கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 அக்டோபர், 2024

1700 ரூபா சம்பள அதிகரிப்பு: பெருந்தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு என்ன?


தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு அரசாங்கம் தங்களுடைய கடமையை நிறைவேற்றி விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும் மறுபுறம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு இன்னும் உறுதியான தீர்வை வழங்கவில்லை. 1380 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்குமாறு அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது, தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலெனவும் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லையெனவும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற போதே முதலாளிமார் சம்மேனம் இவ்வாறு தெரிவித்திருந்தது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பின் போது ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 993 ரூபாவாக காணப்பட்டதாகவும் 1700 ரூபா சம்பள அதிகரிப்பின் போது ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 1443 ரூபாவாக அதிகரிக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட பின்னர் மிகப்பெரிய சம்பள அதிகரிப்புகள் பெருந்தோட்ட கம்பனிகளால் வழங்கப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டு 62 ரூபாவாக இருந்த நாளாந்த ஊதியம் 2024 ஆம் ஆண்டு 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள 48 துறைகளை விடவும் (சிறு தேயிலை உற்பத்தியாளர், ஆடைக்கைத்தொழில், தேயிலை ஏற்றுமதி, உற்பத்தி கைத்தொழில், தாதியர், முன்பள்ளி ஆசிரியர், பாதுகாப்பு சேவை) இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே அதிக ஊதியம் வழங்கப்படுவதாகவும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏனைய போட்டியாளர்களை விடவும் குறைந்தளவான உற்பத்தி விகிதம் இலங்கையில் காணப்படுவதாகவும் ஒரு தொழிலாளர் தினசரி பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு கென்யாவில் 45 - 60 கிலோவாகவும் இந்தியாவில் (அசாம் 34 கிலோ, தென் இந்தியா 60 கிலோ) ஆகவும் இலங்கையில் 18 கிலோவாகவும் காணப்படுகின்றது. உலக போட்டியாளர்களை விடவும் இலங்கை தேயிலை அறுவடை செய்பவர்கள் அதிக ஊதியத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒரு கிலோவுக்கு 0.17 டொலர் ஊதியமும் தினசரி ஊதியம் 1005 ரூபாவும் வழங்கப்படுகிறது. கென்யாவில் 0.08 டொலர் ஊதியமும் 481.9 ரூபா தினசரி ஊதியமும் வழங்கப்படுகிறது. அசாமில் ஒரு கிலோவுக்கு 0.07 டொலர் ஊதியமும் 434.7 ரூபா தினசரி ஊதியமும் வழங்கப்படுகிறது. 

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமானது, உற்பத்தி திறன் மற்றும் ஏல வருமானத்துடன் இணைக்கப்பட்ட சம்பள மாதிரியை அல்லது தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை உற்பத்திதிறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கும் வருமான பகிர்வு மாதிரியை அமுல்படுத்த வேண்டுமென நீண்டகாலமாக கூறி வருகின்றது. இந்த அமைப்பு உற்பத்தி திறனை ஊக்குவிக்கிறது மற்றும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நிலையான சம்பள முறைமையை உறுதி செய்கின்றது. தினசரி வருகையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய குறைந்தபட்ச ஊதிய மாதிரி காலாவதியானது மற்றும் நவீன தோட்டத் தொழிலின் தேவைகளை பிரதிபலிக்கவில்லை. உற்பத்தி அல்லது தரத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது ஏற்றுமதி சந்தைகளை கடுமையாக பாதிக்கும். இது ஏற்றுமதி வருமானம் மற்றும் போட்டித்தன்மையை குறைக்க வழிவகுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு எடுத்துள்ள இந்த முடிவால் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திச் செலவு மிக அதிகமாக இருக்குவதுடன், தற்போது மதிப்பிடப்பட்டுள்ள ஒரு கிலோ தேயிலைக்கான செலவு சுமார் 45 வீதத்தால் அதிகரிக்கும். இதன் காரணமாக தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படுவதுடன் அத்துறைகளில் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும், வருடாந்த ஊழியல் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகள் 35  பில்லியனாக உயரும் என்பதால், இந்த சம்பள உயர்வு பிராந்திய பெருந்தோட்ட  நிறுவனங்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். இந்த அழுத்தத்தை  இந்நிறுவனங்கள் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான தோட்டத்  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தில் அரச அதிகாரிகள் தலையிடுவதும், தனியார் துறையினருக்கு சம்பளத்தை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகும் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்தத் தீர்மானமானது, குறுகிய கால அரசியல் வெற்றிகளை நோக்கமாகக் கொண்டதுடன், மக்கள் செல்வாக்கு அரசியலால் தூண்டப்படுகிறது, அதற்குப் பதிலாக தொழில்துறையின் நீண்டகாலப் பொருளாதார ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கும், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இலக்காகக் கொண்டது அல்ல. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தவறாக நிர்வகிக்கும் மற்றும் திறமையற்ற முறையில் நிர்வகித்த வரலாற்றை நாட்டின் அரசாங்கம் கொண்டுள்ளது. எனவே, அந்த நிறுவனங்கள் தொடர்ந்து பணத்தை இழந்து மூழ்கும் விளிம்பில் உள்ளன. 1992ஆம் ஆண்டு தனியார்மயமாக்கலின்போது, அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்து நஸ்டத்தைச் சந்தித்ததால், அரசாங்கம் வருடாந்தம் 5 பில்லியன் ரூபா வரை கணிசமான நிதியை மானியமாக வழங்க வேண்டியிருந்தது.

மேலும், அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உலக வங்கியிடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி காரணமாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு 8 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பணம் பெறுவது பெருந்தோட்டக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் இருந்த போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பெருந்தோட்டத் துறையினர் இந்தக் கடன்களை செலுத்த முடியாமல் போனதுடன், இறுதியில் அரசாங்கமே இந்தக் கடன் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, தொழிலாளர் சம்பளங்கள் கணிசமாக அதிகரித்தன மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை மிகவும் திறமையாக இயங்கியது. பிராந்திய தோட்டக் கம்பனிகளில் 327,123 பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தொழில் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்ததுடன், உலகளாவிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், தூய இலங்கை தேயிலை மற்றும் இறப்பரின் விதிவிலக்கான தரத்திற்காக அவர்களின் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது.

இந்த முயற்சிகள் பெருந்தோட்டத் தொழிலில் மேம்பட்ட வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுக்கு வழிவகுத்துள்ளதுடன், இப்போது இந்த முன்மொழியப்பட்ட சம்பபள உயர்வு காரணமாக அது ஆபத்தில் உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது வர்த்தக நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசு உடனடியாக கையகப்படுத்துவது, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை கமிசன் விதிகள், நிறுவனங்கள் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை மீறுவதாகும்.

இத்தகைய தன்னிச்சையான மற்றும் நடைமுறைக்கு மாறான முடிவு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய ரீதியாக முக்கியமான துறைகளை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் நேரத்தில் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு அப்பால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எச்சரித்துள்ளது.




































 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக