தற்போது உலக சனத்தொகை 7 பில்லியன்களையும் தாண்டியுள்ள நிலையில் இன்னும் எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நாடுகள் முறையான திட்டங்களை வகுத்துள்ளனவா என்பது கேள்வியே. 2050 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலக சனத்தொகை பருமனில் இந்தியா முதலாமிடத்தையும் சீனா இரண்டாமிடத்தையும் ஐக்கிய அமெரிக்கா மூன்றாமிடத்தையும் நைஜீரியா நான்காவது இடத்தையும் பெற்றுக்கொள்ளுமென ஐ.நா. எச்சரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் பிற்பாடான கணக்ö கடுப்பின் படி இந்தியாவின் சனத்தொகை 121 கோடியையும் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டின் சனத்தொகை 7
கோடியையும் மீறியுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகை 145 கோடியாக உயர்ந்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் வாய்ப்பிருக்கிறது. உலக நிலப்பரப்பில் 2.6 வீதத்தை கொண்டுள்ள இந்தியா, உலக சனத்தொகையில் 16 வீதத்தைப் பெற்றுள்ளது.
பெண்களுக்கு இளவயது திருமணம், ஆண் வாரிசு வேண்டுமென்ற மனப்போக்கு, கல்வியறிவின்மை,மூடநம்பிக்கை ஆகியவையே மக்கள் பெருக்கத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆண்பிள்ளைகளைபெற்றுக் கொள்ள நினைக்கும் சில பெண்கள் ஆறு, ஏழு பிள்ளைகளின் பின்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு நபரும் சனத்தொகை வளர்ச்சி வேகத்திலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். ஆனால், இவை அதிகரித்த நன்மையைத் தராது என்பதுடன் வேலை வாய்ப்பு, கல்வி, போக்குவரத்து, உறைவிடம், உடை ஆகிய தேவைகளின் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலத்தில் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர்கள் பல்வேறு சிக்கலை எதிர்நோக்கவுள்ளனர். பெருகிவரும் சனத்தொகையால் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால், விளைநிலங்களை கட்டிடங்கள் சூழ்ந்து கொள்கின்றமையால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அனைவரும் மருத்துவ தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இறுக்கப்டுகிறது. அரசால் அனைத்து மக்கள் தொகைக்கேற்பவும் சலுகைகளை வழங்க முடியாமல் தடுமாறுகின்ற நிலையில் தனியார் துறைகளின் கட்டண முறைகளால் மக்கள் இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசல், நீர், சுற்றுப்புறச்சூழல் போன்ற சகல வழிகளிலும் சனத்தொகை அதிகரிப்பானது பாதிப்பை ஏற்படுகின்றது. இவை முழு உலக நாடுகளுக்குமே பாரிய சவாலான விடயமாக எதிர்காலத்தில் தோன்ற வாய்ப்புள்ளது.
இவ்வாறான சனத்தொகையின் அதிகரிப்பில் இலங்கையும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. தற்போது இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் 60 இலும் கூடிய வயதுடையவராவர். 2025ஆம் ஆண்டில் வயது முதிர்ந்தோர் தொகை 20வீதமாக காணப்படும் எனவும் இதில் ஆண்களை விட பெண்களின் தொகை அதிகமெனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது 5.6 மில்லியனாக காணப்படும் இளைஞர்களுக்கு இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் கருத்தடை போன்றவற்றில் போதிய விளக்கமின்மையும் சனத்தொகை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
விளைநிலங்கள்,கட்டிட நிர்மாணம் உட்பட பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் உணவு உற்பத்தி பாதிப்படைகிறது. உலகில் 1 பில்லியன் மக்கள் உணவு நெருக்கடியால் பாதிப்படைந்துள்ளனர். சனத்தொகை அதிகரிப்பானது போஷாக்கான உணவுகளை பெற்றுக் கொள்வதிலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. உலகில் பலகோடி மக்கள் வீடில்லாமல் வீதியோரங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் கூட இந்நிலைமை இன்னும் மோசமாகி வருகின்றது. அத்தோடு நீரின் தேவை அதிகமாவதோடு நீர்பற்றாக்குறையும் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. உலகில் தினமும் 3000 க்கும் அதிகமான சிறுவர்கள் நீர்ப்பிரச்சினையால் உயிர் இழக்கின்றனர். 1.1 பில்லியன் மக்கள் நீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எதிர்வரும் 30 ஆண்டுகளில் முஸ்லிம்கள் உலக சனத்தொகை வளர்ச்சியில் 70 வீதத்தினை கொண்டிருப்பர். தற்போது 1.6 பில்லியனாக காணப்படும் முஸ்லிம்கள், ஏனைய நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் இரட்டிப்பு வளர்ச்சியைக் கொண்டுள்ளனர்.
எனவே அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப வளங்களை பகிரவேண்டிய முக்கிய கடமைகளை ஒவ்வொரு அரசும் கொண்டுள்ளன. அபிவிருத்தியை நோக்கி இயங்கும் நாடுகள் சனத்தொகை வளர்ச்சி வேகத்தினால் அவை பாதிப்படைய கூடிய நிலை காணப்படுகின்றது. தற்போது ஒவ்வொரு நாடுகளிலும் காணப்படும் இளம் சந்ததியினரை முறையாக அறிவுறுத்தி வழிநடத்துவதன் மூலம் எதிர்கால சனத்தொகை வளர்ச்சி வேகத்தில் ஓரளவு தடைகளை ஏற்படுத்தலாம்.
ஆனால் சில வறிய நாடுகளில் சனத்தொகை வளர்ச்சி போக்கு அதிகமென்பதுடன் தாய்மாரின் குழந்தைபேறு தொகையும் அதிகரித்துள்ளன. வறுமை, பட்டினி, தொழில் வாய்ப்பின்மை என்பவற்றை உடனடியாக நிவர்த்திக்க முடியாதெனினும் எதிர்கால உலக சவால்களை கருத்திற் கொண்டு நீண்டகால செயற்றிட்டங்களை முன்னெடுப்பது கட்டாய தேவையாகிறது. எதிர்காலத்தில் உலகில் மூவரில் ஒருவர் இந்தியர் அல்லது சீனராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமென கூறப்படுகிறது. இந்நிலை நீடிக்குமாயின் 2050 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலம் உலக சனத்தொகை இந்திய, சீனரின் அழுத்தத்திற்கு உட்படவும் வாய்ப்பாக அமையும்.
க.பிரசன்னா
16/07/2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக