கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 மார்ச், 2016

மீண்டும் கைதான குஸ்மன்

இன்று உலகத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரமானது அன்றாட நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக இருக்கின்றது. பல பாதுகாப்பு தடைகளையும் தாண்டி போதைப் பொருட்கள் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அதேபோலவே, உலகில் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் மெக்ஸிக்கோவில் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவரே எல்சபோ குஸ்மன். மெக்ஸிக்கோ பொலிஸாருக்கு மட்டுமல்ல, உலகப் பொலிஸ்காரன் எனப்படும் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டியவன். கடந்த ஜனவரி 8ஆம் திகதி மெக்ஸிக்கோ பொலிஸாரால் 25 போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் கைது செய்யப்பட்டனர். 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4 பேர் தேடப்பட்டும் வருகின்றனர்.
இவர்களில் முக்கியமான புள்ளியே எல்சபோ குஸ்மன். மெக்ஸிக்கோ அரசு இவர்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு 30 மில்லியன் பெகோஸ்களை (2.4 மில்லியன் அ.டொலர்) சன்மானமாக அறிவித்திருந்தது. அமெரிக்காவும் இவர்களில் இருவருக்கான சன்மானத் தொகையை அறிவித்திருந்தது. அதில் 37 போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் மிகவும் முக்கியமானவரான குஸ்மன்னனுக்கு மெக்ஸிக்கோவும் அமெரிக்காவும் இணைந்து 7 மில்லியன் டொலருக்கான சன்மானத்தை அறிவித்திருந்தன. ஆனாலும், அவ்வளவு சீக்கிரம் அவரைக் கைதுசெய்ய இருநாடுகளாலும் முடியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி சினாலோவில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது குஸ்மன் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் இவர் 2015, ஜுலை 11இல் சிறையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார். இவர் சிறையிலிருந்து தப்பிச்சென்ற விதம் உலகையே கதிகலங்க வைத்திருந்தது. மெக்ஸிக்கோவின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குஸ்மன் சிறைச்சாலைக்கு கீழாக 1.5 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப்பாதையினை உருவாக்கி அதன்மூலம் தப்பிச் சென்றிருந்தார். இதன்மூலம் குஸ்மன் மீண்டும் கைதுசெய்யப்படுவது மெக்ஸிக்கோ பொலிஸாருக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்த நிலையிலேயே 6 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இம்முறை அவர் சிறையிலிருந்து தப்பிவிடாதபடி பல்வேறு பாதுகாப்பு கட்டமைப்புகளை மெக்ஸிக்கோ அரசு உருவாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே ஒரு சிறைக்கைதிக்கான அதியுயர் பாதுகாப்பு குஸ்மன்னுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். சிறையின் மேல் தளத்தில் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும் குஸ்மன் தப்பிவிடுவது இலகுவாக இருக்கின்றமையால் இம்முறை குஸ்மன் தங்க வைக்கப்பட்டுள்ள சிறைக்கு கீழான நிலப்பகுதியும் அதியுயர் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்தமுறை இவர் தப்பிச்செல்ல பயன்படுத்தப்பட்ட 1.5 கிலோ மீற்றர் நீளமான தரைகீழ் குகையானது அதியுயர் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டிருந்தது.

1.7மீற்றர் உயரத்திலும் 70-80 சென்ரி மீற்றர் அகலத்திலும் 1.5 கிலோ மீற்றர் நீளமான வளி கட்டுப்பாடு, மின்சார விளக்குகள் என பிரமாண்டமாக அமைந்திருந்தது. குஸ்மனின் சிறையில் அமைந்திருந்த குளியலறையில் 50து50 சென்ரி மீற்றர் எனும் அளவில் வாயில் அமைக்கப்பட்டு தப்பிச்செல்லும் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை அந்த தவறு ஏற்பட்டு விடாமல் இருக்க நிலத்துக்கு கீழாகவும் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நிலகீழ் குகையும் அழிக்கப்பட்டுள்ளது. குஸ்மன் தப்பிச் சென்றமையானது மெக்ஸிக்கோ அரசையும் பாதுகாப்பு படையினரையும் அதிகளவு விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்தியது. மெக்ஸிக்கோ மனித உரிமைகள் ஸ்தாபனம் அடுக்கடுக்கான கொலைக்குற்றச்சாட்டுகளை மெக்ஸிக்கோ பாதுகாப்பு படைமீது சுமத்தியது.

இக்குற்றச்சாட்டுகள் ஒருபுறம், மறுபுறம் குஸ்மனின் தப்பியோட்டம் என்பன மெக்ஸிக்கோவே பரபரப்பான சூழலில் இருந்த நிலையில் மீண்டும் குஸ்மன் கைது செய்யப்பட்டமையும், சிறையில் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளும் ஓரளவுக்கு விமர்சனத்தை குறைத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க திணைக்களம், குஸ்மனை “உலகில் மிகவும் சக்தி வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரராக’ அடையாளப்படுத்தியிருக்கிறது. 2009-2011ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் போர்ப் சஞ்சிகை உலகில் அதிகம் சக்தி வாய்ந்தவர்களில் முதலாமவராக பட்டியலிட்டிருந்தது.

இவர் மெக்ஸிக்கோவின் இரண்டாவது அதிக சக்திவாய்ந்த நபராக காணப்பட்டிருந்தார். இவருடைய சொத்துமதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். குஸ்மன் கொக்கைய்ன் போதைப் பொருளை கொலம்பியாவிலிருந்து மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காவுக்கு சந்தைப்படுத்தியவராவார். இவர் போதைப்பொருள் தயாரிப்பு, கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புபட்டவர். இச்சந்தர்ப்பத்திலேயே இவர் 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 500 தொன் (450,000 கிலோ கிராம்) அளவிலான கொக்கைன்களை குஸ்மன் இதுவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார். ஏற்கனவே குஸ்மன் 1993இல் படுகொலை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டு 20 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 2001இல் சிறையிலிருந்து தப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள குஸ்மன், ஏற்கனவே தப்பிக்க பயன்படுத்திய நுட்பங்களை விடவும் தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. குஸ்மன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியானது 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சிறைவளாகத்தை கண்காணிக்க 1000 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மோப்ப நாயுடன் கூடிய இரு காவலாளிகளின் தலைகவசத்தில் கமராக்கள் பொருத்தப்பட்டு சிறைப்பகுதிகளும் குஸ்மனின் ஒவ்வொரு செயற்பாடும் துரிதமாக அவதானிக்கப்படுகிறது.

சிறையின் தரைப்பகுதி இரும்பு சட்டங்களைக் கொண்டு கொங்கிரீட் இடப்பட்டதாக இருக்கிறது. அத்துடன் தரைக்கீழ்ப்பகுதியில் புதிதாக ஒலியெழுப்பக்கூடிய அலாரம் பகுதி பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் குஸ்மன் தரைகீழ் குகையின் மூலமே தப்பிச் சென்றிருந்ததால் இம்முறை தரைக்கு கீழாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குஸ்மனை பார்வையிட வரும் உறவினர்கள் அல்லது யாராகவிருப்பினும் அவருடைய முகத்தினை ஸ்கேனிங் செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும். அத்தோடு நாய்கள் குஸ்மனுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதனை செய்த பின்பே அவருக்கு வழங்கப்படும். யாராவது உணவில் விஷம் கலந்திருப்பார்களா? என்ற சந்தேகத்தை தீர்க்கவே இந்த நடைமுறை. உலகில் எத்தனையோ முக்கிய தலைவர்கள் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு கூட இவ்வாறானதொரு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

குஸ்மன் ஏற்கனவே தப்பிச் சென்றிருந்த சிறையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையிலடைக்கப்பட்ட முதல் 5 இரவுகளில் 7தடவைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப்ப உணர்கருவிகள் மூலம் இவருடைய ஒவ்வொரு அசைவுகளும் துல்லியமாக ஆராயப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு கட்டமைப்புகளை மீறி சர்வதேச போதைக் கடத்தல் மன்னனாக அடையாளங் காணப்பட்டுள்ள எல்சபோ குஸ்மன் தப்பிகக் வாய்ப்பே இல்லையென கூறப்படுகிறது. இவருக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும் வரை எல்சபோ, குஸ்மன், பொலிஸாருக்கு ஒரு அதிர்வலைதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக