இலங்கை புகையிரத தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான பணிபுறக்கணிப்பு போராட்டங்கள் காரணமாக இலங்கை புகையிரத திணைக்களம் மேலும் நட்டத்தினை எதிர்கொள்ளுமென தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. புயணச்சீட்டு விநியோகம் மற்றும் பொதிகள் விநியோக சேவையிலிருந்து அண்மையில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் விலகியமையினால் நாளொன்றுக்கு 8 - 9 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை போராட்டத்தினால் தினசரி 5 மில்லியன் ரூபா இழப்பு எற்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு புதிதாக என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் புகையிரத கட்டமைப்பினை நவீனமயப்படுத்துவதில் இலங்கை பின்தங்கியே இருக்கின்றது.
புதிதாக புகையிரத பாதையினை உருவாக்குவது கூட 100 வருடங்களின் பின்னரே இலங்கையில் சாத்தியமானது. அதுவும் இந்திய அரசாங்கத்தின் உதவியாலேயே அது சாத்தியமானது. நெடுஞ்சாலை அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்து அளவுக்கு இலங்கையின் புகையிரத கட்டமைப்பினை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் இன்றளவும் ஆரம்பிக்கப்படவில்லை. புகையிரத சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் என்பன இன்னும் ஆங்கிலேயர் கால தொழில்நுட்பத்தினையே கொண்டுள்ளன. இதனால் புகையிரத கட்டமைப்பினை நவீனமயப்படுத்துவது அவசியமாகின்றது.
அதேவேளை புகையிரத ஊழியர்கள் தொடர்ச்சியாக தமது சலுகைகளை அதிகரிப்பதற்கு பாரிய போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை காணப்படுகின்றன. அதனால் தற்போது ஊழியர்கள் அனுபவிக்கும் சலுகைகள் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. துகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை புகையிரத திணைக்களத்திடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 25.09.2020 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் ((RTIC/Appeal/2195/2020) அடிப்படையில் 2021.11.25 ஆம் திகதி தகவல் வழங்கப்பட்டது.
இலங்கை புகையிரத திணைக்களத்தில் 19,545 உத்தியோகத்தர்களின் நியமனங்களுக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 13,118 நிரந்தர பணியாளர்களும் 422 ஒப்பந்த பணியாளர்களும் கடமையாற்றியுள்ளனர். ஜூன் மாதத்தில் 12965 நிரந்தர பணியாளர்களும் 337 ஒப்பந்த பணியாளர்களும் ஜூலை மாதத்தில் 12908 நிரந்தர பணியாளர்களும் 340 ஒப்பந்த பணியாளர்களும் செப்டெம்பர் மாதத்தில் 12,837 நிரந்தர பணியாளர்களும் 337 ஒப்பந்த பணியாளர்களும் கடமையாற்றியுள்ளனர். இவர்களுடைய கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,145,067,045.48 ரூபாவும் செப்டெம்பர் மாதத்தில் 997,130,234.07 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆத்துடன் ஜூன் மாத்தில் 1,112,398,516.99 ரூபாவும் ஜூலை மாதத்தில் 961,762,447.56 ரூபாவும் கொழுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிலுவை கொடுப்பனவாக 22,341,905 ரூபாவும் ஜூன் மாதம் 22,201,227 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் புகையிரத கட்டமைப்பில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படாமை, மக்களுக்கு தேவையான வகையில் சேவைகள் வழங்கப்படாமையினால் பாரிய நட்டத்தினை புகையிரத திணைக்களம் சந்தித்து வருகின்றது. ஒதுக்கப்படும் நிதிக்கு மேலதிகமாக நிதி தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேவேளை ஒதுக்கப்படும் நிதியில் அதிகளவானவை ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்கானதாகும்.
2020 ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் 243 - 258 வரையான என்ஜின் சாரதிகள் இலங்கை புகையிரத திணைக்களத்தில் கடமையாற்றியுள்ளனர். இலங்கையில் நிலவிய கொவிட நெருக்கடி நிலைமையிலும் 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கான அடிப்படை சம்பளத்துக்காக 148,665,469.06 ரூபாவும் மேலதிக கடமைகளுக்கான கொடுப்பனவாக 237,226,455.18 ரூபாவும் போக்குவரத்து கொடுப்பனவுக்காக 23,073,281 ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகளாக (மொழி கொடுப்பனவு, வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு, தொலைபேசி கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு) 43,575,872.88 ரூபாவும் என மொத்தமாக 452,541,078.12 ரூபா (45 கோடியே 54 இலட்சம் ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு 2015 ஆம் ஆண்டு வருமானமாக 6334.6 மில்லியனும் செலவாக 44485.02 மில்லியனும் ஏற்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வருமானமாக 5451.93 மில்லியனும் செலவாக 29090.4 மில்லியனும் ஏற்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வருமானமாக 6477.11 மில்லியனும் செலவாக 26969.52 மில்லியனும் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு வருமானமாக 7412.47 மில்லியனும் செலவாக 29329.28 மில்லியனும் ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வருமானமாக 7901.32 மில்லியனும் செலவாக 35865.78 மில்லியனும் ஏற்பட்டுள்ளது. இத்தரவுகளின் மூலம் இலங்கை புகையிரத திணைக்களமானது வருமானத்தை விடவும் அதிக மடங்கு செலவுகளை எதிர்கொண்டுள்ளதை அறியமுடிகின்றது. பயணச்சீட்டுக்களின் விநியோகத்தின் மூலமே புகையிரத திணைக்களத்துக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையினால் அவை முழுமையாக இழப்பினை எதிர்கொண்டுள்ளன.
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக தினசரி 5 மில்லியன் ரூபா இழப்பினை இலங்கை புகையிரத திணைக்களம் எதிர்கொண்டிருந்தது. 6 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக 30 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருந்தது. புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக நாடுமுழுவதுமான எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைபட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்திருந்தார்.
விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு நேற்று நண்பகல் கொலன்னாவையில் இருந்து இரண்டு புகையிரதங்களின் மூலம் விமான நிலையத்துக்கான எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தினசரி 1.4 மில்லியன் லீற்றர் விமான எரிபொருள் புகையிரதம் மூலம் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அதேவேளை புகையிரத சேவையின் மூலம் 600,000 லீற்றர் எரிபொருள் அநுராதபுரத்துக்கும் 200,000 லீற்றர் வவுனியாவுக்கும் 500,000 லீற்றர் காலிக்கும் 400,000 லீற்றர் மட்டக்களப்பு மற்றும் பேராதனைக்கும் தினசரி கொண்டு செல்லப்படுகின்றது. நாட்டில் எரிபொருள் தேவையில் 40 வீதமானவை புகையிரதத்தின் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றது.
எனினும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினால் ஏனைய பகுதிகளுக்கான எரிபொருள் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து பிறிமா கோதுமை மா விநியோகமும் தடைபட்ட நிலையில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்களினால் 2016 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலான தகவல்கள் திணைக்களத்தில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 6 - 13 ஆம் திகதி வரை 8 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2018.07.30 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்ப்பட்டுள்ளது. ஆத்துடன் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் ஜூன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் 2016 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்களும் திணைக்களத்தில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு பெரும் சுமையென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அதேவேளை இலாம் ஈட்டக்கூடிய அரச நிறுவனங்களான இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை, பகையிரத திணைக்களம், இ.போ.சா. உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்கு 2006 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தினால் 1.7 டிரில்லியன் ரூபா நிதியினை ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இலாபமீட்டக்கூடிய நிறுவனங்களுக்கு இவ்வாறு ஒதுக்கீடுகளை மேற்கொள்வது அத்தியாவசியமற்றதாகும்.
எனவே இலாபமீட்டக்கூடிய அரச நிறுவனங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் அபிவிருத்தி செய்து சேவைகளை விஸ்தரிக்கும்போது வருமானத்தை அதிகரிக்கும் நிலை உருவாகும். மாறாக போராட்டங்களை ஊக்குவிப்பதால் இலாபத்தை பெறமுடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக