கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

இந்தோனேஷியாவில் ISIS

மத்திய கிழக்கு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கிவரும் இஸிஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் சர்வதேச நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 16ஆம் திகதி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் இஸில் மீதான அச்சத்தை மேலும் விரைவுபடுத்தியிருக்கிறது. மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஷரின்ஹா பல்பொருள் அங்காடி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் 5 தாக்குதல்தாரிகளும் உள்ளடங்குவர். ஒரு கனடியரும் இரு இந்தோனேஷியரும் இத்தாக்குதலில் பலியாகியுள்ளதுடன் 23 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலானது வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் ஐ.நா. அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது.
6 துப்பாக்கிதாரிகள் மோட்டார் வாகனத்தில் துப்பாக்கிகளுடன் வருகை தந்து சனநெரிசல் மிக்க பகுதிகளில் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் சில வெடி பொருட்களையும் அவர்கள் வைத்திருந்தனர். இத்தாக்குதலானது கடந்த நவம்பர் 13ஆம் திகதி பாரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஞாபகமூட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தோனேஷிய பொலிஸார் பிரதான சூத்திரதாரியாக பஹ்ருன் நெய்ம் என்பவரை அடையாளப்படுத்தியிருக்கின்றனர். நெய்ம் 2014ஆம் ஆண்டுக்கு பின் இந்தோனேஷியாவிலிருந்து சென்று சிரியாவில் இஸிஸுடன் இணைந்தவராவார்.

சிரியாவின் ராக்கா நகரிலிருந்து மீண்டு தமது தாயகமான இந்தோனேஷியாவில் இத்தாக்குதலை அவர் மேற்கொண்டிருக்கிறார். நெய்ம் தனது வலைத்தளத்தில் ‘பாரிஸ் தாக்குதலிலிருந்தான பாடம்’என குறிப்பிட்டிருக்கிறார். இதனால் இந்தோனேஷியா பாரிஸ் தாக்குதல்களிலிருந்து சில பாடங்களை கற்க வேண்டிய நிலை இருக்கிறது. அண்ணளவாக 500-600 வரையான இந்தோனேஷியர்கள் சிரிய தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இந்தோனேஷியா 200 மில்லியன் சுன்னி முஸ்லிம்கள் என்ற இலக்கை நெருங்கி வருகிறது. அண்மைய சில மாதங்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னைய வருடங்களில் குர்துஸ்களுக்கு எதிரான தாக்குதல்களில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை வான் தாக்குதல்களின் மூலம் ஏற்படுத்தப்பட்டவையாகும்.

சிரியாவை தளமாக கொண்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்த இரு கொமண்டர்களான பஹ்ரும் ஷியா மற்றும் அபு ஜன்தல் ஆகியோரே இந்தோனேஷிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருக்கின்றனர். இவர்களை பொருத்தவரையில் ஜகார்த்தாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது குறிப்பிடும் படியான வெற்றியினை அவர்களுக்கு தந்திருக்கவில்லை. பாரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 130 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். அது மட்டுமல்லாது ஏனைய 7 தாக்குதல்களில் 368 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், ஜகார்த்தா தாக்குதல்களில் 5 ஜிகாதிகளும் 3 பொது மக்களுமே கொல்லப்பட்டிருந்தனர். இதனால் இவர்களுடைய திட்டம் தற்போதைக்கு முழுமை பெறவில்லை என்றே கருத வேண்டும்.

ஜிகாதிகள் திட்டமிட்ட இத்தாக்குதலானது நகைப்புக்குரியதாகவே இருக்கின்றது. தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தம்ரின் வீதியானது அதிகளவு நடமாட்டம் நிறைந்த பகுதியாகும். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அது வெறுமையாகவே இருந்தது. ஆனால், தரித்திருந்த பெரும்பாலான வாகனங்களுக்கு சேதமேற்பட்டிருந்தது. தாக்குதல்தாரிகள் சிறு குண்டுகளையும் இரண்டு துப்பாக்கிகளை மாத்திரமே பயன்படுத்தியிருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினரால் வெகுவாக தாக்குதலை முறியடிக்கக் கூடியதாகவிருந்தது. ஜகார்த்தா உண்மையில் சனசெறிவுமிக்க இடமாகும். 10 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கின்றனர். எனவே, தாக்குதல் திட்டம் இஸிஸ் தீவிரவாதிகளுக்கு சற்று சறுக்களை  தந்திருந்தாலும் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் முரண்பாட்டு நிலைமையில் கடந்த இரு வருடங்களாக இந்தோனேஷியாவும் ஈடுபட்டுள்ளது. இதுவரையும் மேற்கொண்ட தாக்குதல்களில் 100இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலே முதலாவது மிகப்பெரிய தாக்குதலாகும். ஜமா இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களில் 7 பொது மக்களும் 2 தற்கொலை தாரிகளும் கொல்லப்பட்டனர். அல்கொய்தா சார்பு குழுவான ஜமா இஸ்லாமிகள் இந்தோனேஷியா, மலேஷியா, தென் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அரசுக்கு கீழாக இயங்கி வருகின்றனர். 2002ஆம் ஆண்டு பாலி குண்டுத்தாக்குதலில் 200 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். இதனால் 2003ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷிய சட்டசபை புதிய சட்டதிருத்தங்களை மேற்கொண்டிருந்தது. இந்தோனேஷிய பொலிஸ் பேச்சாளர், 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு 50 இந்தோனேஷியர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய அரசுக்காக சிரியாவுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் இந்தோனேஷிய பொலிஸார் 12 பேரை கைது செய்திருக்கின்றனர். இவர்கள் இந்தோனேஷிய அரசுக்கு எதிராக செயற்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஆனால், இத்தாக்குதல் திட்டங்கள் இத்தோடு முடியப்போவதில்லை. இஸ்லாமிய அரசில் இணைந்துள்ள சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களின் சொந்த நாடுகளிலெல்லாம் இத்தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகளை கொண்டிருந்தாலும் இதுவரையும் சிரியாவுக்கு செல்லும் எந்தவொரு வெளிநாட்டவரையும் சம்பந்தப்பட்ட நாடுகளால் தடுத்து நிறுத்த முடியாமலிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் உள்நாட்டிலேயே இஸிஸ் தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக வாழும் சூழலும் காணப்படுகிறது.

இலங்கையிலிருந்தும் கூட 36 பேர் இஸிஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருப்பதாக அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டிருந்தார். இதனால் இலங்கையிலும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழாமலில்லை. குறிப்பாக பாரிஸ் மற்றும் ஜகார்த்தா தாக்குல்களைப் போன்று இலங்கையிலும் இவ்வாறான நிலைமைகள் தோன்றுமா என்பதில் சந்தேகம் எழவே செய்கிறது. கொழும்பு போன்ற சனநெரிசல் மிக்க பகுதிகளில் இவ்வாறானதொரு துப்பாக்கிச் சூடு அல்லது குண்டு வெடிப்புகள் நிகழாது என்பதற்கு எந்தவொரு உறுதிமொழியும் இல்லை. இலங்கைக்கு தற்கொலைத் தாக்குதல்கள் ஒன்றும் புதிதில்லை என்றாலும் அதனால் ஏற்படும இழப்புக்கள் சகிக்க முடியாதவை. எனவே, சர்வதேச ரீதியாக தாக்குல்களை மேற்கொள்ள முனையும் இஸிஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை முடக்க உலக நாடுகள் நிச்சயம் கடுமையாக போராட வேண்டிய சூழல் எதிர்காலத்தில் தோன்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக