தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேதின மேடையில் தெரிவித்த பின்னர் மலையகத்தில் சில இடங்களில் பாற்சோறு வழங்கி கொண்டாடியதை அவதானிக்க முடிந்தது. இது அவர்களின் அறியாமையா? அல்லது அடிமைத்தனமா? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இதன்மூலம் மலையக தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இதை புரிந்து கொள்ளுமளவுக்கு கூட சிலருக்கு அறிவில்லையென்பது வருத்தமளிக்கிறது.
2021 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் விலகிய பின்னர் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தீர்மானிக்கும் பேச்சுவார்த்தைகள் அரசியல்மயப்படுத்தப்பட்டுவிட்
நாட்டின் 75 ஆவது வரவு - செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2020.11.17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது, “1992 ஆம் ஆண்டு பெருந்தோட்ட கம்பனிகள் தனியார்மயப்படுத்தப்பட்டதிலிரு
“இந்த நிலைமையின் கீழ் மிகவும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்டக் கம்பனிகளை ஊக்குவிப்பதற்கும் திருப்தியடைய முடியாத தோட்டக் கம்பனிகளின் தனியார்மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் ரூபா 1000 வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகிறேன். இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்டதாக கம்பனிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன்.” என முன்மொழிந்திருந்தார்.
எனினும் பட்ஜெட் முன்மொழிவில் குறிப்பிட்டது போல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதும் அவை வெற்றிகரமானதாக தெரியவில்லை.
1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
05.03.2021 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2217/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பத்திரணவால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறைந்தபட்ச நாளாந்த சம்பள அளவு (தொழிலாளர்கள்) 900 ரூபாவாகவும் வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவு 100 ரூபாவாகவும் இருக்குமாறு சம்பள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கை
இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதால், தோட்டத்துறை நெருக்கடிக்குள்ளாகும் என அறிவித்து, அக்கரப்பத்தனை, எல்பிட்டிய உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களினால் இவ்வாறு எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது. தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற மனு மீதான பரிசீலனையின் போது, பெருந்தோட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் இன்றுவரையும் அவர்களுக்கான 1000 ரூபா நாட்சம்பளத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முயற்சி எடுக்கவில்லை.
1700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர தலைமையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடியது. தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தன. எனினும் பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு தமக்கு உரிய நேரத்தில் கிடைக்காமையால் பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்தமையால், எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கடந்த மாதம் 24 ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில் அதனையும் முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்திருந்தது.
இந்நிலையில் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவால் கடந்த மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
தேயிலை வளர்த்தல் மற்றும் தேயிலை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், இறப்பர் வளர்த்தல் மற்றும் மூல இறப்பர் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நாளாந்த சம்பளம் 1350 ரூபா மற்றும் நாளாந்த விசேட படி 350 ரூபா என்பவற்றை உள்ளடக்கி நாளாந்த மொத்த கொடுப்பனவு 1700 ரூபாவாக இருக்குமெனவும் மேலதிக கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவும் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவை உத்தேச அறிவிப்பாகவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கூறிய உத்தேசத்துக்கான ஆட்சேபனைகளை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்க முடியுமெனவும் அத்தகைய ஆட்சேபனை ஒவ்வொன்றும் எழுத்து மூலமாக சமர்ப்பணமாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையால் அந்தத் தொகையை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தேயிலை விலை அதிகரித்துள்ளமையால் உலக சந்தையில் மிக வேகமாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது நாங்கள் உருவாக்கிய பிரச்சினை அல்ல. கலந்துரையாடலின் பின்னர் இவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் தேயிலை தோட்ட நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என முதலாளிமார் சம்மேளனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் கவலை தெரிவிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 2024 மே 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் உத்தேச புதிய சம்பள அதிகரிப்புக்கான திகதி அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளத் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாற்சோறு கொண்டாட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் மேலதிகமாக கொய்யப்படும் பச்சை இலை கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் கொடுப்பனவுடன் கூடிய சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி கொண்டாட்டங்கள் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை பிரதேச தோட்டங்களில் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசியல் வரலாற்றில் பாற்சோறு கொண்டாட்டங்கள் புதியனவல்ல. ஆனால் அவை கொண்டாடப்பட்ட சம்பவங்கள் பெரும்பாலும் இலங்கையின் வளர்ச்சியை பின்நோக்கி கொண்டு சென்றதை எவரும் அறியாமல் இருக்க முடியாது.
காலை வேளையில் வழமையான தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் தோட்ட ஆலயங்கள், தொழிற்சாலைகள், கொழுந்து நிறுவையிடும் இடங்கள், மலைக் கோயில்கள் ஆகியவற்றில் விசேட பூசைகள் செய்தும் பாற்சோறு சமைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு மாலையிட்டு விசேட பூசைகளை செய்திருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் மூலம் மலையகத் தொழிலாளர்களின் மனநிலையை இலகுவாகப் புரிந்துக்கொள்ள முடிகின்றது. இன்னும் எத்தனை காலத்துக்கு இவர்கள் அறியாமையை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை.
புதிய உற்பத்தி முறைமை
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை நினைவுகூரும் தேசிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் வழங்கப்படுமென உறுதியளித்தார். அத்துடன் தோட்டத் தொழிலாளர்களை சிற்றுடைமையாளர்களாக மாற்றுவதற்கும் வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்துவதற்கும் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். தற்போது கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பணிப்புரை விடுத்திருந்தார்.
வெளியார் உற்பத்தி முறையானது, (ழுரவ புசழறiபெ ளுலளவநஅ) இருக்கின்ற தேயிலை செடிகளை தொழிலாளர்களே பராமரித்து அதன் அறுவடையை கம்பனிகளுக்கு வழங்கும் முறையாகும். தற்போது ஒரு சில கம்பனிகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனினும் இந்த உற்பத்தி முறையின் கீழ் தொழிலாளர்களுக்கு நிலத்தின் மீதான உரிமையோ, தேயிலை செடியின் மீதான உரிமையோ வழங்கப்படுவதில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களை சிற்றுடைமையாளர்களாக மாற்றும் திட்டமும் சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு
தொழிற்சங்கங்கள் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமென்பது தொழிலாளர்களின் நீண்டகால நம்பிக்கையாக இருக்கின்றது. ஆனால் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்களது எதிர்பார்ப்புகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. அவர்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டரீதியாக உரிமையுள்ள போதும் இவர்களுடைய சம்பள விடயம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் தேயிலை காணிகளை பிரித்து வழங்கி அவற்றின் மூலம் உற்பத்தியை பெருக்கி தங்களுடைய வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிலங்களை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் விரும்பவில்லை. தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் அரசியல் செய்வதும் கடினம் என்பதாலும் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகள் மூலம் சம்பள பிரச்சினையை அணுகுவதற்கு தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு தேயிலை நிலங்களை பிரித்து வழங்கி உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். 200 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களை சம்பள விடயத்தில் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் அடிமைப்படுத்த நினைப்பது ஏற்புடையதல்ல.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக