வளைகுடா நாடுகளைப் பற்றி வாய்த்திறக்காத ஊடகங்களே உலகில் இல்லையெனுமளவிற்கு அந்நாட்டின் சட்டங்களும் சம்பிரதாயங்களும் கட்டுப்பாடுகளும் உலக மக்களின் அதிக வெறுப்பை பெற்று வருகின்றன. அவ்வாறான சூழலில் இலங்கையானது பணிப்பெண்கள் விடயத்தில் இந்நாடுகளுடன் அதிகளவு நெருக்கத்தை கொண்டுள்ளது. குறிப்பாக சவுதிக்கு அதிகம் பங்குண்டு. வருடந்தோறும் அதிகமான பெண்கள் இறந்தும், ஊனமாகவும், துஷ்பிரயோகிக்கப்பட்டும் இலங்கை வருகின்றனர். சிலவேளைகளில் மரண தண்டனையும் பெற்று விடுகின்றனர். இலங்கைப் பணிப்பெண் றிஷானா நபீக்கின் சிரைசேதத்தின் பின்பு கொழும்பு, மருதானைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கிறார்.வழமைப் போலவே இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்று சவுதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தது. இலங்கையில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பொதுவாக சர்வதேச சட்டங்களையும் வேண்டுகோளையும் இஸ்லாமிய சட்டங்களை கடைப்பிடிக்கும் நாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக சர்வதேச தொழிலாளர் சட்டங்களே இந்நாடுகளில் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பணிப்பெண்களாக செல்பவர்கள் முழுமையாக அந்நாட்டு சட்டங்களையே கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுவது மனித உரிமை மீறல். ஆனால் பணிப்பெண்களாக செல்பவர்கள் அதனை ஏற்றுக் கொண்டே செல்கின்றனர். இவற்றுக்காகவாவது பொதுச் சட்டங்களை உருவாக்கியிருக்கலாம். இஸ்லாமிய ட்டங்களின் படி, சட்டவிரோதமான உறவுகள் குற்றமாகும். இந்த சட்டவிரோதமான உறவுகளில் மணமாகாத ஆண் - பெண்ணின் விருப்பத்துடனான உடலுறவு, திருமணத்திற்கு முன்பான உறவு, விபச்சாரம், திருமணத்திற்கு பின்பு கணவன் - மனைவி வேறொருவருடன் தொடர்பு என்பன உள்ளடங்கும். இவற்றில் விபச்சாரம் அல்லது கள்ளத்தொடர்பு என்ற வகையிலேயே இலங்கைப் பணிப்பெண் தண்டனைப் பெற்றுள்ளார். பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பணிப்பெண்களில் பெரும்பாலோனோர் வன்முறைகளைச் சந்திக்கின்றனர். இவர்களில் சிலர் கர்ப்பிணிகளாகவும் பிள்ளைகளுடனும் நாடு திரும்பிய சம்பவங்களுமுண்டு.
இவற்றில் குற்றஞ்சாட்டப்படும் இலங்கை பணிப்பெண்கள், தங்களுடைய குற்றங்களை எதிர்த்து வாதாடுவதற்கான சந்தர்ப்பங்களை முதலாளிமார் வர்க்கம் வழங்குவதில்லை. சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் பணிப்பெண்கள் பணிப்புரியும் இடத்திலுள்ளவர்களுக்கு மாத்திரமே தெரியும். எனவே நடந்தவை எது, நடக்காதவை எது என்பதைப் பற்றி அறிவதற்கான வாய்ப்பேயில்லை. எனவே குற்றங்கள் ஆதரமுள்ளவையா? அற்றவையா என்பதை தீர்மானிப்பது இந்நாடுகளில் முதலாளிமார்களாகவே இருக்கின்றனர்.
எனவே பணிப்பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் றிஷானா நபிக் மற்றும் தற்போதைய சம்பவத்திற்கு பின்பாவது கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இலங்கை மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமை புரியும் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாட்டுப் பெண்களின் நிலையும் இதுதான். தற்போது தண்டனை பெற்றுள்ள பெயர் குறிப்பிடப்படாத இலங்கைப் பணிப்பெண் கடந்த 2013 முதல் ரியாத்தில் கடமைபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதமே இவ்வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார்.
இஸ்லாமிய சட்டம் மற்றும் சவுதி அரேபிய சட்டங்களின் படி கள்ள உறவில் ஈடுபட்டவர் திருமணமாகியிருந்தால் கல்லெறிதல் மூலமான மரணமும், கள்ள உறவில் ஈடுபட்டவர் திருமணமாகாதவராக இருந்தால் இஸ்லாமிய சட்டப்படி 100 கசையடிகளும் 1 வருடத்துக்கான நாடு கடத்தலும் சவுதி சட்டப்படி 100 கசையடிகளும் வழங்கப்படும். தற்போது இவ்வழக்கின் ஆண் குற்றவாளிக்கு 100 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. இவர் திருமணமாகாத இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுடன் சந்தேக நபர்களாக நால்வர் அடையாளம் காணப்பட்டு பாலியல் குற்ற விதிமுறைகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பணிப்பெண் குற்றவாளியென நிரூபிப்பதற்கு போதியளவு ஆதாரங்கள் இருந்ததுடன், குற்றவாளியாக இனங்காணப்பட்ட பெண் ஒருமுறையல்ல நான்கு முறை தனது குற்றத்தை அல்லா மீது ஆணையாக ஒப்புக் கொண்டதாலும் அவர் மீதான தண்டனையை சவுதி நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது. குறித்த பணிப்பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 21 நாட்களுக்கான பயிற்சியை மட்டுமே முடித்துக் கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்த குறுகிய காலத்தில் எவ்வாறான பயிற்சிகள் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன. இவருக்கு ஒருவேளை விபச்சாரம் தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்டிருந்தால் இன்று கல்லெறிதல் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கலாம்.
தமது குடும்ப வறுமைக்காகவும் வருமானத்தை ஈட்டும் முயற்சிகளுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள் இவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வது கண்டிக்கப்பட வேண்டியதே. கடந்த வெள்ளிக்கிழமை இவருக்கான தண்டனை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அவை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஷரியா சட்டத்தின்படி இவருக்கு மார்பு அல்லது கழுத்து பகுதிவரை மண்ணில் புதைக்கப்பட்டு ஒரு மக்கள் குழு இவர் மீது கற்களையெறிவர். அவ்வாறில்லையெனில், தீர்மானத்தின்படி ஒருவராலேயே இவர் கொல்லப்படுவார். தற்போதைய சூழ்நிலையில் தண்டனை பெற்றுள்ள பெண்ணை பொதுமன்னிப்பின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மீட்டுவிட்டால் அவருக்கு இலங்கையில் தண்டனை வழங்கப்படுமா? உலகம் முழுவதும் 2007 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் (சீனா தவிர்ந்த) சிறைச்சாலைகளிலும் , பொதுமக்கள் மத்தியிலும் நீதிமன்ற தீர்ப்பினாலும் 6,221 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் சவுதி அரேபியாவில் மட்டும் 423 (6.8%) சம்பவங்கள் இடம்பெற்றள்ளன. ஆனால் இவை தொடர்பான தரவுகளை குறிப்பிட்ட மத்திய கிழக்கு நாடுகள் வெளியிடுவதில்லை. இது மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் தரவுகளேயாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள, சவுதியிலுள்ள இலங்கை தூதவராலயத்தின் தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 பேர் கல்லெறிந்து நிறைவேற்றும் மரண தண்டனை பெற்றிருந்தனர். இவற்றில் இலங்கையர் எவருமில்லையென தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் தகவல்களின் படி, 10 இலங்கையர்கள் (8ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) வெவ்வேறு நாடுகளில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கிறது. இவற்றில் துபாய், அபுதாபி, லெபனான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் உள்ளடங்கும். பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் குறிப்பிட்ட சில பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. அந்நாட்டு சட்டங்கள் தொடர்பில் எவ்விதமான விளக்கங்களும் வழங்கப்படுவதில்லை. இலங்கையில் இவ்வாறானதோர் சம்பவத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதுமில்லை.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்களின் படி, லெபனான், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் அதிகளவிலான துஷ்பிரோயகங்களை சந்திக்கின்றனர். இதன்படி 2008 ஆம் ஆண்டு அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சவுதி அரேபியா (4196 முறைப்பாடுகள்), குவைத் ( 2053 முறைப்பாடுகள்), ஐக்கிய அரபு இராச்சியம் (826 சம்பவங்கள்) பதிவாகியுள்ளன. இவற்றில் எத்தனை முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வாறு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் கடமை புரிந்து இலங்கை திரும்பும் பணிப்பெண்கள் இருக்கையில் இவ்வாறு விபச்சாரம் அல்லது கள்ளத் தொடர்பு என்ற ரீதியில் தண்டனைப்பெறுவது ஒருவகையில் வெட்கக்கேடு.
குறிப்பாக 2008 ஆம் ஆண்டு பெறப்பட்ட 9000 முறைப்பாடுகளில் 12 தற்கொலைகளும் 5 வீட்டு வன்முறை உயிரிழப்பும் பதிவாகியுள்ளன. 72 மரணங்கள் விபத்தாகவும் 195 மரணங்கள் இயற்கை மரணங்களாகவும் 1188 சம்பவங்கள் உடல், உள ரீதியிலான துஷ்பிரயோகமாகவும் அமைந்திருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் மத்தியக் கிழக்கு நாடுகள் கூறும் பதிலென்ன? வழங்கிய நிவாரணங்கள் என்ன? தற்போதைய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரள, பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலிருந்து விண்ணப்பித்து 10,000 சவுதி றியால் (ரூபா 350,000) வரை நிவாரணங்களை பெறமுடியுமென அறிவித்துள்ளார். ஆனால் அவற்றால் இழப்புகளை ஈடுசெய்ய முடியுமா? பணிப்பெண்களாக கடமையாற்றி நிரந்தர ஊனமுற்றோராக இலங்கைக்கு வருகை தந்த பலரும் இருக்கின்றனர். தற்போது குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பணிப்பெண்ணை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதை, சகல பணிப்பெண்களின் விடயத்திலும் காட்டினால் இன்னும் நன்றாயிருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் 80,000 இலங்கையர்கள் 34,000 ரூபாவுக்கும் அதிகமான ஊதியத்தில் சவுதியில் தொழில் புரிகின்றனர். இவர்கள் மூலம் 32,640,000 ரூபாவை ஆண்டுக்கு இலங்கை வருமானமாக பெறுகின்றது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் அறிக்கையில், 1.7 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். இது இலங்கை சனத்தொகையில் 25 வீதமாகும். 2013 ஆம் ஆண்டு 293,105 தொழில்கள் மூலம் வருமானமாக 6.4 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 450 மில்லியன் டொலர்கள் கறுப்பு பணமாகும். இவ்வாறு ஆண்டுக்கு அதிகளவான தொகையினை வருமானமாக ஈட்ட காரணமான இலங்கை வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அத்தோடு இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு செல்வோரும் அந்நாட்டு சட்டமுறைப்படி ஒழுக்க கேடான விடயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மரண தண்டனை மட்டுமே மிச்சமாகும். பிரிட்டன் வாசியொருவர் சவுதியில் பெற்ற 360 கசையடி தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு பெற்ற சம்பவங்களும் இருக்கின்றன. எனவே தண்டனை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கைப் பணிப்பெண்னையும் அவ்வாறு மீட்பது சாத்தியமா?
க. பிரசன்னா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக