வவுனியா வளாகம் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்)
வவுனியா வளாகத்துக்கு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் அதிகம் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தாலும் அவை மிகக் குறைந்தளவாகவே இருக்கின்றன. அதிகபட்சமாக 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு அதிகபட்சமாக முகாமைத்துவ கற்ககைகளுக்கு 15 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். திட்ட முகாமைத்துவ கற்கைக்கு 10 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனைய பிரிவுகளுக்கு மிகக் குறைந்த மாணவர்களே அனுமதி பெற்றுள்ளனர். (அட்டவணை 01)
2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 398 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 67 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையோர் சிங்களவர்களாவர்.
இயற்பியல் விஞ்ஞான பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 48 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் நால்வர் மாத்திரமே தமிழர்களாவர்.
உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 46 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் ஆறு பேர் மாத்திரமே தமிழர்களாவர்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 53 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் இருவர் மாத்திரமே தமிழர்களாவர்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 94 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 11 பேர் மாத்திரமே தமிழர்களாவர்.
திட்ட முகாமைத்துவப் பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 57 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 20 பேர் தமிழர்களாவர்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
நாட்டிலுள்ள ஏனைய அரச பல்கலைக்கழகங்களை விடவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கற்கை நெறிகளை தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. கட்டணங்கள் செலுத்தி முதுமாணி, பட்டப்பின்படிப்பு டிப்ளோமா, இளங்கலை, டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகள் உள்ளிட்ட பிரிவுகளில் நாடு முழுவதுமுள்ள கற்கை நிலையங்களில் 2015 ஆம் ஆண்டு 6442 பேர் கற்கையை தொடர்ந்துள்ளதுடன் 2016 இல் 3888 பேர் கற்கையை பூர்த்தி செய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 6437 பேரும் 2018 ஆம் ஆண்டு 7185 பேரும் 2019 ஆம் ஆண்டு 6798 பேரும் இவ்வாறு கற்கைநெறிகளை தொடர்ந்துள்ளனர். அதேவேளை 2014 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1033 பேர் தங்களுடைய பதிவுகளை இரத்துச் செய்துள்ளனர். இவ்வாறு மாவட்ட ரீதியான தகவல்கள் வழங்கப்படாமையால் இவற்றில் மலையக மாணவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகள்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தை தவிர்த்து ஏனைய அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் வெளிவாரி கற்கைநெறிகளை பூர்த்தி செய்து அதிகமானோர் பட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர் மற்றும் அரச சேவைகளில் இணைந்து கொண்டுள்ளவர்களாவர். இவ்வாறு வெளிவாரி பட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள பலர் இன்றும் தொழில் வாய்ப்பின்றி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. (பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு பட்டங்களை பெற்றுக்கொண்ட பலரும்)
இவ்வாறு மலையகத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழிலின்றி இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொடுக்காது, ஆசிரியர் உதவியாளர்கள் என்ற நியமனத்தை மாத்திரம் அதிகம் வழங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது? (இவை தொடர்பான மேலதிக விபரங்களை அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்.)
வளப்பகிர்வில் காணப்படும் பாரபட்சம்?
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளிடையே வளப்பகிர்வில் தொடர்ச்சியாக பாரபட்சம் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உயர்தரங்களில் கலை மற்றும் வர்த்தக பிரிவை தவிர்த்து வேறு பிரிவுகளில் தங்களுடைய உயர்தரத்தை தொடர்வதற்கு தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையை மாற்றுவதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவற்றில் பல பெருந்தோட்ட பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 20.02.2024 ஆம் திகதி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தில் அமைச்சரவை உப குழுவின் தீர்மானம் கிடைக்கப்பெறும் வரை தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் ஆளுநர்களின் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பினும் இதுவரையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படாத பாடசாலைகளின் பௌதீக அபிவிருத்தி மற்றும் நிர்வாக செயற்பாடுகளை தொடர்ந்தும் உரிய மாகாண சபைகளூடாகவே மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், ஆளுநர்களின் செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாகாணசபை நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் தேசிய பாடசாலை பெயர், பெயர் பலகைகள், கடிதத் தலைப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ பதவி முத்திரைகள் தொடர்ந்தும் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. இது சிக்கலுக்குரிய நிலைமை என்பதால் அவற்றை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாணத்திலுள்ள இவ் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படாத அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட மலையக மாணவர்கள் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கும் அனைத்து பாடசாலைகளின் அபிவிருத்தி தடைபட்டுள்ளது. இது மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் திட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் 16 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக பெயர் பலகைகள் மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி, ஹட்டன் போஸ்கோ கல்லூரி, தலவாக்கலை த.ம.வி, ஹோல்புறூக் த.ம.வி, கொட்டகலை த.ம.வி, லிந்துலை மெராயா த.ம.வி, பொகந்தலாவ சென்மேரிஸ் கல்லூரி, நோர்வூட் த.ம.வி, மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி, ஹொன்சி கல்லூரி, மஸ்கெலியா புளும்பீல்ட் கல்லூரி, இராகலை த.ம.வி, அல் மின்ஹாஜ் ம.வி, பூண்டுலோயா த.ம.வி, ஹொலிடின்ரி த.ம.வி, கந்தபொல மெதடிஸ்ட் கல்லூரி ஆகிய தமிழ் மொழி மூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடக்கும் நிலையில் மத்திய மாகாணத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு கல்வி அமைச்சு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பாடசாலைகளின் பட்டியலில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியும் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகள் வெறும் பெயர் பலகைகளில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருப்பதை கல்வி அமைச்சின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் திட்டம் மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி எனவும் ஏற்கனவே தேசிய பாடசாலைகளாக காணப்படும் பாடசாலைகளில் இன்னும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுகிறது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. எனவே அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு தேசிய பாடசாலை என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த கல்வி சமூகமும் ஏமாற்றப்பட்டுள்ளது.
தொடரும்….




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக