கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

11 மார்ச், 2015

இந்தியாவில் பரபரப்பான முத்தப் போராட்டம்


 தற்போது இந்தியாவின் கேரளா, கொல்கத்தா பகுதிகளில் பரபரப்பாக இருப்பது முத்தப் போராட்டம் . ஒருவகையில் கலாசார சீரழிவு என்று சொல்லப்பட்டாலும் மறுபுறம்  இதில் அநேக ஆண், பெண்களை காண முடிகிறது. இது நாம் இதுவரை கண்டிராத புதுமையான போராட்டம் என்றாலும் கூட மேற்கத்திய நாடுகளின் போராட்ட உத்தி முறைகள் தற்போது இந்தியாவிலும் கையாளப்பட வேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள்  தள்ளப்பட்டுவிட்டார்கள்.

 கேரள மாநிலம் கோழிக் கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்களும் ஆண்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் இந்திய கலாசாரத்திற்கு எதிரான செயல்களில்  ஈடுபட்டதாக புகார் எழுப்பப்பட்டதுடன் இவை தொடர்பான வீடியோ காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த இந்திய அரசியல் கட்சியொன்று  ஹோட்டலைத் தாக்கி அழித்தது. இதனால் இச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற இறுதியில் போராட்டம் என்று மாணவர்கள் களத்தில் இறங்கி விட்டனர். இதன் விளைவு தான் இந்த முத்தப் போராட்டம்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து முதலில் சுதந்திர சிந்தனையாளர் என்ற பேஸ் புக் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சியில் கடந்த வாரம் இந்த முத்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. சரி முத்தப் போராட்டம் என்றால் என்ன  என்பது பற்றி தெரிய பலரும் ஆவலாயிருப்போம். ஆனால் அது மிகக் கடினமான போராட்டம் அல்ல என்றாலும் அவற்றை மேற்கொள்ள மனதைரியம் வேண்டும். பொது இடங்களில் ஒன்று கூடும் ஆண், பெண்கள் திடீரென ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்வதே முத்தப் போராட்டம் . இவை பால் பாகுபாடுகளின்றி மேற்கொள்ளப்படுவது இன்னொரு அம்சம்.
 கொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முத்தப் போராட்டம் பின்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக் கொண்டுள்ளது.  ஒருபுறம்  போராட்டத்திற்காக பொது இடங்களில் கூடும் மாணவர்களை விட இதைப் பார்ப்பதற்காகக் கூடுபவர்கள் அதிகம். இவர்கள் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அப்படியானால் ஹோட்டலினுள் மாணவர்கள் இதனைத் தான் செய்தார்களா இல்லை இதை விட மோசமான கலாசார சீரழிவு சம்பவங்களை மேற்கொண்டிருந்தார்களா  என்பது தெரியவில்லை. பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்வது சட்டப்படி குற்றம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இதற்குப் பதில் கூறவில்லை. ஆனால், இப் போராட்டத்தில் சிலர் தானாக வந்து இளம் ஜோடிகளை தாக்குவதாகவும் இதில் பொது மக்களும் பங்கு பெறலாம் எனவும்  போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கலாசாரங்களுக்கு பெயர்போனது இந்தியா, ஆனால், அங்கேயே இப்போது இவை சகஜமாகியிருப்பது கலாசாரத்தின் வளர்ச்சியோ தெரியவில்லை.
 மகாராஷ்ட்ரா போன்ற பின்தங்கிய கிராமங்களில் ஒரு பெண் காதலித்தால் பஞ்சாயத்து என்ற பெயரில் கும்பலாக அந்தப் பெண்ணை வன்முறைக்கு உட்படுத்துவது, அன்றாட  கடமைகளில் ஒன்றாக துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது என்ற கொடுமையான சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு அரசியல் வாதிகளே ஊக்கமளிக்கின்றனர்.  ஏன் தமிழ் நாட்டில்கூட காதலித்ததற்காக பல ஜோடிகள் ஒழிக்கப்பட்டார்கள். அப்போதெல்லாம் கூட இவ்வாறான நூதன போராட்டங்கள் அறிவிக்கப்படாமை கொஞ்சம் கவலை தான்.

கொச்சி கடற்கரையிலேயே முதலாவது முத்தப் போராட்டம் ஆரம்பமானது. இவர்கள் இதனை அம்பலப்படுத்துவதால் ஏற்படப் போகும் நன்மை என்ன ? இப்போது செய்வதையே இதற்கு முன் நாங்கள் ஹோட்டலிலும் செய்தோம்  என்கிறார்களா ? இல்லை ஹோட்டலில் நடந்ததை தவறில்லை என்கிறார்களா ? ஒன்றுமே புரியவில்லை. கோழிக் கோட்டில் உள்ள " டவுண் டவுண் ' என்ற ஹோட்டலுக்கு அப் பகுதியிலுள்ள மாணவர்கள் , மாணவிகள் , காதலர்கள் அதிகமாக வருவது வழக்கம். இவர்கள் மேற்படி ஹோட்டலுக்குள் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் கும்மாளமிடுவதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக  ஜோடிகள் வரம்புக்கு மீறிய ஆடல் , பாடல்களில் ஈடுபட்டதாலேயே ஹோட்டல் தாக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

 கிஸ் ஒப் லவ் எனப் பெயரிடப்பட்ட பகிரங்க முத்தப் போராட்டத்திற்கு காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் எனப் பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதில்  60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கூடப் பங்குபற்றியிருந்தனர். கேரள அரசினால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள இப் போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக 50  இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி எர்ணாகுளத்திலுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் நூதன முறையில் கட்டிப்பிடிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் அவர்களை தற்காலிக இடை நீக்கம் செய்தது. தற்போதைய கேள்வி, இவர்களை ஆதரித்து என்ன போராட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பது தான்.

 பல்கலைக்கழக மாணவர்களால் மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டு வளாகத்திலிருந்து முத்தமிடுவது, கட்டியணைப்பது, அன்பை வெளிப்படுத்துவது என இவர்களுக்கு பிடித்த முறையில் நடந்து கொள்வதே  இவர்களில் நோக்கம். இப் போராட்டம் கைவிடப்பட வேண்டுமானால் இவர்களின் ஹோட்டல் விவகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்கிறார்களா ? அப்படியானால் சமூக கட்டுப்பாடுகளை இவர்கள் மீறப் போகிறார்களா ?  கலாசாரத்தை வீதியில் வைத்து  விலைக்கு விற்கிறார்களா ? என்ற கேள்விகள் எம்முன் எழவே செய்கின்றன. ஆயினும் போராட்டம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. கல்வி கற்று எதிர்கால  சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறப்போகும்   பல்கலைக்கழக மாணவர்கள், இவ்வாறு வீதிகளில் இறங்கி அநாகரிகமாக நடந்து கொள்வது சரியானதா ? முத்தமிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமையாயினும் அதனை பொது இடத்தில் மேற்கொள்வதால் அவை பொதுப் பிரச்சினையாகி விடும்.
அதுவே இப்போது இவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இப்போராட்டம் இந்தியா முழுதும் தொடர்ந்தால் அடுத்து உலகமே  இதனை செய்யத் தொடங்கி விடும்.
 ஏற்கனவே  மேற்கத்திய நாடுகள் நிர்வாணம், அரை நிர்வாணம் என மாணவர்களை வைத்துப் போராட்டத்தை ஊக்குவிக்கும் நிலையில் இவை கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் சமூகத்தின் நலன் கருதி விரைவில் சுமுக நிலை எட்டப்படுவது அவசியம்.

க. பிரசன்னா
12/11 /2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக