கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

22 நவம்பர், 2017

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்துமா?
க. பிரசன்னா
இலங்கையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு வகையில் முயற்சித்து வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இலங்கையில் நிலவிய அசாதாரண நிலைமைகளினால் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டிருந்தது. தற்போது அந்நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் தொகை 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 2.5 மில்லியனாக உயர்ச்சி பெற்றிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் வெளிநாட்டுப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கின்றதா? அல்லது வழங்கப்படுகின்றதா? என்பதற்கு, முழுமையாக இல்லையென்றே பதில் கூறவேண்டும்.
இதற்கு சமீபகாலங்களிலும், சமீப ஆண்டுகளிலும் வெளிநாட்டுப் பெண்களுக்கெதிராக இலங்கையர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களை குறிப்பிடலாம். இவ்வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கல்கிஸைக் கடலில் குளியலில் ஈடுட்டிருந்த ரஷ்யப் பெண் இரண்டு அமைச்சுப் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த அலுவலர்களால் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதற்கு கல்கிஸை கடற்படை பாதுகாவலர் மற்றும் பொலிஸார் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் 27 வயதுடைய சாரதி மற்றும் 47 வயதுடைய ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு இலங்கையில் வெளிநாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய தடையினை ஏற்படுத்துமென்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் நடப்பது முதற்தடவையல்ல. ஏற்கனவே கடந்த வருடங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் பதிவாகியிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர், 22 வயதுடைய சுவீடன் யுவதியை வெலிகம ரிசோர்டில் வைத்து பாலியல் ரீதியாக தாக்கியிருந்தார். இச்சம்பவம் நிகழ்ந்து சில மாதங்களில் பதுளை மாவட்ட எல்ல பகுதியில் தனது காதலருடன் விடுமுறையை கழிக்க வந்திருந்த 27 வயதுடைய ஜேர்மன் யுவதியை பாலியல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதுடைய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்ற விடயங்கள் இலங்கை சுற்றுலாத்துறைக்கு கரும்புள்ளியாக அமைந்த விடயங்களாக இருக்கின்றன என்பதோடு இவர்கள் அரச அதிகாரிகளாகவும் பிரதிநிதிகளாகவும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவியொருவர் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு அம்பலாங்கொடை சென்றிருந்தபோது சுற்றுலா வழிகாட்டியால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இவ்வாறான தொடர் சம்பவங்களால் பாதிக்கப்படும் வெளிநாட்டுப் பெண்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? வெளிநாட்டுப் பெண்கள் தங்குகின்ற ஹோட்டல் அறைகள் முதல் பயணம் செய்யும் வாகனங்கள், செல்லும் இடம், பயண வழிகாட்டி என சகலவையுமே வெளிநாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாகவே இருக்கின்றன. உலகின் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடம்உண்டு. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இலங்கையையே விரும்புகின்றனர். இவ்வாறு பெருமைமிகு பாத்திரமாக இலங்கை இருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் படுகொலை, பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகம், ஏமாற்றுதல், களவு மற்றும் ஊழல் சம்பவங்கள் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. தற்போது சில இலங்கையர்களால் இவ்வாறான சம்பவங்களில் வெளிநாட்டுப் பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
பாலியல் தாக்குதல்களுக்கு இலக்கான பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்களின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமாகின்றனர். இவ்வாறான நிலைமைகள் இலங்கையின் சுற்றுலாத்துறையை எவ்வாறு பாதிக்கப்போகின்றன. 2020 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமானது 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து தூரநோக்குடன் திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகின்றது. புதிதாக செயற்படுத்தப்படுகின்ற பெரும்பாலான பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்தே அமைந்திருக்கின்றன. இதன்மூலம் இலாபங்களை அதிகரிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் நட்புறவான மற்றும் பாதுகாப்பான சூழலையே நாம் உருவாக்க வேண்டும். வசதி, வாய்ப்புகளை பெருக்குவதால் மாத்திரம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியாது. 2017 ஆம் ஆண்டின் ஜனவரியில் மாத்திரம் இலங்கைக்கு 219,360 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பதோடு, இது கடந்த வருட காலப்பகுதியினை விடவும் 12.9 வீதம் அதிகமாகுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதில் வட அமெரிக்கர்களின் தொகை 14.9 வீதமாகவும், மேற்கு ஐரோப்பியர்கள் 13.8 வீதமாகவும் கிழக்கு ஐரோப்பியர்கள் 16.7 வீதமாகவும் ரஷ்யர்கள் 23.7 வீதமாகவும் உக்ரைனியர்கள் 24.5 வீதமாகவும் சுற்றுலா பயணிகளாக வருகைதருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் பத்து மாதங்களில் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதோடு இதன்மூலம் இலங்கை அரசானது 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளது. அதே போலவே இக்காலப்பகுதிகளில் வெளிநாட்டுப் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் தொகையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சார்பாக இலங்கைக்கு மிகவும் அபகீர்த்தியை ஏற்படுத்திய ரீட்டா ஜோன்ஸின் படுகொலையை குறிப்பிடலாம். 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி மோதரை காக்கைதீவு பகுதியில் தனது கணவருடன் சென்றிருந்தபோது மூன்று இலங்கையரால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் இந்தியரான ரீட்டா ஜோன்ஸ் மனோகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் இலங்கை வருவதற்கு எச்சரிக்கையாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு தங்காலை ஹோட்டலில் பிரிட்டிஷ் செஞ்சிலுவை உறுப்பினர் கொடூரமாக கொல்லப்பட்டதோடு அவரது ரஷ்ய காதலி 8 பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இச்சம்பவமானது சர்வதேச அளவில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததுடன் சுற்றுலாத்துறைக்கு கரும்புள்ளியாகவும் அமைந்திருந்தது.
ஐக்கிய இராச்சியமானது பிரிட்டன் மக்களுக்கு இலங்கையில் அபாயங்களை சந்திப்பதற்கான சாத்தியமிருப்பதாக எச்சரித்துள்ளது. இவ்வாறு இலங்கையில் இடம்பெறுகின்ற பாதுகாப்பற்ற சம்பவங்கள், இலங்கை மீதான அபகீர்த்தியை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தலாம். இலங்கைப் பெண்களுக்கே இலங்கையில் அதிகளவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தோன்றும் போது வெளிநாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருக்கின்றதா? அநுராதபுரம், பொலனறுவை, தம்புள்ள, கண்டி, நுவரெலியா, களுத்துறை ( மொரகல்ல), காலி ( நாரிகம), அம்பாறை( அருகம்பை) மற்றும் நீர்கொழும்பு (எதுகெலே) என்பன இலங்கையின் பிரசித்தமான சுற்றுலாத்தலங்களாக இருக்கின்றன. எனவே இவ்விடங்களில் சுற்றுலப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்.
தனியாக பயணிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் நீர்கொழும்பு மற்றும் ஹிக்கடுவ கடற்கரைகளில் தமது உடைமைகளை பாதுகாப்பது அவசியமாகும். கடவுச்சீட்டு பிரதியொன்றை தம் வசம் வைத்திருப்பதுடன், வங்கி அட்டைகளின் இலக்கங்களை எப்போதும் குறித்து வைத்துகொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். அவசர நிலைமைகளின் போது 119 அவசர தொலைபேசி என்ற இலக்கத்தினை தொடர்பு கொள்ள தூதரகங்களின் மூலம் அறிவுருத்தல்கள் விடுக்கப்பட வேண்டும். தங்கியிருக்கும் விடுதிகளின் பாதுகாப்பு, சுற்றுலாத்தலங்களின் நிலை என்பவற்றை திணைக்களங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாடு பூராகவுமுள்ள சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளவேண்டும். சுற்றுலா சபையால் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், வழிகாட்டிகளை பயன்படுத்துவதற்கு வெளிநாட்டுப் பெண்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு வெளிநாட்டுப் பெண்கள் சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் பொதுவான சில பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்கள் சுற்றுலாப்பயணிகளை பாதிப்பவையாக இருக்கின்றன. வீதிகளில் நடக்கும் போதும் வீதிகளை கடக்கும் போதும் பஸ் பயணத்திலும் கவனமாக இருக்கவேண்டும். இதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்க்க முடியும். இலங்கையில் சுற்றுலாப்பயணிகள் அதிகமான உயிரிழப்புகளை வீதி விபத்துகளிலும் இரண்டாவதாக நீரில் மூழ்குவதாலும் எதிர்கொள்கின்றனர். ஆழமான கடற்பகுதி, பாதுகாப்பற்ற நீச்சல் இடங்கள், மதுபோதையில் நீந்துதல் என்பன ஆபத்தை உருவாக்குகின்றன. கடற்கரை விடுதிகள் சிவப்பு சமிக்ஞை குறியீடு மூலம் சுற்றுலாப்பயணிகளை எச்சரிக்கும் பதாதைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென்பதுடன் அவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எனவே இலங்கையானது 2020 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையில் தனது இலக்கினை பூர்த்திசெய்வதற்கு வெளிநாட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
29/03/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக