கடந்த வருடம் இதேபோன்றதொரு காலப்பகுதியில் மலையகம் தனித்துவிடப்பட்டிருந்தது. மீரியபெத்த உலகின் கவனிப்புக்குள் வந்தது. மலையகம் என்ற இருண்ட பகுதி அப்போதே உலகின் முன் வெளிச்சத்துக்கும் வந்தது. அன்று தொடங்கிய அதே அவலம், அதே மனித பலி இன்று கொத்மலை, வெதமுல்லையில் மீண்டும் முளை விட்டுள்ளது. இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு இந்தப் பயணம் தொடரப் போகிறது.உலக நாடுகளின் நாக்குகள் ருசிபடுவதற்கு மட்டும் இலங்கையின் மலையக தேயிலை தோட்டங்கள் தேவைப்படுகின்றன. அதேவேளை முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு வந்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒப்பனை வழங்கப்பட்டு அவர்களை காட்சி பொம்மையாக பயன்படுத்த மட்டும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தேவையென்ன என்பது மட்டும் எவராலும் இதுவரையிலும் கேட்கப்படவில்லை. மலையகத்தைப் பற்றி எழுதவும், பேசவும் செய்ய முடிகிறதே தவிர, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற இதுவரையில் யாராலும் முடியவில்லை. இது எல்லோருக்கும் தெரியும்.
இலங்கையில் எத்தனையோ அரசாங்கங்கள் ஆட்சி அமைத்திருந்தும் மலைய மக்களிடம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இவ்வாட்சியிலேயே ஆரம்பமாக அமைச்சின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவே மலையக அரசியல்வாதிகள் மலையகத்துக்கு வாங்கி தந்த முதல் மாற்றம். ஆனால், அது தேவையில்லாத ஒரு மாற்றம் தான். ஆனால், நாங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக தேயிலைக்கு உரமாக புதைக்கப்பட்டு வருகிறோம். மீரியபெத்தையில் ஆரம்பமான எங்களின் புதைக்குழி பயணம் இன்று கொத்மலை வெதமுல்லையில் முடிந்திருக்கிறது. இது முடிவல்ல ஆரம்பம். இன்னும் எத்தனை பேரை புதைக்க மலையக அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை.
ஒரு பக்கம் சம்பளப் பிரச்சினை, மறு பக்கம் வீட்டுப் பிரச்சினையென இவர்கள் வாட்டப்படுவது மலையகத் தலைமைகளுக்குத் தெரியவில்லையா? இடைக்கால அரசில் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டனவா? அவை பற்றி இன்று வாய் திறக்காதவர்கள், போட்டி அரசியலுக்காக நடுரோட்டில் நின்று சண்டை மட்டுமே பிடிப்பார்கள். இன்று தமது உறவுகளை கண் முன்னே பலிகொடுத்துவிட்டு துயரில் இருக்கும் எமது மலையகத்துக்காக இவர்களால் என்னதான் செய்ய முடியும். வெறுமனே துடுப்பு மட்டையும் பந்துகளும் வழங்கி விடுவதால் இவர்கள் கண்ணீரை துடைத்து விட முடியுமா? கனவுகளை நிறைவேற்ற முடியுமா?
இலங்கையில் அதிகம் மண்சரிவு இடம்பெறும் பகுதிகள் மலையகத்திலேயே காணப்படுகின்றன. இவற்றை இணங்கானவே அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கிளைகள் குறித்த மாவட்டங்களில் இயங்குகின்றன. அத்தோடு இலங்கை கட்டிட ஆராய்ச்சி நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் என்பன மலையக மக்களுக்கான தேவைகளை அதிகம் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மண்சரிவு இடம்பெற்ற பின்பே ஆராய்ச்சிகளுக்கு இவர்கள் செல்லும் நிலை இருக்கிறது. பின்பு பழைய புராணம் தான். மண்சரிவு அபாயமுள்ள பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுங்கள் என்று கூறும் இவர்கள், பாதுகாப்பான இடம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்களா?
அவ்வாறு அறிவுறுத்தியிருந்தாலும் அங்கு மக்கள் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்களா? அப்படியாயின் இதுவரையும் மலையகத் தலைமைகளும், அரச உத்தியோகத்தர்களும் என்னதான் செய்தார்கள். பிரதேச சபைகளுக்கு உலர் உணவுகள் வழங்குவது மட்டும் தான் பொறுப்பா? குறைந்தது மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலாவது தெளிவுபடுத்தியிருக்கிறார்களா? இவர்கள் கடமையுணர்வோடு செயற்பட்டிருந்தால் எதிர்காலத்தை காணாமலேயே போன பிஞ்சு குழந்தைகளின் உயிர்களையாவது காத்திருக்க முடியும்.
கொத்மலை, வெதமுல்லை மண்சரிவில் இறந்தவர்கள்
ரூபினி 2 வயது
மனோஜ் 4 வயது
புவனா 6 வயது
சுபானி 9 வயது
காந்திமதி 23 வயது
லோகநாயகி 48 வயது
லட்சுமி 67 வயது
மேலும், இரு கால்களையும் இழந்த நிலையில் (செல்லையா கணேஷன், 55 வயது) சிகிச்சை பெறுபவரின் எதிர்காலம் எவ்வாறு அமையும். இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களும் மீண்டும் எப்போது விடிவு காணப் போகிறது? மண்சரிவு அபாயமிருப்பதாக கூறி இறம்பொடை இந்துக்கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீரியபெத்தையை போன்று இவர்களும் அரசியலாக்கப்பட்டு, அநாதைகளாக கைவிடப்பட்டு விடுவார்களா? இவர்களோடாவது மலையகத்தின் புதைகுழி வாழ்க்கை முற்று பெறவேண்டும். அதற்கு மலையக மக்களான நாம் எப்போது துணிய போகிறோம். அரைவேக்காடு அரசியல்வாதிகளை நம்பி இனியும் நடப்பதற்கு ஒன்றுமில்லை. இம்மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிக்கொடுக்க அமைச்சர் திகாம்பரம் உத்தரவிட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இறந்தவர்களுக்கு 25,000 ரூபா வீதம் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதே வாக்குறுதிகள் தான் அன்று மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடம் கடந்த நிலையிலும் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவு பெற்று உரியவர்களிடம் கையளிக்கப்படவில்லை. அதற்குள் அடுத்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமெனில் எமக்கு அதிகாரம் வேண்டுமென்று கேட்டு வாங்கிவிட்டு, அதிகாரம் வந்தவுடன் அவற்றை சுய தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வழக்கம் இலங்கை அரசியலில் இருக்கிறது. இது மலையகத் தலைமைகளிடம் அதிகமிருப்பது கண்கூடு. வரும் 6ஆம் திகதி கொத்மலை, வெதமுல்லை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெறுமென அமைச்சர் திகாம்பரம் அறிவித்துள்ளார். இதே நிலைமைதான் அன்று மிரியபெத்தைக்கும் இருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதேநிலை வெதமுல்லைக்கு வந்திருக்கிறது. இவர்களுக்கான வீடமைப்பாவது துரிதப்படுத்தப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லை மீரியபெத்தை மக்களுக்கு தற்போது சொந்தமாகவிருக்கிற கூரையில்லாத சுவர்கள் மட்டும் கொண்ட வீடமைப்புத்திட்டம் கிடைக்குமா? புதிய அரசும் அமைச்சும் என்ன செய்யப் போகின்றன? முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் இவர்களை வெளியுலகுக்கு அழைத்து வருவது யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக