சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான இறுதி தீர்மானம் எட்டப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கையின் போதே முக்கிய கட்சிகள் மற்றும் தங்களுடைய வெற்றிகளை பல உள்ளூராட்சி மன்றங்களில் இழந்திருப்பதை அறியமுடிந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 110 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும் அவற்றில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 97 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடந்த முறை மஸ்கெலியா பிரதேச சபையை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கைப்பற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் நிலையை உருவாக்கியிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், “கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது. ஏனைய தொகுதிகளில் எமது நிலவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்” என்றார்.
எனவே இவ்வாறான வேட்பு மனு நிராகரிப்புகள் காரணமாக பல உள்ளூராட்சி மன்றங்களில் புதிய அல்லது மாற்று கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் கொடிகள் பறக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கணிக்க வேண்டியுள்ளது.
அத்தோடு, கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடந்த முறை மஸ்கெலியா பிரதேச சபையை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கைப்பற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் நிலையை உருவாக்கியிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், “கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது. ஏனைய தொகுதிகளில் எமது நிலவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்” என்றார்.
எனவே இவ்வாறான வேட்பு மனு நிராகரிப்புகள் காரணமாக பல உள்ளூராட்சி மன்றங்களில் புதிய அல்லது மாற்று கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் கொடிகள் பறக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கணிக்க வேண்டியுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, தலவாக்கலை, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச சபைகளுக்கும் ஹட்டன் - டிக்கோயா நகரசபை, தலவாக்கலை - லிந்துலை நகரசபை மற்றும் நுவரெலியா மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றுக்கு வட்டார ரீதியில் 186 உறுப்பினர்களும் பட்டியல் ஊடாக 120 உறுப்பினர்களும் என மொத்தமாக 308 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நுவரெலியா மாவட்ட மக்கள் மே 6 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளனர்.
அம்பகமுவ பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களும் நுவரெலியா பிரதேச சபைக்கு 23 உறுப்பினர்களும் கொத்மலை பிரதேச சபைக்கு 53 உறுப்பினர்களும் ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கு 40 உறுப்பினர்களும் வலப்பனை பிரதேச சபைக்கு 55 உறுப்பினர்களும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும் நோர்வூட் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு 15 உறுப்பினர்களும் கொட்டகலை பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும் நுவரெலியா மாநகர சபைக்கு 21 உறுப்பினர்களும் தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு 11 உறுப்பினர்களும் ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு 15 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இவற்றுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும். ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும். இவ்வாறு கடந்த 2018 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8 மேன் மிகை (Over Hang) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தேர்தல்கால கூட்டணிகள்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கே கட்சிகள் செயற்படும் நிலை உருவானது. இந்த தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கான கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசியல் எதிரிகளும் நண்பர்களாக மாறியிருக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கிடையே நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. குறிப்பாக மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றுவதில் இருக்கட்சிக் குழுக்களிடையே கடும் மோதல் உருவானது.
ஆனால் இன்று இந்த இரு தரப்பினருக்கும் பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளமையால் தேர்தல் முடிவுகளின் பின்னர் சபைகளை கைப்பற்றுவதற்கு இணைந்து செயற்படும் ஒரு தீர்மானத்தை கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது. இம்முறை தேசிய மக்கள் சக்தி அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தனித்து போட்டியிடுகின்றது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணி மின்சூழ் சின்னத்திலும் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டி சின்னத்திலும் தொழிலாளர் தேசிய முன்னணியின் அரிவாள் சின்னத்திலும் பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன. இறுதியில் அனைத்துகட்சிகளும் இணைந்து பொது கூட்டுக்குள் பயணிப்பதற்கு முயற்சி செய்கின்றன.
பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹாலிஎல, சொர்னாதொட்ட, மீஹாகுல்ல, பண்டாரவளை, எல்ல, வெலிமடை, ஊவா பரனகம ஆகிய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. பசறை, ஹப்புதலை, ஹல்துமுல்ல ஆகிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து தொலைபேசி சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகர சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்திலும் சில இடங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்திலும் சில இடங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரிவாள் சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
வேட்புமனு நிராகரிப்பு சர்ச்சைகள்
பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த சட்ட சிக்கல்களுக்கு முன்பாக, வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பல இளைஞர்கள் மற்றும் பெண்களின் அரசியல் பிரவேசங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கட்சிகளின் தவறால் அவர்கள் மீண்டுமொரு தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதும், அவ்வாறு தேர்தல் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமென்ற எந்த உத்தரவாதமும் இல்லாதததும் அவர்கள் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த கொத்மலை பிரதேச சபையின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்குக் காரணம் இளம் வேட்பாளர் பிரிவில் அவர்களின் பிறப்பத்தாட்சி பத்திரம் இணைக்கப்பட்டிருக்கவில்லை. மஸ்கெலியா பிரதேச சபையின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்குக் காரணம் வேட்பு மனுவை கையளிப்பதற்கு பெயரிடப்பட்ட அதிகாரமிக்க முகவர் அன்றைய தினம் வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வேட்புமனு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவாக அறிவுறுத்தியிருந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வது இது முதன்முறையல்ல. இவ்வாறு பல தேர்தல் அனுபவங்களை கொண்டிருக்கும் இக்கட்சி இந்த தேர்தலில் சதி இடம்பெற்றுள்ளதாக கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை.
கடந்த கால தேர்தல் வெற்றிகள்
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்க தரப்பிலிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எதிர்கட்சியிலிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் பெரும்பான்மை பெற்றிராத கட்சிகள் மாற்றுக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலை தோன்றியதால் மலையகத்தில் பல்வேறு சபைகளிலும் களேபரங்கள் வெடித்திருந்தன.
நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகர சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளில் ஐ.தே.க பெரும்பான்மையினை பெற்றிருந்தது. நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா அறுதிப்பெரும்பான்மையை பெற்றிருந்தது. இதனால் இங்கு இக்கட்சிகளால் ஆட்சியமைக்கக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் கொத்மலை பிரதேச சபை மற்றும் தலவாக்கலை - லிந்துலை நகரசபைகளில் பெரும்பான்மை பெற்றிராத கட்சியும் சுயேச்சைக் குழுவும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தன.
ஹட்டன் நகர சபையில் திருவுளச் சீட்டின் மூலம் ஆட்சி பெரும் களேபரங்களுக்கு மத்தியில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் இவ் உள்ளூராட்சி சபைகள் வினைத்திறன் மிக்கவையாக செயற்படுமா? என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்தன.
இவ்வாறான பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தயாராகியுள்ளன. எனினும் யாரை தெரிவு செய்ய வேண்டுமென்பதை மக்களே தீர்மானிப்பார்கள். கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் இம்முறை வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அரசியல் கொள்கைகள் மற்றும் மக்களின் நலன் என்பவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தேசிய மக்கள் சக்தி என்ற ஒற்றை கட்சியை வீழ்த்துவதற்காக மட்டும் தேர்தல் களத்தில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மக்களும் அனுதாப அலை, தனிப்பட்ட கோபம், விரக்தி என்பவற்றுக்காக தேர்தலை பயன்படுத்தாமல் தமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இம்முறையும் வாக்குகளை சிதைப்பதற்கான பல அணிகள் களமிறங்கியுள்ளமையால் எதிர்பாராத வெற்றிகள் மற்றும் தோல்விகளை பல கட்சிகளும் வேட்பாளர்களும் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக