- கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வீடுகள் வழங்கப்படுவதுடன் சிறுபான்மையினரில் சிறுபான்மையாக வாழும் மலையக மக்கள் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய நிதியுதவியிலான வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு தோட்டத் தொழிலாளியாக பதிவு செய்திருத்தல், லயன் குடியிருப்புகள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் வசித்தல் மற்றும் கடந்த ஐந்து வருடங்களில் தோட்டத்தில் தடையின்றிய சேவை அவசியமாகும்.
- நகர்புறங்களில் நிரந்தர குடியிருப்புகளில் வாழும் குருநாகல் மாவட்டத்திலுள்ள வில்கொட சௌமிய மாவத்தை மக்களுக்கு 25 வீடுகள் வழங்கப்பட்டமை வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை தகைமைகளை மீறுகிறது.
- குருநாகல் நகர சபைக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு தோட்டமும் இல்லையென குருநாகல் நகர சபை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இரண்டாம் கட்டமாக 10 ஆயிரம் பாரத் - லங்கா வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்ற மலையக மக்களின் 200 வருடங்களை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட “நாம் 200” நிகழ்வில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் 10 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மலையக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஆட்சி மாற்றம் கொவிட் தொற்று பரவல், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் என்பவற்றின் காரணமாக வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன.
எனினும் தற்போது வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் வீட்டுத்திட்டத்துக்கான நிபந்தனைகளை மீறி அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 50 வீடுகளில் 25 வீடுகள் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத நகர்புறவாசிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வீட்டுத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மீறும் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது.
வீட்டுத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
10 ஆயிரம் வீடுகளுக்கான அறிவிப்பு 2017.05.12 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் 2018.08.12 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. எனினும் அதன் பின்னரான நெருக்கடிகள் காரணமாக அவை நடைமுறைக்கு வரவில்லை. கட்டுமானப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டமையால் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறு மீள்பரிசீலனை செய்யப்பட்ட 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த வேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது. முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபா உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 36 இலட்சம் ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளிகளை தெரிவு செய்வதற்கான நடைமுறைகள் என்ன?
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அமைச்சு என்பன இரு வகையான அளவுகோள்களின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்கின்றன. அத்தியாவசிய அளவுகோள்களின் அடிப்படையில் அனைத்து தகுதிகளையும் பயனாளிகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்படமாட்டார்கள். தோட்டத் தொழிலாளியாக பதிவு செய்திருத்தல், லயன் குடியிருப்புகள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் வசித்தல் மற்றும் புதிய வீடுக்கு செல்லுமுன் லயன் வீடுகளை கையளித்தல், தோட்ட தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தவராகவிருத்தல், கடந்த ஐந்து வருடங்களில் தோட்டத்தில் தடையின்றிய சேவை, நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ வேறு வீடமைப்பு திட்டங்களில் பயனாளிகளாக இருக்கக்கூடாது. 50 வயதைவிட குறைந்தவராக இருத்தல் (குடும்பத்தில் வேறு ஒருவர் தோட்டத் தொழிலாளியாக இருக்கும்பட்சத்தில் 50 -55 வயது கவனத்தில் கொள்ளப்படும்) என்பன முக்கியமாகும்.
எனினும் மேற்கூறிய தகுதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகமாக பயனாளிகள் இருப்பார்களாயின் புள்ளிகளின் அடிப்படையில் தகுதியான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படுமென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு ஏற்கனவே வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையக மக்கள் மாத்திரமே இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளாக உள்வாங்கப்படுவதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயமும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா?
குருநாகல் மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத கட்சி ஆதரவாளர்களான நகரவாசிகளுக்கு வீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வீட்டுத்திட்டத்தில் அரசியல்சார்பு நிலை காணப்படுவதை உறுதி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகர்புறத்தை அண்மித்து எவ்வித பெருந்தோட்டங்களும் காணப்படவில்லை என்பதை மாநகரசபையின் தகவல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் நகரசபைக்குட்பட்ட பகுதியில் 12 மாநகர தொகுதிகள் காணப்படுகின்றன. இவற்றில் இலிப்புகெதர தொகுதியில் கல்வெல எனும் பிரிவு அமைந்துள்ளது. இப்பகுதி குருநாகல் நகரத்திலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இவை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதியாகும்.
இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தின் கல்வெல பிரிவின் வில்கொட சௌமிய மாவத்தை தோட்டத்தில் 25 பயனாளிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான வீடுகள் வழங்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குருநாகல் மாநகர சபை ஆணையாளர் அஜந்த குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்வதற்கு ஆணையாளரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதும் அழைப்புக்கு பதில் வழங்கப்படவில்லை. (கூகுள் மெப் உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட படத்தில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கே இந்திய வீட்டுத் திட்டத்தின் மூலம் மீண்டும் வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.)
ஆனால் தற்போது அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் அமைப்பாளர் ஊடாகவே குறித்த வீடுகள் அங்கு நிர்மாணிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அமைப்பாளர் குருநாகல் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராவார். எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும் வாக்குகளுக்காகவும் தோட்டங்களுடன் தொடர்பில்லாத நபர்களுக்கும் வீடுகள் வழங்கும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அதுவும் ஏற்கனவே தனி வீடுகளில் வசித்துவரும் நபர்களுக்கு இந்த வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இந்திய வீட்டுத் திட்டத்தின் ஊடாக குருநாகல் மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் அல்லாதவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படுகின்றதா என அமைச்சிடம் வினவிய போதும் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கான அடிப்படை மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் போன்ற விடயங்களுக்கு எவ்வித பதிலையும் அமைச்சு வழங்கவில்லை.
வில்கொட சௌமிய மாவத்தை எந்த பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமானது?
அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான பொறுப்பு தோட்ட முகாமையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனின் வில்கொட சௌமிய மாவத்தை தோட்டத்திலுள்ள முகாமையாளர் ஏன் பயனாளிகளை தெரிவு செய்யவில்லை. ஏனெனில் அப்பிரதேசம் பெருந்தோட்ட வரையறைக்குள்ளேயே உள்ளடங்கவில்லை என்பதே உண்மை. குருநாகல் மாவட்டத்தில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான ஒன்பது தோட்டங்கள் காணப்படுகின்றன. மூவன்கந்த, பிட்டியகந்த, நொட்டிங்ஹில், மொரத்தன, பானகமுவ, ரெந்தகொட, கெப்பட்டிபொல, உடபொல, பத்ரகல போன்றவை அவையாகும். இவற்றுக்கும் மேலதிகமாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்குச் சொந்தமான மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு எந்த கம்பனிகள் மற்றும் தனியார் தோட்டங்களுக்குள்ளும் வில்கொட சௌமிய மாவத்தை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குருநாகல் நகரசபைக்குட்பட்ட பகுதியில் எந்த தோட்டப் பகுதியும் அமைந்திருக்கவில்லையென நகரசபை அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்திய வீட்டுத் திட்டத்தில் அரசியல் தலையீடு?
கடந்த 10 ஆம் திகதி பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் இந்திய வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகளை தெரிவு செய்யும் செயற்பாட்டின் போது நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் இடையூறு ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த வீட்டுத்திட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரசால் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாகவும் எனவே பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறு தெரிவித்ததுடன் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதை காணொளி மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. எனவே இவ்வாறான சம்பவங்கள் இந்திய வீட்டுத்திட்டம் உரிய பனாளிகளுக்கு சென்றடையும் நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நல்லாட்சி காலத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் முதல் கட்ட பணியின் போது தோட்டங்களில் சட்டரீதியான வசிப்பிடங்களை கொண்டவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. இதற்காக வாக்காளர் இடாப்பில் பயனாளர்களின் பெயர் இருப்பதை உதவி தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்துவது கட்டாயப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அந்த தோட்டங்களில் சட்டரீதியான வசிப்பிடங்களை கொண்டிருந்தவர்களுக்கு மாத்திரம் வீடுகள் சென்றடையும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் கட்சி சார்ந்தோருக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து செயற்படும் நிலையை உறுதிப்படுத்துகின்றது. இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இரண்டாம் கட்டமாக வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் தனி வீடுகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். 10 ஆயிரம் வீடுத்திட்டத்துக்கான கட்டுமான அனுமதி வீடமைப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளமையால் தோட்டங்களில் சட்டரீதியான வசிப்பிடங்களை கொண்டுள்ளவர்கள் வீடுகளை பெற்றுக்கொள்வதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயனாளிகளை தோட்ட முகாமையாளர் தெரிவு செய்யும் நிலைமாறி மாநகர சபை ஆணையாளர் உறுதிப்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதால் தோட்டங்களை சாராதோரும் பயனாளியாக தெரிவு செய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கமும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயமும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக