கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

26 பிப்ரவரி, 2016

பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்

ஐ.நா. சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு  பாரிஸில் இம்மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. உலக காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அதிகமான கரிசனைகள் தற்போது எழுந்துள்ள நிலையில் இம்மாநாடு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. பெரும்பாலான உலகத் தலைவர்களின்  பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இம்மாநாட்டில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. இருப்பினும் வருடந்தோறும் இடம்பெறும் இம்மாநாடுகளினால் உலகம் என்ன பயனை கண்டுள்ளது என்பது தொடர்பில் தெளிவுற வேண்டியது அவசியம். காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகம் உணரப்பட்டாலும் இதுவரையும் அவற்றை குறைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
வருடந்தோறும் உலகநாடுகள் கொடுக்கும் உறுதிமொழிகள் செவ்வனே நிறைவேற்றப்படுகின்றனவா? காலநிலை மாற்றம் தொடர்பில் கடந்தவருடம் இடம்பெற்ற மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களுக்கு அமெரிக்கா தலைமை தாங்கியதுடன் சீனாவும் முக்கிய பங்கு வகித்திருந்தது. ஆனால் இன்னும் காபன் வெளியேற்றத்தில் இரு நாடுகளும் முன்னிலையிலேயே உள்ளன. வல்லரசு மற்றும் பணக்கார நாடுகளிலேயே நிரந்தர தீர்வு திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்த முடியாத நிலையில் உலகம் முழுவதும் இம்மாற்றம் எவ்வாறு சாத்தியமாகும்?

உலகில் நாடுகளுக்கிடையில் நிலவும் அரசியல் போட்டிகளும் இவ்வாறான விடயங்களில் தாக்கத்தை செலுத்துகின்றன. விண்வெளியில் நிகழும் மாற்றங்களை இனங்காணக்கூடிய திறமைகளை கொண்டுள்ள நாடுகளினால் ஏன் இதுவரையும் தங்களுடைய  நாடுகளிலேயே காலநிலை மாற்றத்திற்கான தீர்வினை காணமுடியவில்லை. பாரிஸில்  இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களின் எதிரொலியாக இக்காலநிலை மாநாடு நடைபெற்றிருந்தது. உலக நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பில் ஒன்று கூடியிருப்பதானது தீவிரவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக அமைந்திருக்குமென ஒபாமா தனது உரையில் கர்ஜித்திருந்ததையும் காணமுடிந்தது. 150 நாட்டுத் தலைவர்களும், 195 நாடுகளினை பிரதிநிதித்துவப்படுத்தி 40,000  பேரும் பிரான்ஸின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்காக கூடியிருந்தனர்.

கடந்த 4 தசாப்தங்களில் அதிகளவான உலகத் தலைவர்கள்  பிரான்ஸில் கூடியிருப்பது இது முதன்முறையாகும். ஐரோப்பாவில் தற்போது அதிகளவான தீவிரவாத தாக்குதல்களைச் சந்தித்துவரும் நாடாக பிரான்ஸ் இருக்கும் நிலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உலக காலநிலை மாற்றத்திற்காக அனைவரும் ஒன்று கூடியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாக இருக்கின்றது. 1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலக காலநிலை பாதுகாப்புக்கான “கியோட்டோ உடன்படிக்கை முதல் சர்வதேச காலநிலை மாநாடு வரையான சகலதுமே உலக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கரிசனைகளை கொண்டுள்ளன.  ஆனாலும் இன்று உலக நாடுகளில் காணப்படும் தீவிரவாத ஆபத்துகள், போர்ச்சூழல் , எல்லை பயங்கரவாதம், குடியேற்றவாசிகள் பிரச்சினை என்பன ஒருநாட்டின் உட்கட்டமைப்புகளை அதிகளவில் சீர்குலைத்து விடுவதால் பெரும்பாலான நாடுகளால் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் அதிகளவு கரிசனைகளை கொண்டிருக்க முடியவில்லை. உலகில் காலநிலை மாற்றத்திற்கான தீர்வு தனியொரு மனிதனாலோ தனியொரு நாட்டினாலோ சாத்தியமில்லை. முழு உலக நாடுகளுமே இதற்காக பங்காற்ற வேண்டும். 1992 ஆம் ஆண்டு   ஏற்படுத்தப்பட்ட கியோட்டோ உடன்படிக்கையையே ஏற்காத சில நாடுகள் இருக்கின்றபோது எவ்வாறு மாற்றமென்பது சாத்தியமாகும்.

இன்று பாரிஸில் உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்திற்காக கூடியிருக்கிறார்கள். உலக வெப்பநிலையை 2 பாகை செல்சியஸால்   மட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் தற்போது புவியில் காணப்படும்  வெப்ப அதிகரிப்பு எதிர்வரும் நாட்களுக்கும் தொடருமாயின் அது மனிதர்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பாரிஸ் காலநிலை மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

உலகில் தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு, பசி, நோய்த்தாக்கம் என்பனவற்றால் வருடந்தோறும் 5000,000 பேர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் 2030 மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக வருடமொன்றுக்கு 250,000 க்கும்மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்டலாமென உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவற்றில் 38,000 பேர் உயர் வெப்ப அதிகரிப்பாலும் 48,000 பேர் வயிற்றுப் போக்கினாலும், 60,000 பேர் மலேரியாவினாலும் 95,000 பேர் ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் உயிரிழக்கும்  சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குப் பின் வருடமொன்றுக்கு நேரடி சுகாதார  இழப்பாக 2 -4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்படுமெனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பரவிய வெப்ப அலைகளின் மூலம் 70,000 பேர் உயிரிழந்திருப்பதாக  தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சூரிய ஒளியோடு அதிகம் சேர்ந்துவரும் புற ஊதாக் கதிர்களின் மூலம்  தோல் புற்றுநோய் அபாயமும் காணப்படுவதாக பிரான்ஸின் தேசிய சுகாதார மற்றும் மருந்து ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காலநிலை மாற்றமானது இயற்கை அனர்த்தங்களான வெள்ளம், சூறாவளி என்பனவற்றாலும் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்துமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையோடு தொடர்புபட்ட இடர்பாடுகளானது 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டதை காட்டிலும் மூன்று மடங்கு  அதிகமான பாதிப்பு காணப்படுமெனவும் வருடந்தோறும் 60,000 மரணங்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஏற்படுமெனவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் நுளம்புகள் மூலம் ஏற்படுகின்ற தொற்று நோய்களினாலும் அதிகளவான பாதிப்புகள் ஏற்படும். ஏற்கனவே மலேரியாவினால் உலகம் முழுவதும்  வருடமொன்றுக்கு 800,000 பேர்  மரணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. நுளம்புகள் ஏற்கனவே டெங்கு நோயை பரப்புகின்றன.  சில ஆராய்ச்சிகளின் படி 2080 ஆம் ஆண்டளவில் 2 பில்லியனுக்கும்  அதிகமான மக்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய் தாக்கத்தினால் அதிகளவான பாதிப்புகளை எதிர்நோக்கும்  சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை மாற்றமானது உலகம் முழுவதும் வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதால் காட்டுத்தீயின் மூலம் காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமானோர்  நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றனர். உலகில் 300 மில்லியன் மக்கள் இதுவரையும்  ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காலநிலை மாற்றம் பல்வேறு படிநிலைகளில் மனிதர்களுக்கு ஆபத்தை தோற்றுவித்து வருகின்றன. எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காவது புவியினை பாதுகாப்பது அவசியமாகும். தற்போது காலநிலையானது மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அடைமழை காரணமாக வெள்ளம், மண்சரிவு அபாயம் என்பன மக்களை நிம்மதியற்ற வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. இவற்றை சரியான ரீதியில் தீர்க்க வேண்டிய நிலையில் உலக நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஒன்றுகூடியிருக்கின்றன. அதிகம் அபிவிருத்தியடைந்த நாடுகளே காலநிலையை அதிகம் பாதிக்கும் இடங்களாக இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசானது அதிகமானோரை பாதித்துள்ளது. அதிகமாக தொழிற்சாலை புகை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முற்றாக  தடுக்க முடியாது. தடுத்தால் உற்பத்தி பாதிக்கப்படும் ஆதலால் மாற்று வழியை தேட வேண்டியது அவசியம்.

பெரும்பாலும் நாடுகள் வெளிவிடுகின்ற காபனீரொட்சைடின் அளவுகள் அதிகமாகவிருக்கிறது. பின்வரும் நாடுகளின் காபனீரொட்சைட் வெளியேற்றத்தில் இதனை காணலாம். ( ஒரு மனிதனுக்கான தொன்களில்) சீனா - 6.7, அமெரிக்கா - 17.10, ரஷ்யா -12.6, ஜப்பான் -9.3, ஜெர்மனி - 8.9,  இந்தியா - 1.7, கனடா - 14.1, பிரித்தானியா - 7.1 என்றளவில் வாயு வெளியேற்றத்தினை மேற்கொள்கின்றன. இத்தகவலின்படி அதிகமாக செல்வந்த நாடுகளே அதிகமான காபன் வெளியேற்றத்தை மேற்கொள்கின்றன. எனவே அவற்றை குறைப்பதற்கான முயற்சிகளில் பெரும்பங்கு இந்நாடுகளுக்கு உண்டு.

மேலும் காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கும் செல்வந்த நாடுகளுக்கும் தீவிரவாதம் பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் தொழிற்சாலைகளை விட அதிகமாக குண்டுகளினால் நச்சுவாயுக்கள்  அதிகமாக வெளியேற்றப்படுகின்றன. சிரியா, யேமன் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இதனை அதிகம் உணர முடிகின்றது. உலகம் முழுவதும் பசுமை போர்வையை ஏற்படுத்துவதென்பது இந்நாடுகளில் காணப்படும் தீவிரவாத தாக்குதல்களினால் சாத்தியம் இல்லாமல் இருக்கின்றது. எனவே உலக சமாதானம் கூட காலநிலை மாற்றத்தில் செல்வாக்கு செலுத்துமென்பதை மறைக்க முடியாது.

உலகில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு மொன்றியல் உடன்படிக்கை, 1991 ஆம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கைகள் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான வழிமுறைகளாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் செயற்பாடுகளை கைச்சாத்திட்ட நாடுகளே பின்பற்றுவதில்லை. வளிமண்டலத்தில் பச்சைவீட்டு வாயுக்களை சமநிலையில் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட கியோட்டோ உடன்படிக்கையை 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கனடா, சீனா, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளும் இவற்றை கைவிட்டுள்ளன. இவ்வாறு காலத்தை கடத்தி இறுதியில் உலகம் அபாயகரமான சூழலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் மீண்டும் அவற்றை தூசு தட்டியிருக்கிறார்கள்.

அத்தோடு 2009  ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் வருமானம் குறைந்த நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சிக்காக 100 பில்லியன்  அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கும் 2020 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பவிருத்தி, உட்கட்டமைப்பு மூலம் சிறப்பான சூழலை முன்னெடுக்கவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணத்தொகை எங்கிருந்து பெறப்படும், எவ்வாறு  பகிரப்படும் என்பது தொடர்பான விடயங்கள் இன்னும் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கின்றன. இவ்வாறு துறைகள் தோறும் காட்டிவந்த அசமந்த போக்கே காலநிலை என்ற பூதாகர பிரச்சினையை நோக்கி எம்மை நகர வைத்துள்ளது.

தற்போது பாரிஸில் இடம்பெறுகின்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக காலநிலையை 2 பாகை செல்சியஸ் ஆக குறைப்பாற்கான உறுதிமொழிø  பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஆனால் 100 க்கும்  மேற்பட்ட வறிய நாடுகள் காலநிலையை 15. பாகை செல்சியஸூக்குள் கொண்டுவர நிலையான உறுதிமொழியை கோரியுள்ளன. எனவே உலகின் நீடித்த நிலைப்பிற்கும், எதிர்கால சந்ததிகளுக்குமாக நாம் காலநிலை மாற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெப்ப உயர்வு, பனிக்கட்டி உருக்கம், கடல்மட்ட உயர்வு என ஆபத்தான பாதைகளை காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகின்றது.

இதனை குறைக்கும் முகமாகவே ஐ.நா.வின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு பாரிஸில் நடைபெற்று வருகின்றது. திட்டங்கள் வரையறுக்கப்படுவது மட்டுமல்ல அவற்றை செவ்வனே நடைமுறைப்படுத்துவதும் உலக நாடுகளின் கடமையாகும்.

க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக