கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

உயிர் பறிக்கும் பனிச்சிகரம்

உலகின் மிகவும் உயரமானதும், ஆபத்தானதுமான இராணுவ படைத்தளத்தை
இந்தியா கொண்டிருக்கிறது. சியாச்சின் பனிச்சிகரத்தில் அமைந்துள்ள இந்த படைத்தளமானது இந்தியா, பாகிஸ்தான் எல்லை விவகாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். உலகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் இராணுவத்தினர் இங்கு கடமைப் புரிகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை சியாச்சின் பனிச்சிகரத்தில் ஏற்பட்ட பனிப்பாறைச்சரிவில் சிக்கி இதுவரையும் 10 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 6 நாட்களாக பனியில் புதைந்திருந்த இராணுவ வீரரும்  உயிரிந்திருக்கிறார்.
சியாச்சின் பனிச்சிகரத்தில் இவ்வாறான உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்வதுண்டு. இருப்பினும் இங்கிருந்து இதுவரையும் பாதுகாப்பு படைகள் வாபஸ் பெறப்படவில்லை. பாகிஸ்தான், இந்தியாவிற்கிடையே இன்றுவரையும் தீராத எல்லைப் பிரச்சினையும், தீவிரவாத ஊடுருவல்களும் இதுவரையும் தீர்க்கப்படவில்லை. இதனால் இந்தியா தமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதால் இந்த சியாச்சின் பனிச்சிகர பாதுகாப்பு தேவையான ஒன்றாக இருக்கின்றது. 1984 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் இங்கு தமது படைப்பரிவை நிறுத்தியுள்ளன. 6000 மீற்றர் (20,000 அடி) உயரத்தில் நிலைக்கொண்டுள்ள இருநாட்டு படைகளும் காலநிலை, நோய் மற்றும் பனிச்சரிவு என்பவற்றினால் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

சியாச்சின் பகுதிக்கு ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒருமுறை புதிய படையினர் அனுப்பப்படுகின்றனர். இவர்கள் செல்கின்ற அந்தத் தருணம் மிகவும் வலிமையானது. இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை நிகழ்வு நடைபெறும். காரணம், 3 வருடங்களுக்கு பின்பு இவர்களில் ஒரு சிலரே உயிருடன் திரும்புவர். இந்த உண்மை இவர்களுக்கும் தெரியும். 1984ஆம் ஆண்டு முதல் இதுவரையும் 8000 இற்கு அதிகமான படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். பனிமலைசரிவு, நிலச்சரிவு, உறைபனியால் விறைத்தல், காய்ச்சல் மற்றும் இதய நோய் என்பவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டு 140 பாகிஸ்தான் படையினர், கயாரி படைத்தளத்தில் நிலவிய மோசமான காலநிலையால் உயிரிழந்தனர். இதுவரையும் 3000 படையினர் இவ்வாறான மோசமான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இங்கு நிமிடத்திற்கு 70 டிகிரி செல்சியஸில் குளிர் காற்றும் மணித்தியாலத்துக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் பனிப்புயலும் வீசும். இவ்வாறு மோசமான சூழ்நிலையிலும் இருநாட்டு படைவீரர்களும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக 10 நடைமுறைகள் இந்திய படைவீரர்களுக்கு தடையாக அமைகின்றன.

1. சில வேளைகளில் இந்திய படைவீரர்கள், 6 மணி நேரத்திற்கு எஸ்கிமோவர் குடிசைகள் போல் பைபர் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட  குடிசையில் வசிக்க வேண்டிய நிலையிருக்கும். இது அவ்வளவு பெரிதாகவும் இருக்காது. இதனாலேயே தமது உடல் வெப்பநிலையை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சுடுநீர் கூட நீண்ட நேரம் சூடாக இருப்பதில்லை.

2. இங்கு வெப்பநிலையானது -50 பாகை செல்ஸியசுக்கு குறைவாகவே இருக்கும். சில நொடிகளில் கைகள் உறைந்து விடும். எந்தவொரு ஆயுதங்களையும் கையால் சுமக்கமுடியாது. சிலவேளைகளில் விரல்கள் செயலிழந்து போகும். காது, கண் கோளாறு, ஒட்சிசன் குறைவால் நினைவிழப்பு கூட ஏற்படும்.

3. பேசுவதில் சிரமம், சுவாசப்பிரச்சினை, தூக்கமின்மை, மனச்சோர்வு போன்ற பொதுப்பிரச்சினைகளை குளிர் காற்றினால் படைவீரர்கள் எதிர்கொள்வர்.

4. சியாச்சின் பகுதிகளில் துரித உணவுகளை காணவே முடியாது. பழங்கள் உறைந்து கிரிக்கட் கடினப்பந்து போல் இருக்கும். உருளைக்கிழங்கை சுத்தியலால் உடைக்க வேண்டும். இந்திய தயாரிப்பான சீத்தா ஹெலிகொப்டர் மூலமே இவர்களுக்கான உணவு வழங்கப்படும். காலநிலை சீரில்லாவிடின் அதுவும் கிடைக்காது.

5. மிகவும் கொடிய குளிர் காலநிலை நிலவுவதால் படைவீரர்கள் மாதத்திற்கொருமுறையே குளிக்க முடியும். குடிப்பதற்கு வழங்கும் நீரையே கழுவவும் பயன்படுத்த வேண்டும். 14 ஜோடி காலுறைகள் 90 நாள் வேலைக்காக வழங்கப்படும்.

6. 18,000 அடி உயரத்தில் ஆயுதங்கள் உறைந்த நிலையில் இருப்பதால் செயற்படுத்துவது கடினமாகும். இதனால், சுடுநீரில் இவற்றை ஊறவைத்தே
பயன்படுத்த வேண்டும். இதனால் உடனடி சுடுநீர் பயன்பாடு இருக்க வேண்டும்.

7. இந்திய இராணுவம் உலகில் மிகவும் உயரமான ஹெலிகொப்டர் இறங்கு தளத்தை சியாச்சினில் உருவாகியுள்ளது. இப்பகுதி சோனம் என அழைக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து 21,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தளத்தை பயன்படுத்திய பின் எடுத்து செல்ல முடியும்.

8. வருட முழுவதும் படைவீரர்கள் 35 அடிவரை பனிப்பொழிவை எதிர்கொள்ள வேண்டும். படைவீரர்களுக்கு பிராந்தியத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது மட்டுமே கடமையல்ல. இலகு இயந்திரங்கள் மூலம் பனிப்பொழிவையும் அகற்ற வேண்டும்.

9. அரை மாதங்களுக்கு மேல் பனிப்புயல் வீசுவதுடன் சுவாசிப்பதற்கான ஒக்சிசன் 10 வீதமாக குறைவடையும். தொழில்முறை மலையேறுபவர்களைப் போல் அல்லாது, 365 நாட்களும் படைவீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும்.

10. சியாச்சின் பகுதியில் இந்திய இராணுவம் அதி உயரத்திலும் பாகிஸ்தான் இராணுவம் தாழ் பகுதியிலும் இருப்பதால் இந்திய படையால் கீழ் இறங்க முடியாது, பாகிஸ்தான் படையால் மேல் செல்ல முடியாது.

பல முயற்சிகளுக்கு பின்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலப்பகுதியில் சியாச்சின் பிரதேசத்தை சமாதான பிரதேசமாக அறிவிக்க எடுத்த முயற்சிகளும் தோல்வி கண்டன. 1999ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்திற்கு பின்பு பெரும் படையெடுப்பொன்று இப்பகுதியில் சாத்தியமற்றதாக இருக்கையில் இப்படியொரு ஆபத்தான பாதுகாப்பு கட்டமைப்பு அவசியம் தானா? என்று இதுவரையும் கேள்வியெழுந்ததில்லை. அத்தோடு ஆபத்தான பகுதியென்றும், இங்கு சென்று மீண்டும் திரும்பி வருவோம் என்ற உறுதிமொழியில்லாத போதும் இவ்ஆபத்தான பகுதிகளில் பணியாற்ற படைவீரர்கள் தயாராகவே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா, தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதுடன் பொருளாதார வல்லரசாகவும் இருக்கின்றது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னும் இரு நாடுகளுக்குமிடையிலான காஷ்மீர் எல்லைப் பிரச்சினை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த காஷ்மீர் பிராந்தியத்திலேயே சியாச்சின் படைமுகாம் அமையப்பெற்றுள்ளது. இரு நாடுகளும் எல்லைப்பிரச்சினையில் அதிகம் தீவிரம் காட்டுகின்றன. அவ்வப்போது இருநாட்டு தாக்குதல்களிலும் உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. இந்தியாவின் தென்பகுதி பனிமலையில் சூழப்பட்டுள்ளதால்
இந்திய இராணுவத்தினருக்கு பனிப்பகுதியிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவேண்டிய தேவையிருக்கிறது.

உலகளவில் மிகவும் ஆபத்தான பகுதியாக சியாச்சின் இருப்பதால், இங்கு இந்தியா தமது ஆளுமையை வெளிப்படுத்த முனைகின்றது. இதன் போது ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு பெரிதாக எதிர்ப்புகள் ஏதுமில்லை. இதனாலேயே சியாச்சின் பகுதி உலக கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக