கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 பிப்ரவரி, 2022

கொவிட் சவால்களை எதிர்கொள்ளும் இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறை


ஆடை ஏற்றுமதியின் மூலம் 2025 ஆம் ஆண்டு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு இலங்கையின் ஆடைத்தொழிற்துறை செயற்பட்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டு தொற்றுக்காலப்பகுதியில் உலக ஆடைக்கைத்தொழில் துறையின் மதிப்பு 492 பில்லியன் அ.டொலர்களாக காணப்பட்டது. இதில் இலங்கையின் பங்களிப்பு ஒரு வீதமாகும். அதாவது, 5.3 பில்லியன் ரூபாவாகும். இலங்கையின் தொழிற்படையில் 15 வீதமானோர் ஆடைத் தொழில்துறையுடன் இணைந்து செயற்படுகின்றனர். 

இந்நிலையில் இலங்கையின் ஆடைத் தொழில்துறை மற்றும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை முதலீட்டுச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி நாட்டின் 25 மாவட்டங்களில் 302 ஆடைத் தொழிற்சாலைகள் செயற்பாட்டில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிக அதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 65 ஆடைத்தொழிற்சாலைகளும் கொழும்பு மாவட்டத்தில் 49 உம் குருநாகல் மாவட்டத்தில் 29 உம் காணப்படும் நிலையில் மிகக்குறைவாக யாழ் மாவட்டத்தில் ஒரு ஆடைத்தொழிற்சாலை காணப்படுகின்றது. 

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆடைகள் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு உற்பத்திகளில் 45 வீதமானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 


இவற்றின் மூலம் 2010 - 2020 வரையான காலப்பகுதியில் 46,923 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஆடைக் கைத்தொழிற்துறை பெற்றுக்கொண்டுள்ளதுடன் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 19,109 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. மிக அதிகமாக 2019 ஆம் ஆண்டு 5,043 மில்லியன் அ.டொலர் வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 2017 ஆம் ஆண்டு மிக அதிகமாக 2,100 மில்லியன் அ.டொலர் மூலப்பொருள் இறக்குமதிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடுமையான பரவலை கொண்டிருந்த கொவிட் தொற்றினால் ஆடைத் தொழிற்சாலைகள் கடும் நெருக்கடியினை எதிர்கொண்டிருந்தன. பெரும்பாலான தொழிற்சாலை ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் ஆடைத் தொழிற்சாலை கொத்தணி உருவாகியிருந்தது. இதனால் பல தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் போது நாட்டில் எவ்வித ஆடைத்தொழிற்சாலைகளும் மூடப்படாமல் தொடர்ச்சியாக இயங்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் கொவிட் தொற்று காலப்பகுதியில் இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பான விபரங்களை கோரிய போது, மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை வகைப்படுத்துவது கடினம். எனவே, நிறுவனங்கள் இலங்கை முதலீட்டுச் சபை உடனான பதிவை திரும்பப் பெறும்போது மற்ற நிறுவனங்களுடன் அல்லது நாட்டின் சாதாரண சட்டங்களின் கீழ் இணைந்து செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆடைத் தொழிற்சாலைகள் பெற்றுக்கொள்கின்ற வருமானம் தொடர்பான விபரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5(1)(d) இன் கீழ் மறுக்கப்பட்டுள்ளது. 


அதேவேளை கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் ஆடைத் தொழிற்துறை நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் கோவிட் தொற்றுநோய்களின் போது உருவாக்கப்பட்ட தேவையை பூர்த்தி செய்ய இலங்கை முதலீட்டுச் சபை நிறுவனங்களுக்கு கூடுதல் தயாரிப்பு வரிசையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

நில வாடகை, வருடாந்த கட்டணம் போன்ற இலங்கை முதலீட்டுச் சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு தவணை கொடுப்பனவு முறை நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் இலங்கை முதலீட்டுச் சபை வலயத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்தல்.

இலங்கை முதலீட்டுச் சபை நிறுவனங்களுக்கு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக வழக்கு அடிப்படையில்விலக்கு அளிக்க கட்டண ஆலோசனைக் குழு மத்தியஸ்தம் செய்தது,

ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்களான சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம், முப்படைகள், இலங்கை பொலிஸ் மற்றும் கொவிட் சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்கள் மற்றும் நுகர்வுபொருட்களை விநியோகிப்பதற்கு அல்லது நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. 

இலங்கை முதலீட்டுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அவர்களின் கோரிக்கையின் பேரில், இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்து கொள்ளப்பட்ட அந்தந்த ஒப்பந்தங்களின் கீழ் உள்ளுர் சந்தைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட அளவைப் பொருட்படுத்தாமல், மற்றும் அத்தகைய நன்கொடைக்கு 14 வீத சலுகை பெருநிறுவன வரி விகிதம் விண்ணப்பிக்க வேண்டும், அதாவது, ஏற்றுமதியாகக் கருதப்பட வேண்டும் என இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடைத்தொழிற்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. 


கொவிட் தொற்று காலப்பகுதியில் நாட்டில் பல நிறுவனங்கள் மூடப்பட்டாலும் ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏற்றுமதி வருமானத்தை முன்னிலைப்படுத்தி இதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் இவற்றை நம்பி தொழில்புரியும் பலரின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டன. 

எனினும் இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய இடத்தினை ஆடைக்கைத்தொழில்துறை பெற்றுக்கொண்டதுடன் 1986 இல் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி கைத்தொழிலாகவும் காணப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இலங்கை ஆடைக்கைத்தொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் 2424 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவை நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 52 வீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 வீதமாக காணப்பட்டது.  அத்துடன் 1060 ஆடைத்தொழிற்சாலைகளில் 330,000 நேரடி ஊழியர்கள் பணியாற்றியதுடன் நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 5 வீதமாக காணப்பட்டது தற்போதைய கொவிட் நிலைமை இத்தொழில்துறையை கடும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. 

கொவிட் தொற்றுக்கு முந்தைய 2019 இல், ஆடை ஏற்றுமதி 5.2 பில்லியன் அ.டொலர்களாக காணப்பட்டது. இது அனைத்து உற்பத்தி ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 48 வீதமாகும். 2020 இல், தொற்றுநோய் பரவலானது ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் ஒரு செங்குத்தான சரிவுக்கு வழிவகுத்தது, இறுதியில் உலகளவில் எந்த நாடும் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியினை காப்பாற்றிக் கொள்ளவில்லை. இலங்கையின் ஆடை ஏற்றுமதியும் 2020 இல் வெகுவாகக் குறைந்துள்ளது. தேசிய அளவில் அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம் உற்பத்தியை பாதித்தன, மேலும் உற்பத்திக்கான முன்பதிவுகள் அதிகமாக இரத்துச் செய்யப்பட்டன. ஏற்றுமதி கிட்டத்தட்ட காலாண்டில் (24 வீதத்துக்கும் அதிகமாக) 3.93 பில்லியன் அ.டொலர்கள் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், ஆடை ஏற்றுமதி செப்டம்பர் இறுதியில் 21.5 வீதமாக அதிகரித்து 3.54 பில்லியன் அ.டொலர்களாக அதிகரித்தது. 

இன்னுமொரு குழப்பமான ஆண்டை எதிர்கொண்ட போதிலும், 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடைத் தொழில்துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளால் இலங்கைக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளைத் தொடர்ந்து, தற்போது ஒமிக்ரோன் தொற்றின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா, சீனா மற்றும் ர~;யாவிற்கு இடையே அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களின் பின்னணியில் நிலைமை மோசமடையுமாயின் உலகளாவிய வர்த்தகத்தில் மேலும் இடையூறுகள் தவிர்க்க முடியாதவையாக காணப்படும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக