கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

சீனாவுக்கு அபாய சமிக்ஞை

ஆசியாவின் வல்லரசாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் சீனாவில், தற்போது வளிமாசடைவினால் மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் வரலாற்றில் முதற்தடவையாக வளிமாசடைவுக்காக ’சிவப்பு எச்சரிக்கை அபாய சமிக்ஞை’ விடுக்கப்பட்டுள்ளது. உலகில் புவியின் வளி மண்டலத்தை பாதிக்கக்கூடிய உற்பத்திகளை மேற்கொள்ளும் நாடுகள் அதிகம் இனங்காணப்பட்டிருந்தாலும் சீனா தனது அபாயகர நிலையினை தற்போதே உணர்ந்துள்ளது. இந்த சிவப்பு சமிக்ஞையே அதிகூடிய சாதகமான எச்சரிக்கை அளவாக இருக்கின்றது.

4 மட்டங்களுடைய  எச்சரிக்கை சமிக்ஞைகள் சீனாவில் காணப்படுகின்ற போதும் முதற்தடவையாக சிவப்பு சமிக்ஞை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞை கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே உள்வாங்கப்பட்டிருந்தபோதும் தற்போதே முதற்தடவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், நீலநிறம்  - அடுத்த 24 மணிநேரத்துக்கு அதிக மாசடைவு, மஞ்சள் நிறம் - அடுத்த 24 மணிநேரத்திற்கு தீங்கானது அல்லது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அதிக மாசடைவு, செம்மஞ்சள் நிறம் - மாறி மாறி ஏற்படும் அதிக மாசடைவு அல்லது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நலத்திற்கு கேடானது, சிவப்பு நிறம் - தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நலத்திற்கு கேடானது போன்ற நான்கு வகையான எச்சரிக்கை சமிக்ஞைகள் காணப்படுகின்றன. தற்போது விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங் நகரம் கடந்த சில நாட்களாவே புகைமண்டலமாக காட்சியளிப்பதுடன் மந்த நிலையிலேயே இருக்கின்றது. அதிகளவு தொழிற்சாலை உற்பத்திகளும் வாகனங்களின் பாவனையுமே இந்நிலைக்கு முக்கிய காரணமாகும். பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் கம்பனிகளின் உற்பத்திக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டமையே இந்நிலையை தோற்றுவித்திருக்கிறது. இது உலக வளிமாசடைவுக்கு எச்சரிக்கை  சமிக்ஞை.

நிலக்கரி எரிவே வளி தர சுட்டெண் உயர்வுக்கு அதிமுக்கிய காரணியாக இருக்கின்றது. தற்போது அதிக கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை அரசு மூடியுள்ளதால் தற்காலிக தீர்வு பெறப்பட்டாலும் எதிர்காலத்தில் இதே நிலை தொடர்வதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன. அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகவரமைப்பின் தகவல்களின்படி, தற்போதைய நிலை ஆஸ்துமா, சுவாசகோளாறு, வலியுடன் கூடிய சுவாசம், சிலவேளை மரணத்திற்கும் வழிகோலும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் 8 வயது சிறுமியொருவர் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். சீனாவில் நுரையீரல் புற்றுநோயால் பலியான மிக இளவயது நபர் இவரேயென டெலிகிராப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. வைத்தியர்கள், இது வளிமாசடைவினால் ஏற்பட்ட விளைவாகவே கருதுகின்றனர். முக்கியமாக வாகனங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள். இவ்விடயமானது நாட்டு மக்களின் கவனத்தை மட்டுமல்ல சர்வதேச மக்களின் கவனத்தையும் பெற்றிருக்கின்றது. அண்மையில் பாரிஸில் இடம்பெற்ற சர்வதேச காலநிலை மாநாடு, உலக நாடுகளின் காலநிலை பாதுகாப்பு தொடர்பான அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் மாநாட்டின் தீர்மானங்களை உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டிய நிலையில் சீனா இருக்கிறது. அதிக சனத்தொகை, சனத்தொகைக்கேற்ற தொழில் வாய்ப்பு, அதிக உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பன சீனாவின் பாதையினை மாற்றியமைத்துள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டே சீன மருத்துவக் கழகத்தின் தலைவர் சோங் நன்ஷான், வளிமாசடைவானது எதிர்காலத்தில் சீனாவின் மிகப்பெரிய சுகாதார சீர்கேடாக அமையுமென எச்சரித்திருந்தார். நுரையீரல் புற்றுநோய், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிக்கும். ஏனென்றால் தொழிற்சாலைகள், வாகனங்களின் வளிமாசடைவு மற்றும் புகையிலை பாவனை என்பன இவற்றை தோற்றுவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டு 1.7 மில்லியன் கார்கள் தினமும் பாவனையில் இருப்பதாக பெய்ஜிங் மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. சீனாவில் 2010 இற்கும் முற்பட்ட காலப்பகுதிகளில் வளிமாசடைவினால் 1.7 மில்லியன் மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இது சர்வதேச சனத்தொகையில் 40 வீதமாகும். பாரிஸ் மாநாட்டின் காலநிலை பதிவுகளின்படி, சீன அதிகாரிகள் நிலக்கரி பாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசித்து வருகின்றனர்.  ஆனால் சீனாவில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்திகள் நிலக்கரி மூலமே இயங்கிவரும் நிலையில் அவற்றை குறைப்பதற்கான நிலைப்பாடு எந்தளவிற்கு சாத்தியப்படும் என்பதும் தெரியவில்லை.

சீனா அதிகளவு நிலக்கரி உற்பத்தியினைக் கொண்ட நாடு, இந்நாடுகளிலிருந்து சர்வதேச நாடுகளும் நிலக்கரியினை இறக்குமதி செய்து வருகின்றன. 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே வட சீனாவினை வளிமாசடைவு தாக்கியிருந்தது. அப்போதே சீனா நிற சமிக்ஞைகளை வெளியிட்டிருந்தது. இருப்பினும் அவற்றில் புதிய மாற்றங்கள் இவ்வருடம் மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  ஆனால் சிவப்பு எச்சரிக்கையை ஒருபோதும் பயன்படுத்தியிருக்கவில்லை. தற்போதைய இந்நிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 3200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதாரத்திலும் சரிவு நிலை ஏற்படும் வாய்ப்புகள் தென்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நடைமுறைக்கு வந்த சிவப்பு எச்சரிக்கையானது, ஒரு கனமீற்றர் அளவில் 291 நுண்கிராம் அளவில் புகைவெளியேற்ற துகள்கள் வளியில் காணப்படுவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால், சிலமணி நேரத்திற்குப் பின்பு அம்மட்டமானது 250 ஐ எட்டியிருந்தது. எனினும் இந்நிலையானது மனித சுகாதாரத்திற்கு மிகவும் ஆபத்தானதாகவே இருக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அளவீடுகளுக்கு அமைவாக ஒருகன மீற்றர் அளவுக்கு 25 நுண்கிராம் மாசுக்கள் காணப்படுவதே பாதுகாப்பான மட்டமென வரையறுத்துள்ளது. பாரிஸ் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜின்பிங், சீனாவில் நிலக்கரி மூலமே 60 வீதமான சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் மீள்புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்களில் அதிகளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சீனாவில் வளி மாசடைவு காரணமாக வருடந்தோறும் 1.6 மில்லியன் மக்கள் இதயம், நுரையீரல் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களால் மரணிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதுடன் தினமும் இந்நோய்களால் 4000 பேர் வரை மரணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மின்சாரத் தேவைக்கும் வீட்டு வெப்பமயமாக்கல் பணிகளுக்கும் நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் விதவிதமான முறைகளில் மாசடைவு ஏற்பட்டு நோய்த்தாக்கம் உருவாகின்றது. அமெரிக்க சுற்றாடல் பாதுகாப்பு முகவரமைப்பு கணிப்பிட்ட சுகாதார சீர்கேட்டுக்கு உகந்த வளி மண்டலத்தைக் கொண்ட பகுதியிலேயே சீனாவின் சனத்தொகையில் 38 வீதமானோர் வாழ்கின்றர். பெய்ஜிங்கின் தென்கிழக்குப் பகுதி மிக மோசமான வளிமண்டலத்தை கொண்ட பகுதியாகும். அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியே நுரையீரல் பாதிப்பினை எதிர்கொண்ட மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆனால் சீனாவின் கிழக்கு கரைப்பகுதியில் (99.9%) வருடத்திற்கு அதிகமான நுரையீரல் பிரச்சினையுள்ள மக்களின் தொகை பதிவாகியுள்ளதாக அமெரிக்க நுரையீரல் கழகம் தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பதிவுகளின்படி, 63,000 - 80,000 வரையானோர் வளிமாசடைவினால் அமெரிக்காவில் வருடமொன்றுக்கு இறப்பதாகவும், ஏனைய தரவுகளின்படி 35,000 - 200,000 மக்கள் இறப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் வெறும் வளிமாசடைவு மட்டுமே, சீனாவில் மிக கேடு விளைவுக்கும் புகையும் மூடுபனியும் கலந்த சூழல் காணப்படுகிறது.

இதனால் பல மைதானங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் இடம்பெறவுள்ளன. இவ்வாறான நிலையில் மிகவும் இக்கட்டான நிலைமையினை சீன வளிமண்டலம் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா தற்போது வளியினை சுத்திகரிக்கத் தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக வாயுவான கார்பன் டையோக்சைட் வாயுவை அதிகமாக நிலக்கரி பாவனையே வெளியிடுகிறது. எனவே அவற்றின் பாவணையை மட்டுப்படுத்துவதே முதற்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். உலகில் பல வல்லரசுகள் ஆபத்தான காலநிலை  மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. தொழிற்சாலை உற்பத்திகளும் வாகனங்களின் பெருக்கமும் யுத்த சூழ்நிலைகளும் இதற்கு காரணங்களாக அமைகின்றன. இவ்வாறான நிலைமைகள் உலக அழிவில் முக்கிய பங்கும் ஆற்றுகின்றன. அவ்வாறான நிகழ்வுகளின் தொடக்கமே  தற்போது இடம்பெறும் சம்பவங்களாகும். சீனாவின் வளிமாசு அந்நாட்டு மக்களை மிகவும் இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளமை ஒரு எடுத்துக்காட்டாகும். சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் மிக கேடு விளைவிக்கும் புகையும் மூடுபனியும் கலந்த நிலைமை காணப்படுகிறது. 74 சீன நகரங்களில் புதுவருட காலங்களில் சுமுகமானதொரு நிலைமையும் 33 நகரங்களில் கனமீற்றருக்கு 300 நுண்கிராம் அளவில் புகைவெளியேற்ற துகள்கள் இரண்டு வாரங்களிலிருந்து கலக்கும் நிலை காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை அளவானது மனித சுகாதார நிலைக்கு மிகவும் ஆபத்தானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெய்ஜிங் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை அமுல்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே கடந்த திங்கள் முதல் சிவப்பு எச்சரிக்கை அமுலிலுள்ளது. நிலக்கரி மற்றும் கார் என்ற இரண்டு வளங்களே பெய்ஜிங்கின் வளி மாசடைவுக்கு காரணமென நகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் நிலக்கரி 16.7 வீத மாசடைவையும் வாகனங்கள் 22 வீத மாசடைவையும் வளியில்  ஏற்படுத்துகின்றன. ஆனால் தற்போதைய குளிர்காலப்பகுதியில் வெப்பமயமாக்களுக்காக அதிகளவு நிலக்கரி எரிக்கப்படுவதால் வளிமாசடைவில் நிலக்கரி அதிக பங்குவகிக்கின்றது.

தற்போது நகரமானது மாசடைவை குறைப்பதற்கான திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இவற்றில் வாகன போக்குவரத்து மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நகர பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்ப உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் தென்மேற்கு, தென்கிழக்கு, வட பெய்ஜிங் என்பன கடுமையான வளி மாசடைவை சந்தித்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சு, அமெரிக்காவின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதேச ரீதியான திட்டத்தினை இனங்கண்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றியாளர் என்ற வகையில் பெய்ஜிங் இத்திட்டத்தில் சுற்றியுள்ள மாகாண அரசுகளான ஜியாஜிங், ஹெபேய், ஷங்கி, மங்கோலியா மற்றும்  ஷாங்கி என்பன இணைந்துள்ளன. சில சக்தி வள உற்பத்தி திட்டங்களை பகுதியாகவும் நிரந்தரமாகவும்  மூடியுள்ளன. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட சீனாவில் ஏற்பட்ட வளிமாசடைவை தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்த தொடங்கியுள்ளது. மத்திய அரசு வளி மாசடைவை தடுப்பதற்கு செயற்பாட்டு திட்டமொன்றை அமுல்படுத்தியிருப்பதாக 2013 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இதன் நோக்கம் வளிமாசடைவை 10 வீதத்தால் குறைப்பதாகும். இது 2012 - 2017 வரையிலான காலப்பகுதியில் நிறைவேற்றப்படும். இதில் தலைநகர் பெய்ஜிங்குக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.

இதன் மூலம் மாசடைவை ஏற்படுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகள் என்பவற்றை மூடுவதுடன் ஏனைய சூழல் பாதுகாப்புக்கு தேவையான வளங்களை திறந்து விடுவதுமே முக்கிய நோக்கமாகும். கடந்த 20 ஆகஸ்ட் 2015 ஆம் திகதி  இரண்டாம் உலகப் போரின் 70 ஆவது நினைவு தினத்திலும் இத்திட்டத்திற்கான விளக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சீனா தற்போது அணு, ஐதரசன் மற்றும் இயற்கை எரிவாயு என்பவற்றை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆனால் இத்திட்டங்கள் முழுமையாக நடைமுறையிலுள்ளனவா என்பதே சந்தேகம். காரணம் தற்போது பெய்ஜிங்கில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவின் பின்பே நீண்ட நாட்களுக்கு முன் இனங்காணப்பட்ட தொழிற்சாலைகள், நிலக்கரி உற்பத்தி என்பவற்றை இடைநிறுத்தியுள்ளது.

இது ஆபத்தை குறைப்பதற்கு ஒரு ஆயுதமாக இருந்தாலும் முழுமையான பயனை அனுபவிக்க முடியாதுள்ளது. தற்போது சீன சனத்தொகையில் குறிப்பிட்டளவானோர் கல்வி, தொழில், வருமானம் என்பவற்றை இழந்து புதியதொரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். பெய்ஜிங் கடந்த 2014 ஆம் ஆண்டில் வளிமாசடைவினால் 200 நாட்களை சுகாதாரத்துக்கு கேடானதாகவும், 21 நாட்களை 24 மணிநேர சுகாதார எச்சரிக்கைக்கும், 10 நாட்களையே தரமானதாகவும் கழித்திருக்கிறது. ஆனால் 2015 ஆண்டில் இந்நிலை வேறாக மாறியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலக கணிப்பீட்டின் படி, 76 வீத சீன மக்கள் வளிமாசடைவை மிகப்பெரும் பிரச்சினையாக கருதியிருக்கிறார்கள். இதில் 35 வீதமானோர் மிக அதிகமாக கவலையடைந்திருக்கின்றனர். 36 வீதமான மக்கள் அடுத்த 5 வருடங்களுக்குள் இந்நிலைமை சீரடையுமென கருதுகின்றனர். 22 வீதமானோர் இதே நிலைமை தொடருமென வாதிடுகின்றனர். எனவே மக்களின் கருத்துகள் வளி மாசடைவினால் மிகவும் குழம்பிய நிலையிலேயே இருக்கின்றது. மக்களை அதிக சுகாதாரத்துடனும் பாதுகாப்பான சூழலிலும் வாழத் தகுதியான சூழலிலும் குடியமர்த்த வேண்டிய அத்தியாவசிய தேவை சீனாவுக்கு உண்டு.

க. பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக