கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

பாகிஸ்தானில் தலிபான்கள்

பல வருடங்களாகவே பாகிஸ்தான், தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இரையாகி வருகிறது. எந்தவொரு சர்வதேச நிகழ்வுகளும் இடம்பெறாத வகையில் பாகிஸ்தானில் தீவிரவாதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 2014ஆம் ஆண்டு பெஷாவரில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களின் மீதான தாக்குதலையொத்ததான தாக்குதலாகவே கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக தாக்குதல் அமைந்திருக்கிறது. பாகிஸ்தானியர்கள் கல்வியில் மேலோங்குவதை பாகிஸ்தானிய தாலிபான்கள் விரும்புவதில்லை. குறிப்பாக பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவின் நிலை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தலிபான்கள், பாகிஸ்தானியர்களை தீவிரவாதத்தால் மட்டுமே வளர்க்கப்பார்க்கின்றனர். சர்வதேச ஆதரவுகள் தீவிரவாதிகளுக்கு அதிகமிருப்பதால் அவர்களை தடுத்து நிறுத்துவதென்பது முடியாத காரியமாகவிருக்கிறது பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலிருந்து 20 மைல் தொலைவிலுள்ள சார்சடாவில் அமைந்துள்ள பாச்சாகான் பல்கலைக்கழகத்திலேயே அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் 21 பேர் பலியாகியுள்ளதுடன் 50பேர் வரை படுகாயமடைந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் மாணவர்களும் ஆசிரியர்களுமாவர். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதல் மீண்டும் பெஷாவர் தாக்குதலை நினைவுபடுத்தியிருக்கிறது.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கூட தம்முடைய பாதுகாப்பிற்காக கைகளில் ஆயுதமேந்திச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரில் பெஷாவரில் இடம்பெற்ற தாக்குதல்களில் அதிகமான பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டிருந்ததை எவராலும் எளிதில் மறக்க முடியாது. மீண்டும் ஒரு வருடத்துக்குப் பின்பு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாலிபான்களின் பிரசன்னம் பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதிகம் காணப்படுகின்றது. இவர்கள் அதிகம் பிரபலமடைந்த கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

இவர்களுடைய இலக்குகளாக பாடசாலைகள், அரச கட்டிடங்கள் என்பன காணப்படுவதோடு, ஜிகாதிகள் மீது அருவெறுப்பை ஏற்படுத்தவும் அதிகமான சேதங்களை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர். ஆனால், தாலிபான்களின் தாக்குதல்களில் மிகப்பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது பாடசாலை மாணவியான யூசுப் மலாலா 2012ஆம்ஆண்டு தாக்கப்பட்டமையாகும். இன்று அவர் உலகின் சின்னமாக இருக்கிறார். பாகிஸ்தானின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார். இது தலிபான்களுக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வி. சமீபகாலமாக தீவிரவாதிகள் உலகம் முழுவதும் தங்களது இலக்குகளை நிர்ணயித்து வருகின்றனர். இவற்றில் பொது மக்கள் காயப்படுவது அல்லது கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

2014ஆம் ஆண்டு பெஷாவர் தாக்குதலின் பின் எப்படி ஜிகாதிகளின் தாக்குதல்களை முறியடிப்பது என்பது தொடர்பாக மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதன் முதல் கட்டமாக கடந்த வருடங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்த 300 கைதிகள் பாகிஸ்தானில் தூக்கிலிடப்பட்டனர், இராணுவ நீதிமன்றத்தால் புதிய பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தாலிபான் தாக்குதல்களின் செறிவை எதிர்காலத்தில் ஓரளவு குறைக்கும் படியாக இருந்தது. தற்போது நடந்து முடிந்த பல்கலைகழகத் தாக்குதலின் பின் தொலைபேசி நேர்காணலில் பெஷாவர் தாக்குதலுடன் தொடர்புடைய தாலிபான்களின் தளபதியான காலிபா ஒமர் மன்சூர் இத்தாக்குதலுக்கும் உரிமை கோரியிருக்கிறான்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படமொன்றில் 4 தாக்குதல்தாரிகளுடன் அமர்ந்திருப்பது தெரிகிறது. இவர்கள் அனைவரும் இளம் வயதுடையவர்களாவர். இவர்கள் பல்கலைக்கழக தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களாவர். பல்கலைக்கழக அலுவலக தகவல்களின் படி, பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆசிரியர் செய்ட் ஹமிட் ஹுசைன் தீவிரவாதிகளை தான் வைத்திருந்த துப்பாக்கி மூலம் தாக்குவதற்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டதாக தெரிகிறது. வடமேற்கு பாகிஸ்தானில் ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் துப்பாக்கிகளை கொண்டு செல்ல பெஷாவர் தாக்குதலின் பின்பு அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தாலிபான்களின் இலக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானாக மட்டும் இல்லை, இந்தியாவும் இவர்களுடைய தாக்குதல் எல்லையாக இருக்கின்றது. பதான்கோட் விமான தள தாக்குதல் போன்று தினம் தினம் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை இனங்காண முடிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் பொலிஸ் சோதனை சாவடியொன்றில் தாலிபான்களின் தற்கொலை தாக்குதலில் 11 பொது மக்கள் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது தாக்குதல் இடம்பெற்ற பல்கலைக்கழக பகுதியில் 50 பாதுகாவலர்களும் 3000 மாணவர்களும் இருந்துள்ளனர்.

50 பாதுகாவலர்களையும் தாண்டி மாணவர்களை இலக்கு வைத்தாலும் பாதுகாப்பு படையினரின் துரித முயற்சியினால் பாரிய உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இல்லையெனில் பாச்சாகான் பல்கலைக்கழகத்தை நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. 1970-2013ஆம் ஆண்டுவரை 110 நாடுகளில் கல்வித் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 3400 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகமாக பாகிஸ்தானிலேயே இடம்பெறுகின்றன.

பாகிஸ்தானில் 1970-2013வரை கல்வித்தளங்களின் மீது 753 தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 2004-2013ஆம் ஆண்டு மட்டும் 724 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கடுத்ததாக தாய்லாந்து (213), ஆப்கானிஸ்தான் (205), மற்றும் ஈராக் (184), இந்தியா (143), என்ற அடிப்படையில் கல்வித்தளங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ரஷ்யா, ஈராக், நைஜீரியா ஆகிய நாடுகளில் இவ்வாறு ஏற்படுத்தப்படும் தாக்குதல்களில் கொல்லப்படுவர்களின் தொகையை விட பாகிஸ்தானில் அதிகம் இடம்பெறுகின்றது. இவ்வாறு பாகிஸ்தானில் பாடசாலைகள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஏனைய கல்வித்தளங்களில் 88 வீதமான தாக்குதல்கள் பதிவாகியிருக்கின்றன. இது உலகளவிலும் (69 வீதம்) பார்க்க அதிகமாகும்.

பாகிஸ்தானின் தெஹ்ரிக்கி தாலிபான் அமைப்பே அதிகமான தாக்குதல்களை முன்னெடுத்திருக்கிறது. பெரும்பாலும் பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களில் அதிகமாக பெண்கள் கல்வி பயிலும் இடங்களே முக்கிய இலக்காகியிருக்கின்றன. எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெண்கள் கல்வியுரிமையை அதிகமாக வெறுப்பவர்களாக இருக்கின்றன. இவர்கள் பெண்கள் மதத்திற்கும் சமூகத்திற்கும் அடிமையாக வாழவேண்டுமென விரும்புகிறார்கள். இளவயது திருமணங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பன இங்கே அதிகமாக இருக்கின்றனர். எனவே, கல்வியுரிமை மக்களுக்கும் கிடைக்க தடையாகவிருக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நிச்சயம் பதிலடி கொடுக்கப்பட வேண்டியதே.

20 ஜனவரி 2016: பாச்சாகான் பல்கலைக்கழக தாக்குதலில் 21 பேர் பலி.
13 டிசம்பர் 25: குராம் பகுதியில் துணிக்கடையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 24 பேர் பலி.
18 செப்டெம்பர் 2015: பெஷாவர் விமானத்தளத்தில் தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் 29 பேர் பலி.
13 மே 2015: கராச்சியில் ஷியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 45 பேர் பலி.
13 பெப்ரவரி 2015: பெஷாவரில் ஷியா பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் பலி.
30 ஜனவரி 2015: சிந்த் மாகாணத்தில் ஷியா பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 40 பேர் பலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக