கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

சிரியாவில் மிஞ்சப்போவது என்ன?

உலக அரங்கில் தற்போதைய சூழலில் சிரியா மிக ஆபத்தான போர்வலயமாக மாறியிருக்கிறது. பலகட்ட போர்நிறுத்த பேச்சுவார்தைகளின் பின்பும், சிரியாவின் ஆபத்தான நிலையின் காரம் குறையவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே நிலவும் மறைமுக யுத்தத்தில் சிரிய மக்கள் பந்தாடப்படுகின்றனர் என்பதே உண்மை. சிரியாவின் எதிர்காலத்தை தற்போது சர்வதேச நாடுகளே தீர்மானித்து வருகின்ற நிலையில் சிரிய ஜனாதிபதி அசாத் ஒரு கைபொம்மை போலவே செயற்படுகிறார். சிரியாவில் இஸிஸ் தீவிரவாதிகளுக்கெதிராக யுத்தம் தொடங்கப்பட்டு 5 வருடங்கள் கழிந்திருக்கும் நிலையில் சிரிய மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், பாதுகாப்பு என்பன மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமே மிச்சம்.
சிரியாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தாக்குதல்களை இவர்களால் தடுக்க முடியாது. சிரிய மக்களுக்கான தேவை சமாதானம் என்பதைவிட அடிப்படை வாழ்வதார தேவைகளாகும். இந்த 5 வருட சிரியாவின் யுத்தத்தில் 400,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 70,000 பேர் சுத்தமான குடிநீர் இன்மை மற்றும் சுகாதார சீர்கேடுகளால் உயிரிழந்துள்ளனர். அத்தோடு சிரிய சனத்தொகையில் 11 வீதத்திற்கும் அதிகமானோர் யுத்தத்தினால் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சிரியாவின் கொள்ளை ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது. எனவே சிரிய மக்களின் தற்போதைய தேவை உணவு, குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளேயொழிய யுத்தமல்ல.

சிரியாவில் அமெரிக்க  கூட்டணி நாடுகள் இஸ்லாமிய அரசுக்கெதிராகவும், ஜனாதிபதி பஷிர் அல் அசாத்தை வெளியேற்றுவதற்காகவும் போராடுகின்றன. ஆனால், ரஷ்யாவும், ஈரானும் அசாத்துக்கும் அவருடைய சார்பு படைகளுக்காகவும் போராடி வருகின்றன. எனவே பேச்சுவார்த்தை மறைமுக யுத்தத்தினை மேற்கொள்ளும் இந்நாடுகளுக்கிடையேயே மேற்கொள்ளப்பட வேண்டும். சிரியாவில் நிகழும் இந்த யுத்தத்தை நிறுத்துவதற்காக சர்வதேச நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் முனிச் நகரில் கூடியிருந்த போதிலும், இம்மாதம் 25ஆம் திகதி வரை இப்பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சிரிய மக்கள் மிகவும் ஆபத்தினை எதிர்நோக்கியிருப்பதாக சர்வதேச தரவுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

1.9 மில்லியன் சிரிய மக்கள் காயமடைந்தவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களுக்குத் தேவையான சுகாதார, மருத்துவ வசதிகள் குறைவாகவே இருக்கின்றன. 2010ஆம் ஆண்டு வரை சிரிய மக்களின் ஆயுட்காலம் 70 வருடங்களாக இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இறுதியில் அது 55.4 வருடங்களாக குறைந்திருக்கிறது. மனிதனே தனது ஆயுட்காலத்தை மோசமான பழக்கவழக்கத்தால் குறைத்துக் கொள்ளும் நிலையிருப்பினும், யுத்தத்தால் ஆயுள் குறைப்பு சிரியாவில் மட்டுமே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சிரியாவில் 225 பில்லியன் அ. டொலர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அன்றாட தேவைகளுக்கே சிரிய மக்கள் போராட வேண்டிய சூழல் இருக்கின்ற நிலையில் இந்த பொருளாதார இழப்பை இவர்களால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும். எனவே உடனடி பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச உதவிகளே சிரியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கின்றன. ஐ.நா. கணிப்பின் படி, 7.7 பில்லியன் அ.டொலர்கள் பாதிக்கப்பட்ட  சிரியர்களுக்கான அவசரத் தேவையாக இருக்கின்றன. 6.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதுடன் 23 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளைத் தேடி பிற நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 4.7 மில்லியன் சிரிய மக்கள் அகதிகளாக பதியப்படுவார்களென ஐ.நா. தெரிவித்துள்ளதுடன் இது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ருவாண்டா இனப்படுகொலையின் போது வெளியேறிய மக்களை விடவும் மோசமான நிலையாகுமென தெரிவித்திருக்கிறது.

இளவயது அகதிகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான பாடசாலைகள் போதிய இடவசதியின்மையினால், இரு வேளைகளில் சிறுவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. ஆனால், அதுவும் சாத்தியமானதாக இல்லை. அதிக சிறுவர்களை உள்வாங்கக்கூடிய இடவசதிகள் இல்லை. பெரும்பாலான குடும்பங்கள் தமது குழந்தைகளை பாடசாலையில் அனுமதிப்பதற்கு போக்குவரத்து சிக்கலை எதிர்நோக்குகின்றன.

சிரியாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகமான யுத்த குற்றங்களை இழைப்பதாகவே இருக்கின்றன. அண்மையில் சிரியாவின் வடக்கு பகுதியில் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதல்கள் தெளிவான யுத்த குற்றமாக இருப்பதாக துருக்கி மற்றும் பிரான்ஸ் என்பன குறிப்பிட்டுள்ளன. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி நோயாளர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ வசதிகள் என்பவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. இங்கு போர் புரிபவர்கள் அடைக்கலம் புகுந்தாலும் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்ற விதியினையும் மீறி யுத்த குற்றம் இழைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானதாகும்.

எனவே சிரிய மக்களின் இந்த ஆபத்தான வாழ்க்கை பயணத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய தேவை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டிய தேவை சிரியாவில் தாக்குதல மேற்கொள்ளும் கூட்டணி நாடுகளுக்கு உண்டு. அவ்வாறு தடுக்க முடியாத பட்சத்தில் சிரியா மீட்க முடியாத பள்ளத்தில் வீழ்ந்து விடும்.

சிரியா: வன்முறையின் எழுச்சி 
1.வன்முறையின் தோற்றம் 
2011, மார்ச் மாதம் தெற்கு நகரமான தாராவில் சில இளைஞர்கள் பாடசாலை சுவர்களில் ஜனநாயகத்திற்கு ஆதரவான சுலோகங்களை எழுதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இதனால், ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றன. இவற்றை தடுக்க அரசு பாதுகாப்பு படையினரை பயன்படுத்தியது. இதனால் எதிரணியினர் உள்ளூரிலேயே ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினர்.

2. உள்நாட்டு யுத்தம்
வன்முறையின் உச்சத்தில் பாதுகாப்பு படைகளை எதிர்த்து பயிற்சிப்பெற்ற தீவிரவாதிகள் களமிறங்கினர். இதனால் 2012ஆம் ஆண்டு தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலப்போ நகரங்கள் கைப்பற்றப்பட்டன. 2013, ஜூன் 90,000 மக்கள் வன்முறையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்தது. தற்பாது சுன்னி-ஷியா யுத்தமாக இது மாறியுள்ளதுடன் ஜிகாதிகளின் தோற்றம் இஸ்லாமிய அரசையும் உருவாக்கியது.

3. யுத்த குற்றங்கள் 
ஐ.நா. விசாரணைஆணைக்குழுவினால் சிரியாவில் யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொலை, சித்திரவதை, வல்லுறவு மற்றும் கட்டாய வெளியேற்றம் என்பன இடம்பெற்றன. அத்தோடு பொது மக்களுக்கான உணவு, நீர், சுகாதார சேவைகள் என்பவற்றை தடுத்து யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு பொதுமக்கள் நிறைந்த பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் அதிகமானோர்  உயிரிழந்ததுடன் பரல் குண்டுகளும் உபயோகிக்கப்பட்டன. இஸிஸ் தீவிரவாதிகளால் மக்களுக்கும் படையினருக்கும் எதிராக மிகக்கொடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியது.

4. இரசாயன ஆயுததாக்குதல்

2013,  ஆகஸ்ட் டமாஸ்கஸ்ஸில் அதிகமானோர் விமான தாக்குதல்களின் மூலம் கொல்லப்பட்டிருந்தனர். இது சிரிய அரச படைகளினாலும் எதிர் படையினராலும் மட்டுமே  மேற்கொள்ளப்பட்டிருக்க முடியுமென  தெரிவிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட  விசாரணையில்  குளோரின் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இஸிஸ் தீவிரவாதிகள் தமது சொந்த தயாரிப்பான சல்பர் குண்டுகளை பயன்படுத்தியதால் 2015 இல் ஒரு குழந்தை கொல்லப்பட்டது.

5. மனிதாபிமான நெருக்கடி

சிரிய யுத்தத்தில் 4.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர். இவர்கள் அயல் நாடுகளான லெபனான், ஜோர்தான் மற்றும் துருக்கியிலும் 10 வீதமான சிரிய அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் கோரியுள்ளனர். 13.5 மில்லியன் மக்களுக்கு 3.2  அ.டொலர்  தேவைப்படுவதாகவும் இதில் 6 மில்லியன் சிறுவர்கள்  உள்ளடங்குவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. சனத்தொகையில் 70 வீதமானோர்  குடிநீரின்றியும்  மூவரில் ஒருவர் உணவில்லாமலும் ,  2 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை கல்வியை விட்டு வெளியேறியவர்களாகவும் இருக்கின்றனர்.

6. தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகளின் எழுச்சி
இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை இஸ்லாமியரும் ஜிகாதிகளும் இணைந்து சிரியா மற்றும் ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளைக் கொண்டு இஸ்லாமிய அரசை நிறுவினர். ஜூன் 2014இல் கலிபாத் தோற்றம் பெற்றது.  அதிகமான வெளிநாட்டு துருப்புகளும் சிரிய யுத்தத்தில் பங்குபற்றியுள்ளனர். தற்போது தீவிரவாதிகளுக்கும் அல்கொய்தா ஜிகாரிகளுக்கும் இடையிலும் அரச படைக்கும் குர்திஸ்களுக்குமிடையிலும் போர் இடம்பெற்று வருகிறது. செப்டெம்பர் 2014 முதல் அமெரிக்க கூட்டணி சார்பாக சிரியாவில் வான்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜனாதிபதி அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த வருடம் முதல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

7. மறைமுக யுத்தம் 
மீண்டுமொரு அரபு வசந்தத்தை ஏற்படுத்துவதற்காக பிராந்திய பலமும் உலக பலமும் இணைந்து யுத்தம் மேற்கொள்கின்றன. ஈரானும், ரஷ்யாவும் அல்- பஷாத்துக்கு ஆதரவாக செயற்படுகின்றன. தெஹரான் பல பில்லியன்களையும் ஆயுதங்கள், இராணுவ ஆலோசனைகளையும் சிரியாவுக்கு அனுப்பியுள்ளது. அதேபோல் 2013 இல் இருந்து ஹிஸ்புல்லாவின் ஷியா ஆதரவும் அசாத்துக்கு உண்டு. அத்தோடு சுன்னி சார்ப்பு எதிரணியினருக்கு( அசாத்துக்கு எதிரான) சர்வதேச கூட்டணி ஆதரவு வழங்குகிறது. துருக்கி, சவூதி, கட்டார், ஜோர்தான், மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா என்பன இதில் உள்ளடங்கும். இந்நாடுகள் ஏற்கனவே ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் மோதல் நிலையை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

8. சமாதான முன்னெடுப்பு
சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு பல  ஆண்டுகாலமாக சர்வதேசம் முயற்சித்து வருகிறது. அத்தோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை 2012 இல் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தையும் கொண்டுவந்தது. 2014 இல் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் இரண்டே சுற்றில் முறிந்து போனது. தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மற்றம் எதிர்தரப்பு படைகள் போர் நிறுத்தம் தொடர்பில் ஜனவரி 2016 இல் ஜெனீவாவில் பேச்சுக்களை மேற்கொண்டன. இதன் அடுத்த கட்ட நடவடிக்கை இம்மாதம் 25 இல் முனிச் நகரில் மேற்கொள்ளப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக