
ஹொலிவூட்டின் தற்போதைய பரபரப்பு நடிகை ஏஞ்சலினா ஜோலியின் திருமணம். பிரான்ஸில் ஏஞ்சலினாவுக்கும் அவரின் நீண்டநாள் காதலர் பிராட் பிட்டுக்கும் மிக எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தேவாலயத்தில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. ஹொலிவூட் உலகமே இந்நிகழ்வை காண பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன என்பது எல்லோருக்கும் காட்டக்கூடிய திருமண பரிசு. ஏஞ்சலினா ஒரு காலத்தில் ஹொலிவூட் நடிகைகளால் 'ஹோம் பிரேக்கர்' என்று அழைக்கப்பட்டார். காரணம் அவர் ஏனையோரின் காதலர்களை தன் வலைக்குள் விழ வைத்ததுதான்.
அந்த வரிசையில் வந்தவர் தான் பிராட்பிட். ஆனால் அதற்கு முன்பே 1996 ஆம் ஆண்டு ஜோலி பிரித்தானிய நடிகர் ஜானி லீ மில்லரை திருமணம் செய்திருந்தபோதும், 1997 ஆம் ஆண்டே இருவரும் பிரிந்ததுடன் 1999 ஆம் ஆண்டு சட்டபூர்வ விவாகரத்தும் பெற்றிருந்தனர். ஆனாலும், அதற்கு பின்பும் நட்பாய் இருவரும் பழகி வந்தனர். அதன் பின் 1999 ஆம் ஆண்டு திரைப்பட படப்பிடிப்பின் போது அமெரிக்க நடிகரான பில்லிபாப் தோன்டனை ஜோலி சந்தித்தார். இதையடுத்து இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அக்காலப்பகுதியில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி திடீரென 2003 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக்கொண்டது. ஆனால் பில்லியை திருமணம் செய்யும்போது பில்லி இன்னொரு ஹொலிவூட் நடிகையான லாரா டேர்னுடன் நிச்சயதார்த்தம் முடித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இதன் பின்புதான் இன்றுவரையும் ஜோலியோடு நிலைத்திருக்கும் பிராட்பிட்டை கடந்த மாதம் திருமணம் செய்திருந்தார். 2005 ஆம் ஆண்டு முதலே இருவரும் காதலிக்க ஆரம்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இருவரின் காதலின் போதே பிராட் ஜெனிபர் அனஸ்டனுடன் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்தார். இருப்பினும் ஜோலியும் பிராட்டும் தங்களுடைய உறவுகள் தொடர்பில் வெளிப்படையாக எதனையும் தெரிவித்திருக்காத நிலையில், ஜெனிபர் அனஸ்டன் பிராட்டுடனான விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த ஒரு மாதத்தின் பின்பே ஜோலியுடன் பிராட்டின் நெருக்கமான புகைப்படங்கள் வெளிவந்திருந்தன.
அதன் பின்பு பிராட்டின் குழந்தையை தன் வயிற்றில் சுமப்பதனை 2006 ஆம் ஆண்டு 'பீபள்' சஞ்சிகைக்கு ஜோலி தெரிவித்ததுடன் இருவருக்குமிடையிலான உறவையும் முதன்முறையாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். 2006 மே மாதம் ஷிலோ நோவெல் என்ற பெண் குழந்தையை ஜோலி பெற்றெடுத்தார். இக்குழந்தையின் புகைப்படம் பீபள் இதழுக்காக 4.1 மில்லியன் டொலருக்கும் பிரித்தானிய இதழான ஹலோ சர்வதேச உரிமைகளுக்காக 3.5 டொலருக்கும் பெற்றுக் கொண்டது.
பின்பு 2008 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தான் இரட்டை குழந்தைகளை எதிர்நோக்கியிருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்த ஜோலி அதேயாண்டு ஜூலை மாதம் பிரான்ஸில் நாக்ஸ்லியோன் என்ற ஆண் குழந்தையையும் விவியன் மர்செலின் என்ற பெண் குழந்தையையும் பெற்றதுடன் இரு குழந்தைகளின் புகைப்படங்களும் 14 மில்லியனுக்கு விலைபோனது.
உலகிலேயே அதிக தொகைக்கு விலைபோன குழந்தைப் படங்கள் ஜோலியின் குழந்தைகளதுதான். 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜோலி பிராட்டின் செய்திகள் உலகளவில் பிரபலமடைந்ததுடன் இவருடைய கர்ப்பகால செய்தியை ஊடகங்கள் பைத்தியகாரத்தனம் என வர்ணித்திருந்தன.
தற்போது 39 வயதாகும் ஜோலி தன்னை சுற்றியிருந்த உலக சர்ச்சைக்கு பிராட்டுடனான திருமணத்தின் பின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 'ஹோம் பிரேக்கர்' என்ற பட்டப் பெயர் கொண்டு ஹொலிவூட்டில் வலம் வந்த ஜோலியின் இளமைக்காலம் மிகவும் மோசமானதாகவே இருந்தது. அவர் வாழ்வின் சில நாட்களை துன்பத்திலேயே கழிக்க நேர்ந்தது. ஜோன்வொய்ட் மர்செலின் பெர்ட்ரான்ட் தம்பதியினருக்கு மகளாய் பிறந்த ஜோலி, பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு தன் சகோதரர் மற்றும் தாயாரால் வளர்க்கப்பட்டார்.
அவரது அப்பாவை ஜோலிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அந்தப் பிரிவு செல்வச் செழிப்பான ஒரு பாதுகாப்பான சூழலில் இருந்து நடுத்தர ஒடுங்கிய வாழ்க்கைக்குள் அம்மாவையும் பெண்ணையும் தள்ளியது. ஆனாலும் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையே இருந்த அபரிமிதமான பாசம் மட்டுமே அவர்களுடைய கஷ்டமான காலத்தைச் சற்று வசந்தமாக்கிய தருணங்களாக வர காரணமாகவிருந்தன.
14 ஆம் வயதில் தனது நடிப்பு வகுப்புகளை கைவிட்ட இவர், ஒரு இறுதிச்சடங்கு நிர்வாகியாகும் கனவை கொண்டிருந்தார். இந்தக்கால கட்டத்தில் கறுப்பு ஆடையையே அணிந்து கொண்டார். ஜோலியின் தாய் கண்ணியமான வருமான அளவை மட்டுமே கொண்டு பிழைத்து வந்தார். ஜோலி பல சமயங்களில் கைமாறிய உடைகளையே அணிந்தார். இதனால் மற்ற மாணவர்கள் ஜோலியை கேலி செய்தனர்.
14 வயதாகும்போது ஜோலி ஒரு நாகரீக அணிவகுப்பு மங்கையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1997 ஆம் ஆண்டு ஜார்ஜ் வாலஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரது தொழில் வாய்ப்புகள் மேம்படத் தொடங்கின. ஜோலி தனது இளமைக்காலத்தில் உடல் முழுவதும் டாட்டூக்கள் எனப்படும் பச்சை குத்தி எல்லா தினங்களிலும் கறுப்பு உடையையே அணிந்து உலகில் அப்போது கிடைத்த அனைத்து போதை மருந்துகளையும் உட்கொண்டு இந்த உலகிற்கு சற்றும் சம்பந்தமில்லாத தனி உலகத்தில் திரிய ஆரம்பித்தார். நடிக்க வந்த பிறகும் அது தொடர்ந்தது. ' என் மகளுக்கு உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது' என்று அவருடைய தந்தை தெரிவித்ததுடன் இது ஜோலியை மிக மோசமான பெண் என்ற நிலைக்கு தள்ளியது.
இந்த நிலையிலிருந்து மீண்டுவந்த ஜோலி, கம்போடியாவில் திரைப்பட படப்பிடிப்பின் போது உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து தனிப்பட்ட முறையில் முதன்முதலில் அறிந்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு ஜோலி அகதி மற்றும் குடியேற்ற குழந்தைகளுக்கான தேசிய அமைப்பின் ஸ்தாபகம் குறித்து அறிவித்ததுடன் புகலிடம் கோரும் குழந்தைகளுக்கு தன்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக 500,000 டொலர்களை நன்கொடையளித்தார்.
பின்பு மடோக்ஸ் சிவான் என்ற கம்போடிய சிறுவனை தத்தெடுத்தார். அச்சிறுவனின் மூலம் அமைதியும் அன்பும் கருணையும் நிறைந்த சூழல் ஒன்று ஜோலியின் வாழ்க்கையில் முதல்முறையாக வந்தது. அத்தோடு 2006 ஆம் ஆண்டு பிராட்டினுடனான வாழ்க்கையோடு பாக்ஸ் தியென் என்கின்ற வியட்நாம் சிறுவனையும் சஹாரா மர்லே என்ற எதியோப்பிய பெண் குழந்தையையும் ஜோலி தத்தெடுத்துக் கொண்டார். தற்போது ஜோலி பிராட்பிட் மற்றும் தனது 6 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஜோலியின் தாய் புற்றுநோய் காரணமாக இறந்தார். ஜோலியின் மரபணுக்களிலும் தாயின் புற்றுநோய் தடங்கள் இருப்பதை மருத்துவர்கள் ஜோலிக்கு அறிவித்தனர். இதனால் மாக்செக்டமி மூலம் தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றினார். அறுவை சிகிச்சையையும் புற்றுநோய் தடுப்புக்காக மேற்கொண்ட மருந்துவங்களையும் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான சூழ்நிலையையும் உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக வெளிப்படையாக ஜோலி தெரிவித்திருந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் பேக்கிங்ஹாம் அரண்மனையில் ஈஇMஎ என அழைக்கப்படும் உயரிய விருதினை மகாராணியாரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்தோடு உலகளவில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சிறப்புத் தூதுவராக ஐ.நா.வுக்காக ஜோலி தற்போது செயற்பட்டு வருகிறார். மற்றும் நடிகை, இயக்குனர் என்று பல பரிமாணங்களை பெற்றுள்ள ஜோலி, குழந்தைகளை அளவுக்கு அதிகமாக செல்லம்கொடுத்து பேய்கள் போல வளர்க்கின்றார் என்று கூட ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் தோன்றிய ஜோலி ஒஸ்கார், கோல்டன் குளோப், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட், அக்கடமி போன்ற விருதுகளை நடிப்புக்காக வென்றுள்ளார்.
த கேர்ள் இன்டட்ரெப்ட் (1999), போன் கலெக்டர் (1999), லாரா கிரோப்ட் த டொம்ப் ரைடர் (2001), வோன்டட் (2008), சால்ட் (2010) போன்ற திரைப்படங்கள் அவரை சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தியதுடன் மில்லியன் டொலர்களையும் வாரி வழங்கியிருந்தது. இன் த லேண்ட் ஒப் ப்ளட் எண்ட் ஹணி (2011) திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த வருடம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் அன்புரோக்கன் திரைப்படம் ஒஸ்காரில் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு தன்னுடைய சமூக சேவையால் பன்னாட்டு குடியுரிமை பெற்றுள்ள ஜோலி, உயரிய விருதுகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
தனது இளமைக்கால வாழ்க்கை கோலங்களினால் தடமாறிப் பயணித்த ஜோலி பல விவாகரத்துகளின் பிறகு பிராட் பிட்டுடனான திருமணத்தின் பின் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்தியுள்ளதுடன் கஷ்டமான சூழ்நிலைகளை தகர்த்தெறிந்து இன்று உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்துள்ளதுடன் வெற்றியின் வலியினை இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளார். அண்மையில் பிரிட்டனில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முதலாவது மாநாட்டினை நடத்தி உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் உலக மக்களின் வரவேற்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
க. பிரசன்னா
03/09/2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக