கடந்த 2015ஆம் ஆண்டு மாத்திரம் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட அகதிகளை ஐரோப்பா உள்வாங்கியிருக்கிறது. ஆனால், அவர்களை ஐரோப்பிய நாட்டு பிரஜைகளாக ஏற்று அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களில் அதிகளவில் தோல்வியே கண்டிருக்கிறது. இவ்வருடமும் கடந்த ஆண்டைப் போலவே அகதிகளின் பெருக்கம் அதிகரித்திருப்பதுடன் அகதிகளுக்கான சட்டங்களை வகுப்பதில் ஐரோப்பிய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அண்மையில் டென்மார்க் அரசு அகதிகளின் செலவீனங்களை சமாளிக்க அகதிகளிடமுள்ள 1300 டொலர் பெறுமதியான பொருட்களை சுவீகரிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது சர்வதேச மட்டத்தில் கண்டனங்களை எழுப்பியதுடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டும் விட்டது.
அண்மையில் அகதிகளின் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டு அவரிடம் கொள்ளையடிக்க முயன்றமை மற்றும் கொலோக்கேன பகுதியில் அரபு மற்றும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த 1000 பேர், பெண்களிடம் கொள்ளை மற்றும் தாக்குதல்கள் மேற்கொண்டமைக்காக கைதுசெய்யப்பட்டிருந்தனர். அத்தோடு புதுவருடப்பிறப்பின்போது பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக 883 பேர் முறையிட்டுள்ளனர். இதில் கொலோக்னே பகுதியில் இடம்பெற்ற 497 சம்பவங்களும் உள்ளடங்கும். இதில் 378 பாலியல் தாக்குதல்களும், 3 துஷ்பிரயோகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அகதிகளை உள்வாங்குவதில் ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள எதிர்மறை நிலைப்பாடுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. அகதிகளுக்கான சர்வதேச ஸ்தாபனத்தின் தகவல்களின் படி கடந்த டிசம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே அகதிகளின் தொகை 1,006,000 என்ற இலக்கை எட்டியிருந்தது. இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறு நாடுகளை மாத்திரம் வந்தடைந்த தொகையாகும். கிரீஸ், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைபிரஸ் நாடுகளே இத்தொகையினை உள்வாங்கியிருந்தன. இத்தொகையில் அதிகமானோர் கடல்வழியான பயணங்கள் மூலம் ஐரோப்பாவை வந்தடைந்திருந்ததுடன் 34,000 வரையானோர் துருக்கிக்கு தரைவழி மூலமாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் இதுவரையும் 54, 518 பேர் கடல் வழியாக ஐரோப்பாவை சென்றடைந்துள்ளனர். சிரியாவில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற உள்நாட்டு போர் நிலைமைகளின் காரணமாக அதிகமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாது ஆப்கானிஸ்தானில் காணப்படும் வன்முறைகள், எரித்திரியாவில் காணப்படும் துஷ்பிரயோகங்கள், கோசோவோவில் காணப்படும் வறுமை நிலை என்பனவும் அதிகமான அகதிகளை உருவாக்கி விடுகின்றன. பிரித்தானியா எதிர்வரும் 5 ஆண்டுகளில் 20,000 சிரிய அகதிகளை உள்வாங்க தீர்மானித்திருக்கிறது. 10,000 சிரிய அகதிகளை உள்வாங்க அமெரிக்கா விருப்பம் கொண்டிருந்த போதும் அமெரிக்காவின் சான்பெர்னார்டினோவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல்கள் என்பன இதை சாத்தியமற்றதாக்கிவிட்டன. எனவே இன்னும் பல வருடங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் நெருக்கடி நிலைத்திருக்கும். ஆனால், அனைவரையும் உள்வாங்கிக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதே உண்மை.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன. இதற்கான முதல் படியினை சுவீடன் மிதித்துள்ளது. ஆனால், இவர்களை மீண்டும் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவது சாத்தியமா? எல்லாவற்றையும் இழந்து, இவர்கள் வரும் வழியில் படகு விபத்தில் உறவுகளையும் இழந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் போது இங்கும் மீதமுள்ளவற்றை இழந்து நிற்கும் இவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்பிவிட்டால் அது மனிதாபிமானமாகுமா? சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுப் போரே இந்நெருக்கடிக்கு முக்கிய காரணமாக இருக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், சிரியாவில் தற்போது பெரும்பாலான வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மீண்டும் அங்கு வளங்கள் நிறுவப்பட்டு மக்களுக்கு ஏற்ற சூழல் உருவாக பல தசாப்தங்கள் கூட போதாது. அவ்வாறெனின் இந்த அகதிகளை என்ன செய்வது? இது போதாதென்று தற்போது அகதிகள் நெருக்கடியில் இதுவரையும் வெளியாகாதிருந்த அதிர்ச்சிகரமான சம்பவமொன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
ஐரோப்பாவிற்கு அகதிகளாக வருகைத்தந்த 10,000 இற்கும் அதிகமான
சிறுவர்களை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாலியல் சுரண்டல்களுக்காவும் அடிமைகளாகவும் சட்டவிரோத கும்பல்களால் கடத்தப்பட்டிருக்கலாமென ஐரோப்பிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
’சேவ் த சில்ரன்’ தகவல்களின் படி கடந்த வருடம் மாத்திரம் ஐரோப்பாவிற்கு 26,000 சிறுவர்கள் தனியே குடும்பங்களல்லாது வருகைத் தந்திருந்ததாக தெரிவித்துள்ளது. மே, 2015 காலப்பகுதியிலேயே 5000 சிறுவர்கள் புகலிடக் கோரிக்கையின் போது காணாமல் போனதையிட்டு இத்தாலி எச்சரிக்கை செய்திருந்தது. பெரும்பாலும் குடும்பங்களில்லாது தனித்து அகதிகளாக வந்தடைந்த சிறுவர்கள், இளம்பராயத்தினரை இலக்கு வைத்து போதைக்கு அடிமைப்படுத்தி பாலியல் தொழிலுக்கும் அடிமைகளாகவும் அல்லது ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தியிருக்கலாமென நம்பப்படுகிறது.
சில இத்தாலிய நிறுவனங்களில் இவ்வாறான சிறுவர்களின் மொழியை வெளிப்படுத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் செயற்படுபவதாகவும், முறையான தொழிற்பயிற்சி பெற்றிராதவர்களாக இச் சிறுவர்கள் இருப்பதாகவும், இதனால் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தினம் இணங்காணப்படாதவர்களாகவும், பாதுகாப்பில்லாமலும் இத்தாலிக்கு வருவதோடு வீதிகளில் காணாமல் போகின்றனர். இவர்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு திட்டங்களையும் இதுவரை ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப்படுத்தவில்லை.பிரித்தானிய அரசாங்கம், தனியாக சிரியா மற்றும் ஏனைய யுத்த வலயங்களில் இருந்து வருகைத்தரும் சிறுவர்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அகதிகள் பயணிக்கும் ஆபத்தான கடற்பயணங்கள் அதிகமான உயிரிழப்புக்களுக்கும் வழிவகுக்கின்றன. அண்மையில் 37 சடலங்களை துருக்கிய கடற்படையினர் மீட்டிருந்தனர். இவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவர். இதற்கு முன்னர் கிரேக்க தீவுகளில் ஏற்பட்ட படகு விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10 சிறுவர்களும் உள்ளடங்குவர். கடந்த 2015 ஆம் ஆண்டு கடல் வழியாக பயணித்து ஐரோப்பாவை வந்தடைந்தவர்களில் 4000 பேர் உயிரிழந்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு முதல் 28 நாட்களில் 244 அகதிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே அகதிகளாக ஐரோப்பாவுக்குள் நுழைபவர்கள் கடலில் மட்டுமல்லாது புகலிடம் கோரும் நாடுகளிலும் கூட அதிகமாக துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர். இவற்றை தடுக்க ஐரோப்பா மேற்கொள்ளப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக