க. பிரசன்னா
சமீப காலமாக இலங்கை இயற்கை வளங்களை காப்பதில் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. அவற்றிலும் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான வனஜீவராசிகளை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவத்துடன் செயற்படுகிறது. இவற்றில் முக்கியமானது தான் யானைகள். இலங்கையில் சமீபகாலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன. இவற்றில் யானைகள் கணிசமானளவு உயிரிழந்திருக்கின்றன. ஆதலால் யானைகளை பாதுகாக்க பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் மரணங்களையும் பாதுகாப்பின்மையையும் குறைப்பதற்கு அரசால் செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளனவா ?
கடந்த வாரம் கனடா செல்வதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த 11 பேர் பயணித்த வாகனத்தை புத்தளம் பகுதியில் காட்டு யானைகள் மோசமாகத் தாக்கியதில் 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலியாகியிருந்தனர். இப் பகுதியிலுள்ள வீதியில் யானைகள் பாதைகளுக்குள் உட்புகாத வண்ணம் ஒரு பக்கமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மறுபக்கம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிராமையே யானைகள் வீதிகளை ஊடறுத்து பயணம் செய்ய காரணமாக இருந்திருக்கின்றன. இதற்கு யார் பொறுப்பு ? யானையின் வாழ்விடங்களுக்கூடாக பாதையை அமைத்தது தவறா ? அல்லது யானைகளைத் தடுக்க வேலிகளை அமைக்காதது தவறா ? தவறு யார் பக்கமிருப்பினும் இறந்த உயிர்களை திரும்பப் பெற முடியாது என்பது மட்டுமே உண்மை.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மனிதன் - யானை வன்முறையில் இலங்கையே முதலிடம் வகிக்கின்றது. இதற்கு யானையின் வாழ்விடங்களில் மனித குடியேற்றங்களும் பயிர்ச் செய்கைகளும் அமைந்திருக்கின்றமை பிரதான காரணமாகும். மனிதர்கள் எவ்வாறு தமது சொந்த நிலங்களை மீளப் பெறப் போராடுகிறார்களோ அதேபோலவே யானைகளும் தமது வாழ்விடங்களை அதிகம் மறப்பதில்லை. காடுகள் அழிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் பல ஆண்டுகளாக பழகிப்போன வாழ்விடங்களை விட்டு யானைகள் அகல்வதில்லை. இதனாலேயே மனிதனுக்கும் யானைகளுக்குமான முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. வீதிகள் மட்டுமல்லாது புகையிரதப் பாதைகளும் அவ்வாறே இருக்கின்றன.
சமீப காலமாக புகையிரதங்களில் அடிபட்டு யானைகள் இறக்கும் சம்பவங்களும் அதிகம் பதிவாகின்றன. பெரும்பாலான ரயில் பாதைகள் காடுகளை ஊடறுத்துச் செல்கின்றன. அதிக வன ஜீவராசிகள் வாழும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் புகையிரதத்தை 15 கிலோ மீற்றர் வேகத்திலேயே செலுத்த வேண்டுமென்ற நடைமுறையிருக்கிறது. ஆனால், அவை புகையிரத இயக்குநர்களால் அதிகம் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் புகையிரதங்களுடன் மோதுண்டு அதிகமான யானைகள் உயிரிழக்கின்றன. ஆகஸ்ட் 18 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் 3 குட்டி யானைகளும் ஒரு தாய் யானையும் ரயிலில் மோதி உயிரிழந்திருந்தன. இதன்மூலம் இவ்வருடம் இதுவரையான காலம் பகுதியில் ரயில் மோதி இறந்த யானைகளின் தொகை 11 ஆக உயர்ந்தது.
எனவே, மனித செயற்பாடுகளால் யானைக்கும் யானைகளால் மனிதருக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் யானையையும் மனிதனையும் பாதுகாக்க வேண்டிய தேவை சகலருக்கும் ஏற்பட்டுள்ளது. யானைகள் மூலம் ஒவ்வொரு வருடமும் 70 பேர் உயிரிழக்கும் அபாயமும் தோன்றியுள்ளது. இதன் நீட்சியாக ரயில்வே அதிகார சபை, ரயில்களில் தெர்மோ கமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவை தொடர்பில் பல்லுயிர் மற்றும் யானைகள் பாதுகாப்பு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஜயநாத் ஜயவர்தனே தெரிவிக்கையில் ; ரயில்களின் வேகத்தால் யானைகள் பீதியடைகின்றன. ஆதலால் குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பாகவே ஒலி எழுப்புவதன் மூலம் அவை விலகிச் செல்ல வாய்ப்பாக இருக்கும்.
சில வேளைகளில் ரயில் சாரதி மதுவருந்தியிருப்பதும் கவனமற்ற சூழ்நிலையும் இவ்வாறான சம்பவங்களைத் தோற்றுவிப்பதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. செட்டிகுளம் பகுதியில் 4 யானைகள் இறப்பதற்கு ரயில் சாரதி மதுவருந்தியிருந்தமையே காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மனித கவனயீனத்தினாலும் அலட்சியப் போக்கினாலும் யானைகள் பாதிக்கப்படுவதோடு அதே சந்தர்ப்பத்தில் மனிதர்களும் பலியாகும் சூழல் காணப்படுகிறது. இலங்கையில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் யானைகள் வாழ்வதாக ஆதாரங்கள் இல்லை. ஓரளவு சம தரையான காடுகளில் யானைகள் தற்போது வாழ்ந்து வருகின்றன. 1829 -1855 ஆண்டு காலப் பகுதிகளில் பிரிட்டிஷாரால் இலங்கையில் 6,000 யானைகள் பிடிக்கப்பட்டன அல்லது இழப்பு ஏற்பட்டன. அதன் பின்னர் 19 ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் 14,000 யானைகள் இலங்கைக் காடுகளில் வசிப்பதாக தரவுகள் தெரிவித்திருந்தன. அதேபோல சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் போது 5,800 யானைகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இத் தொகையில் 1,000- 1,500 வரையான யானைகள் குறைந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. கடந்த 100 வருடங்களில் இலங்கையில் யானைகளின் தொகை சரிபாதியளவு குறைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
அத்தோடு யானைகள் கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இலங்கையில் வருடமொன்றுக்கு 200 -250 வரையான யானைகள் கொல்லப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1950 முதல் இலங்கையின் சகல மாகாணங்களிலும் மனித - யானை முரண்பாடுகளால் 1,375 மனிதர்களும் 4,225 யானைகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் சனத்தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டக் கூடியளவில் நிலத்தேவை அதிகரிப்பின் காடழிப்பு இன்னும் உச்சம் பெறலாம். ஆனால், உணவு மற்றும் நீர்த் தேவைகளுக்கு கிராமத்தை நோக்கி யானைகளின் வருகை அதிகரிப்பை தடுக்க முடியாமலிருக்கும். 65,610 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பைக் கொண்ட இலங்கையில் 21.3 மில்லியன் மக்கள் 325 பேருக்கு ஒரு சதுர கிலோ மீற்றர் என்ற ரீதியில் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்திய இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகமானது 0.934 வீதமாகும். இத் தொகை இன்னும் 75 வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே எதிர்கால சனத்தொகை அதிகரிப்பை க வனத்தில் கொண்டாவது கிராமப்புறங்களுக்குள் யானைகள் புகாதவாறும் தற்போது யானையின் புகலிடமாக இருக்கின்ற பகுதிகளில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இந்த யானை - மனிதன் முரண்பாடுகளைத் தடுக்க தேசிய மயப்படுத்தப்பட்ட திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக கடந்த வருடமே இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் இயக்குனர் தெரிவித்திருந்தார். இதன்படி 3000 கி.மீ. மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக 2500 கிலோ மீற்றர் தூரத்துக்கு மின் வேலிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் யானைகள், உணவு மற்றும் நீருக்காக உள்நுழையும் கிராமங்கள் பாதுகாக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார். மேலும் உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தில் நீர் வீழ்ச்சிகள், இயற்கை பூங்காக்கள் மற்றும் குட்டி யானைகள் மற்றும் மதம் பிடித்த யானைகளுக்கு இல்லங்கள் என்பவற்றை வனப் பகுதிகளில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இவர் கூறிய திட்டங்கள் அனைத்தும் முழுமைப் பெற்றுள்ளனவா ? மின்சார வேலியென்பது 10 - 12 வருடங்களுக்கு மாத்திரமே நீடித்து நிலைக்கக் கூடியதாக இருப்பதுடன், அவை பாதுகாப்பானதோர் அம்சமும் இல்லை. ஆதலால் இந்த யானை - மனித முரண்பாடுக்கு நிரந்தர தீர்வாக பனை மரங்களே அமையுமென்பது பலரது ஆலோசனையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. பனை மரங்களை வளைந்து வளைந்து செல்லும் வகையில் 4 வரிசைகளில் நாட்டுதல் வேண்டும். இவை மின்சார வேலிகளை விடவும் நிலையானதும் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் புதுமையானதாகவும் இருக்கும். இவை யானைகளுக்கு பிடித்தமானதாகவும் அமைந்திருக்கும்.
இம் மரங்கள் ஏழு , எட்டு வருடங்களில் போதுமான வளர்ச்சியை எட்டிவிடுவதுடன் நிரந்தரமான தீர்வாகவும் அமையும். பனை மரங்கள் வெள்ளம், வரட்சி, காற்று என்பவற்றை எதிர்த்து வளரக் கூடியது. குறைந்தது 100 வருடங்களுக்கு பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு கிலோ மீற்றர் பனை மர வேலியில் 2,500 மரங்கள் உள்ளடக்கப்படுவதால் நாடு இயற்கையாகவே தாவர போர்வைக்குள் உள்வாங்கப்படும். அத்தோடு குறைந்தது 270 மெட்ரிக் தொன் சத்தான உணவுகளை இம் மரங்களில் இருந்து வனஜீவராசிகள் பெற்றுக் கொள்ள முடியும். மேலதிகமாக பனை மரங்கள் வசதியற்ற கிராமங்களுக்கு கிராமிய தொழில் முயற்சிகளுக்கும் மருத்துவ வளங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
இந்த இயற்கை பாதுகாப்பு வேலிகளை அமைப்பதன் மூலம் இலங்கையில் வருடமொன்றுக்கு இடம்பெறுகின்ற 200 யானைகள் கொலைகளையும் 70 மனித கொலைகளையும் தடுத்து நிறுத்த முடியும். அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற யானைத் தாக்குதல் சம்பவத்தைப் போல அடிக்கடி இப் பகுதியில் யானைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு மாத்திரம் இப் பகுதியில் ஏற்பட்ட யானை மனித முரண்பாடுகளால் 15 பொது மக்களும் 20 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. அத்தோடு 1000 தென்னை மரங்கள், 300 ஏக்கர் விவசாய நிலங்கள், 50 வீடுகள் என்பன யானைத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்களுக்கு யானைகளின் வாழ்விடங்கள் மனிதரால் சூறையாடப்பட்டமை, வாழ்விடங்களுக்கு அண்மித்த பகுதிகளில் மனித குடியிருப்புகள் அமைந்திருக்கின்றமை என்பவற்றால் யானைகள் தமது உணவு, நீர்த் தேவைகளுக்கு மனித குடியிருப்புகளை நோக்கி நகருகின்றன.
ஒரு வயது வந்த யானை ஒரு நாளைக்கு 15 கிலோ கிராம் உணவையும் 150 லீற்றர் நீரையும் பருகுகின்றது. இந்த இரண்டும் யானைகளின் வாழ்விடங்களில் காணப்படாமையால் அவை மனித வாழ்விடங்களை தேர்ந்தெடுக்கின்றன. இவை கிராமங்களுக்குள் புகுந்து சேனைப் பயிர்ச் செய்கையில் தமது உணவுகளை பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறு யானைகள் தனது உணவுத் தேவைகளுக்காக பயிர்களுக்கு விளைவிக்கும் சேதத்தால் வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது.
மேற்படி யானைகள் தமது உணவுத் தேவைகளுக்காகவே கிராமங்களை நோக்கி நகருகின்றன. இதன்போது ஏற்படுகின்ற முரண்பாடுகளே சேதங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு மிக ஆபத்தான பகுதிகளாக புத்தளம் பகுதி, ஆனமடுவ, நவகத்தேகம, வண்ணாத்திவில்லு, மஹாகும்புக்குவல, பள்ளம, ஆராச்சிகட்டு மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைவதற்கு யானைகளுக்குத் தேவையான சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியளவிலான திட்டங்களே அதிகளவுக்கு நன்மையாய் அமையும். வெறுமனே மின்சார வேலிகளை அமைப்பதால் யானைகளின் வருகையை ஓரளவுக்குத் தடுக்க முடிந்தாலும் கூட அவற்றின் உணவுத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது.
எனவே, பெரும்பாலானோரால் வலியுறுத்தப்படுகின்ற இயற்கை வேலியமைப்பான பனை மரங்களின் நடுகை மனிதர்களுக்கும் யானைகளுக்கும் பாதுகாப்பான அம்சமாக அமைவதோடு உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். இதனால் யானைகள் உணவுகளுக்காக கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை இராது. இவை தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது இத் திட்டம் வெருகல், உடவலவ, நிக்கவரெட்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பனை அபிவிருத்திச் சபையால் வீரவில பகுதியில் 20,000 பனை மர விதைகள் நாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இத் திட்டத்தை யானைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய பகுதிகளை இனங் கண்டு உடனடியாக அமுல்படுத்த வேண்டும். அத்தோடு ரயில் சாரதிகளும் யானை நடமாடும் இடங்களில் பயணிக்கும் போது மெதுவான வேகத்திலும் ஒலி எழுப்பியும் செல்ல வேண்டும். மேலும் ரயில் சாரதிகள் மது அருந்தி ரயில்களை இயக்குவதை முற்றாக தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் வெற்றியினாலேயே மனித - யானை வன்முறைகளில் ஏற்படுகின்ற இழப்புகளை முற்றாக தடுக்க முடியும்.
31/08/2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக