
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்வேறு தினங்களை அறிமுகப்படுத்தி அதற்குரித்தான இலக்குகளை அடைய வழிசமைக்கிறது. ஆனால், அவ்விலக்குகள், குறிக்கோள்கள் செவ்வனே உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்றால் கேள்வி தான். நிச்சயமாக உலக உணவு தினத்தின் குறிக்கோள்கள், கடமைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று பட்டினி என்ற சொல் வறிய நாடுகளில் இருந்திருக்காது.
உலகில் கொடிய நோய்களில் தற்போது பட்டினியும் ஒன்றாகிவிட்டது. ஒரு நாடு தனக்கு தேவையான உணவினை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவடைவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்படவில்லை. தற்கொலைக்கு எத்தனையோ மன ரீதியான காரணங்கள் இருந்தும் கூட இன்று உணவின்மையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது. அவற்றில் இலங்கையும் இடம்பெற தவறவில்லை. வெறுமனே அபிவிருத்தி என்பது தொழில் நுட்பம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் என்பதையும் தாண்டி இன்று உணவின் முக்கியத்துவத்தையும் கொண்டதாகவே இருக்கிறது. என்று உலகின் ஒரு தனி மனிதன் சகல விடயங்களிலும் தன்னிறைவு அடைகின்றானோ அப்போதே உண்மையான அபிவிருத்தி சாத்தியமடையக் கூடும்.
இன்று உலகில் பிறக்கின்ற அநேக குழந்தைகள் போஷாக்கற்றவர்களாகவும் நோய் வாய்ப்பட்டவர்களாகவுமே காணப்படுகின்றனர். இதனால் எதிர்கால சமூகம் திடமாக உருவாகுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இவ்விடயத்தில் பாரிய சவாலை எதிர்நோக்குகின்றன. அதிக சனத் தொகை, அடிப்படை வசதிகள் இன்மை, பொருளாதார பிரச்சினைகள் என்பன சீரான உ ணவுகளை பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்கடிகளை சந்திக்கின்றன.
இவற்றை முற்றாக ஒழிப்பதென்பது முடியாத காரியம் என்பது தெரிந்த விடயமெனினும் ஓரளவேனும் குறைப்பதற்கான இலக்குகளை நோக்கிப் பயணிப்பது முக்கியம். இல்லையெனில் உணவுக்காக பிற நாடுகளை சூறையாட வேண்டிய நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்படலாம் என்பதுடன் பசி மற்றும் பட்டினியால் வாடுவோரின் தொகையும் குறைவதில் வீழ்ச்சியும் ஏற்பட்டு விடும். உலகில் தற்போது ஒரு நாளைக்கு 92 கோடியே 25 இலட்சம் பேர் பசியுடன் தான் வாழ்க்கையை போக்குகின்றனர்.
உலகில் உணவு என்பது பல வடிவங்களில் மனிதனின் முன் இருந்தாலும் அவற்றைப் பெறுவதற்கு பொருளாதாரம் வழி விடவில்லை. உலகிலுள்ள 7 பில்லியன் மக்கள் தொகையில் 1.3 பில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர். அவர்களுடைய வருமானம் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளக் கூடியவகையிலான நிலையில் இல்லை. உலகில் 2 பில்லியனுக்கு அதிகமானோர் ஒரு நாளைக்கு 100 ரூபாவுக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர். இலங்கையை பொறுத்தவரையில் கூட 100 ரூபாவில் ஒரு வேளை உணவைக் கூட திருப்தியாக உண்ண முடியாத நிலை காணப்படுகின்ற நிலையில் இதை விட வறுமையான நாட்டு மக்கள் எவ்வாறு தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வர்.
உலகில் 85 மில்லியன் பேர் வறுமையால் பாதிக்கப்பட்டால் அவர்கள் 82 மில்லியன் பேர் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்கள் 50 இலட்சத்துக்கும் அதிகமாகும். அந்தவகையில் உலகில் 85 மில்லியன் பேர் பசியாலும் ஊட்டச்சத்து குறைபாடாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். யுனி செப், உலக வங்கி, உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் கணக்கெடுப்பின் படி உலகில் 5 வயதுக்கு குறைவான 16 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர்ச்சி குன்றி காணப்படுவதுடன் இவர்கள் மொத்த குழந்தைகள் தொகையில் 26 வீதத்தினர். வருடந்தோறும் இத் தொகையில் அதிகரிப்பு ஏற்படுகின்றதே தவிர வீழ்ச்சியினை காண முடியாதுள்ளது.
உணவு குறைபாடு காரணமாக ஆபிரிக்க நாடுகளே அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றன. இவர்கள் களி மண்ணை உணவாக உண்ணும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு மக்கள் பட்டினியோடு மட்டுமல்லாது கொடிய நோய்களுடனும் போராட வேண்டிய சூழல் தற்போது ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகிறது. இவற்றோடு கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி போன்றன கூட கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றன. தற்போது உலகில் ஏற்பட்டுள்ள உணவுத் தானிய நெருக்கடியும் பொருளாதார மந்த நிலையும் பின் தங்கிய நிலையிலுள்ள சமூகங்களை தொடர்ச்சியாக பாதித்து வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் மத்திய கால கணக்கெடுப்பின் படி 17,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றன. குவைத், மலேசியா, தென்னாபிரிக்கா, போன்ற நாடுகள் பட்டினி ஒழிப்பினை மேற்கொள்ள ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. தெற்காசிய நாடுகளில் இந்தியா மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. உலகில் பட்டினியால் இருப்போரின் எண்ணிக்கையில் 50 வீதத்தினர் இந்தியர்கள். பட்டினி ஒழிப்பிற்கு வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் உதவி செய்வதில் பின் நின்றாலோ அல்லது அளித்த உத்தரவாதத்தை மீறினாலே அடுத்து வரும் பத்து வருடங்களில் 4.5 மில்லியன் சிறுவர்கள் இறக்கும் நிலையேற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
உலக நாடுகள் இன்று பல்வேறு வகையில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தாலும் அவற்றுக்கு மூல காரணமாக அமைவது உணவு பற்றாக்குறையின் மூலம் ஏற்படும் பட்டினியேயாகும். அவற்றை தீர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்கு சர்வதேசம் எந்த முயற்சிகளை சீர் செய்ய போகிறது. அறிவியல் மூலம் அண்டைய கிரகங்களில் தானிய வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் நிலையில் புவியில் பெரும்பகுதி நிலங்கள் இன்னும் பற்றைக் காடுகளாகவே இருக்கின்றன.
விண்வெளித்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையில் இன்று எத்தனையோ வறுமைப்பிடியில் இருக்கின்ற நாடுகளை வளரச் செய்து விடலாம்.
மனிதன் தேவையினை கருதி எதையும் செய்து வருவதில்லை. சில நாடுகள் வறுமை, பட்டினி தொடர்பான உண்மையான புள்ளி விபரங்களை கூட வெளியிட மறுக்கின்றன. காரணம் அதற்கேற்ற வகையில் நிவாரணங்களுக்கான தொகையினை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதால் ஆகும். அத்தோடு வளரும் நாடுகளில் நிலவுகின்ற விலை வாசி ஏற்றத்தாலும் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு என்பன விலை வாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன.
உலக வங்கியின் அறிக்கையின் படி 2010 2011 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உலகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித அபிவிருத்திச் சுட்டி அறிக்கைகளின் படி மிகவும் அதிகமாக பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக கொங்கோ, நைகர், புரூண்டி, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகள் காணப்படுவதுடன் சாட், லைபீரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, கயானா, எதியோப்பியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான். சூடான், ருவாண்டா, நைஜீரியா, பப்புவா நியூகினியா போன்ற நாடுகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
மேலும் வறுமையின் கொடிய பிடிக்கு ஆபிரிக்க நாடுகளில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் தொற்று நோய்களும் கூட காரணமாக அமைகின்றன. எபோலா வைரஸ் தொற்றின் மூலம் அதிகமானோர் இறந்துள்ளதுடன் அதிகமான குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3 4 வயதுடைய குழந்தைகள் கூட காணப்படுவதுடன் இவர்களுக்கு பராமரிப்பு கிடைப்பதென்பது கடினமானதாக உள்ளதாகவும் யுனிசெப் கூறியுள்ளது. அத்தோடு இந் நோய் தொற்றின் பாதுகாப்பிற்காக பல மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே பெரும்பான்மையான ஆபிரிக்க நாடுகள் நலிவுற்ற நிலையினை எட்டியிருக்கும் நிலையில் இத் தொற்று நோய்களும் அவர்களின் பட்டினி நிலைமையினை இன்னும் மோசமடையச் செய்துள்ளன.
இருப்பினும் சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளும் அதிகமான உதவிகளை வழங்குகின்ற போதிலும் அவை போதியதாக காணப்படவில்லை. இன்றும் உலக நாடுகளில் பசியினால், உணவு நெருக்கடியினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இன்று ஏலவே குறிப்பிட்டது போன்று தொழில் நுட்பம், அறிவியல், உட்கட்டமைப்பு, நிர்மாணம் என்பவற்றுக்கே அதிக தொகையினை செலவழிப்பதுடன் உணவு உற்பத்தியாளர்கள் தேவைகள், குறைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிடுகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் மானிய முறைகள் உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை முறையாக வழங்கப்படுவதில்லை.
தேவைக்கேற்ற உணவு வகைகள் காணப்பட்டாலும் கூட அவற்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை இந் நாடுகளில் காணப்படுகிறது. இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாறும் என்று கூறினாலும் வீதியோரங்களில் இருக்கும் பிச்சைக் காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகும். அபிவிருத்தி என்பது மனித தேவைகளின் உச்சகட்ட பூர்த்தியாக இருக்கின்ற நிலையில் உணவு தட்டுப்பாடு, பட்டினி என்பன தலைவிரித்தாடுகின்ற ஒரு நாடு எப்போது அபிவிருத்தியை நிலை நாட்ட முடியும்.
உலக மக்கள் பரந்துபட்ட தேவையினை கொண்டிருந்தாலும் அடிப்படை தேவையாக அமைவது உணவாகும். அவையே இன்று பெரும்பாலானோருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. மீண்டுமொரு பஞ்சத்தால் ஏற்படப் போகும் போருக்கு யாரும் தயாரில்லை. போராடவும் எவருக்கும் வலிமையில்லை. உலக நாடுகள் குறைகள், சமாதானம், எல்லை என்பதற்கு போராடும் கால அளவை குறைத்து கொஞ்சம் உணவுக்காக சிந்திக்க வேண்டும். நாளை கொண்டாடப்படும் சர்வதேச உணவு தினத்திலாவது உணவின் முக்கியத்துவம் வெளிப்பட வேண்டும். வெளிப்படுவது மட்டுமல்ல அவை வெற்றி பெறவும் வேண்டும். இன்றாவது நாமும் நினைத்து கொள்வோம். நாம் சிந்தும் ஒவ்வொரு சொட்டு உணவுக்காகவும் உலகில் ஏதோ ஒரு ஜீவன் ஏங்கிக் கொண்டிருக்கின்றதென்பதை ....
க. பிரசன்னா
15/10/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக