கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2015

கௌரவக் கொலைகள்

 மனித இனம் எவ்வளவோ நாகரீக வளர்ச்சியினை எட்டியிருந்தாலும் சில சமூகங்களில் இடம்பெற்றுவரும் பிற்போக்கு நடவடிக்கைகள் மனித இன வளர்ச்சியில் எம்மை சந்தேகம் கொள்ள வைக்கின்றது. அவற்றில் கௌரவக் கொலைகள் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. இவ்வாறான சம்பவங்கள் இன்று வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் பிற்போக்கு சமூகங்களிலேயே காணப்படுகின்றன. இவற்றுக்கு அந்நாடுகளில் காணப்படும் சட்டசார்பு நிலையும் ஒரு காரணமாகும். கௌரவ கொலையென்பது குடும்பங்களுக்கு கௌரவமான ஒரு நிகழ்வாக இருக்கின்றது. கொலையென்பது கௌரவமா?, சமூகக் கௌரவ கொலைகளை அங்கீகரிக்கலாமா? இவற்றை எவ்வாறு தடுப்பதென்பதைப் பற்றி ஆழமான தெளிவு கொண்டிருத்தல் அவசியமாகும்.


கௌரவக் கொலைகள் செய்யும் ஒவ்வொருவரும் சாதி, மதம், சமூகம் என்ற அடிப்படைகளை மீறும் தமது குடும்ப உறுப்பினர்களையே கொலை செய்கின்றனர். இவற்றை பெரும்பாலும் தாய், தந்தையரே தமது பிள்ளைகளுக்கெதிராக மேற்கொள்கின்றனர். இவற்றிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கின்றனர். தமது குடும்பத்திற்கு மானமிழப்பு ஏற்படும் வகையில் அல்லது சமூகம் தடைசெய்த மனிதனுடனான அல்லது சமூகத்துடனான காதல், நட்பு, உறவு கொண்டால் அப் பெண்ணை கொடிய தண்டனைகளுக்கு உள்ளாக்கி கொலை செய்வதே கௌரவ கொலையாகும். சிலவேளை அப்பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நபரையும் கொல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகளின் கருத்துப்படி, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், வல்லுறவுக்குட்பட்ட பெண், வன்முறை காரணமாக கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண், பிற ஆண்களிடம் உறவு, நட்பு போன்றவை அக்குடும்பத்திற்கு மானபங்கத்தை ஏற்படுத்துவதாகவிருந்தால் குறித்த அந்நபரின் மீது கௌரவக் கொலை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க நாடுகள், அந்நாடுகளின் சட்டங்கள் எவ்வகையில் உதவியிருக்கின்றன என்றால் பதில் இல்லாமலேயே இருக்கின்றது.

இவ்விடயங்களுக்கு எதிர்ப்பு மேற்கொள்ளப்படாமையும், அதனை ஊக்குவிக்கும் செயலாகவே அமைகிறது. இக்கௌரவக் கொலைகள் பொதுவாக மத்திய ஆசியா, வடக்கு ஆபிரிக்கா, அல்பேனியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற முஸ்லிம் நாடுகளில் இடம்பெறுவதாக தெரிகிறது. குறிப்பாக ஜோர்தான், சிரியா, மொராக்கோ, ஹைடி, துருக்கி போன்ற நாடுகளில் கௌரவ கொலைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஜோர்தான், சிரியா, மொராக்கோ, ஹைடி போன்ற நாடுகளில் ஒரு ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ளக்காதல் அல்லது மானபங்கம் போன்ற செயல்களில் ஈடுபட்டார் என கண்டுபிடித்தால் சரத்து 548, 269களின் படி கொலை செய்திருந்தால் தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் சூழல் காணப்படுவதுடன், துருக்கியில் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படுகிற. பாகிஸ்தான், பாலஸ்தீனம், இந்தியா போன்ற நாடுகளில் கௌரவக் கொலைகள் சட்டத்திற்கு புறம்பானவை என்றாலும் இங்கேயே அதிகமான சம்பவங்கள் பதிவாகின்றன. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகே சர்வதேச அழுத்தங்களின் காரணமாக இதை கொலை என்றும் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. கடுமையான தண்டனைகள் என்று குற்றத்தை குறைத்து விடுவதில்லை என்பதோடு பெரும்பாலான நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதே அரிது. எனவே, சமூகம் காலம்காலமாக பழகி வந்த சம்பிரதாயங்களை இடையில் கைவிட முடியாமல் பிறர் மீது இன்னும் வலிந்து திணிக்கிறது. இதை கௌரவக் கொலையென கூறி பெருமிதம் கொள்கிறது.

மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 26 நாடுகளில் கௌரவக் கொலைகள் இடம்பெறுகின்றன. இவை சம்பிரதாய மூட நம்பிக்கைகள் என்றே கொள்ள வேண்டும். கடந்த 2010ஆம் ஆண்டில் உலகில் 5000 கௌரவக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்திருக்கிறது. இவற்றில் 1000 கொலைகள் இந்தியாவில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் வட மாநிலங்களிலேயே 90 வீதமான கௌரவக் கொலைகள் இடம்பெறுகின்றன. ஒரு நாட்டின் சட்டமானது ஒரு சமூகம், சாதி என்பவற்றுக்கு மட்டும் சார்பாக இயங்கினால் அங்கு எப்படி சட்ட உரிமைகளை ஒரு மனிதனால் பெற முடியும்? காலங்காலமாக இவ்விடங்களில் இடம்பெற்று வரும் இவ்வாறான கொலைகளை தடுக்க எவ்வழிகளும் பிறக்கவில்லை. தாம் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் கொடூரம் இங்கு மட்டுமே இருக்கிறது. இதை கௌரவமாக எண்ணுகிறார்கள். எமக்கு அது அறியாமையாகவே தெரிகிறது. கூட்டாக நின்று கற்கலால் அடிப்பது, சாணி கரைசலை ஊற்றுவது, வாயில் சிறுநீர் கழிப்பது, தலைமுடியை அலங்கோலமாக்குவது, சூடு வைப்பது, சவுக்கால் அடிப்பது, முகத்தில் அமிலம் வீசுவது என கௌரவக் கொலைக்கு முன்னான துன்பங்கள் அமைகின்றன. இவற்றில் அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

எவ்வாறு இவற்றை தடுப்பது, எவ்வாறு இவர்களுக்கு அறிவூட்டுவது என்பதெல்லாம் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது. இந்தியாவில் சராசரியாக 6 மணிநேரத்துக்கு ஒரு பெண் எரிக்கப்பட்டோ அல்லது கடுமையாக தாக்கப்பட்டோ இறக்கிறாள் அல்லது தற்கொலைக்கு தூண்டப்படுகிறாள் என்கிறன ஆய்வுகள். அப்படியாயின் சமூகம் எவ்வளவு வேகமாக கௌரவத்துக்காக கொலை செய்ய செயற்படுகிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.  அரசாங்கங்கள் தங்களுடைய ஆட்சிக்காக இவற்றை தட்டிக்கேட்பதில்லை. பின் எப்படி சமூக அமைப்புகள் மூலம் தடுத்து விட முடியும்?

இதற்கான மாற்றம் அரசிடம் மட்டும் இல்லை. கௌரவத்தை கொலையாக்கும் சமூகத்திடமிருந்தே ஏற்பட வேண்டும். மிருகங்களிடம் இல்லாத அனைத்து கேவலங்களும் இன்று மனிதர்களிடம் தொற்றியுள்ளது. எதிர்காலத்தில் மிருகத்தையும் மனிதர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகலாம். தாய், தந்தை, குடும்பம் என்று குழந்தை முதல்  இளமை வரை வளர்த்த குடும்பம் சாதி, மதம், நிறம், வெறி என்பன பிற சமூகத்துடன் கலந்து விடுவதை தடுக்க கௌரவக் கொலைகளை கையாள்கின்றனர். அப்படியெனில் இன்றும் நாம் கொலைக்கார சமூகத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதலித்தால் கூட அவர்களை கொலை செய்து கௌரவம் தேடும் சமூகத்திலா நாமும் பிறந்திருக்கிறோம்.

இந்தியாவில் 2008 ஜனவரி முதல் 2010 ஜூன் வரையான காலப் பகுதியில் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 1970 பேர் 30 வயதுக்குட்ப்பட்ட பெண்களாவர். கௌரவக் கொலைகளே உறவினர், பொலிஸாரால் தற்கொலையாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வட இந்தியாவில் கௌரவக் கொலைகளுக்காக காப் பஞ்சாயத்துகளும் தென்னிந்தியாவில் கட்டப்பஞ்சாயத்துகளும் இயங்கி வருகின்றன. எனவே, கௌரவக் கொலைகள் ஒரு சேவையாகவே நோக்கப்படுகிறது. அதில் அடங்கிப் போகும் உயிர்களின் மதிப்பு கணக்கிடப்படுவதில்லை.

இந்துசமய சம்பிரதாயங்களின் படி உடன்கட்டையேறுதல் என்ற முறைமை ஆரம்பகாலங்களில் காணப்பட்ட நிலையில் அதுவும் ஒரு கௌரவக் கொலையாகவே நோக்கப்பட்டது. எனவே, அன்று உடன்கட்டையில் ஆரம்பித்த செயற்பாடுகள் இன்று வரையும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. சம்பந்தப்பட்ட நாடுகள் புள்ளி விபரங்களை காட்டுகின்றனவே தவிர, அவற்றை குறைக்க எவ்வித திட்டங்களையும் முன்வைக்கவில்லை. இதுவொரு சமூகத்தின் பிரச்சினை. ஆதலால் தனிமனிதன் உணரும் வரை கௌவரவத்திற்கான கொலைகள் தடுக்கப்படப் போவதில்லை.

க.பிரசன்னா
26.07.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக