியமாக செல்வாக்கு செலுத்தியமை அறிந்ததே. மேற்குலக நாடுகளில் இவை தொடர்பில் இங்குள்ள பதின்ம வயது பிள்ளைகள் அறிந்திருப்பார்கள். பொதுவாக இங்கு ஆண்கள் பெண்கள் கலந்து பழகும் போது தான் பெற்றோர்களுக்கு அவை அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் காலங்காலமாக நண்பர்களாக மட்டுமே பழகிக் கொண்டிருந்கும் ஆண், பெண்களும் உண்டு. ஆனால் அவர்கள் வெறுமனே நண்பர்களாக இருப்பர். பெற்றோர் அவை தொடர்பில் வினவும் போதே பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்குகின்றன.
நட்பாக இருப்பவர்கள் நண்பர்களாகவே இருப்பர். அதனையும் மீறி அந்தரங்க உறவுகளை பேணுபவர்களாக இருப்பர். ஆனால் பதின்ம வயது பிள்ளைகளில் ஆண், பெண் காதலராக இருப்பவர்கள் பாலியல் உறவு வரை செல்லக்கூடிய நிலை இந்நாடுகளில் காணப்படுகிறது. அவை இங்கு சாதாரண விடயமும் கூட. அவ்வாறு பழகும் இருவரிடையேயும் எவ்விதமான எல்லைகளையயும் கட்டுப்பாடுகளையும் காண முடியாது. அவை தமிழ் கலாசாரம் விரும்பும் பெற்றோருக்கு சவாலானதாகும். இங்குள்ள பிள்ளைகள் வீட்டில் யார் இருந்தாலும் அவர்களை மதிக்கமாட்டார்கள். அவர்களுக்கு மதிக்க வேண்டிய தேவையும் கிடையாது. பொதுவாக கூறின் மதிக்கத் தெரியாது. இவையே ஆங்கிலேயே கலாசாரமாக காணப்படுகின்றன.
ஹலோ, ஹாய் என்பதோடு அவர்களது நலம் விசாரிப்பு, மதிப்பு மட்டுப்படுத்தப்படுகின்றது. தங்களது சொந்த வீடுகளுக்கு ஆண் அல்லது பெண் நண்பர்களை அழைத்து வரும் பிள்ளைகள் அவர்களை நேரடியாக தங்களது அறைகளுக்கு அழைத்து சென்று விடுவார்கள். ஆனால் கதவிற்கு வெளியில் இருக்கும் தமிழ் தாயின் நிலை எவ்வாறு அமைந்திருக்கும்? ஆனால் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. அப்படி தொந்தரவு செய்தால் கோபித்து கொண்டு வீட்டை விட்டுப் போய் விடுவார்கள். அதன் பிறகு பெற்றோர் பொலிஸ் நிலையம், விசாரணை என அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு சாதாரணமாக நடக்கும் விடயங்கள் ஆங்கிலேயே கலாசார முறைப்படி பெரியதல்ல. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை அவை பெரிதாகவே நோக்கப்படுகின்றன.
மேற்படி நாடுகளில் பெரும்பாலான பெற்றோர் பணிபுரிபவர்களாவே இருக்கின்றனர்.பிள்ளைகளின் வளர்ப்புத் தேவைக்காக அரசாங்கம் குறிப்பிட்ட தொகையையும் பெற்றோருக்கு வழங்குகின்றது. 18 வயது வரையே பெற்றோர் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்.18 வயதிற்கு பிறகு பெற்றோருக்கு பிள்ளைகள் தொடர்பாக எவ்வித பொறுப்பும் கிடையாது. பிள்ளைகளின் நடத்தை தொடர்பில் கேள்வி கேட்க முடியாது. பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடியாது. மீறி கண்டிக்கும் நிலையில் பிள்ளைகள் பாடசாலையில் கூறினால் அடுத்த கணமே விசாரணைக்காக பெற்றோர்கள் அழைக்கப்படுவர். இவ்வாறான நிலையே இங்கு பெற்றோர்களுக்கு உண்டு.
அத்தோடு இங்கு பிறந்து வளர்ந்த தமிழ் பெற்றோரின் பிள்ளைகள் பலருக்கு எமது கலாசாரம் தெரிவதில்லை என்பதுடன் தமிழை படிப்பதோடு சரி அவற்றை கோர்வையாக்கி அவர்களால் பேச முடியாது. இதனால் தமிழர் வாழ்வு, கலாசாரம், திருமணம், குடும்பம் என்ற வரையறைக்கு நம் பிள்ளைகளை இங்கு கொண்டு வர முடியாது. இங்கு பெரும்பாலும் எம்மவர்கள் தனித் தீவாகவே வாழ்கின்றனர். பக்கத்து வீட்டாருடைய பெயர் கூட எமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரோ அல்லது நாமோ தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.
அதனால் தான் பிள்ளைகள் பதின்ம வயதை எட்ட முதலே அவர்கள் இனி நம் சொந்த மண்ணில் வளரட்டும் என்று பெரும்பாலான தமிழ் பெற்றோர் நினைக்கின்றனர். நமது மண்ணில் தமிழ் பேசி, கலாசாரம் உணர்ந்து, உறவுகள் புரிந்து, தமிழராகவே அவர்கள் மாறிய பின்பு மேலைத்தேய நாடுகளுக்குச் சென்று வாழட்டும் என்ற மனோநிலையை கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பெற்றோர் மீண்டும் தமது சொந்த மண்ணிற்கே திரும்பி சென்று வாழும் முடிவிற்கு தயாராகி வருகின்றனர்.
வெளிநாடுகளிலும் தமிழ்ச் சங்கங்களை அமைத்து தமிழ்க் கலாசாரம் வளர்க்கப்பட்டாலும் அவை அனைத்து தமிழர்களுக்கும் போய்ச் சேர்வதில்லை. இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோரின் செயற்பாடுகளே ஓரளவு தமிழ் கலாசாரத்தை வளர்க்கின்றன. அவர்களுக்குப் பின் அந்த சேவைப் பதவி வெற்றிடமாகவே இருக்கும். ஆதலால் தமிழ் கலாசாரம் விரும்பும் அல்லது எதிர்கால வளர்ச்சியில் பங்கு செலுத்த விரும்பும் தமிழ் பெற்றோர்களின் முடிவு சிறந்ததெனினும் பிள்ளைகளின் மனம் பாதிக்காத வகையிலும் அமைதல் வேண்டும்.
க.பிரசன்னா
04/06/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக