கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 அக்டோபர், 2024

ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம்


கடந்த 11 வாரங்களாக மலையகத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்கு காரணம் என்ன? எனும் தலைப்பில் மலையகத்திலிருந்து பல்கலைக்கழக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் வீதம், அவர்கள் கற்கைகளை தொடர்வதற்கு எதிர்நோக்கம் சவால்கள், அரசியல் தலைமைகள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு என்பன தொடர்பில் தொடர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம். இவற்றில் குறிப்பாக மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. இந்தவாரத்துடன் இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட பாடசாலைகள் அமைந்துள்ள ஏனைய மாவட்டங்களையும் ஆய்வு செய்யும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.

இந்நிலையில் இதுவரையில் மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை எவ்வாறு அதிகரிப்பது, பாடசாலைகளுக்கான வளங்களை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் மலையகத்தில் நிலவும் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான வெற்றிடங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். இவ்விடயம் தொடர்பாக பல புள்ளிவிபரங்களையும் கல்வியியலாளர்களின் கருத்துக்களையும் அதிகம் முன்வைத்து ஆய்வுகளை முன்னெடுத்தோம். அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது யார் என்பது தொடர்பாகவே தற்போதைய நிலையில் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

இலங்கையில் இலவசக் கல்விமுறை நடைமுறையில் இருந்தாலும் பாடசாலைக்கு அப்பால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் போது பொருளாதார ரீதியில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிரதான பிரச்சினையாக இருக்கின்றன. ஒருசில மாணவர்கள் புலமைப்பரிசில் ஊடாக கல்வியை தொடருவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே கல்வியை தொடர வேண்டிய நிலை உருவாகின்றது. இது சமூகத்தின் மீதான அவர்களின் மனநிலையை மாற்றியமைக்கின்றது. இவற்றை தடுப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. அதற்கு பொருளாதார ரீதியில் மலையக குடும்பங்களை வலுவடைய வைப்பது முக்கியமாகும்.

மலையக மாணவர்களின் குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவது அவர்களின் கல்வி வாய்ப்புகளை ஓரளவுக்கு அதிகரிக்கும் என்பது பொதுவான நிலைப்பாடாகும். மாணவர்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக இடைவிலகல் அதிகரிப்புக்கு பொருளாதார பிரச்சினைகளே பிரதான காரணங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அதேவேளை மலையகத்தில் பெரும்பாலான மக்கள் தேயிலை, இறப்பர் மற்றும் நகர்புற வேலைவாய்ப்புகளையே அதிகம் நம்பியிருக்கின்றனர். இவற்றைவிடவும் மிகவும் குறைவாக அரச தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு கடும் சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வி வாய்புகளை தொடரும் மாணவர்கள் மீண்டும் அதே சமூகத்தில் தங்களுடைய சேவையை வழங்குவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

அண்மைய காலங்களில் பெரும்பாலான மாணவர்கள் போதிய உணவின்றி பாடசாலைகளுக்கு சென்று மயங்கி விழுந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் பாடசாலை உபகரணங்கள், சப்பாத்துக்கள் இன்றி பல மாணவர்கள் பாடசாலை செல்வதையே தவிர்த்துள்ளனர். இவர்களுக்கான தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது. பாடசாலையின் பழைய மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து இவர்களுக்கு உதவி வழங்கும் திட்டங்களை செயற்படுத்தலாம். மாணவர்களின் கல்வியில் சமூகத்தின் பங்கும் இவ்வாறான நிலைமைகளில் அவசியமாகும்.

பாடசாலைகள் தங்களுடைய 100 வீத பெறுபேற்றை உறுதிப்படுத்துவதற்காகவும் வலய கல்வி அலுவலகங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் மாணவர்களை திட்டமிட்டு இடைநிறுத்தும் மற்றும் அவர்களை பரீட்சை எழுதவிடாமல் தடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இலவசக் கல்வி அனைவரின் உரிமை என்பதால் பாடசாலை அதிபர்களின் இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானது. மாணவர்களின் கல்வி நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதற்கு இதுவும் பிரதான காரணமாகும். நுவரெலியா மாவட்டத்தில் பிரபலமான பாடசாலைகள் இவ்வாறான செயற்பாடுகளை வலயக்கல்வி அலுவலகங்களுக்கு தெரிந்தே முன்னெடுக்கின்றன.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் மாணவர்களின் கல்வி நிலை உயர்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாகும். ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பலர் பெருந்தோட்ட பாடசாலைகள் மற்றும் பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றுவதை விரும்புவதில்லை. பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்று செல்வதை நோக்காக கொண்டே அவர்களின் சேவை நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. பாடசாலைகளில் ஆசிரியர்களின் கட்டாய சேவை காலம் வரையறுக்கப்பட்டுள்ள போதும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தங்களுக்கு ஏற்றவகையில் இடமாற்றங்களை மாறியமைத்துக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது குறைவாக காணப்படுவதாலும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதில் பாடசாலைகள் பெரிதும் சவாலை எதிர்நோக்கியுள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகளை விருப்பமுடன் மேற்கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும். பெருந்தோட்டங்களில் இன்னும் பல பாடசாலைகள் பாழடைந்த கட்டிடங்கள், பழைய தேயிலை தொழிற்சாலைகள், கொழுந்து மடுவங்களில் இயங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. அவற்றுக்கான வளங்களை அதிகரிப்பதற்கும் மாணவர்களின் கற்றலுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாறாக நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெளிமாவட்ட மாணவர்களை அனுமதிக்கு விதிக்கப்பட்ட தடையே மலையகத்தில் நிலவும் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்கு காரணமென்பதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் போது, கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான  ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெளிமாவட்ட மாணவர்களை அனுமதிப்பதில்லையென எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நுவரெலியா மாவட்டத்தின் கல்வித்தரம் அதிகரித்ததா என்பதனைத்தான் பார்க்க வேண்டும். என்னுடைய பார்வையில் என்னுடைய சொந்த  ஊரான ஹபுகஸ்தலாவையில் அமைந்துள்ள அல்மின்ஹாஜ்   பாடசாலை அதிகமான மருத்துவ பீட மாணவர்களை உருவாக்கியிருக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் என்னுடைய மைத்துனியின் மகன் அங்கு பிறந்த  ஒருவர். ரோயல் கல்லூரியில் படித்தவர். 10 ஆம் வகுப்பு வரும்போது அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்று மருத்துவ பீடத்துக்கு  தெரிவானார். நுவரெலியா மாவட்டத்திலிருந்து மருத்துவ பீடத்துக்குச் செல்வதற்கான வெட்டுப்புள்ளி குறைவு என்ற காரணத்தாலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் இந்த தடையை செய்த காரணத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மருத்துவ பீட அனுமதி கிடைத்தது என்றால் அதை வரவேற்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

எனவே பிரச்சினை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெளிமாவட்ட மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்படவில்லை என்பதும் கற்றலில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணமென்பதும் தெளிவாகின்றது. இதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் பேச்சப்பட்டதோடு அவர்களுடைய கடமை நிறைவடைந்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர். மீண்டும் அடுத்த வருடம் இதேபோன்ற நாளில் இந்த கருத்தையே மீண்டும் முன்வைக்கலாம். ஆனால் பிரச்சினை தீரவு காணாமல் அப்படியே இருக்கின்றது.

மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகக் கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விஞ்ஞாபனங்களில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கட்சிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழக கோரிக்கை நிறைவேறுபட்சத்தில் மலையக மாணவர்கள் பல்வேறு துறைகளில் கல்வியை தொடரவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படலாம். தற்போது தேர்தல் இடம்பெறும் அறிகுறிகள் தோன்றியுள்ளதால் மீண்டும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த கோரிக்கையை மலையகக் கட்சிகள் முன்வைக்கக்கூடும்.

எனவே பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் அனைவரும் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும். மலையகத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் அனைவருக்கும் பங்குண்டு. அதனை தலைமையேற்று நடத்துவது யார் என்பதே இங்குள்ள பிரச்சினை. கல்வி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் ரீதியாக மாத்திரம் தீர்வுகளை முன்வைக்க முடியாது. மாற்றங்களை ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும். பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், அபிவிருத்தி சங்கங்கள் உள்ளட்ட குழுக்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி ஒவ்வொரு பாடசாலையும் செயற்படும் போது, எதிர்காலங்களில் மாற்றத்தை அவதானிக்க முடியும். இது மாற்றத்துக்கான ஆரம்பமாக அமையும்.

முற்றும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக