இலங்கையில் யுத்த காலத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி கணிசமான அளவு உயர்ச்சி அடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவற்றால் நாடளாவிய ரீதியில் காணப்படும் வர்த்தகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் எனப் பலரும் இலாபம் பெற்றுக் கொண்டார்களா? இல்லை. குறிப்பிட்ட சிலருக்கே சுற்றுலாத் துறை இலாபம் தருவதாக அமைகிறதா? ஏன் இவை ஒருதலைப்பட்சமாக அரங்கேறுகின்றன என்பதற்கான பதில்களைத் தேடி நாம் அலையத் தேவையில்லை. முறையான வளப்பகிர்வு, புராதன சின்னங்களின் அழிவுகள், பண்பாடு, கலாசாரம் என்பன மாற்றம் கண்டுள்ளதால் இலங்கையில் குறிப்பிட்ட சில பிரதேசங்களே சுற்றுலாத் துறையின் மூலம் உச்ச பயனை அடைகின்றன.தலைநகரமான கொழும்பு, கண்டி, நுவரெலியா, காலி, மட்டக்களப்பு, தம்புள்ள, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை என குறிப்பிட்டுக் கூறக் கூடியளவிலான பிரதேசங்களே உச்சப் பயனை பெறுகின்றன. அத்தோடு சுற்றுலாத் துறையினரின் அதிகரிப்பானது நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகரிப்பது ஒரு புறமிருப்பினும் இலங்கை எதிர்கொள்ளவுள்ள, கொண்டுள்ள சவால்கள் மிக ஆபத்தான நிலையினை எட்டியுள்ளன. சூதாட்டம், விபசாரம், களியாட்டம், அந்நிய குடியேற்றம் என இலங்கையின் தனித்துவம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இனவிகிதாசார பரம்பலில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவர்,
சிங்களவர் என்ற நிலையில், ஓரளவில் மலேயரும் காணப்பட்ட நிலையில் தற்போது அப்பரம்பலில் சீனர்களின் தொகையும் இணையும் அபாயம் நிலவுகின்றது. எதிர்கால இலங்கையின் இனத்துவ பரம்பலில் சீனர்களின் ஆதிக்கமும் மேலோங்கும் நிலை காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு 5,34,132 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இது முன்னைய ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான இதேகாலப் பகுதியுடன் ஒப்பிடும் போது 27.6 வீத அதிகரிப்பாகும். இந்த ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஆனாலும் இவர்களின் கொள்ளவை தாங்கிக்கொள்ளக் கூடியளவிலான வசதிகள் இலங்கையிடம் காணப்படவில்லையென்பதே உண்மை.
இலங்கையைப் பொறுத்தவரை தலைநகரை மையமாகக் கொண்டே சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யப்படுகிறது. தென் பகுதியில் விமான நிலையம், துறைமுகம் என அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வட பகுதியில் சாதாரணமாக ஐந்து நட்சத்திர விடுதிகளையே காணமுடியாதுள்ளது. கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களை தவிர்த்து வேறெங்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளை இலங்கையில் அவதானிக்க முடியாதுள்ளது. பாரபட்சமான அபிவிருத்திகள், முறையான வளப்பங்கீடு இன்மை என்பனவும் இப்பகுதிகளில் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
இலங்கையை மொத்த பன்னாட்டு சுற்றுலா நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் போட்டித் தன்மையைக் கொண்ட நாடாகவே உள்ளது. மேலும் தங்குமிட வசதிகளைப் பொறுத்தவரையில் தற்போது 15,000 வரையிலான விடுதி அறைகளையே கொண்டுள்ளது. இதனை 2016 ஆம் ஆண்டு 40 ஆயிரம் அறைகளாக அதிகரிக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கை சுற்றுலா சபையினூடாக 16 ஹோட்டல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 418 அறைகளைக் கொண்டதாக இவை அமைக்கப்படும். அது தவிர பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்தில் 1000 அறைகள் கொண்ட 13 ஹோட்டல்களும் கல்லடியில் 350 அறைகள் கொண்ட இரு ஹோட்டல்களும் பெந்தோட்டையில் 200 அறைகள் கொண்ட ஹோட்டலொன்றும் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் வட பகுதியில் இதுவரையும் எவ்விதமான நட்சத்திர விடுதிகளும் அமைப்பதற்காக உத்தேசிக்கப்படவில்லை. ஆனால் இலங்கையின் வட பகுதியில் இராணுவ விடுதிகளையும் முகாம்களையும் மாத்திரமே பெரிதாய் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அரசாங்கம் மிகச் சிறந்த கரையோர பிரதேசம் எனக் கருதும் கிழக்கு மாகாணத்தின் அறுகம்குடா, பாசிக்குடா மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள கரையோர நகரங்களை மேம்படுத்துவதற்கே எண்ணியுள்ளது. கற்பிட்டி மற்றும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை கவர்ச்சிகரமான சுற்றுலா அமைவிடமாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டங்களை வகுத்துள்ளது. இவ்வாறு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக அதிகம் கவனம் செலுத்தும் இலங்கை அரசாங்கம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியினால் மறுபுறம் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி சிந்திக்கத் தவறுகிறது.
அண்மைய தகவல்களின் படி இலங்கையில் அதிகமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடியும். போதைப்பொருள் கடத்தல், அரியவகை உயிரினங்கள், தாவரங்கள் போன்றன கடத்தப்படுதல் என்பதுடன் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் விலைமாதுவாக பணியாற்றும் பெண்ணொருவர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்நிய செலாவணியை மாத்திரம் கருத்திற் கொண்டே இலங்கையில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யப்படுகிறது. அதிகமான களியாட்ட விடுதிகளில் சீனப் பெண்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளமையை காண முடிவதுடன், விபசாரத்தில் கால் பதிப்பதற்கும் அவர்கள் தவறவில்லை.
அரசு இலங்கையில் விபசாரத்தை அழிக்க நடவடிக்கைகளை எடுத்து விட்டு நாகரிகம் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் இவற்றை மறைமுகமாக ஊக்குவிக்கின்றது. சுற்றுலாத் துறையில் ஒரு நாடு முன்னணி பெற வேண்டுமாயின் சகல சாதக, பாதக விடயங்களிலும் அந்நாடு தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசும் அவ்வாறே கூறிக்கொள்கிறது. இலங்கை சுற்றுலாத் துறையின் மைய நாடாக விளங்குவதினாலேயே கசினோ சட்ட நடைமுறையை இலங்கையில் திணிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கசினோ சட்ட முறைமை நடைமுறைக்கு வருமேயானால் அரசின் முதலீடுகள் வெற்றி பெற்று விடுமேயொழிய, அவை எதிர்கால சமூகத்தின் எழுச்சிக்கு தடையமைத்துவிடும். சில வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். கடலோர உல்லாச விடுதிகளிலேயே இச்சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இவ்வாறே இந்தியா, மாலைதீவு பெண்கள் அண்மையில் கைதாகியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வருடாவருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மாற்றமேற்பட்டே வருகின்றது. இவ்வருடம் ஏப்ரல் மாதம் 1,12,631 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இவை 39.5 வீத அதிகரிப்பாகும். ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் 37,369, மேற்கு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் 1,81,129, இந்தியாவில் இருந்து 71,346 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவை முறையே 48%, 36%, 20% அதிகரிப்பாகும். ஆனாலும் கூட ஒருதலைப்பட்சமான அபிவிருத்திகளே முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் பெண்களுக்கும் முறையான பாதுகாப்புகள் இலங்கையில் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கு தங்காலை, கொள்ளுப்பிட்டி சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்.
தங்காலை விடுதியில் தங்கியிருந்த இரு வெளிநாட்டுப் பயணிகளில் ஆண் நண்பரை தாக்கி கொலை செய்துவிட்டு பெண் பயணியை பலபேர் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தியமை மற்றும் இலங்கையில் மேற்படிப்புக்காக வந்திருந்த மாணவியொருவரை கொள்ளுப்பிட்டியில் வசிக்கும் இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தி சென்று வல்லுறவுக்குட்படுத்தியமை போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் அமைக்கப்பட்ட சூதாட்ட விடுதிகள் தரமற்றவையென அரசாங்கம் கூறுகிறது. ஆதலால் மீண்டும் அவற்றை புதுப்பித்து நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் கூறுகிறது.
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத விடயங்களாயினும், ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு உட்பட சில பகுதிகளில் காணப்படும் இரவு நேரக் களியாட்ட விடுதிகளில் இன்று அதிகளவான இளைஞர்களையே காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் அனைவரும் தொழில் நிமித்தம் கொழும்பில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ளவர்களே ஆவர். அத்தோடு களியாட்ட விடுதிகளில் தொழில் புரியும் பெண்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதுடன் அவர்களும் மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இலங்கை போன்ற கலாசாரத்திற்கு முக்கியத்துவமளிக்கும் நாடுகளில் இக்களியாட்ட விடுதிகளின் தேவை முக்கியமில்லையெனினும், சுற்றுலாத் துறையின் தேவை கருதியே இவை ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் இலங்கையரே என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மிக முக்கியமாக நோக்கப்படுவது சீன நாட்டவரின் அதிகரித்த வருகையாகும். இலங்கை, சீனாவின் முதலீடுகளால் மூழ்கிப் போயுள்ளதால் சீனர்களுக்குச் சொந்தமான காணிகள், சொத்துகள் என்பன காணப்படுகின்றன. சீனாவில் அதிகரித்து வரும் சனத்தொகை காரணமாகவும் சகல தேவைகளையும் அங்கு நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலை காணப்படாமையினாலும் அவர்கள் இலங்கை நாட்டை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் 36,803 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும் இவை 136 சதவீத அதிகரிப்பாகவும் காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8,005 சீனர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவை 170 சதவீத அதிகரிப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பரம்பலில் இறுதி இடத்தில் இருப்பவர்கள் மலேயர்களாவர். ஆனால், இன்னும் சில வருடங்களில் அவற்றில் சீனர்களும் இடம்பெறுவார்கள் என்ற பரவலான அச்சம் தற்போது எழத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாத் துறையினால் இலங்கைக்கு அந்நிய செலாவணி அதிகமாகக் கிடைப்பது உண்மையெனினும் சுற்றுலாத் துறைக்கான அபிவிருத்திகளில் வளங்கள் இழக்கப்படுகின்றமையும் உண்மையே. தென் பகுதியில் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையமானது பறவைகளின் புகலிடங்களை அழித்தே உருவாக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் விமானங்களினால் பறவைகளின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன் சூழல் சமநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையினால் வருடாந்தம் 350 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை அந்நிய செலாவணியாக இலங்கைக்குக் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் சுற்றுலாத் துறை வளர்ச்சி ஒரு நாட்டின் ஆரோக்கியமான விடயம். எனினும், அவற்றினால் நாட்டின் அபிவிருத்தி விருத்தியடைந்தாலும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும். நாட்டு மக்களின் வளர்ச்சியும் உயர்ச்சியுமே ஒரு அரசாங்கத்தின் கடமையென்பது தவிர்க்க முடியாது. ஆனால் அதே வளர்ச்சி அவர்களை தீய வழிகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதையும் மறுக்க முடியாது.
க.பிரசன்னா
14/05/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக