
சர்வதேச ரீதியாக பெண்கள் ,சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், உரிமை மீறல்கள் என்பவற்றை தேவைக்கு மீறி நாம் அறிந்திருப்போம். ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் இவற்றின் கோரத்தன்மையை இன்றும் உணரமுடிகிறது. இவற்றில் இந்தியா முக்கியமானது. அசிட் வீச்சு ,பாலியல் துஷ்பிரயோகம் என்பன கொடூரமாக அரங்கேறும் இடமாக மாறிப்போயிருந்ததை நாம் அறிவோம். அதேபோன்றதொரு உரிமை மீறலையே தற்போது வெளிப்படையாக அரங்கேற்றுகிறது. அதாவது பெண்களை சந்தைகளில் விலங்குகள், பயிர்களைப் போல் விலைக்கு விற்பதாகும்.
நாம் சந்தைகளில் எத்தனையோ விலைபொருட்களை கண்டிருப்போம். ஆனால் இந்தியச் சந்தைகளில் பெண்களும் ஒரு பொருளாக மாற்றம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இவை வியாபாரமாக மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தானின் மேவாட் நகரில் காலங்காலமாக இடம்பெற்றுவரும் வியாபாரமாக இது காணப்படுகிறது. இங்கு 7000 முதல் 35,000 வரையான தொகைக்கு பெண்களை பெற்றுக்கொள்ள முடியும். சிறுமி, வயதுக்குவந்த பெண் ,இளம் பெண் என வயதிற்கேற்றப்படி விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
இவர்கள் ஆடுகள், மாடுகளைப்போல் மிகவும் குறைந்த விலையில் சந்தையில் விற்கப்படுகின்றனர். காரணம் கேட்டால் அங்கு வறுமை. வாழப்போகும் வீட்டிலாவது அவர்கள் உண்டு, உடுத்தி நன்றாக வாழட்டும் என்கின்றனர். இத்தொழில் சந்தைகளில் நேரடியாக சிலரால் மேற்கொள்ளப்படுவதுடன் தரகர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு சந்தைகளில் விற்கப்படும் பெண்களை 'பாரோக்கள்' என அழைக்கின்றனர். ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்கை இருந்தால் கூட விற்றுவிடுகிறார்கள்.
இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் இல்லாத கூலிகளாக பயன்படுத்திக் கொள்வதுடன் மனைவி இல்லாத ஆண்கள் இவர்களை மனைவியாகவும் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுவது கிடையாது என்பதுடன் சமூக அந்தஸ்தும் வழங்கப்படாது. வாழ்நாள் முழுவதும் தம்மை காசு கொடுத்து வாங்கியவர்களுக்காக அடிமைகளாகவே செயற்படவேண்டும். இப்படி வாங்கி பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தும் பெண்களை 'பாரோ' என்றழைக்கின்றனர். இந்த பாரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாக்கப்படுகிறார்கள். முதலாளி என்ன வேலை செய்ய சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாதவர்கள் சில வேளைகளில் சவுக்கடி கூட வாங்க வேண்டிய நிலையேற்படும்.
இவைபற்றி பாரோவான அசாமில் வசிக்கும் மரியம் தெரிவிக்கையில் ;
'என்னை மூன்று முறை விற்றுவிட்டார்கள். கடைசியாக கண்ணில்லாத 76 வயது கிழவனுக்கு என்னை விற்றார்கள் . அந்தக் கிழவர் என்னைத் திருமணம் செய்துகொண்டார். வீட்டுவேலைகளை பார்த்து விட்டு வெளியே வேலைக்கு போகிறேன். கிழவரையும் கவனித்துக்கொள்கிறேன். அவருடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்துகொடுத்து விட்டார். சில சமயம் மகள் வீட்டிற்கும் என்னை வேலைக்கு அனுப்புவார். அவருடைய மகளைவிட என் வயது குறைவு' என்று தன் அனுபவத்தை பகிர்கிறார் அந்த பாரோ பெண்.
2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருட்கள் மற்றும் குற்றங்கள் குறித்த அறிக்கையில் இந்தியாவில் பெண்கள் விலை பொருட்களாக விற்பனை செய்யப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 10 வயது முதல் பெண்கள் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள்.
ஒருவர் தனது செல்வந்த நிலைக்கேற்ப எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். தன்னிடம் வேலை இல்லாத போது மற்ற கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றனர். அந்த பாரோக்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால் அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான். தாயிடம் இருந்து பிரித்து அதனையும் விலைக்கு வேறு யாருக்காவது விற்றுவிடுவார். வறுமையால் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொடுக்க இயலாத குடும்பங்களிலிருந்து பெண்களை விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் பெரும் இலாபத்துடன் பெண்களை பாரோக்களாக விற்று விடுகிறார்கள்.
அப்படி விற்கப்படும் பெண்களை திருமண உறுதி அளித்து கொத்தடிமைகளாக ,பாலியல் அடிமைகளாக ,கட்டாயத் திருமணம், குறைந்த ஊதியக் கூலிகளாக, வீட்டுப் பணியாளர்களாக என்று வயதுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள்.
இப்படி பாரோக்களாக பெண்கள் மாற்றப்படுவதை அப்பகுதியில் வெகு சாதாரணமான ஒன்றாகவே கருதுகின்றார்கள். அதுவும் இவற்றின் செயற்பாடு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. பாரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும் பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர்கூட 18 வயது பாரோவை வாங்கிச்சென்று திருமணம் செய்து கொள்கின்றார். அவ்வாறு பாரோவாக வாங்கப்பட்ட பீகாரில் வசிக்கும் ரேஷ்மா என்பவர் நான் வித்தை காட்டும் ஒரு குடும்பத்தினரால் திருமணம் என்ற பெயரில் வாங்கப்பட்டேன் அவர்களுக்காக நிறைய சம்பாதித்து கொடுத்திருக்கிறேன். என் கணவரோடு பிறந்தவர்கள் ஏழு ஆண்கள் சொன்னால் வெட்கக்கேடு. எனக்கு பிறந்த குழந்தைகளில் எது என் கணவருடையது என்று எனக்கு தெரியாது' என்று விரக்தியுடன் கூறுகிறார்.
மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அவர்களை பல மாநிலங்களுக்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்கிறார்கள். அதிகமாக அசாம், கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்தே அதிகமான பெண்கள் சந்தைகளுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். ஒருமுறை பாரோக்களாக்கப்பட்ட பெண்கள் ஐந்து முறை கூட பலர் கைமாறும் நிலை காணப்படுகின்றது. இறக்கும் வரையிலும் இவர்களின் நிலை இதுதான். இவர்கள் தண்ணீர் வசதி, மின்சாரம் இல்லாத குடிசைகளிலேயே பெரும்பாலான மோல்கிகள் (விலைக்கான பெண்கள்) வாழ்கின்றனர்.அரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அங்கீகாரமில்லாமல் இவை நடைமுறையில் உள்ளன. இப்பிரச்சினை தீவிரமாக பரவுவதற்கு காரணம் பாலியல் சமத்துவமின்மையாகும். ஆதிக்கத்திற்குற்பட்ட சமூக அமைப்பில் பாலியல் விகிதம் உள்ளது. வறுமையின் பிடியில் உள்ள அசாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து பெண்களை விற்பனை செய்கிறார்கள்.
வழக்கமாக பெண்களை திருமணம் செய்வதாக உறுதி அளித்தே மேவாட் போன்ற பபகுதிகளுக்கு அழைத்துச்சென்று விற்பனை செய்துவிடுகிறார்கள். சில நேரங்களில் வேறு பெண்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்களையே மீண்டும் விற்றுவிடுகிறார்கள். சொந்த மாநிலத்துடனான உறவு விட்டுப்போன நிலையில் அவர்கள் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள். அரியானாவில் 10000 வீடுகளில் 9000 பெண்கள் வெளி மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டு திருமணம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள். அரியானாவில் 30 வீதத்திற்கும் மேற்பட்ட 15 வயதிலிருந்து 44 வயது வரையான திருமணமாகாதோர் உள்ளனர். 20 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் ஏழையாக ,மாற்றுத்திறனாளியாக, தபுதாரராக இருப்பவர்களுக்கு பெண் கொடுப்பதில்லை. அவர்கள் இப்பாரோக்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அரியானாவில் 21 மாவட்டங்களில் ஒன்றான மேவாட்டில் பாலியல் விகிதம் சமநிலையில் இல்லாமல் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற விகிதமும் தேசிய அளவில் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் என்ற விகிதம் காணப்படுவதும் பாரோக்களின் விற்பனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
அத்தோடு அரியானாவில் சண்டைக்களங்கள் காணப்படுவதோடு பலதார மணம் செய்பவர்களும் அதிகம் உள்ளனர். சண்டையில் வெல்பவர்கள் பரிசுப் பொருட்களாக பெண்களையும் கொண்டு செல்வது இங்கு வழமையாக காணப்படுகின்றது. தேசிய குற்றப் பதிவுகள் குறித்த அறிக்கையில் 22 ஆயிரம் சிறுமிகள்,10 முதல் 30 வயது வரையான பெண்கள் திருமணத்துக்காக 2012 இல் கடத்தப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா.வின் அறிக்கைப்படி அசாம், மேற்கு வங்கத்தில்அதிகளவிலான பெண்கள் கட்டாயத் திருமணத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகில் பெண்கள் எவ்வளவோ பிரச்சினைகளை சமூகத்தோடு இணைந்து போராடி வெல்பவர்களாக இருக்கையில் ஒரு சமூகமே பெண்களை பாரோக்களாக அடிமைப்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும். அபிவிருத்தியில் இலக்குகொண்டுள்ள அரசுகள் சமூக குறைகளிலும் அக்கறை கொள்ளுதல் அவசியம்.
க.பிரசன்னா
24/09/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக