கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 அக்டோபர், 2024

தனியார் இராணுவமாக செயற்படும் தோட்ட நிர்வாகங்கள்


வேதனம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொடர் போராட்டத்தை கொண்டுள்ள தொழிலாளர்கள் மறுபுறம் தோட்ட நிர்வாகங்களின் அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுத்து வரும் நிலை காணப்படுகின்றது. கடந்த வருடத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு மீதான தாக்குதல் சம்பவங்கள் பல பதிவாகிய நிலையில் இவ்வருடம் தொழிலாளர் மீதான தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான தோட்டங்கள் மற்றும் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளிலுள்ள மலையக சமூகங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் பதிவு செய்யப்படுகின்றன. சில தனியார் தோட்ட நிர்வாகங்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை பணிக்கமர்த்தி மலையக தோட்டத் தொழிலாளர்களை ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு பெரும்பான்மை சமூகம் செறிவாகவுள்ள பகுதிகளில் மிகவும் சிறுபான்மை குழுக்களாக இருப்பதால் அதிக அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர்கள் தங்களுடைய உரிமைகள் அங்கு வெளிப்படுத்துவார்களாயின் அது அவர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகின்றது.

அண்மையில் இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களின் குடியிருப்புகளும் தாக்கப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த வருடம் மாத்தளை இறத்தொட்டை, இரத்தினபுரி காவத்தை மற்றும் இறம்பொடை ஆர்.பி. தோட்டங்களில் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றுக்கு இதுவரை சட்டரீதியான நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி தும்பர தோட்ட தாக்குதல் சம்பவம்

கடந்த 6 ஆம் திகதி இரத்தினபுரி கிரியல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்கிந்த பிளான்டேசன் நிறுவனத்துக்கு சொந்தமான தும்பர தோட்டத்தில் இரு தொழிலாளர்கள் உதவி தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சுரேஸ் - கலைச்செல்வி தம்பதிகள் அருகிலுள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றதை காரணமாகக் கொண்டு இவர்களின் குடியிருப்புகளுக்கு வந்த உதவி தோட்ட முகாமையாளர் மற்றும் இரு உதவியாளர்கள் கலைச்செல்வியின் கணவரான சுரேஸை தாக்கியுள்ளனர். இதை கலைச்செல்வி தடுக்கவே அவரையும் கீழே தள்ளி தடியினால் தாக்கியதில் அவரது இடது கை கடுங்காயங்களுக்குள்ளாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கிரியல்ல பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் அவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் மத்தியஸ்த சபைக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பின்னர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலைச்செல்வியை சந்தித்த தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் பொலிஸார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலின் காரணமாக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியமையால் கடந்த 9 ஆம் திகதி இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கில் தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் பொலிஸார் மற்றும் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இரத்தினபுரி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி மீண்டும் இரத்தினபுரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கலைச்செல்வியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரி ஹேயஸ் தோட்ட தாக்குதல் சம்பவம்

இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது அதே தோட்டத்தில் பிரதி முகாமையாளர் கடந்த 17 ஆம் திகதி தாக்குதல் நடத்தியுள்ளார். காணி பிரச்சினையாலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான வயோதிபர் தற்போது கொலன்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இரத்தினபுரி ஹெயஸ் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ராஜலிங்கம் என்ற ஓய்வு பெற்ற தொழிலாளரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




மாத்தளை இறத்தொட்டை தாக்குதல் சம்பவம்

எல்கடுவ பிளான்டேசனுக்கு சொந்தமான மாத்தளை இறத்தொட்டை பகுதியிலுள்ள ரத்வத்தை தோட்டத்தில் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட, ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் குறித்த குடும்பத்தினர் கேட்டுவந்துள்ளனர். இதற்கமைய முன்னாள் முகாமையாளரொருவரால் ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமையாளரின் அனுமதிக்கமைய அந்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன், ஒரு கிழமைக்கு முன்பு அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு (19.08.2023) தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். உதவி முகாமையாளர் உட்பட இரு அதிகாரிகள் இணைந்து வீட்டை உடைத்து பொருட்களை சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த இடத்துக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட முகாமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பிரபலமானது. அதன்பின்னர் தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியதுடன் குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியது. இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக நிர்வாக தரப்பினர் மன்னிப்பு கோரினர்.

இரத்தினபுரி காவத்தை தாக்குதல் சம்பவம்

இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இதன் போது குறிப்பிட்டிருந்தனர்.

தாங்கள் பரம்பரையாக வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்பே இவ்வாறு அகற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர். இதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் காவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்ட அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தனர்.




இறம்பொடை ஆர்.பி. தோட்ட சம்பவம்

இதேபோலவே கடந்த வருடம் தனிநபரொருவருக்குச் சொந்தமான இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் உரிமையாளர் தொடர்பில் எழுந்த சர்ச்சை தொழிலாளர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்தது. இதன்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்களை தோட்டக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டன. இதற்கெதிராக தொழிலாளர்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் எந்த அரசியல்வாதிகளும் பிரச்சினையில் தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் அவ்வாறான அறிவிப்புகள் எவையும் வெளியிடப்படவில்லையென தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

காவத்தை பொரோனுவ தோட்ட சம்பவம்

காவத்தை பொரோனுவ தோட்ட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த பெல்மதுள்ளை பிரதேச சபையின் உறுப்பினராக விளங்கிய ராகவன் என்பவருடைய வீட்டுத் தோட்டத்தில் இருந்த மூன்று தென்னை மரங்களும் ஒரு ஈரப்பலா மரமும் தோட்ட உதவி முகாமையாளரினால் 2021.04.28 ஆம் திகதி வெட்டி தறிக்கப்பட்டது. இது குறித்து கேள்வியெழுப்பிய தோட்ட இளைஞர்கள்,  கள உத்தியோகத்தரிடம் முரண்பட்ட நிலையில், தோட்ட முகாமையாளர் இளைஞர்களுக்கு  எதிராக காவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். பின்பு அங்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரியும் நடந்த சம்பவத்தை விசாரிக்காது தோட்ட இளைஞர்கள் சிலரை கைது செய்துள்ளார்.

பின்னர் அவர்கள் பெல்மதுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஒரு குற்றமும் செய்யாத தமது தோட்ட இளைஞர்களுக்கு இடம்பெற்ற அநீதியை எதிர்த்து அத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட வேளை அயலிலுள்ள கிராமங்களிலிருந்து சிங்கள இளைஞர்களை அழைத்து வந்து தோட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் நிர்வாகம் செயற்பட்டது.

பண்டாரவளை எல்லவெல தோட்ட தாக்குதல் சம்பவம்

பண்டாரவளைப் பகுதியின் ஊவா ஹைலன்ட்ஸ் பெருந்தோட்ட எல்லவெல பிரிவுக்குள் நுழைந்த கிராமிய சிங்கள இளைஞர்கள் பலர், தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் தோட்ட இளைஞர்கள், மாணவர்கள் என்ற வகையில் ஐவருக்கு காயங்கள் ஏற்பட்டு, அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.

நள்ளிரவில் எல்லவெல தோட்டப் பிரிவுக்குள் புகுந்த கிராமிய சிங்கள இளைஞர்கள் சிலர், தோட்ட மக்கள் மீது கடுமையாக நடந்து கொண்டு, இனவாதமிக்க வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்ட பின்னரே, அவர்கள் தோட்ட மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இச்சம்பவங்களின் பின்னர் தொழிலாளர்களின் பாதுகாப்பு எவ்வாறுள்ளது?

தொழிலாளர் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தாலும் அவற்றுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினரும் முயற்சிப்பதில்லை. தாக்குதல்தாரிகளுக்கு பொலிஸாரும் துணை போவதே இதற்கு காரணமாகும். குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற இரு சம்பவங்களிலும் பொலிஸார் பக்கச்சார்பாகவே நடந்து கொண்டுள்ளனர். எனவே அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகின்றது.

தனியார் தோட்டங்கள் மாத்திரமன்றி அரச நிறுவனங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலைமையும் இவ்வாறு ஆபத்தானதாகவே மாறியுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்கள் தங்களது பணியிடங்களில் குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் ஏனைய விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி தொழில் பாதுகாப்பற்ற நிலையிலும் இயற்கை அனர்த்தங்களின் மத்தியில் குடியிருப்புகளில் வசித்து வரும் நிலையிலும் தற்போது தோட்ட நிர்வாகங்களின் அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுப்பதானது, 200 வருடங்களை கடந்து மீண்டும் ஆங்கிலேயேர் அடக்குமுறைக்குள் நுழைவது போல அவர்களுடைய வாழ்வியல் மாறி வருவது வருத்தத்துக்குரியது.

இரத்தினபுரி மாவட்டத்தின் சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும், தோட்ட முகாமைத்துவங்களுக்கும் இடையில் காணப்படும் நட்புறவினை பயன்படுத்தி தோட்ட அதிகாரிகள் பெருந்தோட்ட மக்களை தாக்கும் கலாச்சாரத்தினை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தோட்டங்களில் தற்போது தொழில் புரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களை இலக்கு வைத்தும் தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரத்தினபுரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சிவில் அமைப்புகள் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் குரலெழுப்பும் போது அதை இனவாதமாக மாற்றியமைக்கும் போக்கு பெரும்பான்மையினத்தவரிடையே இருப்பதால் இவ்விடயத்தை கையாள்வது இலகுவான விடயமாக இருக்காது. எனினும் உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடுவது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக