கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

26 பிப்ரவரி, 2016

வானத்தில் மீண்டுமொரு சோகம்

உலக நெருக்கடிகள் வலுவடைந்து வரும் நிலையில் அனர்த்தங்கள், யுத்தங்கள் என்பவற்றால் ஏற்படும் இழப்புக்களும் அதிமாகவிருக்கின்றன. சிரிய யுத்தம், ஆசிய- பசுபிக் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் எனபன அதிகளவு மக்களை காவுகொண்டிருக்கும் நிலையில் அண்மையில் ரஷ்ய விமான விபத்தும் பாரிய இழப்புகளை விட்டு சென்றுள்ளது. 224 பேருடன் எகிப்தின் ஷாம் எல் ஷேய்க்கிலிருந்து ரஷ்யாவின் சென்பீற்றர்ஸ் பேர்க் நோக்கிச் சென்ற மெட்ரோ ஜெட் விமானம் 9268 (எயார்பஸ் ஏ321-200) விமானமே எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்தது.இவ்விபத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை தாங்கிய இருவிமானங்கள் ரஷ்யாவை சென்றடைந்திருக்கின்றன.
விமானம் புறப்பட்டு 23 நிமிடங்களில் சினாய் பகுதியில் விபத்தைச்
சந்தித்திருந்தது. விபத்தின் பின்பு விமான நிறுவனம் விபத்து தொடர்பான அறிவித்தலில் இயந்திரகோளாறு அல்லது வெளியாட்களின் சதித்திட்டம் என்பவற்றால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிவித்திருந்தது. ஆனால், இஸிஸ் தீவிரவாதிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவை தொடர்பான உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. ரஷ்யா தற்போது சிரியாவில் இஸிஸ் தீவிரவாதிகளுக்கெதிராக விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் அவற்றுக்கான பழிவாங்கலாக இந்நடவடிக்கை அமைந்திருக்குமா என்ற சந்தேகமே வலுத்து வருகின்றது. ஆனால் விமானி தனது உறவினர்களுடன் உரையாடும்போது விமானத்தில் ஏதோவொரு கோளாறு இருப்பதாக கூறப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி உறவினர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தால், அதனையே விமான கட்டுப்பாட்டு அறையுடனும் மேற்கொண்டிருக்க முடியாதா? தற்போது பெறப்பட்டுள்ள விமானத்தின் கறுப்பு பெட்டியின் மூலமே இவற்றுக்கான தீர்வினை பெறமுடியும். ஆனால், ஆய்வாளர்களின் கருத்துப்படி, வெளிப்புற காரணிகளினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவத் தகவல்களின் மூலம் விமான விபத்திற்கு பின்வரும் காரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன, ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல், இயந்திரம் வெடிக்கச் செய்யப்பட்டிருத்தல், விமான உட்கட்டமைப்பு பிரச்சினை என்பனவாகும். ஆனால் இஸிஸின் உரிமைக் கோரலின்படி, விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கோரப்பட்டாலும் அவற்றுக்கான முறையான ஆதாரங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. ஆனால், விபத்துக்கான காரணம் அறியப்பட்டாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை. ஏலவே ரஷ்யாவால் உக்ரைன் வான்பரப்பில் சென்ற மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பில் இதுவரை விசாரணைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, விமான விபத்துகள் மூலம் மனித இழப்புகள் ஏற்படுவது மாத்திரமே தீர்வாக இருக்கிறது. அதேபோலவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த ரஷ்ய விமான விபத்தில் 217 பயணிகளும் 7சிப்பந்திகளும் உள்ளடங்குவர். இவர்களில் 209 ரஷ்யர்களும் 4 உக்ரைனியர்களும் ஒரு பெலாரஸியனும் மூன்று இனங்காணப்படாத
நபர்களும் பயணித்திருந்தனர். இவ்விபத்தில் அதிகமான குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றனர். பெரும்பாலான உடல்கள் இதுவரை சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 130பேரின் உடல்களை தாங்கிய விமானம் ரஷ்யாவை சென்றடைந்துள்ளதுடன் இரண்டாவது விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை சென்.பீற்றர்ஸ் பேர்க்கை சென்றடைந்திருந்தது.

எகிப்து ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கு கூட்டுவிசாரணை மேற்கொள்ள உறுதியளித்திருக்கிறார். அத்தோடு இவ்விசாரணையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி விசாரணையாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். விமான பாகங்கள் சில பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், விமானத்தின் இயந்திரங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளமையால் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தனது குழுக்களையும் விசாரøணைகளுக்காக எகிப்துக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விமானமானது சினாயின் வடபகுதியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் ஹுஸ்னா நகருக்கருகில் விபத்துக்குள்ளாகியிருந்தது.

சினாய் தீபகற்ப பகுதியானது இஸிஸ் தீவிரவாதிகள் மற்றும் எகிப்து பாதுகாப்பு படைகளின் வசமுள்ளது. இருதுருப்புகளுக்குமிடையிலான முரண்பாடுகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியாயின் போர் வலய வான் பரப்பில் விமானங்கள் பறப்பது பாதுகாப்பானதா? விமானம் எவ்வளவு தாழ்வாக பறக்கமுடியும் என்பது தொடர்பான விவாதங்கள் முளைப்பதில் தவறில்லை. மஹ்ஜூப் விமான நிலையமானது தீவிரவாதிகள் விமானத்தை தாக்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சர் தீவிரவாதிகள் விமானத்தை விமான ஏவுகணைகள் மூலமே தாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

எகிப்து இராணுவ தகவல்களின்படி, தீவிரவாதிகளிடம் 14,000 அடி உயரத்தை தாக்கக்கூடிய உபகரணங்களே உள்ளதாகவும், ஆனால், விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்திருந்த நிலையிலேயே ரடாரிலிருந்து மறைந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு விபத்துக்கள் தொடர்பான மாறுபட்ட கருத்துக்களினால் விசாரணையின் இறுதியிலேயே தீர்வை பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. சர்வதேச விசாரணை நிறுவனங்களான ஆஉஅ(பிரான்ஸ்), ஆஊக்(ஜெர்மனி) மற்றும் அஅஐக்(அயர்லாந்து) என்பன விமான விபத்து விசாரணையில் பங்குகொள்வதற்காக தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.

இந்நாடுகள் இவ்விமான வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் பதிவுகளை மேற்கொண்டுள்ள வகையில் ஆஉஅ ஆனது 2 விசாரணையாளர்களையும்,
6 பிரதிநிதிகளையும் எயார்பஸ்  மூலமாக எகிப்துக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆஊக் ஆனது 4 விசாரணையாளர்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றன. விமான தரவு பதிவுகள் மற்றும் விமானி அறையின் குரல் பதிவுகள் என்பன சீரான நிலையில் இருப்பதால் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. நவம்பர் 1 ஆம் திகதி எகிப்தியர்களின் தேடுதலின் போது 163 உடல்கள் பெறப்பட்டன. அத்தோடு 8 கிலோமீற்றர் தூரத்திலிருந்து சிறுமியின் உடலொன்றும் பெறப்பட்டிருந்தது.

விபத்து இடம் பெற்ற சில மணிநேரங்களிலேயே இஸிஸ் தீவிரவாதிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர். ஆனால், தீர்க்கமான ஆதாரங்கள் எவையும் பெறப்பட்டிருக்கவில்லை. சினாய் மாகாணத்தில் அரச படைகளுக்கும் இஸிஸ் ஆதரவாளர்களுக்குமிடையிலான போர் இடம்பெற்று வருகிறது. ரஷ்யா, சிரியாவில் மேற்கொள்கின்ற வான் தாக்குதலுக்கு எதிராகவே இவ்விமானத்தாக்குதல் இடம்பெற்றதாக இஸிஸ் தீவிரவாதிகள் கூறியிருப்பதால் அவர்கள் மீதான சந்தேகங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன. அத்தோடு விமானத்தின் துணை விமானியின் முன்னாள் மனைவி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய தகவலில், முன்னாள் கணவர் தனது மகளிடம் விமானத்தின் கோளாறு தொடர்பில் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

சினாய் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தினைத் தொடர்ந்து எமிரேட்ஸ், லுக்தன்ஸா, எயார்பிரான்ஸ் ஆகியன சினாய் பிரதேசத்துக்கு மேலாக நமது நாட்டு விமானங்கள் செல்வதை நிறுத்தியுள்ளன. அத்தோடு எயார் அரேபியா, பிளை துபாய், பிரிட்டிஷ் எயார்வேஸ் போன்ற விமான நிறுவனங்களும் தங்களது விமானம் சினாய் பிரதேசத்திற்கு செல்வதை நிறுத்தியுள்ளன. ரஷ்ய விமான விபத்தானது பல்வேறு கேள்விகளை தோற்றுவித்திருப்பதோடு, இஸிஸ் தீவிரவாதிகள் சர்வதேச ரீதியில் முன்னேறி வருவதற்கான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியுள்ளது. சிரியாவில் தோன்றிய கிளர்ச்சிக்குழுக்கள், இன்று சர்வதேச வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும்வகையில் முன்னேறி வருவது உலகின் எதிர்கால பயணத்திற்கு மிகவும் ஆபத்தான விடயமாக இருக்கப்போகின்றது.

அமெரிக்க புலனாய்வுத் தகவல்களின்படி, மெட்ரோ ஜெட் விமானம் 9268 இஸிஸ் தீவிரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்களின் குண்டுத்தாக்குதல்களின் மூலமே நிகழ்த்தப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்கு ரஷ்யா, சிரியாவில் சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு சர்வதேச புலனாய்வு முகவர்களும் இஸிஸ் தீவிரவாதிகளின் தாக்குதலினால் தான் விபத்து இடம்பெற்றது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. விமானம் தாக்கப்பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான ஆதாரங்களுமில்லை.

ஆனால், விமானம் வானில் இரண்டாக பிளவுற்றபின்பே தரையில் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஏ321-200 விமானமானது 56,000 மணி நேர பறப்பு காலத்தையும் 21,000 பயணங்களையும் மேற்கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு கெய்ரோவில் விமானம் தரையிறங்கும் போது முன்பகுதி விபத்துக்குள்ளாகியிருந்தது. அதன்பின்பு 2013 ஆம் ஆண்டு கோளாறு இனங்காணப்பட்டு திருத்தியமைக்கப்பட்டிருந்தது. எனவே, தொழில்நுட்ப கோளாறு விபத்திற்கு காரணமாகாது என்பது அனைவரினதும் கருத்தாகும். அதேபோல தீவிரவாத தாக்குதலே காரணமென சில புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்ப கோளாறு, ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல், எண்ணெய் தாங்கிகள் மற்றும் தீ என ஏனைய காரணங்கள் கூறப்படுகின்றன. கறுப்பு பெட்டி மீட்கப்பட்டாலும் அவை தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், உலகளவில் தீவிரவாத செயற்பாடு காணப்படுமிடங்களில் விமானத்தின் பரப்பு உயரம் மற்றும் தடை என்பன தொடர்பில் அறிவுத்தப்பட்டுள்ளதுடன் இனியொரு சந்தர்ப்பத்தில் தீவிரவாதத்தால் விமானப்பயணங்களுக்கு இருக்கும் ஆபத்துக்களுக்கு தீர்வுகாணுவது சர்வதேச நாடுகளின் கடமையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக