கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

26 பிப்ரவரி, 2016

சவூதி - ஈரான் முறுகல்

உலகில் அதிக எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய கிழக்கு நாடுகள் பணப்பலம் படைத்தவையாக இருந்தாலும் மத அடிப்படையில் இந்நாடுகளுக்கிடையே அதிக  பிளவுகளுண்டு. அதிகமான தீவிரவாத இயக்கங்கள் கூட இங்குதான் செயற்படுகின்றன. அதேபோலவே நீண்டகாலமாக சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மறைமுக யுத்தம் இன்று உச்ச எல்லையை அடைந்துள்ளது. மீண்டும் சவூதி - ஈரான் யுத்தம் மத்திய கிழக்கை சிதைத்துவிடுமா என்ற நிலையும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கிடையில் ஒரு யுத்தம் ஏற்படுமாயின் அது மத்திய கிழக்கின் மிக நீண்ட அழிவுக்கு வித்திடலாம்.
ஈரானின் சவூதி தூதரகம் மீதான தாக்குதல், ஷியா மதகுருவுக்கான மரண தண்டனை  என்பன இருநாடுகளுக்கிடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சவூதி, ஈரானுடனான சகல உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளதுடன் ஈரானிலுள்ள தமது தூதரக அதிகாரிகளையும் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைத்துள்ளது. எனவே எதிர்பாராத திருப்பமாக அரசியல் ரீதியில் பாரிய விரிசல்களை இந்நிலைமை தோற்றுவித்துள்ளது. இது வெளிப்படையான சுன்னி - ஷியா முஸ்லிம்களுக்கிடையிலான யுத்தமாகவே தெரிகிறது. சவூதி அரேபிய ஷியா மதகுருவான ஷேய்க் நிம்ர் அல் - நிம்ர் மற்றும் 46 பேரின் மரண தண்டனையை கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியா நிறைவேற்றியிருந்தது.

தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சவூதி ஷியா முஸ்லிம்களின் மதகுருவான அல்  நிம்ருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதைத் தொடர்ந்து ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையினமாக கொண்ட ஈரான், கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. சவூதியில் பெரும்பான்மையினராக சுன்னி முஸ்லிம்களே இருக்கும் நிலையில், எண்ணெய் வளப்பகுதியான சவூதியின் கிழக்குப் பகுதியில் 10 - 15 வீதமான  ஷியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் சுன்னி முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதத்தில் சம்பந்தப்பட்டவர்களென சவூதி கருதுகிறது. சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளான அல்கொய்தா மற்றும் இஸிஸூக்கு எதிராக சவூதி கூட்டணி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

யேமனில் சவூதி கூட்டணி தீவிரவாதிகளுக்கெதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகையில், ஈரான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி  வருவதாக சவூதி நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றது. இந்த மறைமுக யுத்தமே மரண தண்டனையை சவூதியில் ஊக்குவித்திருக்கலாம். ஒரு மதத்திலுள்ள இரு பிரிவுகளுக்கிடையிலான விரிசல் உலக முஸ்லிம்களின் வாழ்வியலில் மிகப்பெரிய ஆபத்தை தோற்றுவிக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இருநாடுகளுமே சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்குவதாக இல்லை. மாறாக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்த எத்தனிக்கின்றன. ஒரு நாட்டை பொருளாதார தடையின் மூலம் அடிபணிய  வைப்பதென்பது மேற்குலகின் யுக்தி. அது இங்கும் பின்பற்றப்படுமா?

உலகில் 1.5 பில்லியன் முஸ்லிம்கள், சுன்னி முஸ்லிம்களாக இருக்கின்றனர். இவர்கள் அரபு நாடுகள் மற்றும் துருக்கி, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ்-, மலேசியா, இந்தோனேஷியாவில் அதிகம் வாழ்கின்றனர். ஈரான், ஈராக் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளில் ஷியா மத கொள்கைகளை கடைப்பிடிக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். சவூதி அரச கட்டுப்பாட்டிலேயே சுன்னி இஸ்லாமின் புனித மதத்தலங்களான மக்கா மற்றும் மதீனாவும் ஈரானிலுள்ள கர்பலா, குபா மற்றும் நஜாப் போன்றன ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலங்களாகவுமுள்ளன. சவூதி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கமுள்ள நாடுகளாகும். இவ்விரு மதப்பிரிவினரிடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

யேமனின் வடபகுதியிலுள்ள ஹளதிகள்--, ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரச படையும் கூட்டணி நாடுகளும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதேபோலவே சிரியாவில் சுன்னி முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி பஸார் அல் அசாத் ஷியா முஸ்லிமாவார். இங்கு தாக்குதல்களை மேற்கொண்டுவரும் அமெரிக்கா, சிரிய ஜனாதிபதியை பதவி விலகுமாறு வற்புறுத்தி வருகிறது. சவூதியின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா இவ்வாறு செயற்படுவதற்கு இதுவே உள்நோக்கமாகவும் இருக்கலாம். ஈரானுக்கெதிரான சவூதியின் மறைமுக யுத்தமாகவே இதனைப் பார்க்கலாம்.

இவ்வாறு இரு நாடுகளுக்கிடையே ( இரு மதக்குழுக்களுக்கிடையே) நிலவும் பிரச்சினையானது இஸிஸ் தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைகிறது. தற்போது ஈரான் - சவூதி உறவு விரிசலானது, மத்திய கிழக்கு எதிர்நோக்கப்போகும் மிகப்பெரிய ஆபத்தை பிரதிபலிப்பதாகவும், எண்ணெய் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் பாதிப்பின் பின்னணியாகவும் இருக்கின்றது.

மதகுருவின் கொலைப் பின்னணி

தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள  மதகுரு ஷேய்க் நிம்ர் அல் நிம்ர், வன்முறையை தூண்டியதற்காகவும் 2011 ஆம் ஆண்டு சவூதியின் கிழக்கு பிராந்தியத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேசதுரோகத்திற்காகவும் ஒத்துழையாமை மற்றும் ஆயுதமேந்தியமைக்காகவும் இவ்வாறு தண்டனை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. நிம்ர் தனது அரசியல் குற்றச்சாட்டுக்களை மறுக்காத போதும் ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபட அழைப்பு விடுக்கவில்லையென தெரிவித்திருந்தார். இவர் சவூதி அரசினால் .இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு கிழக்குப் பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு சவூதி அரச படையினரால் சவூதி ஷியா முஸ்லிம்களின் உரிமைகள் கருத்தில் கொள்ளப்படாது கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒதுக்கி வைக்கப்பட்டது. 2011 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அல் நிம்ருடன் 35 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு அல் நிம்ர் அழைப்பு விடுத்திருந்தார். இதனால் 2012 ஆம் ஆண்டு சவூதி பொலிஸாரால் அல் நிம்ர் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிம்ரின் உடல் நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் சர்வதேச மனித உரிமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அல் நிம்ருக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் தேச துரோக குற்றத்துக்காக மரண தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவூதி - ஈரான் அரசியல் உறவு

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் சவூதி அரேபிய இராச்சியத்துக்கும் புவி சார் அரசியலில் பாரிய வேறுபாடுண்டு. இஸ்லாம் மதக் கருத்துக்கள், இஸ்லாமிய நாடுகளின் தலைமை, எண்ணெய் ஏற்றுமதி, அமெரிக்கா - மேற்குலக நாடுகளின் உறவு என சகலவற்றிலும் இரு நாடுகளும் முரண்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. அதைவிட இரு நாடுகளும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டவை என்பதோடு இஸ்லாமிய நூல்களை (குர்ஆன்) முழுமையாக பின்பற்றுபவை. ஆனால் வித்தியாசமான அரசியல் நிரல்களை கொண்டவை. அமெரிக்காவின் பாரசிக  வளைகுடா தரகராக சவூதி செயற்படுகின்றது. இதனால் இஸ்லாமை சவூதி பிரதிநிதித்துவப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

சதாமின் ஆட்சி முறியடிப்பு, தற்போதைய சிரிய ஜனாதிபதியை பதவி விலத்துவதற்கான அழுத்தம் என்பன அமெரிக்காவின் திட்டங்களாக இருந்தது. இது சவூதிக்கு சாதகமானது. இதே அமெரிக்கா-, ஈரானின் அணு விவகாரத்தில் கடுமையாக நடந்து கொண்டது. இதுவும் சவூதியின் பெரியத்தனத்தை வளைகுடாவில் நிலைநாட்டியது. 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற வளைகுடா யுத்தத்தில் இரு நாடுகளின் உறவும் முறிவு பெற்றிருந்தது. எனினும்--, 2007 ஆம் ஆண்டு ஈரான் ஜனாதிபதி அகமட் நிஜாதின்-, ரியாத் விஜயம் இருநாடுகளுக்கிடையிலான உறவில் மீண்டும் மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும் மார்ச் 2011 க்குப் பிறகு ஈரான், சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்திற்காக சிரியாவுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தது. இதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இவ்விரிசல் கடந்த வாரம் இடம்பெற்ற மரண தண்டனை நிறைவேற்றத்துக்குப் பிறகு முற்றாக செயலிழந்துபோனது. இதனால் சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் வலுப்பெற்றிருந்ததுடன் 48 மணித்தியாலயத்துக்குள் ஈரானுக்கான சவூதி இராஜதந்திரிகளும் திருப்பி அழைக்கப்பட்டனர். அத்தோடு பஹ்ரெய்ன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் ஈரானிலுள்ள தமது தூதரகங்களை மூடியுள்ளதுடன் இராஜதந்திர உறவுகளையும் நிறுத்திக் கொண்டுள்ளன.

அடுத்தது என்ன?

இவ்வாறு இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் முற்றாக செயலிழந்து போயிருக்கும் நிலையில் சர்வதேச நாடுகள் தமது பொருளாதாரத்தை நினைத்து கவலைகொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. சவூதியும் ஈரானும் உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதியை கொண்ட நாடுகள். இதனால் ஈரான் பொருளாதார அழுத்தத்தை சவூதிக்கு கொடுக்க முடியும். கடந்த ஜூலையில் ஏற்படுத்தப்பட்ட அணு ஒப்பந்தத்துடன் மேற்குலக நாடுகளோடு எண்ணெய் ஏற்றுமதி தொடர்பாகவும் கைச்சாத்திடப்பட்டுள்ளதால் குறைந்த விலையில் எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் மேற்கொள்ளலாம். இதனால் சவூதியின் ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதோடு சர்வதேச சந்தையிலும் எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலையேற்படும்.

அத்தோடு யேமனில் போராடிவரும் ஹௌதி ஷியா தீவிரவாதிகளுக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை அதிகரித்து சவூதி  கூட்டணிக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்க முடியும். யேமனுடனான யுத்த நிறுத்தம் கடந்த 2 ஆம் திகதியுடன் முறிவடைந்துள்ளதாக சவூதி அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டிய நிலை உலக நாடுகளுக்கு உண்டு.

அதேபோல சிரியாவில் நடைபெறும் சிவில் யுத்தத்தில் சவூதியின் சுன்னி கிளர்ச்சிப் படைகளும், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈரான் கிளர்ச்சி குழு என பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ள நிலையில் ஷியா - சுன்னி பிளவுகள் இன்னும் உச்சத்தை எட்டலாம். அது இஸிஸ் தீவிரவாதிகளுக்கு இன்னும் சாதகமாக அமையும். எனவே ஈரான் -சவூதி விரிசல் பல நிலைகளில் உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுக் காரணம் மரண தண்டனையாகவே இருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன கூற்றுப்படி, மரண தண்டனை விதிக்கப்பட முடியும். ஆனால், அதனை நிறைவேற்ற முடியாது. இதனை உலக நாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் சவூதி இதற்கு விதிவிலக்காகவே செயற்படுகின்றது.

மேற்குலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் இவை தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலில் சவூதியுடனான உறவு முக்கியமானது. அத்தோடு எரிபொருள் விடயத்திலும் சவூதியுடன் முரண்பாட்டை எதிர்கொள்ள முடியாது. இதனால் சவூதி--, இஸ்லாம் என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தாம் நினைத்ததை செய்கிறது. இதுவரை எத்தனையோ எதிர்ப்புகளையும் மீறி கொடுமையான தண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது. நிறைவேற்றியும் வருகிறது.

எனவே மேற்குலகின் கூட்டணி சவூதிக்கு சார்பாக அமைந்திருக்கும்வரை அதன் தொடர்ந்தேர்ச்சியான அதிகாரங்களை ஏனைய நாடுகளால் எதிர்க்க முடியாமலேயே இருக்கும். மதம் என்பது ஒருவனை நெறிப்படுத்துவதற்கே தவிர நெருக்குவதற்கல்ல என்பதை சவூதி எப்போது புரிந்து கொள்ளப் போகிறது ?.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக