புள்ளிவிபரங்களை மறைக்கும் பாடசாலைகள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள்
பரீட்சை பேறுபேறுகளை மாத்திரம் இலக்காக கொண்டு செயற்பபடுகின்ற பாடசாலைகள் மற்றும் வலயக்கல்வி அலுவலகங்கள் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. வருடாந்தம் புள்ளிவிபரங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. அவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 வீதத்தை பெற்றுக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். சில பாடசாலைகள் மற்றும் கல்வி வலய அலுவலகங்கள் உண்மையான புள்ளிவிபரங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றன. புள்ளிவிபரங்களை மறைப்பதால் ஒரு சமூகத்தை பின்நோக்கி கொண்டு செல்கின்றார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாடசாலை வளங்கள், அதிபரின் நிர்வாகத்திறன், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் ஆர்வம் என்பன ஒருங்கிணையும் போதே பாடசாலையின் எழுச்சி ஆரம்பமாகின்றது. வெறுமனே புள்ளிவிபரங்களை மறைத்து செயற்படுவதால் பாடசாலை உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக கருதி விடமுடியர்து.
மாணவர்களையும் சமூகத்தையும் முன்னேற்றுவதில் உண்மையாக அக்கறையிருந்தால் புள்ளிவிபரங்கள் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை அணுக வேண்டும். குறைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் வேறுமனே வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் அதிபரின் இலக்குகளுக்கு மாணவர்களை தயார்படுத்தக்கூடாது.
இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள்
கடந்த நல்லாட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் மற்றும் 25 பாடசாலைகளை விஞ்ஞான பாடசாலைகளை உருவாக்கும் திட்டங்களும் கைவிடப்பட்டன. இது பல பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்கு இன்றளவும் தடையாக அமைந்துள்ளது. மலையகப் பகுதிகளிலுள்ள 25 பாடசாலைகளை விஞ்ஞான பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தின் அடிப்படையில், பசறை த.ம.வி, பண்டாரவளை த.ம.வி, பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி, பதுளை பெண்கள் மகா வித்தியாலயம், ஹப்புத்தளை த.ம.வி, மொனராகலை விபுலாநந்தா த.ம.வி, பலாங்கொடை கணகநாயகம் த.ம.வி, இறக்குவானை சென்.ஜோன்ஸ் த.ம.வி, தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் த.ம.வி, யட்டியாந்தோட்டை சென்.மேரிஸ் த.ம.வி, இரத்தினபுரி த.ம.வி, கஹவத்தை ஸ்ரீ கிருஸ்ணா த.ம.வி, இராகலை த.ம.வி, ஹொலி ரின்டி மத்திய கல்லூரி, தலவாக்கலை த.ம.வி, இறத்தொட்டை இந்து ம.வி, பன்விலை விக்னேஸ்வரா த.ம.வி, கம்பளை இந்து கல்லூரி, கட்டபுலா த.ம.வி, ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி, ஹோல்புறுக் த.ம.வி, கலஹா ஸ்ரீ இராமகிருஸ்னா மத்திய கல்லூரி, டிக்கோயா த.ம.வி, ஹெந்துனுவெர ம.ம.வி, மில்லகந்த த.ம.வி ஆகிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவற்றுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
புதிய நியமனங்கள் இல்லை
சமகாலங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டங்களை பெற்று வெளியேறும் மலையக மாணவர்கள் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்காமை பிரதான பிரச்சினையாகும். 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. அதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவற்றில் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் உள்ளடக்கப்படவில்லை. தற்போது மத்திய மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதும் அவை 13 ஆம் ஆண்டு தொழிற்கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளது.
மறுபுறும் கலைத்துறையில் அதிக பட்டதாரிகளை கொண்டுள்ள சமூகத்தில் அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காமல் ஆசிரியர் உதவியாளர் என்ற நியமனத்தை முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. மலையகத்திலிருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றாலும் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் நடைமுறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படவில்லை. உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை கொண்ட பாடசாலைகளும் அதிகரிக்கப்படவில்லை. பெருந்தோட்ட பாடசாலைகளில் இந்நிலைமை மிகவும் பாராதூரமாக காணப்படுகின்றது. பெரும்பாலும் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை கொண்ட பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் நிலவும் போட்டி, பாடசாலைக்கும் வசிப்பிடத்துக்கும் உள்ள தூரம், அதிக செலவு, பொருளாதாரப் பிரச்சினை என்பனவும் இத்துறைகளுக்கான மாணவர்களின் உள்ளீர்ப்பை வெகுவாக குறைக்கின்றது.
பாடசாலைகளின் தரம் உயர்த்தப்படவில்லை
பெருந்தோட்டப் பாடசாலைகளில் உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் பெரும்பாலும் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளை மாத்திரம் கொண்டு காணப்படுவதால் ஆரம்பம் முதல் மாணவர்கள் இந்த இரு பிரிவுகளுக்கு மாத்திரம் ஊக்குவிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. இவை ஏனைய பிரிவுகளை உருவாக்காமையால் ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றாகும். கல்வி அமைச்சின் 2021 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாட்டில் 864 பெருந்தோட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 834 பாடசாலைகள் பெருந்தோட்டங்களுக்குள்ளும் 30 பாடசாலைகள் பெருந்தோட்டங்களுக்கு வெளியிலும் அமைந்துள்ளன. இவற்றில் எத்தனை பாடசாலைகளில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறைந்தது விஞ்ஞான ஆய்வுகூடங்கள், கணினி ஆய்வுகூடங்கள் அமைந்துள்ள பாடசாலைகள் எத்தனை? இவை தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய மாகாணத்தில் 1479 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில், 113 பாடசாலைகள் 1 ஏபி பாடசாலைகளாகவும் 321 பாடசாலைகள் 1 சி பாடசாலைகளாகவும் காணப்படுகின்றன. இதில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன. (மேலதிக விபரங்கள் அட்டவணையில்)
மாணவர்களுக்கு ஆரம்பம் முதல் உயர்தரப் பிரிவுகள் தொடர்பிலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களை வெறுமனே கலை மற்றும் வர்த்தகத்துறைக்கு மாத்திரம் தயார்ப்படுத்தக்கூடாது. தற்போதைய நிலையில் மருத்துவம், பொறியியல், சுற்றுலாத்துறை, நலன்நோம்பல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது கலைத்துறை மாத்திரமே பெரும்பாலானோரின் தெரிவாக இருக்கிறது. அதைவிடவும் குறைந்த வெட்டுப்புள்ளிகளுடன் அனுமதிப் பெறக்கூடிய எத்தனையோ கற்கை நெறிகள் காணப்படுகின்றன. அவற்றுக்கான பங்களிப்பு மலையக மாணவர்களிடம் மிகவும் குறைவு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். போதிய விழிப்புணர்வு இன்மையே இவ்வாறான இடர்களுக்கு காரணமாகும்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் போது, கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகும்.
வீ.இராதாகிருஸ்ணன்
முதன்முதலாக 1980 ஆம் ஆண்டு மலையகத்துக்கு 402 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 2007 ஆம் ஆண்டு 3000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் தற்போது 2900 நியமனங்கள் வழங்குவதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நாட்டின் கல்வி அபிவிருத்தி பணியில் மலையகத்தைச் சேர்ந்த 14,500 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அவர்களில் 57 பேர் இன்னும் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வெளி மாவட்ட மாணவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தேன். அப்போது நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு வெளிமாவட்ட மாணவர்கள் அதிகமாக வந்து தங்களது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளை எடுத்துக்கொண்டு வெளிமாவட்டங்களுக்கு போனார்கள். அப்படி அவர்கள் போனதால் நுவரெலியா மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றாலும் பல்கலைக்கழகத்துக்கு, மருத்துவ பீடத்துக்கு போகக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆகவே நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற அந்த மாவட்டத்திலே அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்த முடிவை கொண்டு வந்தோம்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இரத்தினபுரி மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் 31 வருடங்களாக விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. அப்பகுதிக்கு கடமைக்கு வரும் ஆசிரியர்கள் அங்கு தொடர்ந்து கடமையாற்றாமையின் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து 40 ஆசிரியர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடிவேல் சுரேஸ்
கொழும்பிலிருந்து பதுளைக்கு 225 கிலோ மீற்றர் தூரமாகும். பதுளையிலிருந்து றோபரிக்கு 127 கிலோமீற்றர் தூரமாகும். றோபரி தோட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. இதனால் அதிகாலை 4 மணிக்குப் பந்தங்களை பற்றவைத்துக்கொண்டு 15 கி.மீ. தூரம் நடச்து கொக்காகல - மடுல்சீமை பஸ் நிலையத்துக்கு நடந்து வர வேண்டிய நிலைமை காணப்படுகிறது. பதுளை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல தேசியப் பாடசாலைகள் மூன்று உள்ளன. பசறை த.ம.வி, பதுளை சரஸ்வதி த.ம.வி, குருதலாவ முஸ்லிம் வித்தியாலயம் ஆகியன இங்கு காணப்பட்டாலும் உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார்
தற்போது மலையகத்தில் 864 பெருந்தோட்ட பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இந்த 864 பாடசாலைகளும் நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டத்தையோ அல்ல. மாறாக மலையகம் என்று சொல்லும் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியது. அந்தவகையில் காலி, அக்குரஸ்ஸ, தெனியாய, களுத்துறை, குருநாகல், தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலும் மலையகப் பாடசாலைகள் இருக்கின்றன. தற்போது கல்வி அமைச்சு இவை அனைத்துக்கும் சமமான பங்களிப்பையே வழங்குகின்றது. 2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியாதென்ற முடிவு எட்டப்பட்டது. இம்முடிவு எடுக்கப்படாமல் இருந்திருந்தால் கடந்த 7-8 வருடங்களில் நூற்றுக்கணக்கான கணித, விஞ்ஞான ஆசிரியர்களை தமிழ் பாடசாலைகளில் உருவாக்கக்கூடிய நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு பாராளுமன்றத்தில் கருத்துக்களை வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காக எவ்வித அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்ற பொதுவான தீர்மானத்துக்கு வரமுடியாது. எனினும் தூர நோக்கற்ற சில முடிவுகள் நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது என்பதை மறந்து விடவும் கூடாது.
தொடரும்….

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக