ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் 2017 - 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கு நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 642 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கற்கை நெறியை தொடருவதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் 46 பேர் விலங்கு விஞ்ஞானத்தில் விசேட இளமானி கற்கைக்கும் 50 பேர் ஏற்றுமதி விவசாயத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 33 பேர் தேயிலை தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டலில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 36 பேர் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் விசேட தொழில்நுட்ப இளமானி கற்கைக்கும் 51 பேர் நீர்வள தொழில்நுட்பத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 31 பேர் பனை மற்றும் லேடெக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் 47 பேர் தொழில்துறை தகவல் தொழில்நுட்பத்தில் விசேட இளமானி கற்கைக்கும் 41 பேர் கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 40 பேர் கனிம வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 48 பேர் தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவத்தில் வணிக முகாமைத்துவ இளமானி கற்கைக்கும் 46 பேர் விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவத்தில் வணிக முகாமைத்துவ இளமானி கற்கைக்கும் 87 பேர் உயிர் அமைப்புகள் தொழில்நுட்பத்தில் இளமானி கற்கைக்கும் 86 பேர் பொறியியல் தொழில்நுட்பத்தில் இளமானி கற்கைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்படும் திருகோணமலை வளாகத்தில் 2014 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, மொனராகலை, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 86 பெருந்தோட்ட மாணவர்கள் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களில் கற்கைநெறிகளை முன்னெடுத்துள்ளதாக திருகோணமலை வளாகம் அறிவித்துள்ளது. (மேலதிக விபரங்கள் அட்டவணை 01 இல்)
கிழக்குப் பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2014 - 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 456 பெருந்தோட்ட மாணவர்கள் ஏழு கல்வித்துறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் கலைத்துறைக்கே உள்வாங்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் முகாமைத்துவம் மற்றும் வணிகத்துறைக்கு 12 மாணவர்களும் விஞ்ஞானத்துறைக்கு 10 மாணவர்களும் தொழில்நுட்பத்துறைக்கு 47 மாணவர்களும் விவசாயத்துறைக்கு இரண்டு மாணவர்களும் கலைத்துறைக்கு 379 மாணவர்களும் மருத்துவத்துறைக்கு ஆறு மாணவர்களும் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2020 ஆம் ஆண்டு வரை 62 மாணவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்ட தகவலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு துறைரீதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் பெயர் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். அப்பெயர் பட்டியலில் பெருந்தோட்ட மாணவர்களின் விபரங்கள் தனியாக வேறுபடுத்தி தரப்படுவது இல்லை. ஆகையால் உங்களது கோரிக்கைக்கு பதில் வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு 2014 - 2019 வரையான ஐந்து கல்வியாண்டுகளுக்கு நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து 562 பெருந்தோட்ட மாணவர்கள் கற்கைகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 292 மாணவர்களும் பதுளை மாவட்டத்திலிருந்து 270 மாணவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரயோக விஞ்ஞான பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்பவியல் பீடம் ஆகியவற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (மேலதிக விபரங்கள் அட்டவணை 02 இல்)
2016 - 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டு 208 பெருந்தோட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர். இவர்களில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 98 மாணவர்களும் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 110 மாணவர்களும் உள்ளடங்குவர். (மேலதிக விபரங்கள் அட்டவணை 03 இல்)
இதேவேளை 2014 - 2018 வரையான நான்கு கற்கை ஆண்டுகளில் 28 பெருந்தோட்ட மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாமல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து இடைவிலகியுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக எட்டு மாணவர்கள் உயிரியல் விஞ்ஞான பிரிவிலிருந்தும் ஆறு மாணவர்கள் முகாமைத்துவ பிரிவிலிருந்தும் நால்வர் இயற்பியல் விஞ்ஞான பிரிவிலிருந்தும் இடை விலகியுள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகம்
ரஜரட்ட பல்கலைக்கழகம் வழங்கிய தகவல்களில், மலையக மாணவர்களில் கற்கைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. மாறாக பல்கலைக்கழக அனுமதி பெற்று பட்டப்படிப்பை கைவிட்டு இடைவிலகியவர்கள் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை குறித்த மாவட்டங்களை வெளிப்படுத்தாமல் சகல மாணவர்களையும் ஒன்றுபடுத்தியே வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2014 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்களில் கல்வி கற்ற 405 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.
2014 இல் 40 மாணவர்களும் 2015 இல் 72 மாணவர்களும் 2016 இல் 59 மாணவர்களும் 2017 இல் 31 மாணவர்களும் 2018 இல் 60 மாணவர்களும் 2019 இல் 70 மாணவர்களும் 2020 இல் 73 மாணவர்களும் இவ்வாறு கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.
இவர்களில் விவசாய பீடத்திலிருந்து 53 மாணவர்களும் பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து 186 மாணவர்களும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்திலிருந்து 73 மாணவர்களும் மருத்துவம் மற்றும் இணைந்த விஞ்ஞான பீடத்திலிருந்து ஒன்பது மாணவர்களும் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமான கற்கைகள் பீடத்திலிருந்து 83 மாணவர்களும் தொழில்நுட்ப பிரிவிலிருந்து ஒரு மாணவரும் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.
தொடரும்…




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக