கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

இஸ்ரேல்- பாலஸ்தீனம்

யுத்தம் மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி. ஆனால் வல்லரசுகள் எதிரிகளையே இனத்தை அழிக்க பயன்படுத்துகின்றன. உலகளவில் தீவிரவாத தாக்குதல்களைவிடவும் யுத்தம் என்ற பெயரினால் ஏற்படும் கொடுமைகள் அதிகமாகும். எனவே, யுத்தம் ஒழிக்கப்படவேண்டும். ஆனால் அவை சாத்தியமில்லை. அவ்வாறே இஸ்ரேல்-பாலஸ்தீன வன்முறைகள் இருக்கின்றன. இஸ்ரேல் யூதர்களின் நிலம்; பாலஸ்தீனம் பாவிகளின் நிழல் என்பதுபோல இருக்கிறது இஸ்ரேலின் பிடிவாதம். பாலஸ்தீனத்தை கறையான் போல் அரித்து இஸ்ரேல் உருவானது. இவற்றில் அமெரிக்க கறையானின் பங்கு அதிகம். இஸ்ரேலின் சொந்தம் அமெரிக்கா மட்டுமே, உலகின் எதிரியும் அதுவே.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அவ்வப்போது மீறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜெருசலேம் கொலைகளினால் நிரம்பி வழிகிறது. 2014 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு மீண்டும் ஜெருசேலம் புனித நகரம் இருநாடுகளுக்கான பகடைக்காயாக மாற்றப்பட்டிருக்கிறது. இதை உலக நாடுகள் இன்னும் கணக்கிலெடுக்கவில்லை. அமெரிக்காவை மீறி யார் செயற்படுவது. இஸ்ரேல், அமெரிக்காவின் நிழல் அமெரிக்கா, அரபுகளின் எதிரி. பின் எப்படி இஸ்ரேல்- பாலஸ்தீன சமாதானம் சாத்தியமாகும். ஜெருசலேமில் அமைந்துள்ள பாலஸ்தீனர்களின் புனித தலமான அல்-அஸ்கா பள்ளிவாசலில் யூதர்களின் அத்துமீறலைத் தொடர்ந்து மீண்டும் இஸ்ரேல்- பாலஸ்தீன வன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமீபகால வீதி வன்முறைகளில் 41 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, ஏழு இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மீண்டும் இருநாடுகளையும் 2014 ஆம் ஆண்டு போன்ற இருண்ட யுகத்துக்குள் அழைத்துச் செல்லுமா என்பது போன்ற அச்ச உணர்வை தோற்றுவித்திருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையில் இழுபறியுடன் நீடித்த அமைதிப்பேச்சுவார்த்தை 2014 ஆம் ஆண்டு மேற்குகரை ஆக்கிரமிப்பு மற்றும் கிழக்கு ஜெருசலேமில் யூதக் குடியேற்றங்கள் காரணமாக முறிவடைந்திருந்தது.

இதன்போது பாலஸ்தீனம் தனிநாடொன்றை உருவாக்க அழுத்தம் கொடுத்துவந்த நிலையில் பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் காஸாவின் இஸ்லாமிய போராட்டக் குழுவான ஹமாஸுடன் ஐக்கியத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையும் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது வன்முறையை தொடர்வதற்கு காரணமாகியது. இறுதியாக கடந்தாண்டு இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையில் நடந்த மோதலில் காஸா முற்றாக அழிக்கப்பட்டதோடு 2100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் சிறுவர்கள் மற்றும் அதிகமான பொதுமக்களும் உள்ளடங்குவர்.

இஸ்ரேல் தரப்பில் 73பேர் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர், இராணுவத்தினராக இருந்திருந்தனர். பிரித்தானியரின் ஆட்சி காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற இருநாடுகளுக்குமான பிரச்சினையில் இதுவரையும் நிரந்தரத் தீர்வினை எட்டுவதற்கு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் முன்வரவில்லை. ஆனால் ஜெர்மனியில் ஹிட்லரால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யூதர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கை வலுக்கவே 1947  ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு 55 வீதமான பரப்பை யூதர்களுக்காகவும் 44 வீதமான பரப்பை பாலஸ்தீனர்களுக்கும் 1 வீத பரப்பான ஜெருசலேமை சர்வதேச கண்காணிப்பில் இருக்கும்படியும் பிரித்து கொடுத்தது.  ஆனால் இருநாடுகளும் இன்று ஜெருசலேமை தலைநகராக பிரகடனப்படுத்தவே விரும்புகின்றன. தற்போதும் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமே இருக்கின்றது.

ஹமாஸ் இயக்கம் ஈரானின் நிதியுதவியில்-- இயங்கி வருவதாகவே கூறப்படுகிறது. இதனாலேயே அமெரிக்காவின் அணுப்பிடியில் ஈரான் சிக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவால் மறைமுகமாக எத்தனையோ தீவிரவாத இயக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தெரிந்தே உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இஸ்ரேல் இருக்கின்றது. உலகில் மிகவும் சிக்கலான பிரச்சினையாக இனங்காணப்படுவது இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரமாகும். இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவே தன்னாட்சியுடைய இருவேறுநாடுகளை உருவாக்கும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

பெரும்பாலான இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் இத்தீர்வுத் திட்டத்தை பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்றனர். பிற பாலஸ்தீனர்கள் மேற்குகரையையும், காஸாவினையும் தங்களுடைய எதிர்கால நாடாக கருதுகின்றனர். இதற்கு பெரும்பாலான இஸ்ரேலியர்களும் உடன்படுகின்றனர். கல்வியியலாளர்களின் கருத்துப்படி ஜெருசலேம், மேற்குகரை, காஸா சமஉரிமையுடையதான இரட்டைக் குடியுரிமைக் கொண்ட ஒரு நாட்டின் பகுதிகளாக அமைவதை வரவேற்கின்றனர். இருப்பினும் சகல தீர்வுகள் குறித்தும் கருத்துவேறுபாடு காணப்படுகின்றது. தற்போது காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டிலும் ஜெருசலேம் இருநாடுகளின் உரிமைக் கோரலாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தின் முதல் வெற்றி

தனிநாடு என்ற கோரிக்கையில் ஐ.நா. சபையின் அங்கீகாரத்துக்காக கடந்த 20 ஆண்டுகளாக பாலஸ்தீனம் போராடி வருகின்றது. 1964 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஐ.நா. சபையின் கண்காணிப்பு நாடாக செயல்பட்டுவந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்துக்கு அமர்வோர் நிலையிலிருந்து உறுப்பினர் நிலையில்லா, பார்வையாளர் நாடு எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் கைகூடி வருவதாகவே தெரிகிறது.

இந்நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் உறுப்பு நாடுகளல்லாத வத்திக்கான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் கொடியினை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் ஏற்றிவைப்பது தொடர்பான தீர்மானம் 193 நாடுகளின் வாக்களிப்புடன் இடம்பெற்றிருந்தது. இருநாடுகளின் கொடிகளை ஏற்ற 119 நாடுகள் ஆதரவு தெரிவித்ததுடன், இஸ்ரேல், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட 8 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. வளாகத்தில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸால் கொடி ஏற்றி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாலஸ்தீனம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு வழியேற்பட்டிருப்பது தொடர்பில் சர்வதேச நாடுகளால் எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலால் ஜெருசலேமில் பாலஸ்தீனர்களுக்கெதிராக “கத்தி வன்முறைகள்’ மேற்கொள்ளப்படுகிறன. இதுவரையும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளினால் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் சிறுவர்கள் மற்றும் ஒரு பள்ளி மாணவியும் அடங்குவர்.

காஸா வன்முறைகள்

1967 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காஸா பகுதியினை இஸ்ரேல் கைப்பற்றியது முதல் இன்றுவரையும் இருநாடுகளுக்குமான பிரச்சினை ஓய்ந்திருக்கவில்லை. ஆனால் 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து வாபஸ் பெற்றிருந்தாலும் இஸ்ரேலில் காலத்துக்கு காலம் நடைபெறும் தேர்தலுக்கு பாலஸ்தீனத்தின் மீதான யுத்தமே பிரசார பொருளாக முன்வைக்கப்படுகின்றமையினால் இதுவொரு அரசியல் நாடகமாகவும் இருக்கின்றது.

2008 ஆம் ஆண்டு இஸ்ரேல் துருப்புகள், காஸாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இத்தாக்குதலில் 1300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இதேவேளை 13 இஸ்ரேலிய துருப்புக்களும் கொல்லப்பட்டிருந்தன.

2012 ஆம் ஆண்டு, 167 பாலஸ்தீனர்களும், 6 இஸ்ரேலியர்களும் இஸ்ரேலிய படைநடவடிக்கையில் கொல்லப்பட்டனர். 8 நாட்களுக்குப் பிறகு இருநாட்டு படைகளின் ஒப்புதலோடு தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது.

2014, ஜுலை மாதம் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின்போது 2200பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களின் பெரும்பாலானோர் பாலஸ்தீனர்கள். இச்சம்பவத்தால் 17,000 பேர் இடம்பெயர்ந்திருந்தனர். பின்பு இஸ்ரேல் - ஹமாஸ்க்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வில் 50 நாள் யுத்தம் நிறைவுக்கு வந்தது.

இஸ்ரேல்- ஹமாஸூக்கிடையே 2014 ஜூலை முதல் ஆகஸ்ட் வரை காஸா கரையில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல்கள் காரணமாக 2100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிவித்திருந்தது. 11,000பேர் காயமடைந்திருந்தனர். 22,000 பேர் வீடுகளையும்-, 108,000க்கும் மேற்பட்டோர் குடிநீர் மற்றும் மின்சார வசதியில்லாமல் தவித்திருந்தனர். ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன படைகளால் 1700 மோட்டார் தாக்குதல்களும், 4800ரொக்கட் தாக்குதல்களும் காஸா பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடந்த வருடம் ஜூலை 8 முதல் ஜூலை 17 வரையான காலப்பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் காஸா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களில் 538 சிறுவர்கள் மற்றும் 1563 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்தோடு ஐ.நா. பாடசாலை மீது ஜூலை 24இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30-32 பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் 9 சிறுவர்கள் உள்ளடங்குவர்.

இவ்வாறு இஸ்ரேலால் அதிகளவான உரிமை மீறல்கள் பாலஸ்தீன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் ஐ.நாவில் உறுப்பினரல்லா, பார்வையாளராக செயற்படுவது, இஸ்ரேலுக்கு மிக ஆபத்தாக கருதப்படுகிறது. தற்போது பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் மூலம் பாலஸ்தீனத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக மனித உரிமை வழக்கினை தொடரமுடியும். அவ்வாறு தொடரப்படுமாயின் இஸ்ரேல் ஆபத்தான கட்டத்திற்கு செல்லும். ஆனால் அமெரிக்கா அதனை தடுத்துநிறுத்திவிடும். சர்வதேச தலையீடுகளால் மட்டுமே இப்பிரச்சினையை இலகுவாக அணுகமுடியும். ஆனாலும் அமெரிக்காவை மீறி செயற்பட யாருக்கு துணிவிருக்கிறது?

தற்போதைய நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தை விரும்பவில்லை. இஸ்ரேலின் அரசியலுக்காக பாலஸ்தீனம் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறது. பாலஸ்தீனத்தின் “தனிநாடு’ கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அதன் தலையெழுத்தை இலகுவில் மாற்றிவிடமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக