இவ்வழக்கில் ருவாண்டாவின் முன்னாள் பெண்கள் அமைச்சர் பவுலின், அவரது மகன் அர்சோனே ஷலோம், முன்னாள் மேயர் எலி நடயம்ஜே, முன்னாள் மேயர் அல்போன்ஸ் நடேஷிர்யாயோ, முன்னாள் மேயர் சில்வைன் நசம்பிமனா, முன்னாள் நகோமா மேயர் ஜோசப் கன்யாபஷி ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளனர்.
கடந்த இரண்டு தசாப்தகாலமாக நடைபெற்று வந்த விசாரணைகளில் 61 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டிருந்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்நீதிமன்றம் பல தடகைளை தாண்டி சிறப்பாக செயற்பட்டமைக்காக பலரது பாராட்டையும் பெற்றிருந்த நிலையிலும் இன்னும் அதிகமாக செயற்பட வேண்டியமை தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவிசாரணை தீர்ப்பாயம்
ருவாண்டாவின் இனப்படுகொலையினை விசாரிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 955 ஆவது தீர்மானத்தின்படி தன்சானியாவின் ஆருஷா நகரில் ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவிசாரணை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ருவாண்டா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின் கீழ் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. தீர்மானம் 977 இன் படி 1995 ஆம் ஆண்டுக்குப் பின் தன்சானியாவின் ஆருஷா விசாரணைக்கான தலைமையகமாக அடையாளப்படுத்தப்பட்டது. (2006 முதல் ஆபிரிக்க நீதிமன்றத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டு மையமாக ஆருஷா செயற்படுகிறது.)
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1165 தீர்மானத்தின் படி 1998 ஆம் ஆண்டு இத்தீர்ப்பாயத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டது. இதன் மூலம் தீர்ப்பாயமானது தனது விசாரணைகளை 2004 ஆம் ஆண்டுடன் நிறைவு செய்வதோடு 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும், 2012 ஆம் ஆண்டோடு தமது கடமைகளை நிறைவு செய்துவிடுமென்றும் கூறப்பட்டிருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டே அதன் சகல நடவடிக்கைகளும் நிறைவுக்கு வந்தன. 2009 ஆம் ஆண்டு தீர்ப்பாயமானது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 50 பேரில் 29 சந்தேகநபர்களை முறைப்படி குற்றவாளியென தீர்மானித்திருந்தது. மற்றைய 11 பேர் முதற்கட்ட விசாரணையிலும் சம்பந்தப்பட்ட ஏனைய 14 பேர் விசாரணைக்காக தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தனர். சிலர் இறந்தும் விட்டனர்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1503 ஆவது தீர்மானத்தின்படி முதற்கட்ட விசாரணைகள் 2008 ஆம் ஆண்டு நிறைவுக்கு வருமென அறிவிக்கப்பட்ட போதும் 2009 ஆம் ஆண்டே நிறைவுக்கு வந்தது. ஆனாலும் சகல விசாரணைகளும் 2010 ஆண்டுடன் முடிவடைந்தன. ஆனால் தீர்ப்பாயத்தின் இலக்குகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதற்காக ஆலோசனையின் பின் பாதுகாப்புச் சபை 2014 டிசம்பர் வரை செயற்பட அனுமதி வழங்கியிருந்தது. வழக்குக்கு தேவையான ஒலி, ஒளிப்பதிவுகள் நவீனப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாலும், 2010 முதலே தீர்ப்பாயத்துடன் தொழில்நுட்ப முறைகளும் இணைக்கப்பட்டதால் 2015 ஆம் ஆண்டோடு சகல விசாரணைகளும் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது ஐ.நா.வின் தீர்ப்பாயம் காலம் கடந்தாலும் தமது விசாரணைகளை சுதந்திரமாக முன்னெடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.
குற்றப் பின்னணி
ருவாண்டாவின் பெரும்பான்மையின மக்களான ஹூட்டு இனத்தவர்களின் 100 நாள் வெறியாட்டடே ருவாண்டாவின் இனப்படுகொலைகளுக்கு முக்கிய காரணம். 7 மில்லியன் ருவாண்டா மக்களில் ஹூட்டு இனத்தவர் 85 வீதமானோரும் டுட்சி இனத்தவர் 14 வீதமும் ட்வா இனத்தவர் 1 வீதமும் வாழ்கின்றனர். டுட்சி இனமே மரபணு ரீதியில் உயர்ந்த இனமாக கொள்ளப்படுகின்றது. பெரும்பான்மையான ஹூட்டு இனமக்கள் இருந்தாலும் காலனியாதிக்கத்தின்போது டுட்சி இனமக்களே முதன்மை வகித்திருந்தனர். பின்னர் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற ருவாண்டா ஹூட்டு இன ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இதனால் டுட்சி இனமக்கள் ஆயுதமேந்திப் போராட முற்பட்டனர்.
இந்நிலையிலேயே ஏப்ரல், 1994 இல் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகளின் குடியரசு தலைவர்கள் பயணம் செய்த விமானம் ருவாண்டா நாட்டுத் தலைநகர் கிகாலியில் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில் இருவரும் மரணித்துப் போகவே, ருவாண்டாவின் இனவழிப்பின் தோற்றம் ஆரம்பமானது. ஆனாலும் விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பதற்கான விடை இன்றுவரையும் கிடைக்கப்பெறவேயில்லை என்பதுதான் ஆச்சரியம். இரு இனக்குழுக்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்கின்றன. ருவாண்டா ஊடகங்கள் டுட்சி இன மக்கள் மீது இன விரோத கருத்துக்களை முன்வைத்து ஹூட்டு இன மக்களிடையே இனவாதத்தை தூண்டி விட்டது.
இந்த இனப்படுகொலைகளுக்கு தேவையான கத்திகளையும் ஆயுதங்களையும் ஹூட்டு இன அரசாங்கமே இறக்குமதி செய்து விநியோகித்தது. ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள டுட்சி இன மக்களின் குடும்ப பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களை கொல்ல வேண்டிய முறைமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு இளைஞர்களை கொண்ட கொலைப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. மக்கள் அனைவரும் இனத்தின் அடிப்படையில் அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இது அவர்களின் இனப்படுகொலைகளை விரைவுபடுத்தியது. ஏப்ரல் 7, 1994 இல் ருவாண்டாவின் இனப்படுகொலை ஹூட்டு இனமக்களால் சாத்தியமானது. குழந்தைகள், வயதானோர், ஊனமுற்றோர் என எவருமே தப்பவில்லை விரட்டி விரட்டி கொல்லப்பட்டார்கள்.
படுகொலைகளில் பங்கேற்க மறுத்த ஹூட்டு இன மக்களும் கொல்லப்பட்டனர். அதுவரையும் உலக சரித்திரத்தில் இரு இனங்களிடையே மோதல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை இந்தளவுக்கு வெளிப்படையாக திட்டமிடப்படவில்லை. ஆனாலும் இலங்கையின் உள்நாட்டுப் போரை இத்தோடு இணைத்துவிட முடியாது. இது நவீனகால இனப்படுகொலை. இது ருவாண்டா இனப்படுகொலையினை போல் வெளிப்படையாக திட்டமிடப்படவில்லை. ஆனால், வெளிப்படையாக அரங்கேறியது. ஆனால் அவை நிருபிக்கப்படவில்லை. இதேபோலவே 1972 ஆம் ஆண்டு புருண்டியில் ஹூட்டு இனமக்கள் டுட்சி இனத்தவர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் ஒன்றரை இலட்சம் ஹூட்டுக்கள் கொல்லப்பட்டனர். இது ருவாண்டாவின் தலைவிதியையே மாற்றியமைத்தது.
1994 ஏப்ரல் மாதம் தொடங்கிய ருவாண்டா இனப்படுகொலைகள் ஜூலை இறுதிவரை கொடுரமாக அரங்கேறியது. 500,000 - 11-,00,000 பேர் வரை கொல்லப்பட்டதாக உத்தேச கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த இனப்படுகொலையில் வல்லுறவு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதுடன் இவை எயிட்ஸ் தொற்றுக்கும் வழியேற்படுத்தியது. அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகளும் நோய்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அதிகமான குடும்பங்கள், தாய், தந்தையை இழந்த அல்லது விதவைகளை தலைமையாக கொண்டிருந்தது. பொருளாதாரம் மிக மந்த கதியினை அடைந்தது.
ஆனால் இந்த இனப்படுகொலைகளை டுட்சி இன போராளிக்குழுக்கள் வேடிக்கைப் பார்க்கவில்லை. படைகளை திரட்டி ஹூட்டுக்களின் ஆட்சியை கவிழ்த்து படுகொலையை நிறைவுக்கு கொண்டுவந்தனர். உலகில் பெரும்பான்மை இனம் தோற்றது அதுவே முதன்முறையாக இருக்கலாம். இலங்கையிலும் அவ்வாறு போராடிய தமிழ் ஈழத்தவர்களின் நிலையை இன்னும் அறிய முடியவில்லை. இன்று ருவாண்டா சிறுபான்மையினமான டுட்சிகளின் இரும்புப்பிடி ஆட்சியிலேயே இருக்கின்றது.ருவாண்டாவில் இன்று இரண்டு அரச விடுமுறை தினம் கொண்டாடப்படுகின்றது. ஏப்ரல் 7, இனப்படுகொலை நினைவு நாளும், ஜூலை 4 விடுதலை நாளாகவும் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இழப்புகள்
ருவாண்டாவில் கொடூரமாக அரங்கேற்றி முடிக்கப்பட்ட இந்த படுகொலைகளின் எண்ணிக்கையை வரையறுப்பதென்பது சர்வதேச ஆய்வாளர்களுக்கே சவாலாக இருந்தது. இருப்பினும் தரவுகள் பலவகையாக வெளியிடப்பட்டன. புரூண்டி மக்கள் குடியரசின் தகவல்களின்படி ருவாண்டா இனப்படுகொலையில் 1,071,000 பேர் கொல்லப்பட்டதுடன் இவர்களில் 10 வீதமானோர் ஹூட்டு இனத்தவராவர். இதை ஊடகவியலாளர் பிலிப் கோர்விச் இறப்புத் தொகை 1 மில்லியனாக இருக்குமென ஏற்றுக்கொண்டார். ஐ.நா.வின் கணிப்பீடுகளின்படி பலியானோர் தொகை 800,000 ஆகும். ஆபிரிக்க உரிமைகள் நிறுவன கணிப்பின் படி 750,000 ஆகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுப்படி 500,000 ஆகவும் இருக்கின்றது.
7.3 மில்லியன் ருவாண்டா மக்கள் சனத்தொகையில் 84 வீதமானோர் ஹூட்டு இனத்தவர், 15 வீதம் டுட்சி இனத்தவரும் 1 வீத ட்வா இனத்தவரும் வாழ்ந்த நிலையில், ருவாண்டா அரசாங்கம் வெளியிட்ட கணிப்பில் 1,174,000 பேர் 100 நாட்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் (10,000 பேர் ஒவ்வொரு நாளும்,400 பேர் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 7 பேர் ஒவ்வொரு நிமிடத்திலும் கொல்லப்பட்டனர்). 300,000 டுட்சி இனத்தவர் உயிர் பிழைத்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான விதவைகள், இனந்தெரியாதோரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்கள் இன்று எச்.ஐ.வி. தொற்றுக்கு இழக்கானவர்களாக இருக்கின்றர். 400,000 பேர் தாய், தந்தையரை இழந்தவர்களாகவும் அவர்களில் 85,000 பேருக்கு மேல் குடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாய நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு திட்டமிட்ட இன அழிப்பில் அரசபடைகள் மற்றும் இராணுவத்தினர் பங்கு கொண்டிருந்தமை முக்கிய விடயமாகும். 100 நாட்கள் இடம்பெற்ற இனப்படுகொலைகளை சர்வதேசநாடுகள் மற்றும் நிறுவனங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தன. டுட்சி இன மக்கள் வேட்டையாடப்பட்டவை ஆபிரிக்கா எனும் இருண்ட கண்டத்தின் இருளிலேயே முடிந்துபோனது. இருப்பினும் ஐ.நா.வால் உருவாக்கப்பட்ட தீர்ப்பாயம் 20 வருடங்களை கடந்து தமது விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வழங்கப்பட்ட தண்டனைகள், தீர்ப்பிற்கான தாமதம் என்பன ருவாண்டா இனப்படுகொலை வெறியாட்டத்திற்கு போதுமான தீர்வல்ல.
இன்றைய சூழ்நிலையில் சர்வதேச வல்லரசு நாடுகள் பிரச்சினையே இல்லாத நாட்டில் ஒரு தீவிரவாத நிலைமையை உருவாக்கி தமது இராணுவத்தை அங்கு நிலைநிறுத்தி முற்று பெறாத யுத்தத்தை ஏவிவிடுகையில், வெளிப்படையாக இடம்பெற்ற அதுவும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பின் தீர்ப்புக்கு 20 வருடங்கள் மிக அதிகம்.
நாசிச, பாஸிச கொலைகளின் போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோர் உயிரோடில்லை. ஆனால் ருவாண்டா இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் 20 வருடங்களாக சமூகத்தோடே இருந்துள்ளனர். அவர்களை தண்டிப்பதற்கு இத்தனை வருடங்களை சர்வதேசமும், நீதியும் கடந்திருக்க தேவையில்லை. அதிலும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையும் காலம் கடந்ததே. ஆனாலும் காலம் கடந்தும் நீதிவென்றதில் சிறிய சந்தோஷமே.
க. பிரசன்னா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக